முஸ்லிம் அரசியலும் மாற்றமும்

அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் உலகளவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இம்மாற்றங்கள் நாடுகளின்; மாநில, பிராந்திய, பிரதேசங்களிலும், சமூகங்கள் மற்றும், தனிநபர்களிலும் நேர், எதிர் மறை விளைவுகளையும் உருவாக்கிக் கொண்டிருயிருக்கிறது.

ஆரோக்கியமான மாற்றங்களும் அம்மாற்றகளுக்;கான முன்நகர்வுகளும் வெற்றிகரமான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுகின்றன. ஆனால், அவற்றிற்கு மாறான மாற்றங்களுக்கான நடவடிக்கைளும், செயற்பாடுகளும் கூட வெற்றியளிக்கின்றபோதிலும, அவ்வெற்றிகள் எல்லோரினதும் எதிர்பார்ப்புக்களை வெற்றிகொண்டதாகக் காணப்படவில்லை.

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம் வெற்றிபெற்ற போதிலும், அவரின் வெற்றியும், பிந்திய செயற்பாடுகளும் அமெரிக்க மக்களையே அவருக்கும் அரவது வெற்றிக்குமெதிராக போராட்டங்களை முன்னெடுக்க வழிகோலியுள்ளது.

அவ்வாறுதான,; தமிழ் நாட்டை ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கட்சி அரசியலிலும், ஆட்சியிலும் வாக்களித்த மக்கள் விரும்பாத மாற்றத்தை கொண்டுவருவதற்காக மறைந்த தமிழ்நாடு மாநில முதல்வர் ஜெயலலிதாவின் உற்றதோழி சசிகலா முயற்சித்த போதிலும,; அம்மாற்றத்திற்கான விளைவு அவருக்கே பாதகமாக அமைந்து விட்டதை தமிழ் நாட்டு அரசியல் அரங்கு புடம்போட்டுள்ளதைக் காண முடிகிறது.

மக்கள் விரும்பாத கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்து நாட்டை ஆள்வதற்கு கடந்த ஆட்சியாளர்கள் முற்பட்டவேளை, அவ்வாட்சிக்கு முற்றுபுள்ளி வைத்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருதற்காக 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஏறக்குறைய 64 இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

கட்சி அரசியலுக்கு அப்பால், இந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்காக மூவின மக்களினதும் வாக்குப் பலமானது மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு வெற்றியைக் கொடுத்தது.

அவ்வாட்சி மாற்றத்திற்கு சிங்கள மக்களோடு பெரும்பான்மையான தமிழ் மக்கள் எந்தளவுக்கு ஆர்வம் காட்டினார்களோ அந்தளவுக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையினரும் ஒத்துழைத்தனர். முஸ்லிம் அரசியல் தலைமைகள் எந்த ஜனாதிபதி வேட்பாளாருக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பது என்று தீர்மானிப்பதற்கு முன்னரே இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள்; தற்போதைய ஜனாதிபதிக்குத்தான் வாக்களிப்பது என்ற முடிவுக்கு வந்தமை முஸ்லிம் அரசியலில் நல்லதோர் வரலாற்றுப் பாடமாக காணப்படுகிறது.

இவ்வரலாற்றுப் பாடமானது வெறுமனே ஒரு ஆட்சி மாற்றத்திற்காக மாத்திரமின்றி, முஸ்லிம் நலன்சார் அரசியல், சமூக, பொருளாதர மாற்றங்களிலும் படிப்பினையாக அமைவது முக்கியமாகும்.

ஏனெனில். அனைத்து தனித்துவ இனங்;களுக்குமுள்ள உரிமையுடன் சமகாலத்திலும், எதிர்காலத்திலும் முஸ்லிம்கள் வாழ வேண்டுமாயின் முஸ்லிம் அரசியலிலும் மாற்றம் வேண்டும். தன்னலங்களுக்கும், கட்சி அரசியலுக்கும் முன்னுரிமை வழங்கி, பொதுநலன்களைப் புறந்தள்ளி, மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காது, மக்களின் பிரச்சினைகளை பிச்சைக்காரணின் புன்னாகப் பயன்படுத்தி, வாக்குறுதிகளுக்கு மாறு செய்து ‘கேட்கிறவன் கேணயன் என்றால் எலியும் ஏரோபிளேன் ஓடுமாம்’ என்ற நிலைக்கு அதி தீவிர கட்சி விசுவாசிகளை ஆளாக்கி ஒட்டுமொத்த வாக்காளர்களினதும் வாக்குபலத்தை அர்த்தமற்றதாக்கும் தற்கால முஸ்லிம் அரசியலில் நம்பிக்கை இழந்துள்ள எதிர்கால சந்ததியினர் மாற்றத்தை வலியுறுத்தி தங்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருவதைக் காண முடிகிறது.

இற்றைக்கு 16 வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குப்பலத்துடன்; தெற்கு முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து இந்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான பலமுள்ள பங்காளிக்கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை மர்ஹும் அஷ்ரப் எவ்வாறு நிலைநிறுத்திக் காட்டினாரோ, அவ்வாறானதொரு தலைமைத்துவத்துக்கான தேவை சமகால மற்றும் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கு அவசியமாகிவிட்டது. ஏனெனில், சமகால முஸ்லிம் அரசியலின் இயலாமைகளும் உட்கட்சிப் பூசல்களும், முஸ்லிம் அரசியலையும் மக்களின் அபிலாஷைகளையும் பின்நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இதனால், மர்ஹும் அஷ்ரபின் அரசியலுக்கு முன்னிருந்த அரசியல் யுகத்தை நோக்கி தற்கால முஸ்லிம் அரசியல் இழுத்துச் செல்லப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முஸ்லிம் அரசியலும் மாற்றமும்

இந்நாட்டில் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பும் சுதந்திரந்திரமடைந்ததன் பின்னரும். சக்திமிக்க அரசியல் ஸ்தாபனமொன்றை இலங்கை வாழ் முஸ்லிம்களினால் ஸ்தாபிக்க முடியவில்லை. குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிகளினால் அது சாத்தியப்படவில்லை. இதற்கு புவியில் மற்றும் சூழலியல் காரணங்கள் ஒத்துழைக்கவுமில்லை. இதனால், முஸ்லிம்களின் தலைமைகள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட தலைவர்கள் தமது கல்வி மற்றும் பொருளதாரா, குடும்ப நிலைகளுக்கு ஏற்ப பெரும்பான்மையினரின் கட்சிகளோடு சங்கமித்தனர்.

அதன் பயனாகக் காலத்திற்குக் காலம் நடைபெற்ற தேர்தலில்களில் அக்கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். அவர்கள் பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரங்களினூடாக மக்களின் சமூக நலன்களிலும் அக்கறை கொண்டு செயற்படுட்டனர். இலங்கை முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு வீதத்தினர் வடக்கு, கிழக்குகிற்கு வெளியே வாழ்ந்தாலும் அன்றைய காலத்தில் காணப்பட்ட தேர்தல் முறைமையின் பிரகாரம், தனி முஸ்லிம் வாக்குகளினால் தெற்கில் வாழ்ந்த முஸ்லிம் அரசியல் பிரமுவர்களுக்கு அதிகார மன்றங்களுக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கவில்லை.

இதனால்தான், 1931ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சேர் மாக்கான் மார்க்கார் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியிலிருந்து முதன்முறையாக நேரடியான மக்கள் வாக்களிப்பின் மூலம் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு தெற்குத் தொகுதி என்பது அப்போது காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களை உள்ளக்கிய தொகுதியாகக் காணப்பட்டது. பின்னரான காலங்களிலும் தென்னிலைங்கையில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாத நிலை காணப்பட்டபோது, சேர் ராசிக் பரீட், டாக்டர் பதியுதீன் மஃமூத் போன்ற தலைவர்கள் கிழக்கில் போட்டியிடுவதற்கு முன்வந்திருந்தாக கிழக்கின் அரசியல் வரலாறு கூறுகிறது.

அன்று முதல் இன்று வரை கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் அரசியல் சக்திமிக்க கேந்திர தளமாகக் கருதப்பட்டு வந்தது. இவ்வாறு கேந்திர தளமாகவுள்ள இக்கிழக்கு மாகாண மக்களை ஒன்று திரட்டி முஸ்லிம் அரசியலில் மாற்றத்தைக் காண்பித்தவர்தான் மர்ஹும் அஷ்ரப்.

1981ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் வந்தவுடன் பலமிழந்திருந்த கிழக்கிழங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் இருந்தவர்கள் மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடன் இணைந்தபோது, அஷ்ரப் தனித்துவிடப்பட்டார். இருந்தும,; தனது தனித்துவத்தைக் விட்டுவிடக் கூடாது என்பதற்காக தனித்து நின்று தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளையும் முன்வைத்தார். அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறையின் தலைமை வேட்பாளராக ஒரு முஸ்லிம் ஒருவரே தமிழர் விடுதலைக் கூட்டணி கிழக்கிழங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணி கூட்டு வேட்பாளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டபோது முஸ்லிம் சமூகத்துக்கான அரசியில் மாற்றம் அவசியம் என அவரால் உணரப்பட்டது.

தன்னலங்களுக்கான முன்னுரிமையும், வாக்குறுதி மீறல்களும், ஏமாற்றங்களும் அரசியல் மாற்றத்திற்கான வலுவான உணர்வுகளை உருவாக்கியது. அவ்வுணர்வுகள் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உரமாக்கியது.

அரசியல் மாற்றத்துக்கான அவசியம் கருதி அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அவரது மரணத்தின் பின்னர் பல்வேறு உடைவுகளைக் கண்டுள்ளதுடன் உடைத்து சென்றவர்கள் உருவாக்கிய கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸும் தற்காலத்தில் கட்சி நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதைக் காண முடிகிறது.

தேசிய அரசியலில் இடம்பெறுகின்ற மாற்றங்கள், எதிர்கால முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விடயத்தில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும், சமகாலத்தில் முஸ்லிம்களும் பிரதேங்களும் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொளாதார, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு போன்ற வாழ்வியல் கூறுகளில் காணப்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்று சிந்தித்து செயற்படுவதற்கும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் பதிலாக கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் வழங்குவது இக்கட்சிகளின் மீதான நம்பிக்கையை எதிர்கால சந்ததிகளிடம் இழக்கச் செய்துள்ளது.

பிரச்சினைகளும் தலைமைகளும்

இந்நாட்டின் 25 மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்கள் பிரதேச ரீதியிலான பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆனால், எவ்வகையான பிரச்சினைகளை இம்மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்குகிறார்கள் என்பது குறித்த ஆவணப் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான முயற்சிகள் அரசியல் தலைமைகளினாலும் முன்னெடுக்கப்படவில்லை. ஒரு சில மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், ஏனைய பல மாவட்டங்களில் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.
அத்தோடு, முஸ்லிம்கள் செறிந்தும், சிதறியும் வாழும் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வை யார் மூலம் பெற்றுக்கொள்ளவது. அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும். அவற்றுக்குரிய ஏற்பாடுகள் ஒன்றுபட்ட ரீதியில், ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட வடிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருப்பின் அதற்கான தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதா, அத்தீர்வுகள் கிடைக்கும் வரை அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் கட்சித் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விகளையும் தற்காலத்தில் முன்வைக்க வேண்டியுள்ளது.

மாவட்ட ரீதியாக நீண்டகாலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் அடிப்படையில் தலைநகர் கொழும்பு மாவட்டத்தை நோக்குகையில் இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள்; பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சமூகத்தின் மன அமைதியான வாழ்வு கல்வி முன்னேற்றம், ஆரோக்கியமான இளைஞர் சமூகம், சமூக நல்லிணக்கம் அனைத்தும் அதன் வாழிடத்தோடு தொடர்புபடுகின்றது. கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் சமூகவியல் அவர்களது கல்வி, வியாபாரம், அரசியல், கலாசாரம் அனைத்திலும் தாக்கம் செலுத்தி வருகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதீத நகரமயமாக்கல் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது. இடநெருக்கடி, வீட்டுப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, பாடசாலைகளில் இடநெக்கடி, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளை கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால் இவற்றுக்கான முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக முகம் கொடுத்து வருகின்றபோதிலும், அப்பிரச்சினைகள் உரிய முறையில் வெளிப்படுத்தப்படுவதில்லை.

ஒரு பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு கட்சித் தலைமை செயற்பட்டால் மற்றயை கட்சித் தலைமையும் அதற்குள் மூக்கை நுழைத்து தானும் நிறைவேற்றாது பிறரையும் நிறைவேற்றி வைக்க இடம் வழங்காதுள்ள நிலையே முஸ்லிம் அரசியலில் காணப்படுகிறது.

; முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் மௌலவி ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளில் ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் தனித்தனியாக நின்று செயற்படுவதைக் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்திலும் பல பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாது தொடர்கதையாகக் காணப்படுகிறது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம்கள் காணிப்பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் காலத்திற்குக் காலம் மேற் கொள்ளப்படுகின்றபோதிலும் இதுவரை அவற்றிற்கான நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலும் பல பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாது தொடர்கின்றன. பொத்துவிலில் தொடரும் காணிப்பிரச்சினை, அக்கறைப்பற்று வட்டமடுப் பிரதேசத்தில் இழுபறி நிலையிலுள்ள மேச்சல் தரை மற்றும் விவசாயக் காணிக்கு தீர்வு எட்டப்படாமை, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகள் இதுவரை வழங்கப்படாமை, அட்டாளைச்சேனை அஷ்;ரப் நகர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். சம்மாந்துறை விவசாயிகள் எதிநோக்குகின்ற பிரச்சனைகள், கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான தடைகள், அவை தவிர புதிதாக நுழைக்கப்பட்டுள்ள தொல்பொருள்கள் காணப்படும் இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளும் அது தொடர்பாக மக்கள் கொண்டுள்ள அச்சம், கடும்போக்கு இனவாதிகளின் செயற்பாடுகளினால் உருவெடுக்கின்ற பிரச்சினைகள், வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என ஒவ்வொரு பிரதேசத்திலும் தொடரும் பிரச்சினைகளுக்கு அப்பிரதேச முஸ்லிம்கள் முகம்கொடுத்தவாரே உள்ளனர்.

இவ்வாறு இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும், அரசியல், சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடையப்பட வேண்டுமாயின் எந்தப் பிரச்சினையினை எவ்வழியில் தீர்த்துக்கொள்ள முடியுமோ அவ்வழியில் தீர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்திலுள்ள தலைமைகளின் பொறுப்பாகும்.

ஆனால், இத்தகைய பொறுப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக கட்சி நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சித் தலைமைகள் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. தேர்தல் காலங்களில் கட்சிக்கும் கட்சி வேட்பாளர்களுக்குமாக வாக்குகளை உறிஞ்சிக் கொள்வதற்கும் கட்சி உறுப்பினர்கள் தலைமைகள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை மேலும் அதிகரித்துக் கொள்வதறகுமாக வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவ்வாக்குறுதிகளுக்கு மாறு செய்யும் நிலைதான் காணப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின்போது தேசிய பட்டியல் பாராளுமன்ற நியமனம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களையும் பிரதேசங்களையும் மாத்திரமின்றி குறித்த நபர்களையும் ஏமாற்றியிருக்கிறது. இந்த ஏமாற்றம் தற்போது விஸ்பரூபமெடுத்திருக்கிறது. அவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் அக்கட்சியின் செயலாளருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியும் மீறப்பட்டிருக்கிறது. தேசிய பட்டியல் நியமனம் மாத்திரமின்றி, கட்சி உயர்பதவிகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவ்வாக்குறுதிகள் மீறப்பட்டிருக்கின்றன. ஆனால், 1989லும் 1994லிலும் மர்ஹும் அஷ்ரபினால்; தேசிய பட்டியல் பாராளுமன்ற நியமன விடயத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பட்டிருக்கின்றன என்பது தலைமைகள் அறியாத விடயமல்ல.

வீரவசனங்களும், வாக்குறுதிகளும் முஸ்லிம் அரசியலை அலங்கரித்தும் அவமானப்படுத்தியும் பழிசொல்லுக்குமுள்ளாக்கியுள்ள இக்கால கட்டத்தில் தனித்துவ இனமான முஸ்லிம்கள் இழந்துள்ள உரிமைகள். பெற வேண்டிய உரிமைகள், சம கால மற்றும் எதிர்கால அசியல் மாற்றங்களினால் சமூகம் எதிர்நோக்க வேண்டியுள்ள பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பவை தொடர்பிலும்; தற்கால அரசியல் தலைமைகள் இதயசுத்தியோடு செயற்படாமை; மாற்றுத் தலைமைக்கான அவசியத்தை எதிர்கால முஸ்லிம் சந்ததியினரிடத்தில் தோற்றுவித்திருக்கிறது.

இந்த அ;வசியத்துக்கான ஆரோக்கியமான பயணம் அதன் இலக்கை அடைய வேண்டுமாயின் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடனும் இதயசுத்தியுடனும்; செயற்படக் கூடிய ஆளுமையும் ஆற்றலுமிக்க தலைமை அடையாளம் காணப்படுவது அவசியமாகும். ஏனெனில் தலைவர்கள் உருவாகுவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.

அந்த அவசியத்தோடும் மாற்றம் ஒன்றே மாற்று வழி என்ற சமகால ஆரோக்கியமான ஊக்கமுள்ள சிந்தனையோடும் ஒன்றிணைந்து, ஒருமித்துச் செயற்படுகின்றபோதுதான் எதிர்காலத்தில் முஸ்லிம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதன் மூலம் எதிர்கால சந்ததியினரின் அரசியல், சமூக. எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்பது நிதர்சனம்.

-எம்.எம்.ஏ.ஸமட்