தேச(ப் பற்று)த் துரோகம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 26 September 2023

தேச(ப் பற்று)த் துரோகம்!

 



இறைமை கொண்ட ஒரு நாட்டினது ராணுவத்தின் தலையாய கடமை அந்நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதாகும். நாட்டின் இராணுவ ரகசியங்களை வெளியாக்குவதும், பிற நாடொன்றுடன் சேர்ந்து சொந்த நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவதும் தேசத் துரோக குற்றம்(treason). இந்த குற்றத்துக்காக வழங்கப்படும் அதி உச்ச தீர்ப்பு  "மரண தண்டனை". இந்த சிறிய விடயத்தைப் புரிந்து கொள்ள  ஆழமான வாசிப்புக்கள் எதுவும் அவசியமில்லை.


ஆனால் நம் தாய்த் திரு நாட்டில் காலாகாலமாக நடந்தேறும் பல சம்பவங்கள், பாதுகாப்பு தொடர்புபட்ட விடயங்கள் உள்பட, ஒரு சாதாரண குடிமகனுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தி அந்த குறிப்பிட்ட விடயம்  தேசப் பற்றா அல்லது  தேசத் துரோகத்தின் வெளிப்பாடா என்ற கேள்விக்கு விடைகாணத் தூண்டுகிறது.


இப்போது ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் வருடாந்த மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் ஸ்ரீ லங்கா மீண்டும்  ஒரு பேசு பொருளாக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்த விடயமே. 


அதற்கான காரணம் கடந்த ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி  அலைவரிசை "செனல் 4(Channel4)" வினால் வெளியிடப்பட்ட 2019 ஏப்ரல் 21ம் திகதியன்று ஸ்ரீ லங்காவில் நடந்தேறிய  உயிர்த்த ஞாயிறு ( Easter Sunday) தாக்குதல் சம்பந்தமான ஆவணப்படமே. 


அதே போல் அது காட்சிப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இந்த நிமிடம் வரை அது தொடர்பான சமூக ஊடக வாத- விவாதங்கள், பாராளுமன்ற உரைகள் பத்திரைகை பேட்டிகள், கட்டுரைகள் என்று ஸ்ரீ லங்காவின் மூன்று தேசிய ழொழிகளிலும் தொடர்ந்தும் இந்த விடயம் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தளவுக்கு முக்கியம் பெற்ற இந்த விடயம் தொடர்பான மேலதிக உண்மைகள் வெளிவரும் வரை  அவை தொடரும் என்பதிலும் சந்தேகமில்லை.


அசர்ந்தப்பவசமாக தாக்குதல்தாரிகள் அத்தனை பேரும் இஸ்லாமியர் என்ற அம்சம்  ஸ்ரீ லங்காவின் அனைத்து இஸ்லாமியரும் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ற ஒரு வகை அழுத்தம் 2019ல் நாட்டின் ஒரு சாராரினால்  எவ்வாறு நம்மீது கொடுக்கப்பட்டதோ அதே போன்ற ஒரு அழுத்தம் 4 வருடங்களின் பின் நம் மீது நாமே கொடுக்க வேண்டியுள்ளது. காரணம் அந்த  மிலேச்சத்தனமான கொலைகளுக்கு திட்டம் தீட்டியோரும் அல்லது தெரிந்து கொண்டே பாரிய மனித படுகொலைகளுக்கும் அதைத் தொடர்ந்த நாடளாவிய ரீதியிலான உயிர்ச்சேதங்களுக்கும் மற்றும் சொத்தழிப்புக்களுக்கும் ஒத்தாசை புரிந்தோரும் சில இஸ்லாமியர் என்பது இதன் ஓர் அம்சம்.


அன்றைய அழுத்தம் நமது அரசியல்  நலிவு நிலையை அடிப்படையாக வைத்தும்,  ஸ்ரீ லங்கா நமது(ம்) நாடா அல்லது பேரினவாத சிங்கள பெளத்தம் சொல்லுவது போல் நாம் இந்த நாட்டின் தற்காலிக வதிவிடப் பிரஜைகளா என்ற நம் நிலைப் பற்றி நமக்கு உறுதி இல்லாத நிலையை முதலீடாகக் கொண்டும்,   மதவெறியுடன் குழப்பம் விளைவிக்க தாயாராக இருந்த ஒரு  கும்பலை முன்நிறுத்தியும்  தேசத் துரோகிகளால்  நமக்கு எதிராக செய்யப்பட்டது. ஆனால் இன்றைய அழுத்தம் நாம் துணிவுடன் எழுந்து நின்று இது எமது(ம்) நாடு அந்த நாட்டின்  தேசப் பற்றாளர்கள் நாங்கள் என்பதை நிரூபிக்க  நம்மீது நாமே ஏற்படுத்த வேண்டிய ஒரு காரணத்துக்கான காரியம் என இதை மேலதிகமாக அடையாளப் படுத்தலாம். 


2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் புலிகள் - ஸ்ரீ லங்கா அரசுக்கு  இடையிலான ஆயுத போரின் பக்க விளைவுகளில் ஒன்றாக  2013ம் ஆண்டு ஸ்ரீ லங்காவுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஜெனிவா மனித உரிமைகள் மைய நடவடிக்கையாக அமைந்த போது இதே இஸ்லாமி சமூகத்தை உள்நாட்டில்  பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான  அகில இலங்கை மார்க்க அறிஞர் பேரவை( அ.இ. ஜம்மியதுல் உலமா) தம் தேசப்பற்றை உறுதிப் படுத்த( யாருக் கென்பது இன்னுமொரு விடயம் ) ஜெனிவா மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டி சில அரசியல் தலைவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அதாவது நாட்டின் சக தமிழினத்துக்கு எதிராக சாட்சி சொல்ல அழைத்துச் செல்லப்பட்டார்கள். அழைத்தார்கள் என்பதற்காக நியாமில்லா காரியமொன்றை செய்யச் சென்றது தேசப் பற்றா அல்லது துரோகமா என்ற கேள்வி  என்னுள் எழுந்து கொண்டு இருப்பது போலவே இன்னும் கணிசமானவருக்கும் இருக்கின்றது.


ஆனாலும், அ.இ.ஜ.உ வின் அந்த மாநாட்டு பங்குபற்றுகை எவ்வகைப்பட்டது என்பது தொடர்பான இஸ்லாமிய சமூகத்தின் சந்தேகத்தை  தீர்க்கும் முகமாக அன்று மட்டுமல்ல இன்றுவரை தம்மை சுய விமர்சனத்துக்கு உட்படுத்த மறுக்கும் அல்லது  அது முடித்த விடயம், அது பற்றி  இனி பேசுவதில் எந்த பயனுமில்லை என தட்டிக்கழிப்படுவது தேசப்பற்றா அல்லது துரோகமா ? என்ற மேலதிக சந்தேகம் ஒன்றையும் ஏற்படுத்துகிறது.


அந்த சந்தேகத்தை மேலும் உறுதிபடுத்துவது அ.இ.ஜ.உ வின் தொடர் நடவடிக்கை. அதாவது முழு நாடும்,  நாட்டின் அதி உயர் சபையான பாராளுமன்றமும் செனல் 4னால் வெளிக் கொண்டுவரப்பட்ட விடயம் சம்பந்தமாக அக்கறை கொள்ளவேண்டிய  நிர்பந்தத்க்குள்ளாகிய போதும் இந்த நிமிடம் வரை இவர்கள் இன்னும் வாய் திறக்காமல் இருக்கும் நிலை அது.


இதை விடவும்  அனேகரின் சந்தேகத்தை மீளுறுதி செய்யும் அம்சமாக எனக்கு தெரிவது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அ.இ.ஜ.உ சபை உண்ணா நோன்பிருந்து, நடுநிசி வழிபாட்டில் இறைவனிடம் பிராத்தித்து (அவர்கள்) பரிசாக பெற்றுக் கொண்டவரே இந்த ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவராக பொது மக்களால் சந்தேகிக்கப்ப(ட்ட)டும், தாக்குதல் ஏற்பாட்டு கும்பலின் பிரதான செயற்பாட்டாளர் ஒருவரின் குற்றச்சாட்டு. ஆக தாம் ஆதரித்து, அனைத்து இஸ்லாமியரும் அவருக்கே ஆதரவு தரவேண்டும் என  கேட்டு, அவரை அதிவுயர் பதவியில் அமர்த்தி, இறுதியில் நமது சமய நம்பிக்கைப்படி இறந்தவர்களுக்கான இறுதி கடமையைக்கூட சமரசம் செய்து கொள்ளும் அளவு இறுகிய மனங் கொண்ட ஆனாலும் "ராஜா" வான இவருக் கெதிராக எப்படி வாய் திறப்பது என்று அமைதி  காக்கும்  விடயம்.


நிற்க, இந்த ஆவணப்படம் தொடர்பாக எனது சமூக ஊடக நண்பர் ஒருவர் கூறியது போல்   " செனல்4 வின் இந்த ஆவணப்படம் வெறுங்கையுடன் இருக்கும், தலைமையின்றி தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் ஒரு பகுதியான இலங்கை முஸ்லீம்களுக் கொடுக்கப்பட்ட பெறுமதியான ஓர் ஆயுதம்".   


ஆம், அது ஒரு ஆயுதம்.  ஆகவே  அதை சரியாகப் பயன்படுத்த தவறினால்  ஒரு சமய குழுமமாக மாத்திரமல்ல  நாட்டின் சம பிரஜைகள் என்ற ரீதியில் நாம் தேசத்துரோகிகளாகிவிடுவோம் என்பது அதன் அர்தப்படுத்தல்.


அந்த அடிப்படையில் ஸ்ரீ லங்காவின் இஸ்லாமியர் ஒரு சமூகமாக, நாட்டின் சக பிரஜைகளாக  ஒரே குரலில் நாட்டுக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற கேள்வி இப்போது எழுகிறது. 


கிறிஸ்தவத சமூகம் போல் அச்சமூகத்தின் பிரதம மதகுரு கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களின் தலைமையின் கீழ் "வத்திக்கான்"  வரை சென்று இந்த மிலேச்சத்தனத்தின் பங்குதாரர்கள் யார் என்பதை கண்டறிய சர்வதேச அழுத்தம் ஒன்றை ஸ்ரீ லங்காவுக்கு கொடுக்க செயலாற்றிக் கொண்டிருப்பது போல் அல்லது கோவிட்19 னால் மரணமடைந்த இஸ்லாமியரின் உடல்களும்  அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான அரச அத்து மீறல் மூலம் எரிக்கப்பட போது, நமது அரசியல் தலைவர்கள் மெளனிகளாக இருந்த போது,  பாராளுமன்றத்தில 7 இஸ்லாமிய கறுப்பாடுகள் உயிர்திய கைகைகளை சுய லாபத்துக்காக கீழே தாழ்த்திக் கொள்ள சங்கடப்பட்ட போது,  எரிந்த உடல்களின் சாம்பல் புதைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று என்று நூதனமான மார்க்கத் தீர்ப்புடன் அவர்கள் தேர்ந்தெடுத்த ராஜாவின் காலில் விழுந்து சரணடைந்த போது, பொது மக்கள்  துணிச்சலுடன் சர்வதேச சமூகத்தின் உதவியை கோரியது போன்ற நடவடிக்கையில் மீண்டும் நாம் ஈடுபடுவதா? அப்படி ஈடுபடுவது சேசப் பற்றா துரோகமா என்ற கேள்வி எழுவதையும் தடுக்க முடியாதுள்ளது. 


ஹன்ஸீர் அஸாத் மெளலானா, அவரது முன்னைநாள் தொழில் வழங்குனர் அல்லது குற்றச்செயல் நண்பருமாகிய( partner in crime)சிவநேசன் சந்திரகாந்தன்(பிள்ளையான்),  ராணுவ உளவுத்துறை பிரதானி துவான் சுரேஸ் சலே என்ற முக்கூட்டணி, விரட்டியடிக்கப்பட்ட முன்னை நாள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபாய ராஜபக்சவின் அரசியல் நலனுக்காக பாடுபட்டோம். அதை இந்த ஈஸ்டர் தாக்குதல் மூலம் அடைந்து கொள்ள முன்நின்று செயற்பட்டோம் என்று குற்ற ஒப்புதல்( confession) செய்துள்ள போது ஆகக் குறைந்தது இந்த நால்வர் தொடர்பாக பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றைக் கோருவதும் கூட  ஒரு தேசத் துரோகமாக காட்ட முனைகின்றனர் பல மூத்த அரசியல்வாதிகளும் அவர்களின் தயவில் இன்று அரசியல் செய்து கொண்டிருக்கும் இனியும் அரசியல் செய்ய ஆவலுடன் காத்திருக்கும் அரசியல் சில்லறைகளும்.  இவர்கள் தம் எஜமான்களை காப்பாற்றவும் செனல்4வை  குற்றம் சாட்டவும் துணிந்துள்ளதை பார்க்கும் போது அல்லது இதில் நான் சம்பந்தமில்லை தேவையில்லாது என்னை இதற்குள் இழுத்தால் அவர்களையும் நான் இழுக்க வேண்டிவரும் என்று பாராளுமன்றில் பயமுறுத்தி பொற்க்கூறதலில் இருந்து தப்பிக்கும் முயற்சி எல்லாவற்றையும் பார்க்கும் போது  நம் நாட்டின் மீது கழுவ முடியாத சாபம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 


கடந்தகால சம்பவங்களின்  போது நாட்டில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுக்கள், சுயாதீன ஆணைக் குழுக்கள், வேறு பல விசாரணனை குழுக்கள் என்ற எதுவுமே நம்பிக்கை தரும் விதத்தில் நடக்காததால் அல்லது அப்படி நடந்தும் அதன்  அறிக்கைள் வெளியிடப்படாமலும் அதனால் பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லாமல் பல விடயங்கள் முடக்கப்பட்டும், சம்பந்தப்பட்டவர்கள் திடீர், திடீரென காணமல் போதலும் அல்லது வேறு விதமாக மெளனிக்கப்படும் சம்பவங்களையும் கண்ட;  கூடவே    உள்நாட்டு விசாரணை, ஜனாதிபதி ஆணைக்குழு, பக்க சார்பற்ற நீதி மன்ற பங்களிப்பு என்ற எல்லா ஏற்பாடுகளிலும் நம்பிக்கை இழந்த சிறுபான்மை மக்களுக்கு இந்த விடயத்தில் குறிப்பாக கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகங்களுக்கு இன்று சுதந்திரமான சர்வதேச  விசாரணை என்ற முடிவைத் தவிர வேறு தேர்வுகள் இல்லை எனலாம்.  ஆகவே அதை வற்புறுத்துவது தேசப் பற்றின் பால் பட்டதே அல்லாமல் சுய அரசியல் லாபத்துக்காக காட்டப்படும் வெற்று தேசப்பற்றோ அடையாள  தேசப்பற்றை பறைசாற்ற 2013 முதல் இஸ்லாமியரின் பள்ளிவாயில்கள நடைபெறும் நாட்டின் சுதந்திர தின கொடி ஏற்றல் நிகழ்வுகள் போன்றதுமல்ல.


ஆகவே சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றை கோருவது முக்கியமாக  இந்த நால்வரின் ஈடுபாட்டின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காகவும், இவர்களுடன் சேர்ந்து சந்தேகிக்கப்படும் அல்ஹிந்து அல்லது சொனிக் சொனிக் என்ற( கற்பனை) நபர்களின் பங்கு என்ன என்பதையும், இதில் இந்தியாவின் பங்கும்  உள்ளதா என்றும், உண்மையில் ஈராக்/சிரியாவின்  அமைப்பான ISIS அல்லது ஆப்கானிஸ்தானில் செயலாற்றும் ISIS-K  அல்லது நம்நாட்டு தீய சக்திகளுடன் வெளிநாட்டு தனிநபர்களும் உள்ளனரா என்பதையும் உறுதி செய்து கொள்ளவே அன்றி  குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதி(everyone is innocent until proven guilty) என்ற சட்ட பாதுகாப்பை அந்த நால்வருக்கும் கொடுப்பதற்காக அல்ல. இது  வெளிப்படையான தேசத்துரோகமும் அல்ல.  அல்லது சட்டத்தின் பால்பட்ட தேவையான செயல்முறை (due process) என்ற அம்சத்துக்குள் அடக்கி நாட்டின் பிரஜை எவரும்  காரணிமின்றி தண்டிக்கப்படலாகாது என்ற உப்பு சப்பில்லாத நிலைப்பாடும் அல்ல. ஆகவே இது தேசத் துரோகமுமல்ல.


மாறக சர்வதேத அளவீட்டில் சராசரி மனித சிந்தனையில்  இது தேசப் பற்றின் வெளிப்பாடு. இந்த அடிப்படையிலேயே நமது இப்போதைய அணுகு முறை  "நாம் ஒன்றாக குரல் கொடுப்போம், கிறிஸ்தவ சமூகத்துடன் சேர்ந்து பயணிப்போம், கொலைகளை தடுப்போம். அநாகரீக அரசியலுக்கு இதை ஒரு பாடமாக கற்பிப்போம்"  என்று அமைவதோடு அதற்கான அனைத்து விடயங்களும் அரசியல் தலைமை, சமய தலைமை என்றில்லாமல் பொது மக்களின் தலைமையில் நடை பெற வேண்டும். அதில் அரசியல்வாதிகள் சமய நிறுவனங்கள் கலந்து கொள்ள இடம் விடுவோம். ஆனால் இதை அரசியல் நலனுக்காக, சமய நிறுவனங்களின் தொடர் இருப்புக்காக கடத்தப்பட(high jack) இடமளியோம்.


Mohamed SR. Nisthar.


No comments:

Post a Comment