மியன்மார் நிலவரமும் கற்றுக்கொள்ள சில பாடங்களும்

இன்றளவில் உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம் ‘மியன்மார்’.

ரக்கைன் மாநிலத்தில் படிப்படியான இன அழிப்புக்குள்ளாகி வரும் ரோஹிங்யர்கள் மீதான அனுதாபம் சில வேளைகளில் ஆத்திரமாக மாறுகிறது. எனினும், எல்லைக் கோடுகளுக்குள் வைத்து ஆட்சி செய்யும் சட்ட திட்டங்கள் அவற்றை அடக்கிப் போடுகின்றன. எனவே, அதன் கோபம் எல்லாம் அரசியல் மீது கொப்பளிக்கிறது.

உலக அரசியல், உள்ளூர் அரசியலையெல்லாம் திட்டித் தீர்க்க இன்று பேஸ்புக்கும், ட்விட்டரும் இருப்பதனால் எதையும் கண்டு கொள்ளாத அரசியலை தூரத்தில் நின்று ‘ஏதோ ஒரு நம்பிக்கையில்’ மறைவாகத் திட்டித் தீர்க்கிறது சமூகம்.

அதையும் மீறி, வீதிகளில் களமிறங்கிப் போராடவும் துணியும் உள்ளுணர்வுக்கும் உயிர் கொடுக்கப்படுகிறது. இது தேச எல்லைகள் கடந்த பாசமும் உணர்வுமாக மேலோங்கி உருப்பெற்று இன்று உலகமே ரோஹிங்யர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால், தேசத்தின் ஆட்சியாளர்களை அது இன்னும் பாதிக்கவில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தில் விட்டு வைத்த ‘மிச்ச’த்தை சுத்தப்படுத்தும் நேரமாகக் கணித்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன் இலங்கை முஸ்லிம்களின் இன்றைய சனத்தொகையை ஒத்த அளவிருந்த ரோஹிங்யர்களை அதில் நாளில் ஒரு பங்காக்கி விட பேயாட்டம் ஆடுகிறது.

அங்கிருந்த அடர்த்தி மட்டும் தான் குறைகிறது. காரணம், அவர்கள் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்ட அடிமைகளாகவே ஒதுக்கப்பட்டு வந்தார்கள்.

1970ன் இறுதியில் 20 லட்சமாக இருந்த ரோஹிங்யர்களின் சனத்தொகை 2017ல் சரி பாதியாக 10 லட்சமாக குறைந்துள்ளது. அதிலிருந்தும் மூன்று லட்சம் பேராவது இந்த மாதத்துக்குள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்ற சூழ்நிலையில் பூர்வீகம் பறிக்கப்பட்ட அனாதைகளாக உலகெங்கும் தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

2017 செப்டம்பர் கணக்கெடுப்பின் படி இதற்கு முன் தாய் மண்ணை விட்டு வெளியேறிய 10 லட்சம் ரோஹிங்யர்கள் பங்களதேஷ் (625,000), பாகிஸ்தான் (350,000), சவுதி அரேபியா (200,000), மலேசியா (150,000), இந்தியா (40,000), ஐக்கிய அரபு அமீரகம் (10,000), தாய்லாந்து (5000), இந்தோனேசியா (1000) என பரந்து வாழ்கிறார்கள்.

இது போக ரோஹிங்யாவில் எஞ்சியிருக்கும் 10 லட்சம் பேரில் 140,000 பேர் இன்றளவில் பங்களதேஷ் எல்லையில் உள்ள தற்காலிக முகாம் வரை இடம்பெயர்ந்துள்ளார்கள். எப்படியும் இம்மாதத்துக்குள் முடிந்தளவு ரோஹிங்யர்களை அங்கிருந்து விரட்டும் வரை மியன்மார் இராணுவம் ஓயப் போவதில்லையென சூழ்நிலைகள் காட்டிக்கொடுக்கின்றன.

பிறிதொரு நாட்டின் தேசிய இனங்களுள் ஒன்றாகத் தமக்கான அங்கீகாரத்தையும், தேசிய அரசியலில் தமது பிரசன்னத்தையும் உறுதி செய்யத் தவறிய கடந்த காலத்தை இன்று நொந்து கொள்வதில் பயனில்லை. ஆனால், பிராந்திய அரசியல் மயக்கத்திலிருந்து விடுபட்டு தேசிய அரசியலில் பங்களிப்பையும் கலப்பையும் உறுதி செய்யும் தேவையை இலங்கை முஸ்லிம்களுக்கும் இன்றைய நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கையைப் பிரித்துத் தனி நாடு காணச் சென்ற தமழீழப் போராட்டம் ஓய்வு பெற்றுள்ள நிலையில் சுய கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் போராட்டம் தமிழ் மக்களின் தலையாய கடமையாக மாறியுள்ளது. யுத்தம் நிறைவுற்று 8 வருடங்களே ஆன நிலையில் காயங்களின் ஆழம் அதிகம் என்பதால் அவ்வப்போது அதன் வடிவங்கள் கேள்வியும் பதிலுமாய் அவர்களுக்குள் தேய்ந்து வளர்கிறது.

பிராந்திய அடக்குமுறையின் ஆபத்தை உணர்ந்து கொண்ட முஸ்லிம் சமூகம் சரியான தருணத்தில் கண்டுகொண்ட அரசியல் எழுச்சி இன்று பிழையான வழியில் சென்று பிராந்திய மயக்கத்தை உணர்ச்சியூட்டி தேசிய அரசியலில் செல்லாக் காசாகி வருகிறது.

எனினும, ஆங்காங்கு இவ்வாறு நிகழும் உலக நிகழ்வுகள் நவீன யுகத்தின் அரசியல் விவகாரங்களில் தேவைப்படும் முன்னெச்சரிக்கையையும் அவதானத்தையும் வலியுறுத்தி நிற்கின்றன.

2012ன் பின் மியன்மாரின் மனித விரோத சக்தியான அசின் விராதுவின் வழியில் இங்கொரு ஞானசாரவைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இனவிரோத நடவடிக்கைகள் பொருளாதாரப் பலவீனத்தால் துவண்டு கிடக்கும் இலங்கையின் பிரிவினைவாத அரசியலால் ஓரளவுக்கு மேல் வளர்ச்சி காண முடியாது அடங்கிக் கொள்கிறது.

ஆனாலும், இனியும் அவ்வப்போது உருவாகப் போகும் மஹிந்த ராஜபக்ச போன்ற பௌத்தவாத கொள்கையாளர்களின் வரவு மீண்டும் இவ்வுணர்வுகளைத் தூண்டாமல் விடப் போவதில்லை. ஆதலால், கொழும்பில் மாத்திரமன்றி தெற்கின் ஏனைய பகுதிகளிலும், வட-மேற்கு, வடக்கு, மத்திய மாகாணம், சப்ரகமுவ, மலைநாடு என தேசமெங்கும் அனைத்து சமூகங்களுக்குமான அரசியல் சக்தியாக முஸ்லிம் தனி நபர்களும், கட்சிகளும் வளர வேண்டிய அவசியம் காலத்தின் தேவையாக வலியுறுத்தப்படுகிறது.

‘இலங்கையர்’ எனும் தேசிய அடையாளத்தை முன்நிறுத்திய முதலாளித்துவ கொள்கையாயினும், தாராளமய கொள்கையாயியும், கம்யூனிசப் பரம்பலாயினும், தேசியவாத முனைப்பாக இருந்தாலும் அனத்து முனைகளிலும் தேசத்தின் ஏற்றத்திலும், வளர்ச்சியிலும் பங்கெடுக்கும் தேவையை இலங்கை முஸ்லிம்கள் உணர்ந்தாக வேண்டும்.

முஸ்லிம் என்ற ஒரே அடையாளத்துக்காக முஸ்லிம் நாடுகள் வரிந்து கட்டிக் கொண்டு வரும் எனும் போலி வாதம் அசிங்கப் படுவதற்கு இதை விட சிறந்த தருணம் இனியும் வருமா? எனும் அளவுக்கு அது வெட்கி நிற்கிறது. இன்னொரு வகையில், எல்லைகளினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உலக அலகில் தம்மால் முடிந்ததை மாத்திரமே செய்ய முடியும் எனும் சூழ்நிலைக் கைதிகளாகவே மனிதாபிமானம் உள்ள ஏனைய நாடுகளும் சுருக்கப்பட்டிருக்கின்றன.

ஆதலால், நாம் வாழும் தேசமே நமக்குரியது.

உலக உம்மத்தின் ஒரு பகுதியாக வாழும் அதேவேளை பிற நாடுகளின் அரசியல் விருப்பு வெறுப்பினால் ஆட்டி வைக்கப்பட்ட இயக்க வெறியர்களாகவன்றி ரோஹிங்யா போன்ற அடக்கியொடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் மனிதாபிமானிகளாக மாற்றம் பெற வேண்டும்.

காத்தான்குடி – ஏறாவூராகட்டும், முள்ளிவாய்க்காலாகட்டும் எங்கும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கும் நல்ல மனிதர்களாகவும் முஸ்லிம்களாகவும் இத்தேசத்தின் மைந்தர்களாகவும் நாம் இன்றும், நாளையும் என்றும் வாழக் கடமைப்பட்டவர்கள் எனும் பாடத்தை நினைவூட்டிக்கொள்வோம்.

ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் Pastor Martin Niemöller  என்பார் எழுதிய அழகிய கவிதை:

First they came for the Socialists, and I did not speak out
Because I was not a Socialist.

Then they came for the Trade Unionists, and I did not speak out
Because I was not a Trade Unionist.

Then they came for the Jews, and I did not speak out
Because I was not a Jew.

Then they came for me and there was no one left to speak for me.

அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்த போது நான் வாய் திறக்கவில்லை
ஏனெனில் நான் சோசலிஸ்டில்லை

தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்த போது நான் வாய் திறக்கவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை

பின் அவர்கள் யூதர்களைத் தேடி வந்த போதும் நான் வாய் திறக்கவில்லை
ஏனனில் நான் யூதனில்லை

அதன் பின் அவர்கள் என்னைத் தேடி வந்த போது
எனக்காகப் பேச யாருமே எஞ்சியிருக்கவில்லை!

-Irfan Iqbal   [Chief Editor , Sonakar.com]

https://www.facebook.com/irfaninweb