மஸ்ஜித் அரசியல்! - sonakar.com

Post Top Ad

Tuesday 15 August 2023

மஸ்ஜித் அரசியல்!

 



நிறுவனமயப் படுத்தப்பட்ட அனைத்து சமயங்களும்(Institutionalised Religion)  அதன் அங்கத்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்க தேர்ந்தெடுத்த இடம்தான்  வழிபாட்டுத்தளங்கள். 


இந்த நிலைப்பாட்டை வாழ்ந்து கொண்டிருக்கும்(living tradition) வழிமுறையாக தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டிருப்போர்  இஸ்லாமியரே  என்றால் அது மிகைப்படுத்தல் அல்ல. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர் பெரும்பான்மை இல்லாத இலங்கை போன்ற நாடுகளில் அவை இன்றும் காணக் கூடியதே.


இந்த வகையில் இஸ்லாமியரின் வழிபாட்டுதளம் " மஸ்ஜித்"(பள்ளிவாயல்) 7ம் நூற்றாண்டின் அனைத்து சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளின் பேசுகளமா, முடிவெடுக்கும் இறுதி இடமாக திகழ்ந்தது. அரசியல்சார் முடிவுகளை மக்களுக்கு அறியத்தரும் சந்தர்ப்பமாக இன்னும் அழிக்கமுடியாத அம்சமாக உள்ளது வெள்ளி கிழமை விஷேட மதிய வழிபாடு " ஜும்மா" தொழுகையும் அதில் முக்கியமாக நடத்தப்படும் பேருரையும். 


ஊரின் பரப்பு அதன் சனத்தொகை அளவு என்பதற்கேற்ப  ஜும்மா தொழுகை நடத்தும் பள்ளிவாயல்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும்.  இந்த அடிப்படையில் ஆகக் குறைந்தது ஒரு ஊருக்கு ஒரு ஜும்மா பள்ளிவாசல் அமைந்தே ஆகும்.


ஆனால் கால ஓட்டத்தில் உலகில் ஏற்பட்ட சமூக,பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும் பல சந்தர்ப்பங்களில் ஈடுகொடுக்க முடியாமல் போன சந்தர்ப்பங்களில் தனக்கென ஒரு அடையாளப் போக்கை கையாள வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்லாமியர் தள்ளப்பட்டதால் 14ம் நூற்றாண்டில் இருந்து  சமயசார்பற்ற ஒருவகை அரசியல், பொருளாதர கொள்ளை சார் முறைமைகள் இஸ்ஸாமியரை பெரும்பான்மையாகக் கொண்ட பல நாடுகளில் பரீட்சித்து பார்க்கப்பட்டதும் அவை எதிர்பார்க்கப்பட்ட விளைகளை ஏற்படுத்தாமையும் சேர்ந்து அரசியல் இஸ்லாம் (Political Islam)என்ற ஓர் அம்சம் 20ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. இந்த அரசியல் இஸ்லாம்  இஸ்லாமியத்துவம்( Islamism) என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.


இந்த பெயர்களோ அல்லது அதன் கீழ் செய்யப்படும் விடயங்களோ மனிதவிரோத செயல்களல்ல. மாறாக ஏனைய சமயத்தாருக்குக்கும் கூட இடைஞ்சல் இல்லாத மனித நேயம் கொண்டவேயே.  


ஆனால்  21ம் நூற்றாண்டு இந்த மிதவாத போக்கை சற்று கடினமாகி அதுவே ஒருவகை "உள்வீட்டு" பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதுவே சமூகத்தின் சமய, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை ஆராய்வது, சுமூகமாக தீர்ப்பது என்ற விடயங்களை கைவிட்டு பள்ளிகளின் சொந்தப் பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதென்பது கவலைக்குரிய விடயமே. 


மிதவாத இஸ்லாமிய இயக்கங்கள் தாம் சார்ந்த கொள்கை வளர்ப்புக்காக இந்த பள்ளி வாயில்க(ளின் நிருவாகங்) ளை கைப்பற்ற முயற்சிப்பதும் அது சாத்தியப்பட்டால் அதை எந்தக் காலத்திலும் கைநழுவ விடாமல் காத்துகொள்வதற்கும் வியுகம் அமைத்து நிருவாக சபையையும் கைப்பற்றுவது இன்று தவிர்க்க முடியாத வழமையாகிவிட்டது.  


இஸ்லாமிய சமூகம் என்பது எப்போதுமே உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு வேகமாக தொதித்து எழுவது போலவே வேகமாக அடங்கியும் விடுவர். நமக்கென்ன குற்றம் புரிவோர் இறைவனிடம் பதில் சொல்லிக் கொள்ளட்டும் என்ற சுய திருப்திப் படுத்தலுடன் அனைத்தையும் மறந்தும்விடுவர். 


ஆனால் அதிகார ஆசை, கெளரவப் பிரச்சினை இன்னும் பொருளாதார ரீதியான நலன்கள் என்றவுடன் சம்பந்தப்பட்டோர் கச்சை கட்டி சண்டைக்கு நிற்பதும், பொலீஸ் பாதுகாப்புடன் நிருவாக சபை தெரிவு செய்வதும், முடியாத பட்சத்தில் பள்ளியை இழுத்து மூடிவிட்டு பக்கர்களின் மாதாந்த சந்தா பணத்தில் வழக்காடுவதும் கூட இஸ்லாமிய சமூகத்தில் காணப்படுவது கவலைக்குறியது நிகழ்வுகள். 


இத்தகைய விடயம் ஒன்று கடந்த வியாழன்(10.08.23) புத்தளம் பெரிய

(முஹையதீன் ஜும்மா) பள்ளியில் நடந்தேறியது. ஆதாவது அரசியல் இஸ்லாம் அல்லது இஸ்லாமியத்துவ போக்கு மாறி ஒருவகை " பள்ளி அரசியல்" என்பதே அது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சமூக பிரச்சினைகளில் தலையீடு செய்து நல்ல தீர்வு தரும் பள்ளி தன் சொந்த பிரச்சினையை தீர்க முடியாமல் மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும் அவல நிலை.


சமூகரீதியில் மிகவும் ஆபத்தான இந்த புதிய போக்கு  இஸ்லாமியர் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் அம்மக்கள் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அண்மைக் காலங்களில் விஸ்பரூபம் எடுத்துள்ளது என்பது  இஸ்லாமியரின் நாளாந்த அனுபவம்.


87 வருடங்கள் பழமையான புத்தளம் பெரிய பள்ளி புத்தளம் மாவட்டத்துக்கே உணர்வு ரீதியான  ஒருவகை தலைமையகமாக காணப்படுவது மறுக்க முடியாத அம்சமாகும். நகர மார்க்க அறிஞர் சபை( ஜம்மியதுல் உலமா)சபை, மாவட்ட மார்க்க அறிஞர் சபை, சர்வ சமய நல்லிணக்க சபை, ஸகாத் ( ஏழை வரி) சபை, திருமண விவகாரங்கள் மற்றும் முன் ஆலோசனை, நல்லிணக்க வழிகாட்டல் சபை என்று பல்வகை செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டு இயங்கும் இந்த பள்ளி நிர்வாகம் பல சந்தர்பங்களில் வெளிப்படைத் தன்மையற்றும், பொறுப்புக் கூறல் இன்றியும், நிருவாகத்திறன் இன்றியும் செயற்படுவதும் கவலைக்குறிய விடயமே. 


இந்த வரிசையில் இப்போது எழுந்துள்ள பிரச்சினைதான் 87 வருட நீண்ட வரலாற்றில் முதன் முறையாக பள்ளியில்  மின்சாரம் துண்டிக்கப்பட்ட விடயம். பலருக்கு இது ஓர் அற்ப விடயமாக தெரிந்தாலும் இது ஊரின் கெளரவப் பிரச்சினை, சீர் கெட்ட நிருவாகத்தின் பொறுப்பற்ற செயல், நிதி மோசடியின் மெல்லிய சான்று என்று பல கோணத்திலும் மக்கள் விமர்சிக்கிக்க ஆரம்பித்துள்ளனர். 


மூன்றாம் மாதத்திற்கான மின் கட்டணம் இன்னும் நிலுவையில் உள்ளதாம். அதுவே மின் வெட்டுக்கு காரணமாம்.  காரணம் உண்மை. ஆனால் அந்த காரணத்தை ஏற்படுத்திய மூல காரணத்தை மக்கள் ஏற்க மறுக்கின்றனர். மூன்றாம் மாத நிலுவை நான்காம் மாத கட்டணத்தோடு  அல்லது நாள் பிந்திய கட்டணத்துக்கு மின் சார சபை அனுமதி வழங்கி இருந்தால் ஐந்தாம்,ஆறாம், ஏழாம், எட்டாம் மாதக் கட்டணத்தோடு ஏன் கட்டப்பட வில்லை. இது சாதாரணமாக மின் சக்தி பாவனையாளர் யாரும் அறிந்த விடயம். ஏன் பள்ளி  நிருவாகத்திற்கு இது  தெரியாமல் போனது. நியாயமான கேள்விகள். பெரிய பள்ளியிடம் ஏற்றுக்கொள்ளக் கூடியதான பதில்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.


ஆனாலும் இந்த கேள்வியில் இருந்தே மின் துண்டிப்புக்கான சரியான காரணம் தெரிய வந்துள்ளது. அதாவது  மின் கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகத்திடம் பணமில்லையாம்.  ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 


இன்றைய பணப்பெறுமதியில் பல கோடி சொத்துக்களை( தென்னந் தோப்புக்கள்,கடைத் தொகுதிகள்)  தன்னகத்தே கொண்ட புத்தளம் பெரிய பள்ளிக்கு பணத்தட்டுப்பாடா என்று ஆச்சரியத்தில் பக்தர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கின்றனர்.   பள்ளி சொத்துக்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் எட்டாம் மாதம் வரை பள்ளிக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை(rent arrears) 15 லட்சத்தை தாண்டிவிட்டது என்ற செய்தி மக்களை இன்னும் ஆத்திரமடையச் செய்துள்ளது. 


அர்ப்பணிப்புடனும், கடமை உணர்வுடனும் செயற்படும் நிருவாக சபை இல்லாமையே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மக்கள். கடைகளை குத்துகைக்கு எடுத்துள்ளவர்கள் மாதாந்த குத்தகை பணத்தை சரியான காலத்தில் செலுத்தத் தவறினால்  அதை எப்படி வசூலிப்பது என்ற செயல் முறை ஒன்று நிருவாகத்திடம்  இல்லையாம், இது தொடர்பாக " வற்புறுத்தல் கடிதம்" ( letter of demand), அதை தொடர்ந்து நீதி மன்றம் செல்லல் என்பதெல்லாம் இஸ்லாமிய நெறிமுறை இல்லயாம், ஆகவே அவர்கள் பட்டும் படாமலும், நொந்தும் நோகாமலும்( softy, softy approach ) தான் நிலுவைப் பணத்தை பெற முயற்சிப்பார்களாம்.  இந்த காரணங்களையும் மக்கள் நம்பத் தயார் இல்லை என்பதோடு மக்கள் வைக்கும் மேலதிக குற்றச்சாட்டு  நிருவாக சபை அங்கத்தினருக்கு வேண்டப்பட்டவர்களும், சிலர் சொந்த பந்தங்களாக இருப்பதும் இத்தகைய மென் போக்குக்குகான  காரணம் என்கின்றனர். 


இன்னும் கடுமையான குற்றச்சாட்டே நிருவாக சபை உறுப்பினரான சில  வியாபாரி/முதலாளிகள் தங்கள் வியாபார கொடுக்கல் வாங்கலுக்கு பள்ளி வருமாமனத்தை பயன்படுத்துகிறார்களாம். இத்தகைய துஸ்பிரயோகங்ளே மின் கட்டண நிலுவைக்கான முதல் காரணம் என்று உறுதியாக  கூறுகின்றனர் மக்கள்.


காலவதியாகிய கடைசி நிருவாக சபை கலைக்கப்பட்டு புதிய நிருவாக சபை அமைப்பது தொடர்பாக " வக்பு சபை" யினால் அனுப்ப்பட்ட இரண்டு கடிதங்கள் பாராமுகமாக கிடப்பதாகவும் ஒரு தகவல். சட்டரீயியற்ற கடைசி (நடப்பு) நிருவாக சபைத் தலைவர் வயது முதிர்வினால் ஏற்பட்டுள்ள சுகமின்மை காரணமாக பதவியாற்ற உடல்,உள ரீதியாக பொருத்த மற்றவராக காணப்பட்டாலும் அதே போல் ஏனைய பல நிர்வாக சபை அங்கத்தவர்களும் செயல்திறன் இல்லாமல் இருக்கின்ற போதும் காலவதியாகிய நிருவாக சபையை கலைத்துவிட்டு புதிய சபை ஒன்றை தெரிவு செய்ய, அதன் மூலம்  இருக்கும் யாப்பின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, பள்ளியின் சொத்துகளை காப்பாற்ற, பள்ளியின் நிறந்தர வருமானத்தை உறுதி செய்து, பள்ளியின் ஆன்மீக பணியுடன் சமூக பணியையும் மக்கள் திருப்திபடும் முறையில் செயல்படும் வகையில் உடனடியாக முன் வராவிட்டால் மக்களின் குற்றச்சாட்டான நிருவாக சபை உறுபபினர் சிலரின்

" பொருளாதார நலன்கள்"( financial  interests) தவிர வேறு காரணங்கள் எதுவும் பள்ளியின் இன்றைய நிலைக்கு  காரணங்களாக இருக்க முடியாது.


- Mohamed SR Nisthar. 

No comments:

Post a Comment