ஓ ஜெரூஸலேம்!

முஸ்லீம்களால் நடத்தப்படும் எந்த ஒரு நிகழ்வும் புனித குர்-ஆனின் ஒரு சிறு பகுதியை வாசிப்பதின் (கிராத்) ஊடாகவே ஆரம்பிக்கப்படும். இது எமது மரபு, இறைவனின் அருளை கேட்டு ஆரம்பிப்பது ஒரு தெம்பூட்டும் முறையும் கூட.  ஆனால் சென்ற கிழமை ஸ்ரீலங்காவில் சிம்பாவே நாட்டு மத போதகர் மதிப்புக்குறிய இஸ்மயில் மெங்க் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வு ஸ்ரீலங்கா தேசிய தீதத்துடன் ஆரம்பித்து இரண்டாம் நிகழ்வாக கிராத் ஓதப்பட்டதை அனேகர் அறிந்திருப்பீர்கள்.

இது இப்படி நடை பெறுவதற்கு என்ன காரணம்? எல்லா சந்தர்ப்பங்களிலும்  நம் நாட்டுபற்றை வெளிப்படுத்தவேண்டும் என்ற ஒரு தேவையுள்ளது என்பதை நாமாக உணர்ந்து  இந்த நிலை எடுத்தோமா? அல்லது இதுவரை நாம் கண்டு கொள்ளாத அல்லது கண்டும் அதுபற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற நம் பொதுவான போக்கை யாரும் நமக்கு உறைக்கும் படி சுட்டிக்காட்டியதால் நமக்குள் ஏற்பட்ட தெளிவின் பிரதிபலிப்பா அது? என்ற ஒரு கேள்வியை கேட்பது இக்கடுரையை நகர்த்திச்செல்ல உதவும் என்பது என் கணிப்பு.

BBS என்ற கடும் போக்கு சிங்கள பெளத்த அமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லீம்களுக்கு கடந்த சுமார் நான்கு வருடங்களாக ஏற்படுத்திய உடைமை, உயிர் இழப்புக்களையும், மனரீதியாக ஏற்படுத்திய தாக்கத்தையும் விட,  அரசியல் கலக்காத இந்த புத்த வெளியீட்டு நிகழ்வை நாம் நம் நாட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பித்தோம் என்றால் அதற்கு  நம் சமூகம் மீதான BBS சின் குற்றச்சாட்டும் ஒரு காரணம் என்பது என் முடிவு. ஆக இது போன்ற சிறிய விடயங்களை நாம் காலாகாலமாக அசட்டை செய்ததற்காக செலுத்திய விலை இந்த இழப்புக்கள். இதன் அடுத்தபக்கம் BBS சின் நடத்தைகள் சரி என்பதோ நியாயத்தின்பால்பட்டதோ என்பதல்ல. மாறாக  நாம் கற்றுக் கொள்ள நாமாக ஏற்படுத்திக் கொண்ட சூழ் நிலை.

இந்த சிறிய ஒப்பீட்டின் ஊடாக சென்ற கிழமை உலக அரசியல் அரங்கில் அமெரிக்க ஜானாதிபதி டொனால்ட் ட்ரம்மினால் “ஜெரூஸலெம்” நகரை ஆக்கிரமிக்கப்பட்ட நிலமான “இஸ்ரேல்” என்றழைக்கப்படும், சர்வதேச சட்டதின் கீழ் சட்டரீதியற்றதாக கருதப்படும்  ஒரு நாட்டின் தலைநகராகப் அங்கீகரித்த விடயத்தை விளங்க வேண்டிய ஒரு தேவை இருப்பதாக நான் நினைக்கின்றேன்.

“ஜெரூஸலேம்”,  “சியோனிஸ” வாதிகளால் தொடங்கப்பட்ட இடம் தொடர்பான ஒரு அரசியல் பிரச்சினை, அறபுக்கள் யூதர்கள் என்ற இனங்களுக்கு இடையிலான இடம்சார் இனப்பிரச்சினை, அஹ்லுல் கிதாப்( வேதம் கொடுக்கப்பட்டோர்)  என்று குர்-ஆனினால் அடையாளம் காட்டப்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்போருக்கிடையிலான இடம், அரசியல் சார் சமய மேலாதிக்க பிரச்சினை என்று பல கோனங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினை.

யூத நபி(இறைதூதர்) மூஸா(மோசே) அவர்களின் காலத்துக்கு முன்னே இன்றைய கா(G)ஸா, கானான் நிலப்பரபில் இருந்து வெளி யேற்றப்பட்டு எகிப்தில் பேரரசன்(பிரவுன்) ரம்சியின் அல்லது அவனின் தந்தையின் காலத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மூஸாவும் அவர் சகோதரர் ஹாரூனும்(ஆரோன்) விடுதலை செய்து கொண்டு மீண்டும் குடியமர்த்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட பிரதேசம்தான் வராற்று ரீதியாக “பி(Ph)லஸ்தின்” என்ற பிரதேசத்தையும் உள்ளடக்கிய பாரிய நிலப்பரபு.

இந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் செமத்திய(Semitic) மொழிக் குடும்பத்தவர்களான யூத, ஆர்மிய, அறபு மொழி பேசுவோர். “ஜெரூஸலேம்”   இந்த நிலப்பரப்பின் தலை நகராக அல்லது பெரு நகராக வரலாற்று காலத்துக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கின்றது.  பபிலோனிய, பாரசீக, ரோம, துருக்கிய ஆட்சியின் பிடியில் இந்த பெரு நகரம் இருந்திருக்கின்றது. யூத, அறபுக்களின் பெருந்தந்தையான இப்ராஹிம்(ஆப்ரஹாம்) மினால் கட்டப்பட்ட முஸ்லீம்களின் புனிதத்தலமான கஃபா முற்றுகைகுட்பட்டது போன்று ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களான   இறைதூதர் தாவூதின் (டேவிட்)தேவாலயம் அவரின் மகன் சுலைமான்(சொலமன்) கட்டிய தேவாலயங்களும்  பல முறை முற்றுகைக் குட்பட்டிருக்கின்றன.   புனித குர்-ஆனில் பெண்களில் தேர்ந்துடுக்கப்பட்டவராக அறியப்படும் யூத பெண்மணியான மர்யம்(மேரி(அலை) அவர்கள் யூத நபியான ஈஸா (ஏசு)(அலை) வை பெற்றெடுக்க இப்பிரதேசத்தின் கிழக்கு மூலையில் ஒதுங்கியதாக அடையாளம் காணப்பட்ட இடமும்(பெதல்ஹேம்) இந்த “ஜெரூஸலெம்” ன் நிருவாக எல்லைக்குட்படதாக இருந்ததாகவும், அறபு மனிதரான இறுதி இறை தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் விண்ணுலகம் சென்ற இடமாக அடையாளம் காணப்பட்ட இடமும் இந்த “ஜெரூஸலேம்” நகரே. ஆக இது இறைவனால் புனித பூமியாக( அல்/எல்- குத்ஸ்) பிரகடணப்படுத்தப்பட்ட இடமும் கூட. அந்த அடிப்படையில்  அஹ்லுல் கிதாப்பினரை ஒன்று சேர்க்கும் இடமாக திகழவேண்டிய இந்த “ஜெரூஸலேம்” (சமரசம் உலாவும் இடம்) அதன் முன்னையை வரலாற்று சம்பவங்களுக்கு புறம்பாக காடந்த சும்மர் 70 ஆண்டுகளாக கொலைக் களமாகவே நம் கண்முன்னே வந்து போகின்றது.

பலஸ்தீனத்தில்   ஐரோப்பிய அகதி யூதர்களுக்கான இஸ்ரவேல் என்ற புதிய நாடு பிரகடணப்படுத்தப்பட்ட பிற்பாடு 1967ல் ஆறு நாள் யுத்தம் இஸ்ரவேல் என்ற இளம் குட்டி நாட்டுக்கும் படைப்பலம் கொண்ட அறபு நாடுகள் சிலவற்றுக்கும் இடையே நடை பெற்றப்போது  அது வரை ஜேர்தானின் கட்டுப்பாட்டில் இருந்த “ஜெரூஸலேம்” உட்பட்ட மேற்கு கரை(West Bank), கைநழுவியது, எகிப்தின் பிடியில் இருந்த சினாய்/சைனாய் பாலைவன( மூஸா நபி இறைவணுடன் பேசிய இடத்தை உள்ளடக்கிய) பிரதேசம் கைநழுவியது, சிரியாவின் கீழ் இருந்த கோ(G)லோன் குன்று பிரதேசம் கைநழுவியது. பிற்பாடு ஏற்பாடு செய்யப்பட்ட எகிப்து- இஸ்ரவேல் சமாதான உடன்படிக்கையின் கீழ் சைனாய் பிரதேசம் முற்றாக எகிப்துக்கு மீள்கையளிக்கப்பட்டது.  கா(G)ஸா பகுதியில் இருந்து இஸ்ரவேலின் கட்டுப்பாடு இல்லாமல் பாலஸ்தீனியர் வெளி செல்லவும் உள்வரவும்  இந்த சையாய் பகுதியே ஒரே வழி. காஸாவோடு  மேற்குக் கரை உள்ளிட்ட பகுதி பலஸ்தீனின் இன்னொரு பகுதியாகவும் பலஸ்தீன் என்ற நாடு நில தொடர்பற்ற இரண்டு பகுதிகளாக காணப்படும் அதேவேளை கோலோன் பிரதேசம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இஸ்ரவேல் 1967 யுத்ததின் முன்னான தமது பகுதிக்கு திரும்பவேண்டும், பலஸ்தீன் பிரதேசம் என்று வரையறுக்கப்பட்ட பிரதேசத்துகுள் அத்து மீறிய யூத குடியேற்றங்கள் எதுவும் அமைக்கக் கூடாது  என்ற ஐ.நாடுகளின் பாதுகாப்பு சபையின் முன்னைய தீர்மானங்கள் பலதோடு   கடந்த டிசம்பர் மாதம் 2016  புதிய  தீர்மானம் இலக்கம் S/RES/2334  இன்னும் இஸ்ரவேல் மீறி வருவது மாத்திரமல்லாமல் தனது சியோனிஸ நில ஆக்கிரப்பு கொள்கை மூலம் பலஸ்தீன நிலப்பரப்பபை முடியுமான வரை சுறுக்கிக் கொண்டே வருகின்றது. தொடர்ச்சியான  பல பேச்சுவார்த்தைகளின் பின்பு 1993ல் “ஒஸ்லோ ஒப்பந்தம்” என்ற உடன்படிக்கையில் இரு நாட்டு தீர்வு கொள்கையளவில் இஸ்ரவேலர்களாலும்  பலஸ்தீனியர்களாளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதை சரியாக நடை முறைப்படுத்த முட்டுக்கட்டையாக இருப்பவை பல. அவற்றில் அதி முக்கியம் வாய்ந்தவை: ஜெரூஸலத்தில் இருந்து வெளியேறிய சுமார் மூன்று லட்சத்து ஐம்பதிநாயிரம்  பலஸ்தீன் அகதிகள் மீள் அனுமதிக்கப்பட வேண்டும், முழு ஜெரூஸலெமும் பலஸ்தீனின் தலைநகர் என்பது  பலத்தினயரின் நிலைப்பாடு.   இந்த அகதிகள் ஜெரூஸலெமுக்குள் அனுமதிக்கபட முடியாது என்பதும் ஜெரூஸலேம் இஸ்ரேலின் தலை நகர் என்பது இஸ்ரவேலின்  நிலைப்பாடாகும். இருந்தும் மேற்கு ஜெரூஸலேம் இஸ்ரேலின் கையிலும், கிழக்கு பகுதி கட்டுப்பாட்டுடன் கூடிய முறையில் பலஸ்தீனியரின் கையிலும் இருப்பது எல்லாரும் அறிந்த விடயம்.

இந்த நிலையில்  நாம் இன்னுமொரு விடயத்தை சற்று ஆராய வேண்டியுள்ளது. அதுதான் “சுய நிர்ணய உரிமை” (self determination) அதாவது, ஒரு இனம் அல்லது ஒரு மொழி குழுமம் அரசியல் ரீதியாக தன்னைத் தானே ஆழும் உரிமை. இந்த அடிப்படையில்தான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றதை நோக்கவேண்டும்.

இந்த பிரிவினையை இந்தியா விரும்பவில்லை. ஒற்றுமையை பாகிஸ்தான் விரும்பவில்லை. ஆகவேதான் பாகிஸ்தானின் தாபகர் முஹம்மது அலி ஜின்னாவுக்கு பிரிபடாத இந்தியாவின் முதல் பிரதமர் பதவி மகாத்மா காந்தியினால்  பரிந்துரைக்கப்படபோதும் அது வேண்டாம் தனி நாடே தீர்வென்றார். ஆனால் அவர் மகளோ ஒற்றுமையை வழியுறுத்தி இந்தியாவிலேயே தங்கிவிட்டார்.  மேற்கு பாகிஸ்தானினால் இரண்டாந்தர பிரஜைகளாக மதிக்கப்பட்ட கிழக்கு பாகிஸ்தான் வங்காளிகள் பிரிவினை கோரிய போது  இந்தியா ஆதரித்தது, பாகிஸ்தான் எதிர்த்தது, இருந்தும் பல லட்சம் கொலைகளுக்குப்பின் வங்காள தேசம் உருவானது.

இதே சுய நிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர் பிரிவினை கோரியபோது சிங்களவரும், முஸ்லீம்கள் எதிர்த்தனர், ஆனால் வடக்கும் -கிழக்கும் இணைந்த மாகாணங்கள் தமிழர் கையில் விழுமானால் தமக்கு தனி ஆட்சி அலகு வேண்டும் என்று இதே சுய நிர்ணய அடிப்படையில் முஸ்லீமகள் கேட்கின்றனர்.  மியான்மரிலே இனசுத்திகரிப்புக்குள்ளான ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு சர்வதேத்தின் தலையீட்டில் ஆர்கானில் தனி நாடு கொடுத்தால் அல்லது ஆட்சி அலகொன்று கொடுதால் வரவேற்க காத்திருக்கும் (குறிப்பாக இலங்கை) முஸ்லீம்கள் யூதர் தமது சுய நிர்ணய அடிப்படையில் தனி நாடு அமைக்க தமது பகுதிக்குள் ஒரு தலை நகரை அமைத்துக் கொள்ள முடியாது என்று சொல்ல நமக்கு தார்மீத நியாயம் இல்லை என்பதை உணர்வதில்லை. அதே நேரம் இந்த சுய நிர்ணயம் என்ற உரிமைக்குள் ஒழிந்திருக்கும் இஸ்ரேல்  மற்றவரின் உரிமையை மறுப்பது அல்லது அதற்கு வேறு சாயங்கள் பூசி  அதை தடுக்க முற்படுபதுதான் இங்கு பிரச்சினையின் அடிப்படையாக அமைகின்றது. ஆக நாம் மேலே குறிப்பிட்ட சில உதாரணங்களின் மூலம் இடம்/ நாடு தொடர்பான பிரச்சினை ஒன்றில்   இனம்,  மொழி, சமயம் என்ற பிரச்சினைகளை வழிந்து உள் நுளைக்கும் போது அல்லது மூன்றாந்தரப்பால் உள் நுளைக்கபப்டும் போது அங்கே நிம்மதி என்பது ஓடி ஒழிந்து கொள்கிறது. ஆக நான் இங்கே சுட்டிக் காட்ட முயற்சிப்பது பிரச்சினையை முசியுமானவரை பிரசினையின் வடிவத்துக்குள் வைத்து கையாளவிடின் ஒன்று பலவாக பத்தாக மாற்றம் பெறுவதை தவிர்க்க முடியாது என்பதாகும்.

யூதர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றல் என்பது மிக சிறிய யூத சமூகத்துக்கு பெரு நிலப்பரப்பும் , தன்னைவிட பன்மடங்கு அதிகமான அறபு பலஸ்தீனியருக்கு குறுகிய, தொடர்ச்சியாக குறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலப்பரப்பும் போதும் என்ற சியோனிஸ மனப்பான்மையில் முன்வைக்கப்படும் வாதத்தையும் ஏற்றுக் கொள்ளல் என்ற பொருளல்ல. அதே நேரத்தில் எனக்கே எல்லாம் வேண்டும் மற்றவனுக்கு ஒன்றும் இல்லை என்ற வாதமும் நிலைத்து நிற்க காரணமில்லை.  உலகம் என்பது  நாடுகளின் பெயர்பலகையுடனும், வரையறுக்கப்பட்ட எல்லைகளுடனும் உருவாக்கப்படவில்லை என்பதோடு வரையப்பட்ட எல்லைகள் என்றும் நிலையானதும் இல்லை. காலத்தால் மாறும் அல்லது தேவை கருதி நாமாக மாற்ற வேண்டும். இந்த மாறும் நிலைப்பாடு புதியதும் அல்ல. ஆகவே தான் புதிய நாடுகள் உலக படத்தில் இடம் பிடிக்கவும், பிரிந்திருந்த நாடுகள் ஒன்றாகிய சம்பங்களும் நமக்கான  அனுபவங்களாகவும் அமைந்துள்ளன.

டொனால்ட் ட்ரம் “ஜெரூசலேம்” நகரை இஸ்ரவேலின் தலைநகராக அங்கீகரிக்க முன்பே மேற்கு ஜெரூஸலெத்தில் “க்னெசெட்”(Knesst)என்ற இஸ்ரேலிய பாராளுமன்றமும், பிரதமரின் வாஸத்தலமும், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நிருவாக கட்டமைப்புகளும் இயங்கிவருகின்ற நிலையில் ட்ரம்பின் அங்கீகாரம் மேலதிகமாக என்ன செய்யும்? என்பததையும் , பலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெரூஸலெத்தை தம் கைக்குள் வைத்துக்கொள்வதோடு அது பலஸ்தீனின் தலைநகரின் ஒரு பகுதி என்று செயல்பட்டுக் கொண்டு வரும் போதும் அதற்கான மேலதிக நகர்வுகள் இல்லை என்றால் அது எப்படி சாத்தியமாகும் என்பதையும் அனேகர் சிந்தனைக்கு எடுப்பதில்லை.

நாஷி ஹிட்லர் யூத இனத்தை இனசுத்திகரிப்பு செய்தது மனித வரலாற்றில் கறைபடிந்த விடயம் அதை வரலாற்றில் திருத்தி எழுதமுடியாது. அதே போல் சியோனிஸவாதிகள் பலஸ்தீனியருக்கு செய்த அடாத்துக்கள், அட்டுழியங்கள் வரலாற்றில் கறைபடிந்த விடயங்கள் அதையும் வரலாற்றில் திருத்தி எழுத முடியாது. வரலாறு அவர்களை நோக்கி தம் சுட்டுவிரலை காட்டிக் கொண்டே இருக்கும்.   ஆனால் அதையே மீட்டிக் கொண்டிருந்திருந்தால் இன்னும் 50 வருடத்தில் பலஸ்தீனம் என்பது உலக வரைபடத்தில் இருந்து மறைந்துவிடும்.

மேலுள்ள வரலாற்று நிகழ்வுகளோடு 1947ம் ஆண்டு அரசியல் நிகழ்வுகளை சேர்த்து பார்க்கும் போது “ஜெரூஸலேம்” சமய சாயம் பூசப்பட்ட ஒரு அரசியல். அது இன்னும் இந்நகரின் தலைவிதையை நிர்ணயிப்பதில் முதன்மை பெறுகின்றது. அதன் அடிப்படையிலேயே இறுதியாக இப்பிரதேச ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த துருக்கியரை தோற்கடிக்க பலஸ்தின அறபுகளுக்கு ஆங்கிலேயர்களினால் வழங்கப்பட்ட உத்தரவாதம் தான் அறபு இனத்துக்கான தனி நாடு என்ற உற்சாகமூட்டல். அதே நேரத்தில் ஐரோப்பிய யூத இன சுத்திகரிப்பில் இருந்து தப்பிச்சென்று “சியோனிஸ” வாத தூண்டுதலினால்  பலஸ்தீனில் குடியேறிய அகதி யூதர்களுக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட அதே மாதிரியான உத்தரவாதம்தான் யூதர்களுக்கான தனி நாடு என்ற அம்சம். அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்ட இஸ்ரேல்  நல்ல ஊட்டசத்துடன் வளர்கின்றது, ஆனால் பலஸ்தீனம் ஒரு குறை பிரசவமாக ஆக்கப்பட்டு சத்துணவு இல்லாமல் தவிக்கின்றது.

பெரும்பான்மை அறபு முஸ்லீம்களை கொண்ட மத்தியகிழக்கு நாடுகளும் உலகின் எந்ததெந்த நாட்டில் எல்லாம் முஸ்லீம்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் “பலஸ்தீன்” க்கு என்றொரு சமய ரீதியான மானசீக ஆதரவுதளம் இருந்தது போலவே நீதி, நேர்மை, மனித நேயம் என்ற அடிப்படையில் அனேகமாக எல்லா உலக நாடுகளும் “பலஸ்தீன்” என்ற சட்ட ரீதியாக இன்னும் பிறக்காத நாட்டுக்கு தம் ஆதரவை காட்டி நிற்கின்றனர். இருந்தும் சட்டரீதியற்ற இஸ்ரேலின் உருவாக்கத்தின் பின்னான இந்த 70 வருட காலத்தில் பலஸ்தினியர் இழந்தவை மிக அதிகம் என்பதோடு அறபு நாடுகள் பலவும் தமக்கு வேண்டாத பிரசினையாக இதை பார்க்க முற்பட்டுள்ளனர். அதே நேரம் இதுவரை மானசீக ஆதரவை அளித்து வந்த உலக நாடுகள் அமெரிக்காவை பின்பற்றி தம் நட்டு தூதுவராலயங்களை “ஜெரூஸலெம்” நகருக்கு சத்தமில்லாமல் மாற்றமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

ஸ்ரீலங்காவில் தனி அலகில் வந்து நிற்கும் நம்மால் பலஸ்தீனியருக்கு நாடு பெற்று கொடுக்க முடியாது, ஈரானை அழிக்க இஸ்ரவேலுடன் கைகோர்க்கும் செளதியினால் பலஸ்தீனருக்கும் உதவமுடியாது.  குர்திஷ் மக்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கும் துருக்கி, ஈரான், ஈராக் போன்ற நாடுகள் பலஸ்தீன சுய நிர்ணய உரிமையை வலியுறுத்த முடியாது.  தன் சொந்த மண்ணை இஸ்ரவேலிடம் இருந்து மீட்க முடியாத, அதே நேரம் தம் நாட்டு மக்களை கொண்டொழிக்கும் சிரியா பாலஸ்தீன் நாட்டை பெற்றுக் கொடுக்க முடியாது, ஜோர்தான் நதி பிரச்சினையை இஸ்ரவேலுடன் தீர்க்க முடியாத ஜோர்தானுக்கு பலஸ்தீனியரின் பாதுகாப்புக்கு படை அனுப்ப முடியாது.  பாகிஸ்தான் மிக தூரம் என்பதால் இஸ்ரவேலுக்கு அணுகுண்டு ஏவ முடியாது. பங்களா தேசத்துக்கு  தலைக்கு மேலால் ரோகிஞ்யா அகதி பிரச்சினை உள்ளது, வட ஆபிரிக்க அறபு நாடுகள் தம் நாட்டுக்குள் இன்னும் அமைதியை சரியாக கொண்டுவரவில்லை என்பதால் அவர்களுக்கு இப்பிரச்சினையில் தலையிட நேரமிருக்காது. உலகின் மிகப்பெரும் முஸ்லீம் சனத்தொகை கொண்ட இந்தோனேசியா என்ன பிரச்சினையில் உள்ளதோ தெரியாது ஆகவே அவர்களிடமும் உதவி கேட்க முடியாது.

ஆக, பலஸ்தீனியர் இனியும் பிறரை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தம் நாட்டின் மீதமுள்ள பிரதேசத்தையாவது பாதுகாக்க வேண்டுமாயின், புனித நகர் என்ற மொத்த பிரதேசத்தில்  அல்-அக்ஸா அமைந்துள்ள கிழக்கு “ஜெரூஸலெம்” பகுதியையாவது காப்பாற்ற வேண்டுமாயின்    கிழக்கு “ஜெரூஸாலெம்” மை பலஸ்தீனின் தலைனகராக அங்கீகரிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரபை வலியுறுத்துவது பலஸ்தீன்- இஸ்ரவேல் எல்லை நிர்ணயத்துக்கான பேச்சுவர்தையை உடணடியாக ஆரம்பிக்க ஒரு நெருக்குவாரத்தை கொடுப்பது அவசிமாகும். அதாவது ரம்பின் தலையிலேயே இதனையும் சுமத்த வேண்டியுள்ளது.

இதேபோலவே மானசீகமாக பலஸ்தீனை ஆதரிப்பவர்கள்( இஸ்லாமிய இயக்கங்கள்)  “அமெரிக்கா முஸ்லீம்களை சீண்டாதே”, “அமெரிக்கா/இஸ்ரவேல் ஒழிக”  என்ற கோஷங்களை உலக நாடுகளுக்கு விளங்காத மொழிகளில் காலி முகத்திடல் போன்ற இடங்களில் கூக்குரல் இடுவது பலஸ்தீனியருக்கு அவர்கள் செய்யும் மேலதிக அநீதியாகும். ஆகவே  நடந்தவைகளின் நியாயம், நியாமின்மையை சற்று ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு கிழக்கு “ஜெரூஸலேம்” பலஸ்தீன் தலை நகர், பலஸ்தீன்  எல்லை நிர்ணயம் உடனடித் தேவை, பேச்சு வார்த்தையின் தாமதம் பலஸ்தீனின் மறைவின் அறிகுறி,  கொலைகளின் தலை நகர் வேண்டாம், சமரசம் உலாவும் தலை நகரே வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்படுவது அவசியம். அதற்கு முன்பாக இந்த பிரச்சினையின் சரியான வடிவத்தை புரிந்து நம் பங்களிப்புகளை செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

-முஹம்மத் எஸ். ஆர். நிஸ்த்தார்.