சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒரு திறந்த மடல்!

மதிப்புக்குரிய சகோதரர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு இதயங்கனிந்த ஸலாம்.

உங்கள் மீதுள்ள மதிப்பினாலும் மரியாதையினாலுமே இக்கடிதத்தினை வரைகிறேன். இலங்கை முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை உங்கள் இருப்பு பற்றி எல்லோரும் அறிவார்கள். மிக நீண்டகாலமாக அரசியலில் வீற்றிருக்கும் நீங்கள் உங்கள் தொகுதி மக்களின் வாக்கு வங்கியை மாத்திரம் குறி வைத்து இயங்கிய உள்ளூர் அரசியல்வாதி எனும் இடத்திலிருந்து நமது சமூகத்துக்காக தேசிய ரீதியில் குரல் கொடுத்த ஒரு காலத்திற்கேற்ற தலைவராக நேற்று உருவாகி விட்டீர்கள்.

இதை ஏற்றுக்கொண்டவர்கள் போக, உங்கள் மீதான சந்தேகம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திடீரென நேற்றைய தினம் அத்தனை உரத்து ஒரு விடயத்தைப் பேசிய நீங்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியலில் பாராளுமன்றிற்குள் இணைத்துக் கொள்ளப்பட்டவர் என்ற ரீதியில் அரசுக்கு எதிரான உறுதியான பேச்சை உங்களிடமிருந்து எதிர்பார்க்காத அதேநேரம் தகுந்த தருணத்தில் நீங்கள் பேசியிருந்தீர்கள். உங்கள் பேச்சு ஆபத்தான ஒரு விடயத்தையும் கொண்டிருந்த போதிலும் மௌனித்திருக்கும் ஏனைய தலைவர்களுக்கு முன்னால் அதையெல்லாம் மறந்து மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

இது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பில்லை, அதை உங்களுக்கு உருவாக்கித் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

உள்ளூர் அரசியல்வாதியாக இருந்த நீங்கள் ஏனைய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் தம்புல்லை பள்ளி விவகாரத்தில் பேசியவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கக் கூடியவர்கள் உங்களை அத்தனை சீக்கிரம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால், அவர்களைப் புறக்கணிக்காது அந்த சாராரின் மனங்களையும் வென்றெடுக்கும் கட்டாயமும் உங்கள் முன் இருக்கிறது.

அதற்காக நீங்கள் பழைய விடயங்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டாம். ஆனால், நேற்றிலிருந்து உங்கள் மீது உருவான நம்பிக்கையைத் தக்க வைத்துக் காட்டுங்கள்.

பாராளுமன்றில் நேற்று ஒரு நாள் பேசியதோடு உங்கள் கடமை முடிந்து விட்டது என்று நிறுத்தி விடாதீர்கள். உங்களுக்கு முன்னர் பேசிய அமைச்சர் ஹலீமுக்கு பதில் கொடுத்த பெரும்பான்மையினப் பாராளுமன்ற உறுப்பினர், இரண்டரை வருடங்களுக்கு முன் நடந்த அளுத்கம விடயத்தை வந்து இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறீர்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையாவது பெற்றுக்கொடுக்க, முதலில் அமைச்சரவையில் பேசுங்கள் என அந்த அமைச்சருக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

அது உங்களுக்கும் பொறுப்பாகும். அளுத்கம விடயத்தில் மஹிந்த ராஜபக்சவோடு இணைந்து அரசியல் நடாத்தியதால் உங்களால் பேச முடியாது போயிருந்தாலும் கூட நேற்று முதல் நீங்கள் அனைத்து மக்களின் பிரதிநிதியெனும் நம்பிக்கை உருவெடுத்திருக்கிறது. எனவே, நீங்களும் அதைப் பேச வேண்டும், அந்த மக்களுக்கான நீதியையும், நிவாரணத்தையும் பெற்றுத்தர முன் நின்று உழைக்க வேண்டும்.

இன்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் மத்திய கிழக்கிலும் நல்ல தனவந்தர்களின் நட்பும், நெருக்கமான உறவும் உள்ள ஒரே அரசியல் வாதி நீங்கள் தான். உங்கள் ஹிரா பவுண்டேசன் மேற்கொள்ளும் நல்ல பல காரியங்களை தேசிய ரீதியில் விரிவு படுத்துங்கள், முதலில் அளுத்கம போன்ற பாதிக்கப்பட்ட இடங்களையும் கவனத்திற் கொள்ளுங்கள்.

நேற்றைய உங்கள் பேச்சைக் கேட்டு, ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சரும் மிரண்டு விட்டதாகவும் செய்திகளைப் பார்க்கக் கிடைத்தது. அப்படியானால் இது தான் நல்ல சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருக்கும் ஏனையவர்களை ஒதுக்கித் தள்ளி உங்களுக்குக் கிடைத்திருக்கும் நன்மதிப்பையும், சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி எங்கள் மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தாருங்கள்.

யுத்த காலத்தில் தொழிலிழந்த புல்மோட்டை மக்களுக்கும் அரசியல் விடிவைப் பெற்றுத்தாருங்கள், மன்னாரிலிருந்து விரட்டப்பட்ட மக்களின் மீள்குடியமர்தலை வைத்து நடாத்தப்படும் சீரியல் நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். மழை வந்தால் ஆழ் கடலில் மிதப்பது போன்று அல்லல்படும் எம் யாழ்ப்பாண மக்களுக்கு ஹிரா பவுண்டேசன் ஊடாக நல்ல வீடுகளை, பாதுகாப்பான சூழலோடு உருவாக்க உதவி செய்யுங்கள்.

கிழக்கு மாகாணத்தின் தலை நகர் அதுவும் மட்டக்களப்பில் 90கள் வரை வாழ்ந்து வந்த முஸ்லிம் குடும்பங்கள் ஏறத்தாழ எல்லோருமே அங்கிருந்து சென்று விட்டார்கள். ஊரின் மத்தியில் நீதிமன்றுக்கு முன் கம்பீரமாக வீற்றிருக்கும் பள்ளிவாசலுக்கு வர ஊரில் மக்களில்லாத நிலை, அதையும் பாருங்கள். முஸ்லிம் கொலனி இன்று அப்படியே இல்லாமல் போய் விட்டது, அதையும் பாருங்கள். கொழும்பில் அடிப்படை வசதிகளே இல்லாமல் எக்கச்சக்கமான முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன, அவற்றிற்கும் உங்கள் உதவிகளை விரிவு படுத்துங்கள்.

இப்படி இந்த சமூகத்துக்காக என்று கூறிக்கொண்டு பாராளுமன்றில் வீற்றிருக்கும் வெற்றுக் கோசங்களை வென்று மக்களுக்கான ஒரு தலைவனை இழந்து நிற்கும் இந்த சமூகத்துக்கு நம்பிக்கை தரும் ஒரு நாயகனாக நீங்கள் உருவெடுக்க வேண்டும் எனும் அவாவிலேயே இந்த மடலை வரைகிறேன்.

நம்பியிருக்கும் எங்களைக் கை விட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து விடாதீர்கள். இன்று மஹிந்த ராஜபக்சவுக்குத் தேவைப்படும் இனவாதத்தைத் தூண்டுவதற்காக, அடுத்து வர விருக்கும் அரசியல் யாப்பைக் குழப்புவதற்காக அவரோடு கூட இருக்கும் அஸ்வர் அடிக்கடி முணகிக் கொண்டிருக்கிறார். ஞானசார எப்படியாவது இனவாதத்தை உருவாக்கி மஹிந்தவை நியாயயப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எனவே, நீங்கள் அந்தப் பக்கம் திரும்பிப் போய் விடாதீர்கள்.

பழைய விடயங்களை உங்கள் மீது நம்பிக்கையில்லாமலிருப்பவர்களும் கூட மறந்து விடும் அளவுக்கு, முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் அரசியல் வெற்றிடத்தை நீங்கள் நிரப்புவீர்கள், நேற்றைய நம்பிக்கை முஸ்லிம் சமூகத்தின் சிற்றின்பமாகிவிடாது எனும் நம்பிக்கையையும் வளர்த்தவனாக, உங்களை நாங்கள் விரும்பும் சமூகத்தின் விடிவெள்ளியாகப் பார்க்க எல்லாம் வல்ல இறைவனின் நல்லருளையும் நாடியவனாக…

இத்துடன் என் சிறிய மடலை நிறைவு செய்து கொள்கிறேன்.

அ.நவாஸ்