நல்லாட்சி அரசாங்கம் கவிழுமா?

சித்திரைப் புதுவருடத்தை அடுத்து இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றில் மூன்று மாகாண சபைத் தேர்தல்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், அமைச்சரவை மாற்றங்கள், தீர்வுப் பொதி மற்றும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல் என்பன இவற்றில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதில் ஆட்சி மாற்றமொன்று நிகழ்வதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் இலக்காகும்.

இன்றைய பாராளுமன்றத்தின் நிலவரம் பின்வருமாறு காணப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 06 ஆசனங்களும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 16 ஆசனங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.

இவற்றில் ஐ.தே கட்சியின் ஆசனங்களுக்குள் மு.காவின் 6 ஆசனங்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 ஆசனங்களும் ராஜித குழுவினரின் ஆசனங்களும் போக ஐ.தே கட்சிக்கு சொந்தமான ஆசனங்கள் 92 உள்ளன. அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்த வரை 95 ஆசனங்களைக் கொண்டிருந்த போதிலும் அதில் சுமார் 51 ஆசனங்கள் மஹிந்த அணி சார்புடையவர்களாக விளங்குகின்றனர். இந்நிலையில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு உடனடியாக இன்றைய அரசாங்கம் வரக்கூடிய சாத்தியம் இல்லை.

ஏனெனில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பத்தொன்பதாவது திருத்தத்தின் படி ஓர் அரசாங்கம் அமைந்து நாலரை வருடங்கள் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்கின்ற அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. அவ்வாறு கலைப்பதாக இருந்தால் பாராளுமன்றில் உள்ள மொத்த ஆசனங்களில் மூன்றில் இரண்டு பகுதியினர்கள் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து ஒரு தேர்தலுக்குச் செல்ல முடியும்.

இன்றைய நடைமுறை பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஒரு பிரேரணையை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவது அவ்வளவு உசிதமான ஒன்றல்ல. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாக உரித்தான 92 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து சுமார் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கலைவதற்கு தனது அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அதுவும் ஐ.தே.க தவிர்ந்த ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் வேண்டும் என்ற முடிவை எடுத்த நிலையிலாகும்.

அவ்வாறு 18 ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கலைவதற்காக தனது ஆதரவை வழங்குவார்களேயானால் அவர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். இந்நிலையில் அவர்கள் தனது அடுத்த தேர்தலை எந்தக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது என்பது அவர்களுக்கு சர்ச்சையாக அமையும். அதேநேரம் அவர்கள் ஏதோ ஒரு கட்சியில் தேர்தலை எதிர்கொண்டாலும் அந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அவர்களின் உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்ளக் கூடிய கட்சிக்கு அப்பாலான தனிப்பட்ட வாக்கு வங்கியைக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தையும் அவர்கள் மீது ஏற்படுத்தும்.

இப்படி பார்க்கின்ற போது, இது சாதாரணமாக சாத்தியப்படக் கூடிய ஒன்றாக இருக்கப் போவதில்லை. ஆகவே இன்று அமைந்திருக்கின்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற எம்.பிக்கள் ஆகக் குறைந்தபட்சம் நாலரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரி, நாடாளுமன்றம் கலைந்துவிடக்கூடிய சாத்தியம் அறவே இல்லை என்று துணிந்து கூறலாம்.

இத்தகைய நிலையில் அண்மைக்காலமாக மஹிந்த அணியினர் நாங்கள் விரைவாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று சூளுரைத்து வருகின்றனர். அதே போல் முஸ்லிம்களின் உதவியுடன் ஆட்சிமாற்றத்தை விரைவில் கொண்டுவருவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது எதிரணியினர்களின் கருத்துக்களாக இருந்த போதிலும் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை அடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான தனி அரசாங்கத்தை ஸ்தாபிக்க உறுதிபூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளுக்கு எதிர்மாறாக ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்து ஆட்சி அமைப்பதில் அக்கறை காட்டி வருவதாகவும் அதற்கு ஏற்ப தமது கட்சியினர்கள் உறுதியாகவும் தயாராகவும் இருக்க வேண்டும் என்ற ஒரு முன்னெடுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துவருவதாகவும் அறிய முடிகின்றது.

இவ்வாறு எதிரும் புதிருமான இந்த கருத்தாடல்கள் பாராளுமன்றம் கலையாத நிலையில் உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கி நகரக்கூடிய ஒரு சாயலைப் பெறுகின்றது. இன்றைய நல்லாட்சி அரசின் முக்கிய நோக்கங்களாக கூறப்பட்ட விடயங்கள் முழுமையாக நிறைவேறாத இந்த சூழலில், ஏற்கனவே எழுத்துமூலமாக உருவாக்கிக்கொள்ளப்பட்ட இரண்டு வருட நல்லாட்சி உடன்படிக்கையும் காலவதியாகிய நிலையில் இவ்வாறு ஆட்சி மாற்றம் தொடர்பில் கதையாடல்கள் தொடங்கப்படுவதினால் குறித்த சூழல் ஏற்படுமா என்ற ஒரு சந்தேகம் இன்றைய அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நல்லாட்சிக்கான ஒப்பந்தக் காலம் இரண்டு வருடங்கள் முடிவடைந்த போதிலும் இதன் பிரதான பங்களார்களான ஜனாதிபதி மைத்திறியும் பிரதமர் ரணிலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் என்று தனித்தனியாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் அரசியல் கணவான்கள் என்பதனால் மீண்டும் ஒப்பந்த கைச்சாத்திடல் இல்லாத போதிலும் இது நடைமுறையில் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இதனைக் கேள்விக்குட்படுத்தும் வகையில்தான் இந்த ஆட்சி மாற்ற கதையாடல்கள் அமைந்திருக்கின்றது.

உண்மையில் ஜனாதிபதியும் பிரதமரும் சார்ந்திருக்கின்ற தத்தமது கட்சிகளை தனித்து ஆட்சி அமைக்கக்கூடியவைகளாக உருவகப்படுத்திக் கொள்வதில் அக்கறை உடையவர்களாக இருக்கின்றனர் என்பது வெளிப்படையானது. ஆனால் இந்நிலைக்கு அவர்கள் உடனடியாக தங்களைக் கொண்டுவருவது சாத்தியமா என்பதுதான் பலத்த கேள்விக்குறியாக இருக்கின்றது. இதனுடைய சாதக பாதகத் தன்மையை நோக்குவதற்கு முன்னர் மூன்று விடயங்களை நாங்கள் இவ்விடத்தில் முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

1)இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகைக்கின்ற எஸ்.பி திஸாநாயக்க அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பது சிறந்த ஜனநாயகப் பண்பல்ல என்ற கருத்துப்பட தெரிவித்திருக்கின்றார்.

உண்மையில் இது இன்று இவரால் முன்மொழியப்பட்டாலும் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்படுகின்ற போது பல அரசியல் விமர்சகர்கள் இது ஒரு ஜனநாயகப் பண்புக்கு சாவுமணி அடிக்கின்ற ஒரு விடயம் என்பதையும் குறிப்பாக இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களாக வாழ்கின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் பெரிய அளவில் பேரினவாத நசுக்கலுக்குள் உட்பட்டு பாரிய பிரச்சனைகளையும் இன விரோத அபாயங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் முன்னெச்சரிக்கையாக சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான எதிர்க் கருத்துக்களையும் உள்வாங்கி இந்த நாட்டில் காணப்படுகின்ற இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வொன்றை காணுதல், ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழித்தல், தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தல் போன்ற முக்கிய அம்சங்களை ஏற்படுத்திக்கொள்வதற்காகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது என்று பெரும் கட்சிகளின் தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் கூறிவந்தனர். அதனை சாத்தியப்படுத்தவே குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் என்று மட்டுப்படுத்தி தனது நிலைப்பாட்டுக்கு நியாயத்தை ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் முடிவுற்றும் இவ்வாறான பிரச்சனைகள் எவற்றுக்கும் முடிவு காணப்படாத நிலையே இன்றும் காணப்படுகின்றது.

இவ்விடத்தில் இன்னொன்றையும் நாம் நினைவுபடுத்த வேண்டும். இவ்வாறான சீர்திருத்தங்களை இந்த பாராளுமன்றத்துக்கு முன்னர் அமைந்திருந்த 100 நாள் அரசாங்கத்தில் இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதாக கூறியதும் பின்னர் அதனை 200 நாட்கள் நீடித்தும் கூட சரியான தீர்வுகளை நோக்கி நகராத ஒரு பின்னடவையும் நாம் பார்க்கின்றோம். அதே போன்றுதான் இன்றும் இரண்டு வருட காலக்கெடு நான்கு வருடங்கள் வரை நீடித்துச் செல்கின்ற ஒரு நிலையை அடைந்திருக்கின்றது.

இன்றைய சூழலில் கூட அரசியலமைப்பு முழுமையாக மாறுவதா அல்லது சில பகுதிகள் மாத்திரம் திருத்தப்படுவதா? , சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அமுல்படுத்தக்கூடிய வகையிலான தீர்வுக்குச் செல்வதா அல்லது பொதுவாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்ற மாற்றங்களை மாத்திரம் செய்வதா? மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவதா அல்லது தேவையில்லையா? என்றெல்லாம் எதிரும் புதிருமான கருத்துக்களை எவற்றிலெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்றார்களோ அவற்றில் எல்லாம் தொடர்கின்ற ஒரு நிலையைத்தான் இன்று காண்கின்றோம்.

ஆகவே இந்த விடயத்தில் இந்த தேசிய நல்லாட்சி அரசாங்கம் தோற்றுக்கொண்டு வருவதில் யாரும் மாற்றுக்கருத்துச் சொல்ல முடியாத அளவில்தான் அவற்றின் இன்றைய செல்நெறிகள் நடந்தேறி வருகின்றன.

02) ஐக்கிய தேசியக் கட்சியோடு ஆட்சி அமைப்பதில் இணைந்திருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வரசாங்கத்தில் இருந்து முற்றாக வெளியேறினால் நல்லாட்சி அரசாங்கம் இல்லாமல் ஆகிவிடும் என்கின்ற ஒரு எண்ணப்பாடு நம் மத்தியில் சிலரால் வெளிப்படுத்தப்படுகின்றன. அல்லது இந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களில் காணப்படுகின்ற சுமார் 50 எம்.பிக்கள் வெளியேறினாலும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கம் என்ற அந்தஸ்த்தை இழந்துவிடும் என்றும் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். இந்த அபிப்பிராயங்கள் சரியானதல்ல.

ஏனெனில் பாராளுமன்றத்தில் ஆகக்கூடுதலான ஆசனங்களைக் கொண்டுள்ள ஒரு கட்சி அல்லது ஒரு சுயேட்சைக்குழு வேறு எந்தவொரு கட்சியையோ சுயேட்சைக்குழுவையோ தன்னோடு இணைத்துக் கொள்வதன் மூலம் தேசிய அரசாங்கம் ஒன்றில் இருப்பதாக காட்டிக்கொள்ள முடியும். இதனைத்தான் நமது அரசியலைமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பத்தொன்பதாவது திருத்தத்தின் எட்டாவது அத்தியாயம் ஆட்சித்துறை என்ற தலைப்பில் உள்ள அமைச்சரவை பற்றி பேசுகின்ற நாற்பத்தியாறாவது உப பிரிவின் நாலாவது அம்சம் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றது.

 “(4) இவ்வுறுப்புரையின் (1) ஆம் பந்தியில் உள்ளது எது எப்படியிருப்பினும் பாராளுமன்றத்தில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குமிடத்து அமைச்சரவை அமைச்சர்களது எண்ணிக்கையும் அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களது எண்ணிக்கையும் பிரதி அமைச்சர்களது எண்ணிக்கையும் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

”(5பந்தி) (4) இன் நோக்கங்களுக்காக தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றத்தில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவும் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ஓர் அரசாங்கமே ஆகும்.”

இந்த ஏற்பாட்டின் பிரகாரம் இன்றைய பாராளுமன்றத்தின் ஆசனங்களின் அடிப்படையில் 106 ஆசனங்களை ஐதேக கொண்டிருக்கும் இந்நிலையில் அதனோடு இருந்து எந்த சூழலிலும் பிரிந்துகொள்ள விரும்பாத மு.கா ஒரு ஆசனத்தை தனித்தும் கொண்டுள்ளது. இந்நிலையில் நேரடியாக இணைந்து ஆதரவை வழங்காவிட்டாலும் இவ்விரு கட்சிகளின் கூட்டுக்கு வெளியில் இருந்துகொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது ஆதரவை வழங்கும் என்று நம்பலாம்.ஆக தேசிய அரசாங்கம் என்ற அம்சம் மறுதலிக்கப்படாத ஒரு நிலை பாராளுமன்றம் முடியும் காலம் வரை நீடித்துச் செல்வதற்கான ஏதுக்கள் பெரிதும் காணப்படுகின்றன.

03.இன்று தமிழர்கள், முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற காணிப்பிரச்சனை இன்றைய ஜனாதிபதி சார்புடையவர்களால்தான் ஏற்படுத்தி வருவதாகவே கணிக்கும் வகையில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் காணப்படுகின்றது. இதில் பிரதமர் மதில் மேல் பூனையாக இருந்துவருகின்றார். அவரது நோக்கம் எதுவானாலும் வெளிப்படையில் மைத்திறியும், அவரது கட்சி சார்புடையவர்களாக இருக்கின்ற மஹிந்த அணியினரும் முஸ்லிம் விரோதப் போக்குகளையும், தமிழர்களின் விடயத்திலும் ஒரு மூர்க்கமான போக்கை கடைப்பிடிப்பவர்கள் என்ற பாங்கை இயன்றவரை அவர்கள் பக்கம் ஆக்கிவிடுவதில் மிகவும் பொறுப்ப்உடன் பிரதமர் இருப்பதைத்தான் அர்த்தப்படுத்துகின்றது.

அதேநேரம் தமது அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளை விட இந்த நல்லாட்சி அரசாங்கம் அதிகமாக செய்கின்றது என்ற பாணியிலும் மஹிந்த அரசாங்கத்தை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்ப்பதற்கு காரணமாக அமைந்த அழுத்கம, பேருவல கலவரத்தின் சூத்திரதாரிகள் ஐ.தே கட்சியினர்தான் என்பதை நிறுவும் வகையில் மஹிந்த அணியினர் பிரச்சாரம் செய்வதில் மிகுந்த அவதானம் செலுத்திவருகின்றனர்.

இவை எவற்றை வைத்துப் பார்த்தாலும் ஐதேகட்சி மீது முஸ்லிம்கள் காட்டிவருகின்ற அதிக ஆதரவுத் தளத்தை குறைப்பதென்றாலும் அது ஒரு தேர்தல் வரும்போதே சாத்தியமாகும். அவ்வாறான ஒரு பொதுத் தேர்தல் இப்போது வருகின்ற சாத்தியப்பாடுகள் இல்லை என்பது நிதர்சனமாகும். அவ்வாறாயின் இருக்கக்கூடிய ஒரு வழி தேர்தல் ஒன்றுக்குச் செல்லாமல் எஞ்சியிருக்கின்ற பாராளுமன்றக் காலத்தை, இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி சாத்தியப்படுத்த வேண்டியிருக்கும். இது நடைமுறைச் சாத்தியமாகுமா?

ஏற்கனவே எழுதப்பட்ட தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அணி சார்ந்து வருகின்ற எவரையும் பிரதமர் அணியினரோ பிரதமர் அணியில் இருந்துவருகின்ற எவரையும் ஜனாதிபதி அணியினரோ இணைத்துக்கொள்வதில்லை என்ற விடயம் இருக்கின்றது. எது எவ்வாறாயினும் அந்த ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதென்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் மஹிந்த, மைத்றி ஒன்றிணைந்த நிலையில் 95 ஆசனங்களும் ஜேவிபி ஐ.தேகட்சியோடு இணையாத என்ற எடுகோளின் அடிப்படையில் 6 பேரும் ஈ.பி.டி.பி ஒருவருமாக இணைந்து 102 ஆசனங்களைப் பெற முடியும்.

ஏலவே ஐதேகட்சிக்குள் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் பிரிந்து உடனடியாக வரும் சாத்தியம் இல்லை. அப்படித்தான் வருவதாக இருந்தாலும் தமது மக்களுக்கு அநியாயம் செய்தவர் மைத்திறி என்று கூக்குரலிட்டுக்கொண்டிருக்கின்ற ரிஷாட் பதியுதீன் வேறு அரசியல் காரணங்களுக்காக வெளியேறி வந்தாலும் அவர்களின் ஐந்து உறுப்பினர்களும் சேர்ந்து 107 ஆசனங்களுக்கு மேல் உயராது.

அப்படி இப்பக்கம் உயர்வதாக இருந்தால் ஐதேகட்சியில் இருந்து அதன் நேரடி உறுப்பினர்கள் ஆகக்குறைந்தது 08 பேர் மாறிவர வேண்டி இருக்கும். அவ்வாறாக வருவதாக இருந்தால் அந்த 08 பேர்களில் ஒருவருக்கு பிரதமர் பதவி செல்கின்ற சூழலும் மஹிந்தவும் மைத்திரியும் ஒன்றிணைகின்ற சூழலும் கட்டாயப்படுகின்றது. இது நடக்குமா?

இன்றைய ஐ.தே கட்சியின் மொத்த 106 ஆசனங்களில் ரிஷாத் சார்பான 05 பேர்களைக் கழித்தால் மு.காவின் ஒரு ஆசனத்துடன் 102 ஆகும். விரும்பியோ விரும்பாமலோ இலங்கை தமிழ் அரசுக் கட்சி மு.காவின் பக்கமே சார்ந்திருக்கும். இவ்வாறு தமிழ் அரசுக் கட்சி, ஐதேகட்சிக்கு வெளியிலிருந்து நாம் ஆதரவு நல்குவோம் என்ற உறுதி மொழியை தெரிவிக்கின்ற நிலை தோன்றும் சாத்தியமற்றதல்ல. இதன் மூலம் ஆசனங்கள் 118 ஆகும்.

எனவே இந்நிலையில் ஐ.தே. கட்சி தேசிய அரசாங்கத்தைப் போன்று விரும்பிய அளவு அமைச்சுக்களை வைத்திருக்க முடியும். இதில் ஐதேக விலிருந்து வெளியேறுவார்கள் என நம்பப்படுகின்ற 08 பேர்களை அமைச்சு அதிகாரங்களை வழங்கி கட்டுப்படுத்துக்கின்ற பலத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ளும். ஆக உடனடி ஆட்சிமாற்றமோ ஆட்சிக் கவிழ்ப்போ பாராளுமன்றத்தினூடாக நடைபெறும் சாத்தியம் குறைவாகும்.

எனவே பிரதான கட்சிகளான ஐதேகட்சியாக இருந்தாலும் சரி ஐமசுமுன்னணியாக இருந்தாலும் சரி உடனடியாக தேர்தலுக்கு செல்வதில் சங்கடங்கள் இருக்கின்றன. வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, சம்பள உயர்வு வழங்காமை, புதிய தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்படாமை, வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் போன்ற தொடர்கின்ற நெருக்கடிகள்.

இந்நிலையில் இரு தரப்பினரும், தேர்தலுக்கு செல்வதில் சிக்கல்கள் இருக்கின்ற நிலையில், பாராளுமன்றத்தினூடான ஆட்சி மாற்றத்துக்குச் செல்வது என்கின்ற சிந்தனைக்கு அப்பால் நடைபெறும் என நம்பப்படுகின்ற மூன்று மாகாண சபைத்தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி சிந்திப்பதிலேயே இவ்விரு கட்சிகளின் கவனங்களும் காலங்களும் கழிவதற்கே அதிக சாத்தியம் இருக்கின்றது.

-எம்.எம்.எம்.நூறுல்ஹக்