ச'துறை முஸ்லிம் ம. கல்லூரிக்கு 5 மி. பெறுமதியான பேருந்து - sonakar.com

Post Top Ad

Tuesday 15 August 2023

ச'துறை முஸ்லிம் ம. கல்லூரிக்கு 5 மி. பெறுமதியான பேருந்து

 



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலியின் வேண்டுகோளுக்கு அமைவாக சக்வல - பிரபஞ்சம் வேலை திட்டத்தின் கீழ் 75 ஆவது பஸ் வண்டி ஒன்றினை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று(14)காலை 10.30 மணியளவில் சம்மாந்துறை  முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


பஸ் வண்டியை சஜித் பிரேமதாஸ சம்மாந்துறை  ஹிஜ்ரா பெரிய பள்ளிவாசல் சந்தியிலிருந்து செலுத்திக் கொண்டு வந்து குறித்த பாடசாலையின் வாசல் முன்றலில் நிறுத்தினார். 


எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜவுக்கு முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் அநோக வரவேற்பளித்தனர்.




இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தயின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் உட்பட கல்வி அதிகாரிகள், பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




பிரதம அதிதி சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தயின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.




மாணவர்களின் நடனம் ஒன்றும் நடைபெற்றது. 




கல்லூரியின் அதிபர் திருமதி யு.என்.ஏ றஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸா உரையாற்றுகையில், 




இப்பாடசாலையில் சுமார் 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டு சுமார் ரூபா 50 இலட்சத்திற்கும் அதிகமான பெருமதியுடைய இந்த பஸ் வண்டியை இன்று நாம் கையளிப்பதில் பெருமை அடைகின்றோம்.




எமது இத்திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் பாடசாலையுடன் சேர்த்து 75 பாடசாலைகளுக்கு பஸ் வேண்டிகளை அன்பளிப்பு செய்திருக்கின்றோம் என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.


மேலும் 33 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போன் கணணி போன்ற நவீன டிஜிட்டல் கருவிகளையும் வழங்கி இருக்கின்றோம்.


அதேபோல் சுவாசம் என்கின்ற நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக நாட்டில் இருக்கின்ற சுமார் இதுவரைக்கும் 56 வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களையும் வழங்கி இருக்கின்றோம்.


சம்மாந்துறை வைத்தியசாலைக்கும் சுமார் 30 இலட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்களை நாங்கள் ஏற்கனவே வழங்கி இருக்கின்றோம்.


எமது கட்சியின் அமைப்பாளர் ஹஸன்அலி இப்பாடசாலைக்கு நவீன வசதிகளை உடைய கேட்போர் கூடம் ஒன்றை அமைத்து தருமாறு கேட்டு இருக்கின்றார். எமது ஆட்சி வருகின்ற போது நிச்சயமாக இந்த பாடசாலைக்குரிய கேட்போர் கூடத்தை அமைத்து தருவோம் என்பதனை இங்கு உறுதி கூறுகிறேன்.


அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற அம்பாறை பொத்துவில் கல்முனை சம்மாந்துறை ஆகிய தொகுதியில் வாழ்கின்ற மக்கள் எவ்விதமான வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.


இன்று மதம், மொழி என்ற வேறுபாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எமது ஆட்சி வருகின்ற போது மக்களிடையே எந்தவிதமான வேறுபாடு இன்றியும் நீதியான முறையில் மக்களை நடத்துவோம். 


அம்பாரை மாவட்டத்தில் காணப்படுகின்ற அனைத்து குறைபாடுகளையும் நாங்கள் அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள இருக்கின்றோம்.


எமது ஆட்சி நிர்வாகத்தின் போது கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றோம். மாணவர்களுக்கு நவீன டிஜிட்டல் கருவிகள் மூலம் கல்வியை மேற்கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து பாடசாலைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றோம்.


இன்றைய ஆட்சியாளர்கள் மாணவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களின் ஊடாக கல்வியை மேற்கொள்வோம் என்று தெரிவித்துக் கொள்கின்றார்கள். ஆனால் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பல்வேறு குறைபாடுகள் இருந்தது. மாணவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் இருக்கவில்லை. பல இடங்களில் தொலைபேசிக்கான சிக்னல் கூட காணப்படவில்லை. இவ்வாறான நிலைமைகளை நாங்கள் மாற்றி அமைப்போம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.


இன்று எமது பாடசாலைகள் நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. எனது தந்தையாகிய ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் பாடசாலையில் உள்ள சகல மாணவர்களுக்கும் இலவசமாக மதிய போசனத்தையும் வழங்கி வைத்திருந்தார். அதனை நிறுத்தியுள்ளார்கள். சீருடைகளையும் வழங்கியிருந்தார் மாணவர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்ட மதியபோசன வசதியினை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா பாடசாலைகளுக்கும் ஏற்படுத்திக் கொடுப்போம்.


ஆட்சியாளர்கள் நாட்டின் சொத்துக்களை நாளாந்தம் விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். சொத்துக்களை விற்றுதான் இந்த நாட்டை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.  நாட்டில் காணப்படுகின்ற ஒவ்வொரு திணைக்களத்தினையும் தற்போது தனியார் மையப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தின் அலை வரிசை ஒன்றினையும் தனியார்மைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்கள். நாட்டை மிகவும் வங்குரோத்தான நிலைக்கு எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்.  நமது ஆட்சி வந்தவுடன் எமது நாட்டினுடைய சொத்துக்களை நாங்கள் மீளவும் பெற்றுக் கொள்வோம். நாட்டை சூறையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு எல்லாவற்றையும் தனியார் மயப்படுத்திக் கொண்டு வருகின்ற நிலையில் பாடசாலைகளையும் தனியார் மையப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளை கூட தனியார் மையமாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்கள். இலங்கையில் 39 லட்சம் மக்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் 


தெரிவித்துள்ளது. 79 லட்சம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றார்கள். இதற்கு இந்த அரசாங்கத்தினுடைய அசமந்தப்போக்கே காரணமாகும். எமது ஆட்சி வருகின்ற பட்சத்தில் நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு மக்களுடைய வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம் என்பதனை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.


- ஐ.எல்.எம் நாஸிம்

No comments:

Post a Comment