சவுதி: உதைபந்தாட்டத்தை நேரடியாகப் பார்வையிட பெண்களுக்கும் அனுமதி!

உதைபாந்தாட்டப் போட்டிகளை நேரடியாக அரங்குக்கே சென்று பார்வையிட பெண்களுக்கு இருந்து வந்த தடையை சவுதி அரசு அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளது.

தற்போதைய சவுதி மன்னர் சல்மானின் புதல்வரின் அரசியல் ஈடுபாட்டைத் தொடர்ந்து அங்கு பல்வேறு மாற்றங்கள் நிலவி வருகிறது. பெண்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரம், மோட்டார் சைக்கிள் ஓடுவதற்கான அனுமதி போன்றவற்றின் தொடர்ச்சியில் எதிர்வரும் 12ம் திகதி முதல் உதைபந்தாட்டப் போட்டிகளைக் காண அரங்குகளுக்கு நேரடியாக செல்வதற்கான அனுமதியும் வழங்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் ரியாத் கிங் பஹத் சர்வதேச மைதானம், ஜித்தா கிங் அப்துல்லா மைதானம், தமாம் முஹம்மத் பின் பஹத் அரங்கு ஆகிய இடங்களில் இந்நடைமுறை ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சவுதி அரேபியா தீவிர பழமைவாதத்தைப் பின்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள முஹம்மத் பின் சல்மான் இனி வரும் காலங்களில் தமது நாடு மிதவாத கொள்கையைப் பின் பற்றும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதே கால கட்டத்தில் சவுதியிலிருந்து தனி நபர் மற்றும் அமைப்புகளின் அனுசரணையில் இலங்கை, இந்தியா உட்பட தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் தோன்றி இயங்கி வரும் அமைப்புகளின் செயற்பாடுகளும் அவர்களின் ‘கொள்கைகளும்’ கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.