காணாமலாக்கப்படும் இலக்குகள்!

பல்லின சமூகங்களைக் கொண்ட இந்நாட்டில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் நலன்கள் பெருவாரியாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. வாழ்விடத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் அம்மக்கள் போராட வேண்டிய தேவையில்லை. ஏனெனில,; இந்நாட்டை எவர் ஆண்டாலும் ஆளும் இனத்தின் அங்கத்தவர்களாகவே பௌத்த சிங்கள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில தேவைகள் நிறைவேற்றப்பட வில்லை அல்லது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று ஏதாவது ஒரு பிரதேசத்தில் வாழும் பௌத்த சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கி போராடினாலும், அப்போராட்டமானது வெவ்வேறு சக்திகளின் மறைமுக ஆதரவுடனும், ஊக்குவிப்புடனுமே நடந்தேறுகிறது என்பது வெள்ளிடைமலை.

ஆனால், ஒட்டுமொத்த பௌத்த சிங்கள மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு விட்டது அல்லது மறுக்கப்படுகிறது. எங்களது வாழ்விடமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்காக நாட்டின் எந்தவொரு பகுதியிலாவது தொடராகப் போராடவில்லை.

அதேவேளை, இந்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை சமூகம்சார்ந்த உரிமைகளுக்காகப் தொடராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அகிம்சைப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறி மீண்டும் அகிம்சைப் போராட்ட நிலைக்கு தமிழ் சமூகத்தின் போராட்டப் பரிணாமம் காணப்படுகிறது. இந்தப்போராட்டங்களினால் தமிழ் மக்கள் அழிவுகளை அதிகளவில் சந்தித்;திருக்கிறார்கள். கசப்பான பாடங்கள் பலவற்றைக் கற்றிருகிறார்கள். இருப்பினும், கற்றுக்கொண்ட பாடங்களின் வலிகளோடு எதிர்கால சமூகமேனும் இந்நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்கான தீர்வுகளை ஆளும் தரப்பிடமிருந்து எவ்வாறாயினும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான சில விட்டுக்கொடுப்புக்களையும் செய்தாக வேண்டும் என்ற சிந்தனைக்கு ஒரு சில தம்pழ் தலைமைகள் முன்வந்துள்ள நிலையில், அச்சிந்தனையின் மாறுபட்ட நிலைப்பாட்டிலும் ஒரு சில தமிழ் தரப்புக்கள் செயற்படுவதையும் காண முடிகிறது.

இருந்தபோதிலும், உள்நாட்டில் தமிழ் மக்களின் விடிவுக்கான ஆதரவும் சூழ்நிலையும் இல்லாவிடின் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிரச்சினைகளை சர்வமயப்படுத்தி, சர்வதேச சமூகத்தின் கவனத்தை தம்பக்கம் ஈர்க்கச் செய்யும் சமூகமாக திகழ்வதுடன், முரண்பாடுகளுக்கு மத்தியிலும் சமூகம்சார்ந்த நலன்களுக்காக குரல்கொடுப்பதுடன் சமூகத்தின் பிரச்சினைகளை சமூக மயப்படுத்தும் செயற்பாடுகளிலும் செயற்படுபவர்களாக தமிழ் சமூகத்தினர் உள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஆனால், இந்நாட்டின் இரண்டாம் நிலைச் சிறுபான்மை மக்களாக வாழும் முஸ்லிம்களில் பலர் சமூகம் சார்ந்த விடயங்களில் இறந்த காலம் எதைக் கற்றுத்தந்தது. நிகழ்காலம் எதைக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் எதைக் கற்றுத்தரப்போகிறது. என்று சிந்திக்காதவர்களாக சுய தேவைச் சிந்தனைகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எந்த இலக்குகளுக்காகவும் நோக்கங்களுக்காகவும் அரசியல் கட்சிகளும் ஆன்மீக இயக்கங்களும் உருவாக்கப்பட்டனவோ அந்த இலக்குகளையும், நோக்கங்களையும் காணமல் ஆக்கிக்கொண்டு குடும்பிச் சண்டடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எவை பற்றி விவாதிக்க வேண்டுமோ அவைகுறித்து தங்களுக்கிடையில் விவாதிக்காமல் அதற்காக ஒன்றுபடாமல் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதற்காகவும,; அசிங்கங்களை அரங்கேற்றுவதற்காகவும் மேடைகள் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்;றன. இவைதான் அவர்களின் சமூகம்சார்ந்த சமகாலத் தேவை என்ற கருதலுக்குள்ளாகியிருக்கிறது என்பதை வெளிப்படையாக அவதானிக்க முடிகிறது.

சமகாலத் தேவை

பிறர் மீது ஏறிச் சவாரி செய்து தமது இலக்குகளை அடைந்து கொள்ள எத்தகைய வியுகங்களை வகுத்துச் செயற்பட முடியுமோ அவற்றைச் சாணக்கியமாகச் செய்து முடிப்பதில் அரசியல் கட்சிகளும் ஆன்மீக இயக்கங்களும் சமூக அமைப்புக்களும் காட்டும் அக்கறை, சமகால இலங்கையின் அரசியல் நகர்வுகளால் இச்சமூகம் தற்காலத்தில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது, எதிர்காலத்தில் எத்தகைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் என்று சிந்தித்து அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராகவில்லை.

தேர்தல் முறை மாற்றம் எத்தகைய சாதக பாத நிலைகளை சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களை எதிர்நோக்கச் செய்யும்? எந்தவகையில் பாதிக்கும்? அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக உருவாக்கப்படவுள்ள அதிகாரப் பகிர்வுகள் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? முஸ்லிம் தனியார் சட்டத்தின் திருத்தம் எத்தகையதாக அமைய வேண்டும். அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை எத்தகைய பிரச்சினைகளை முஸ்லிம்களுக்கு உருவாக்கப்போகிறது. அவ்வாறு பிரச்சினைகள் உருவாகினால் அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்ற சமூகத்தின் சமகால தேவைகள் குறித்த பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அவற்றுக்கு விடைகாணப்பது எவ்வாறு என்று சிந்திக்க வேண்டி வேளையில், அவைகுறித்து தங்களுக்குள் கூடி ஆரோக்கியமாக ஆராய வேண்டி நேரத்;தில், அவை தொடர்பில் சமூகத்தை விழிப்புணர்வூட்ட வேண்டிய தருணத்தில் அரசியல் கட்சிகளும் ஆன்மீக இயக்கங்களும்; தங்களுக்குள் குடும்பிச் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேடைபோட்டு ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் சமூகம்சார்ந்த அரசியல் கட்சிகளினதும் இயக்கங்கங்களினதும் இலக்கும்; நோக்கங்களும் காணாமல் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவ்வேளை, இவர்களின் குடும்பிச் சண்டை சந்தி சிரிக்கச் செய்திருக்கிறது என்பது ஒருபுறமிருக்க இவை சாணக்கியமானதா என்று சிந்திக்கவும் செய்துள்ளது. இந்த சிந்தனையை மேலும் மெருகூட்டும் வகையில் தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மறுமங்கள் என்ற நூலுக்குப்பதிலாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதூரில் வெளியிடப்பட்ட தாறுஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இவர்களின் குடும்பிச் சண்டையின் ஓர் அங்கமாகும். இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்காக செலவளித்த பணத்தை சமகால தேவை கருதி அவை தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு பயன்படுத்தியிருக்க முடியும். சாணக்கியமுள்ள தலைமையக் கொண்ட அரசியல் கட்சியின் அங்கத்தவர்கள் சாணக்கியமின்றிச் செயற்பட்டிருப்பதானது பலதரப்பினரின் நகைப்புக்கும் விமர்சணத்துக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதைச்; சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

கட்சிக்காரர்களையும் மக்களையும் சரியாக வழிநடத்த வேண்டிய அரசியல் தலைமைகளும் ஆன்மீக இயக்கங்களும் அவற்றுக்கு மாறாக வழிநடத்துவது குறித்து மறுமைநாளில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை மறந்து செயற்படக் கூடாது. நாளை மறுமையில் மக்கள் இவர்களைக் காட்டிக்கொடுப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. வழிகெடுக்கும் தலைமைகள் குறித்து மக்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கும் மனுபற்றி அல்குர்ஆனின் 22வது அத்தியாயம் 67 மற்றும் 68வது வசனங்கள் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது ‘எங்கள் இரட்சகனே! நிச்சமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்படிந்தோம் அவர்கள் எங்களை வழிதவறச் செய்துவிட்டார்கள். ஆகவே ‘எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இரு மடங்கைக் கொடுப்பாயாக! இன்னும் பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக!’ என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

சிந்தித்துச் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் தங்களது பதவிகள் பறிபோனதற்காகவும் தங்களது சாணக்கியங்கள் சறுகியதற்காகவும் சமகாலத் தேவைகள் குறித்து மக்களையும் கட்சி விசுவாசிகளையும் சிந்திக்க விடாது அவர்களின் எண்ணகைளைச் திசைமாற்றி காலநேரங்களை வீணடித்து தங்களது அடிப்படை இலக்குகளையும் நோக்கங்களையும் காணாமல் ஆக்கி சுயநலங்களை வெற்றிகொள்ளவதற்காக மக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்துவதன் கேவலம் நீதி மன்றத்திலும் சிறைக்கூடங்களிலும் விசுவாசிகளைத் தள்ளச் செய்திருக்கிறது.

தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மறுமங்கள் என்ற நூல் தொடர்பாக நீதி மன்றில் செய்யப்பட்டுள்ள வழக்கதாக்கலும், கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இரு இயக்கங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள சம்பவமும் இவற்றின் சான்றுதல்களாகும்.
சுயநிகழ்;ச்சி நிரல்களின் அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோடுவதற்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இயக்கங்களும் செயற்படுவதும,; அதன் விளைவாக ஏற்படும் கசப்பான சம்பவங்களும்;; சமூகத்தைக் கேவலமானதொரு நிலைக்குத் தள்ளியிருப்பதோடு; இனவாதிகளின் வெறுப்புப் பேச்சுக்களுக்கு ஆதார நிகழ்வுகளாகவும் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமை என்ற கயிற்றை இறுகிப்பிடிப்பதற்குப் பதிலாக அவற்றை அறுத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இயக்கங்களும்; சுய விசாரணை செய்ய வேண்டியதும் சமகால மற்றும் எதிர்கால சமூகத்தின் தேவை கருதி ஒன்றுபட வேண்டியதும் அவசியமாகவுள்ளது.

ஒற்றுமையின் பலமும் பாதுகாப்பும்

நாடளாவிய ரிதியில் 9.71 வீதம் வாழ்கின்ற முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் ஆன்மீக கொள்கைகளின் அடிப்படையிலும் பிரிந்து குடும்பிச் சண்டையில் ஈடுபட்டு வருவதானது ஆரோக்கியமானதல்ல. இதனால் இவற்றின் இலக்குகளும் நோக்கங்களும் காணாமல் ஆக்கப்பட்டுவிடும். முஸ்லிம்களின் சமூகம்சார் இலக்குகளையும் நோக்கங்களையும் காணமல் ஆக்கி தங்களது இலக்குகளையும் நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் பல்வேறு வழிகளில் பிரயத்தனங்கள் முன்னெடுத்து வருகின்ற இக்கால கட்டத்தில் பதவிகளுக்காகவும்; அற்ப கொள்கைகளுக்காகவும் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி செயற்படுவதனால் எதையும் அடைந்துவிட முடியாது.

அரசியல் தலைமைகளுக்கிடையிலும் இயக்கங்களுக்கிடையிலும் காணப்படும் பிளவுகளும் பிரிவுகளும் சமகாலத்தின் தேவைகள் குறித்துச் சிந்திக்காமலும் அதற்கான ஆரோக்கியமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாமலும் இருப்பதற்காக மாற்றுச்சக்திகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள உளவியல் யுத்தமாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சமூக ஒற்றுமை என்பது ஒரு கடமை, ஒரு வணக்கம், சமூகத்தில் வாழுகின்ற ஒவ்வொருவரும் தனி நபர்களுக்கிடையே பரஸ்பர அறிமுகம், புரிந்தணர்வு, ஒப்பந்தம், ஐக்கியம் கொண்டிருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும்

இந்த எதிர்பாhப்;வை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது. பூரமாண வாழ்க்கைத் திடடத்தை வழங்கியுள்ள இஸ்லாத்தை கௌரப்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரிச் சமூகமாக வாழ வேண்டிய முஸ்லிம் சமூகம், ஒற்றுமையென்ற கயிற்றைப் பலமாகப் பற்றிக்கொள்ளுங்கள் உங்களுக்குள் பிரிந்து விடாதீர்கள் என நம்மை குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்தி வழிகாட்டியுள்ள நிலையில், இச்சமூகம் ஆன்மீகக் கொள்கைகள் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இன்னும் என்னென்ன விடயங்களிலெல்லாம் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் எவ்வாறெல்லாம் காட்டிக்கொடுக்க முடியுமோ எவ்வாறெல்லாம் விமர்சிக்க முடியுமோ, மானபங்கப்படுத்த முடியுமோ அவ்வழிகளில் அவற்றையெல்லாம் செய்து கொண்டிருப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் பல எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றினால் எவற்றைச் சாதிக்கப்போகிறோம.; நமது பிரிவு என்பது நம்மை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் நமது எதிரிகளுக்கே உரமாக அமையும்.

இந்நிலையையே இன்று அரபு உலகில் காணக் கூடியதாகவுள்ளது. அல்லாஹ்வையும் நபிiயும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கில் நாளாந்தம் கொள்ளப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்கள், பள்ளிவாசல்கள் குண்டு வைத்து தகர்க்கப்படுகின்றன என்றால் அவற்றின் பின்னணியில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கும் சக்திகள் முஸ்லிம்களை கொள்கை ரீதியாகவும் குல ரீதியாகவும் பிரித்து உங்களை நீங்களாகவே அழித்துக் கொள்ளுங்கள் என்று ஏவி விட்டிருக்கிறார்கள். அந்த நிலை இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எற்பட்டுவிடக் கூ;டாது, ஆறடி மண்ணறையில் வெள்ளைப் துணியுடன் மண்ணோடு சங்மிக்கக் கூடியவர்கள் பதவிகளுக்காவும் கொள்கைகளுக்காவும் பிளவுபடுவதும் பிரிந்து செயற்படுவதும் நமக்குள் பலவீனத்தை ஏற்படுத்துமே தவிர பலம்பெறச் செய்யாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு முகம் பாதிப் பகுதி தமிழ் மக்களுக்கு சரியாகத் தெரிகின்ற வேளை மறுமுகம் அதே தமிழ் மக்களின் பாதிப் பகுதியினருக்கு பிழையாகத் தெரியத் தோன்றியிருக்கிறது.. இவ்வாறான நிலையில்தான் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகளின் ஒரு முகச் சரியையும் மறுமுகப் பிழையையும் முஸ்லிம்கள் கண்டுகொண்டு இருக்கிறார்கள்.

சமகாலப் பிரச்சினைகள் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு கலந்தாலோசிக்க வேண்டியதொரு காலகட்டத்தில், அதற்காக மேடை அமைத்து மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டி நேரத்தில் இக்குடும்பிச் சண்டைகள் எந்த விதத்திலும் ஆரோக்கியமாகாது. அவை நமது இலக்குகளையும் நோக்கங்களையும் காணாமல் ஆக்கிவிடும்.

அதனால், அரசியல், ஆன்மீகக் கொள்கைகள், பிராந்தியங்கள் என்பவற்றைக் கடந்து ஒரே இறைவன், ஒரே நபி, ஓரே குர்ஆன், ஒரே கிப்லா என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நமக்குள் நாம் ஒன்றுபட்டு நமக்கான பலமான அமைப்பைபொன்றை, ஒரு மஷுரா சபையை உருவாக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

ஏனெனில், சமகால அரசில் நகர்வுகளின் முன்னெடுப்புக்களினால் உருவாகின்ற மாற்றங்கள்; முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வாறு அமையப்பெறும் என்றதொரு வெளிச்சமில்லாத சூழ்நிலை உள்ளது. இவ்வாறன நிலையில்,; இதயசுத்தியோடு, எவற்றிற்கும் சோரம்போகாத, சமூக நலனை அடைவதை மாத்திரம் இலக்காக்கொண்ட, கருத்து ஒருமைப்பாடுயுடையவர்களின் ஒன்றுபடுதலின் ஊடாக பலமான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அவ்வமைப்பு அரசியல், ஆன்மீகக் கொள்கைகள், பிராந்தியம் என அத்தனை வேறுபாடுகளையும் கடந்தாக அமைதல் வேண்டும். இவ்வமைப்பை உருவாக்க கருத்தொருமைப்பாடுடைய, சோராம்போகாத, சமூக நலனை மாத்திரம் இலக்காகக் கொண்ட இதயசுத்தியுள்ள உலமாப் பெருந்தகைகளும,; புத்திஜீவிகளும், சிவில் அமைப்புக்களும் சமூக நலன்கொண்ட அரசியல் பிரமுகவர்களும் ஒற்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும். இவ்வாறான அமைப்பொன்று உருவாக்கப்படுகின்றபோதுதான் சுயநல அரசியல்வாதிகளினாலும் இயக்கங்களினாலும் காணாமல் ஆக்கப்படுகின்ற முஸ்லிம் சமூகம்சார் இலக்குகளையும் நோக்களையும் காப்பாற்றி அவற்றை அடைவதற்கான நகர்வுகளை முன்நோக்கி நகர்த்த முடியும் என்பதே நிதர்சனமாகும்.

– எம்.எம்.ஏ.ஸமட்