நெறி தவறிய ‘விக்ணேஸ்வரனுக்கு’ ஒரு திறந்த கடிதம்!

இலங்கையைச் சேர்ந்த ஒரு குடிமகனாக தேசிய ஒற்றுமையை அதாவது இன – மத ரீதியான பிளவுகளைத் தவிர்க்கும் தலையாய கடமையுள்ள ஒரு மிக முக்கிய நபர் நீங்கள்.

வட மாகாணத்தின் முதல்வர் என்ற பதவிக்காக அன்று, இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று, அதே வரிப்பணத்தில் நீதித்துறையில் சம்பளம் பெற்று, நீதிபதியாக இருந்து, இன்றும் அதே மக்கள் பணத்தில் ஊதியம் பெறுவதையும் மிஞ்சி, பிராந்திய மற்றும் ‘இனக்’ கலப்புள்ள ஒரு குடும்பத் தலைவன் என்ற ரீதியில் உங்களுக்கு அந்த பொறுப்புள்ளது.

இதை விளாவாரியாக பேசி, உங்கள் மனதைத் துன்புறுத்த விரும்பவில்லை. இருந்தாலும இந்த ‘கலப்பு’ எது என்று உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும். எனவே, ஒரு முதல்வராகவும் இலங்கைக் குடிமகனாகவும் உங்கள் மீதான பொறுப்பு மற்றவர்களை விட அதிகமானது.

இந்த நிலையில், 19ம் நூற்றாண்டின் இறுதியில் பொன். இராமநாதனால் கொண்டுவரப்பட்ட மேட்டுக்குடிவாதத்தின் ஒரு பகுதியை கையில் எடுத்து உங்கள் பெரும்பான்மை வாத நிலைப்பாட்டிற்கு உடன்படாதவர்கள் மத்திய கிழக்கிலிருந்து வந்தவர்கள் என தெரிவித்திருக்கிறீர்கள். ஒரு முன்னாள் நீதிபதியாக இது மிகவும் அபத்தமானது.

இன்று வட-கிழக்கு இணைப்பை அபிப்பிராய ரீதியில் எதிர்க்கும் அரசியல்வாதிகள் உட்பட அனைத்து முஸ்லிம்களும் இலங்கைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்.

அவர்கள் யாருக்கும் மத்திய கிழக்கில் எந்த நாட்டின் கடவுச்சீட்டும் இல்லை, பிரஜாவுரிமையுமில்லை. அப்படியொன்றிருந்தால் அதனை ஆதாரமாக முன் வைத்துத் தான் ஒரு நாட்டின் பிரஜையின் உரிமையை மறுக்க முடியும் என்பதை அறியாமல் நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்தீர்களா? என்பதை நினைத்துப் பார்க்க வெட்கமாகவுள்ளது.

வட-கிழக்கு இணைப்பை ஒட்டு மொத்த கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகமும் விரும்பவில்லையெனும் போது அது அப்பகுதி சார் மக்களின் கருத்துரிமையென்பதைக் கூட தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக நீங்கள் பேசுவதைப் பார்த்தால் நீங்கள் வழங்கிய தீர்ப்புகளில் இருந்திருக்கக் கூடிய நியாயங்களையும் இங்கு சந்தேகப்பட வேண்டியுள்ளது.

வட-கிழக்கு இணைந்திருப்பதுதான் நியாயம் என நீங்கள் கருதுவது உங்கள் உரிமை, அதை விரும்பாதவர்களுக்கு முறைப்படி எத்தி வைத்து, கலந்துரையாடி, அவர்களை இணங்க வைத்து அதனை சாதித்துக் கொள்வதுதான் தர்மம் என்பது தெரியாமல் நீங்கள் அந்த நீதிபதி இருக்கையில் இருந்து இரு தரப்பு நியாயங்களை நடுநிலையோடு செவிமடுத்திருப்பீர்களா என்பதையும் இங்கு கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

இல்லை, நீங்கள் புதிதாகத்தான் உங்கள் இனம் மீதான பற்றை வளர்த்துக் கொண்ட இனவாதியாக மாறியிருக்கிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் ஒரு இனவாதி என்ற வகையில் இந்த நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகத்துக்கு மன்னிப்புக் கோருங்கள்.

உங்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பது குறித்து கவலையில்லை, அதை எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதால் இப்போதும் நீங்கள் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.  அதை வைத்து இலங்கையின் இன்றைய முஸ்லிம்களின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள முடியாவிட்டால் விற்பன்னர்கள் ஊடாக உங்களுக்கு இலவச வகுப்புக்கும் ஏற்பாடு செய்யலாம். (அறிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால்)

எனவே இங்கு பொது நியாயம் மாத்திரமே பேசப்படுகிறது. மத்திய கிழக்கு என்பது ஒரு நாடல்ல, அது ஒரு பிராந்தியம். அங்கே இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இருக்கின்றன. இதில் எந்த நாட்டைப் பற்றி நீங்கள் பேசினீர்களோ முதலில் நீங்கள் சொல்லும் இலங்கை முஸ்லிம்கள் அந்த நாட்டின் பிரஜைகள் என்பதையும் நிரூபியுங்கள்.

படித்த கணவானாக இருந்த உங்களிடம் இப்போது மேலோங்கியுள்ள இனவாதம் தேர்தலை அடிப்படையாகக் கொண்டது, உங்கள் அரசியல் இருப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து கொள்வது இமாலய இரகசியமில்லை. ஆனாலும், ஒரு முக்கிய பொறுப்பிலும் முன்னாள் நீதிபதியாகவுமிருந்து கொண்டு இவ்வாறு அரைக்கிறுக்கன் போன்று பேசுவதைப் பார்க்க வேடிக்கையாகவுள்ளது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் என்னென்ன உரிமை இருக்கிறது என்பதையோ அவர் தனி மனித கருத்து சுதந்திரத்தையோ மதிக்கத் தெரியாத அளவுக்கு உங்கள் இனவாதம் தலைக்கேறித் தாண்டவம் ஆடுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

-இ.ஷான்