கிழக்கு: இயற்கை சோதனைகளும் அரசியல் படையெடுப்பும்

கிழக்கு மாகாணம் காலத்துக்காலம் இயற்கை மற்றும் செயற்கை சோதனைகளுக்கு உள்ளாகி வருவதை வரலாற்று நெடுங்கிலும் காண முடிகிறது.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் வெள்ளம், சூறாவளி, புயல், சுனாமி, வரட்சி என்ற இயற்கை அனர்த்தங்களுக்கும், அசாதாரண சூழ்நிலை நிலவிய 30 வருட காலத்தில் இடம்பெற்ற ஆயுதக்குழுக்களுக்கிடையிலான மோதல்களும்;, ஆயுதக்குழுக்களுக்கும் அரச படைகளுக்குமிடையிலான சமர்களும,; அவற்றோடு காலத்துக்காலம் இடம்பெற்ற இன மோதல்களும் என்ற செயற்கை அனர்த்தங்களுக்கும் முகம்கொடுத்ததொரு மாகாணமாகக் கிழக்கு மாகாணம் காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற இவ்வாறான விரும்பத்தகாத வரலாற்று நிகழ்வுகள் இம்மாகாண மக்களை அடிக்கடி கிலிகொள்ளவும்;, அச்சத்தில் உறைந்து போகவும்; செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பல்வேறு எதிர்மறை வரலாற்று அனுபவங்களை சுமந்த மக்களாகவே கிழக்கு மாகாண மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த பல வாரங்களாக டெங்கு என்ற ஆட்கொல்லி நுளம்பின் அச்சுறுத்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நுளம்பினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. மாணவர்களின் கல்வி நடவடிக்கை, நாளாந்த தொழில் புரிவோரின் வருமான இழப்பு போன்ற பல்வேறு அசாதாரண சூழ்நிலையை இந்நோய்த்தாக்கம் ஏற்படுத்தியுள்ளதோடு, உள்ளுர் தகவல்களின் படி இப்பிரதேசத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் 15 பேர் உயிர் இழந்துமுள்ளனர்.

இந்த டெங்கு நோயாபத்தானது புதிய நோயியல் வரலாற்றை இப்பிரதேசத்தில் பதியச் செய்துள்ளதோடு, அனைத்து முஸ்லிம் அரசியல் பிரமுவர்களையும் இப்பிரதேசத்தை நோக்கி படையெடுக்கச் செய்திருக்கிறது. அவற்றோடு, கட்சிகளும் கட்சித் தலைமைகளும் தங்களது செல்வாக்கை இப்பிரதேசத்தில் கட்டியெழுப்புவதற்கும், அதிகாரப் பலத்தினைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கும் டெங்கு நுளம்பின் தாக்க அதிகரிப்பு காரணமாக மாறியிருக்கிறது. அனர்த்த நிலைமையிலும் ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு மாறாக வேற்றுமைப்பட்டு போட்டி போட்டு செயற்படவும், அவற்றைப் புடம்போடவும் வழியமைத்திருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். இருப்பினும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீண்டும் பெருந்தன்மையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

கடந்த காலங்களிலும் பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களின்போதும் அதிகார அரசியல் தரப்புக்களும் தொண்டு நிறுவன உறுப்பினர்களும் அப்பிரதேசங்களுக்கு படையெடுத்து தங்களான முடிந்த உதவிகளை அம்மக்களுக்கு புரிந்திருக்கின்றனர். ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்னர் அளுத்தக பிரதேசம் பற்றி எரிந்த போது இவ்வாறான உதவிகள் புரியப்பட்டன. அரச தரப்பு முஸ்லிம் அரசியல் அதிகாரத் தரப்புக்களினால் உறுதிமொழிகள் வழங்கப்பட்டடன. இருந்தபோதிலும், மூன்று வருடங்களாகியும்; பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை என தற்போது தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறானதொரு சூழ்நிலையை கிண்ணியாப் பிரசேத்திலும் தற்போது அவதானிக்க முடிகிறது. அதிகாரத்தரப்புக்களின் படையெடுப்பு இடம்பெற்று உறுதிமொழிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் பற்றியே பேசிக்கொண்டிருப்பதையும் ஆதங்கங்களை வெளியிட்டு வருவதையும் காண முடிகிறது. முஸ்லிம் அரசியல் அதிகாரத் தரப்புக்கள் டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும், ஒரு கூட்டிணைந்த செயற்பாட்டை இங்கு அவதானிக்க முடியாதிருப்பதாக பிரதேச மக்கள் விமர்ச்சிக்கின்றனர்.

ஏனெனில், கிண்ணியாப் பிரதேசத்தில் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இம்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு கிண்ணியாவின் சமகால நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, தங்களது அரசியல் தலைமைகள் மூலமாக இப்பிரதேசத்தின் நோய்நிலை நெருக்கடியைத் தனிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அதுமாத்திரமின்றி;, அவரவர் அங்கம் வகிக்கும் கட்சித் தலைமைக் குழுக்களுடன்; இப்பிரதேசத்துக்குப் படையெடுத்திருக்கின்றனர்.

பிரதேச நோய் அனர்த்த நிலைமைகளிலும் ஒன்றுபட்டு செயற்படாது கட்சிசார் நடவடிக்கைகளினூடக டெங்கு நோய் தடுப்புச் செயற்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சையளித்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருப்பது இப்பிரதேச மக்களிடையே வெகுவான குற்றச்சாட்டுக்களை இவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

நடவடிக்கைகளும் ஆதங்கங்களும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் நேரில் சந்தித்து கிண்ணியாவின் டெங்கு நெருக்கடி தொடர்பில் கோரிக்கை விடுத்ததாகவும,; அதையடுத்து பிரதமரினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இந்நிதியினை எவ்வாறு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது என கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் கலந்தாலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இவ்வாறு, இப்பிரதேசத்தின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான அப்துல்லாஹ் மஹ்ருபின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் றிஷாட் பதியுதீன் குழுவினர் கிண்ணியாவுக்கு விரைந்து அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்துள்ளார். அத்துடன், அவசர நடவடிக்கைளுக்காக நிதி உதவிகளை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்;, கிண்ணியா தள வைத்தியசாலையின் தற்போதைய களஞ்சியசாலையொன்றிலுள்ள பொருட்களை இடமாற்றுவதற்கு கொள்கலன்களை வாடைக்கு அமர்த்துவதற்கு 2 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாகவும், தற்காலிக வைத்தியசாலையாக இயங்கும் கிண்ணியா ஜாயா வித்தியாலயத்திற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக 5.9 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதாகத் தெரிவித்ததாகவும், அத்தோடு, ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடன் பேசி தேவையான ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் றிஷாட்டினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறே, கிண்ணியாப் பிரதேசத்தின் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அமைச்சர் ரவூப் ஹக்கிமின் தலைமையிலான குழுவினருடன் கி;ண்ணியா தள வைத்தியசாலைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்;டுள்ள நோயாளர்களின் சேமநலன்களை விசாரித்ததோடு, குறைகளையும் கேட்டறிந்து உடன் தேவையான பல தேவைகளை நிறைவேற்றியதாகவும் சில தேவைகளை நிறைவேற்றிக்;கொடுப்பதற்கான பணிப்புரைகளை உரிய அதிகாரிகளுக்கு வழங்கியதாகவும், அதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதாகவும் ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டின.

இவ்வாறு அதிகாரத்திலுள்ளவர்கள் தங்களது அதிகாரத்தை இப்பிரதேசத்தில் புடம்போட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் அவரது குழுவினருடன் கிண்ணியாப் பிரதேசத்துக்குச் சென்று அங்கு டெங்கினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்;து நிலைமைகளை கேட்டறிந்துள்ளார். அத்துடன், தன்னை புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்ட அவர் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதையும் தவிர்த்தாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவன தொண்டர்களும் கிண்ணியாப் பிரதேசத்துக்குப் படையெடுத்து டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இருந்தபோதிலும், இக்கள நிலவரம்,; முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் கிழக்கு மாகாணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்கள் இலகுவாக அவதானிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது என்பதைப் புலப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொருவராகத் தனித்து நின்று செயற்படுவதற்கு காட்டியுள்ள அக்கறை, இப்பிரதேசத்தின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு ஒன்றுபட்டுச் செயற்பட முனைவில்லை என்பதையும் இவை ஒருவகையான அரசியல் காய்நகர்தல்கள் எனவும் மக்கள் விமர்சனம் செய்வதற்கு வழியமைத்திருக்கிறது.

உறுதிமொழிகளும் மக்கள் பொறுப்பும்

மூவின மக்களும் வாழுகின்ற மாகாணங்களில் கிழக்கு மாகாணம் பெரியளவில் பேசப்படுகின்ற மாகாணமாகும். கிழக்கு மாகாணத்தின் தற்போதைய கிழக்கு மாகாண சபையை நோக்குகின்றபோதும் கூட இம்மாகாண சபையிலேயே மூவினத்தையும் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளதைக் காண முடிகிறது.

இவ்வாறான நிலையில், கம்பெடுத்தவர் எல்லாம் வேட்டைக் காரர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமகால கிழக்கு முஸ்லிம் அரசியல், கிழக்குக்கான பண்புசார் ஆளுமையுள்ள அரசியல் தலைமையொன்றைத் தேடிக்கொண்டிருக்கிறது. இச்சூழலில், கிழக்கின் முஸ்லிம் அரசியலை ஸ்தீரப்படுத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டும் உள்ள நிலையில், அவற்றுக்கு எதிரான குரல்களும் ஒலித்துக் கொண்டுமிருக்கின்றன. இவ்வாறான நிலைமையில், கிண்ணியாவை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள டெங்கு நோய் அதிகரிப்பானது முஸ்லிம் அரசியல் அதிகாரத்தரப்பினரின் அதிகாரப் பலத்தை பரீட்சிக்கும் தளமாக மாற்றியிருப்பதோடு கட்சிகளுக்கிடையிலான போட்டி மனப்பான்மையையும் ஏற்படுத்திவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

ஏனெனில், இப்பிரதேசத்துக்குத் தேவையான அவசரத் தேவைகளை ஒரு அரசியல் கட்சித் தலைமை நிறைவேற்றி இருக்கின்ற நிலையில், பிரிதொரு கட்சித் தலைமை நிறைவேற்றி வைத்ததாக அக்கட்சியின் விசுவாசிகள் கூறிவருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மக்கள் நோயினால் பாதிக்கப்பட்டும், உயிர்களை இழந்தும் அவற்றின் வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் விடுபட முடியாத நிலையில,; கட்சி அரசியல் தொடர்பில் தொண்டர்கள் செயற்படுவது வீடு எரியும்போது பீடி பற்றவைக்கும் கதையாகக் காணப்படுகிறது.

ஏறக்குறைய கடந்த இரு மாதங்களாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தின் டெங்கு நோய் குறித்த செய்திகள் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சமூக வலைத்தளங்களினூடாக இச்செய்திகள் அடிக்கடி பதிவேற்றப்பட்டன.

ஆனால், அதிகாரத்திலுள்ள அரசியல் தலைமைகளின்; படையெடுப்பு கடந்த வாரமே இடம்பெற்றது. இந்நோயின் தாக்கம் அதிகரிக்கும் வரை நுளம்பின் விருத்தியைக் கட்டுப்படுத்துவதற்கான முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வில்லையென மக்கள் குறிப்பிடுகின்றனர். பிரதேச கழிவகற்றல் நடவடிக்கைகள் முறையாக இடம்பெறவில்லை.

இருப்பினும், முஸ்லிம் அதிகாரத் தரப்புக்கள் இப்பிரதேசத்துக்குப் படையெடுத்து வாக்குறுதிகள் பலவற்றையும் வழங்கியுள்ள போதிலும் அத்தோடு, இப்பிரதேசத்தின் ஆரோக்கியத்துக்கு அவசியமான உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய தேவையான பணிப்புரைகளை உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளபோதிலும் இப்பிரதேசத்திலிருந்து வருக்கின்ற கோரிக்கைகளும், வேண்டுதல்களும், ஆதங்கங்களும் இப்படையெடுப்புக்கள் பயனிக்கவில்லையா என்ற கேள்வியை எழச் செய்துள்ளது.

இப்பிரதேசத்தின் நிலைமை தொடர்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பதியப்படுகின்ற ஆதங்கங்களும் வேண்டுகோள்களும் இப்படையெடுப்புக்கள் வெறும் அரசியல் காய்நகர்த்தல்களாகக் காணப்படுகிறதா? என்ற உள்ளுணர்வை அரசியல் அவதானிகளிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வுள்ளுணர்வானது வெறுமனே சுயமாக எழுந்ததாகக் கொள்ள முடியாது. ஏனெனில், கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலில் தற்போது எழுந்துள்ள குழப்பகரமான நிலையானது, முஸ்லிம் அரசியலைப் பற்றியும் எதிர்கால கிழக்கு முஸ்லிம்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பு குறித்தும் அதிகளவில் மக்களைச் சிந்திக்கச் செய்துள்ளதன் வெளிப்பாடாகக் காணப்படுகிறது.

சுமகால முஸ்லிம் அரசியல் கட்சித்; தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் இத்தலைமைகள் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் இழக்கச் செய்திருக்கிறது. மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் இவ்வாறு பல எதிர்மறை மனப்பதிவுகள் கட்சித் தலைமைகள் தொடர்பில் மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்தும் இத்தலைமைகளின் பின்னால் அரசியலில் பயணிப்பதை விரும்பாத மக்கள் தங்களது அதிருப்திகளையும் விமர்சனங்களையும் தெரிவித்தும் வருகின்றனர்.

இக்கால கட்டத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் அதிகாரத் தரப்பினரும் கிண்ணியாவிற்கு படையெடுத்து தங்களது சேவை மனப்பான்மையைக் காட்டியிருக்கிறார்கள். தனித்தனியே செயற்பட்டு தங்களது பலத்தை ஒரு சில செயற்பாடுகளினூடாகவும் உறுதிமொழிகளினூடாகவும் புடம்போட்டிருக்கிறார்கள். இ;வ்வாறு ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் இப்பிரதேசத்துப் படையெடுத்தும் இப்பிரதேச மக்கள் இன்னும் குறைகள் பற்றி ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பதானது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

கிண்ணியாப் பிரதேசத்தின் டெங்கு நோய் தொடர்பாக, அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும், கிண்ணியா தள வைத்தியசாலையின் அபிவிருத்தி, இப்பிரதேச உள்ளகக் கட்டமைப்பு, மருத்துவ – சுகாதார நடவடிக்கைகள்; மற்றும் வௌ;வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் அதிகாரத் தரப்புக்களினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவது அவசியமாகும்.

இவ்வுறுதிமொழிகள் தேர்தல் காலங்களில் கிழக்கின் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவதற்காக அளிக்கப்பட்ட உறுதிமொழிகளாக இல்லாது உயிர் காப்பின் தேவையை எதிர்பார்த்துக்; கொண்டிருக்கின்ற இப்பிரதேச மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக அளிக்கப்பட்ட உறுதிமொழிகளாகக் கருதப்படல் வேண்டும். அப்போதூன் இப்படையெடுப்புக்கள் பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமையும்.

இந்நிலையில் டெங்கு நுளம்பின் தாக்கத்தை இப்பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டுமாயின், இப்பிரதேச மக்கள் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைளில் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். முஸ்லிம் அரசியல் தரப்புக்களும் தொண்டர் நிறுவனங்களும் படையெடுத்தாலும், எத்தகைய உறுதிமொழிகளை வழங்கினாலும், அவற்றை நிறைவேற்றினாலும,; நிறைவேற்றாது விட்டாலும் அல்லது பல்வேறு வகையான உதவிகளைப் புரிந்தாலும் தத்தமது வீட்டையும் சுற்றுப் புறச்சூழலையும், பிரதேசத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் தார்மீகப் பொறுப்பாகும் என்பதோடு இது தொடர்பில் மக்களை தொடர்ச்சியாக அறிவூட்டுவதும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்;கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் இப்பிரதேசங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினது முக்கிய கடப்பாடு என்பதையும் சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்