தரங்கெட்ட வீரகேசரியின் கேவலங்கெட்ட ஊடக தர்மம் - sonakar.com

Post Top Ad

Thursday 3 February 2022

தரங்கெட்ட வீரகேசரியின் கேவலங்கெட்ட ஊடக தர்மம்

 


திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிர்வாகம், அபாயா அணிதல் தமது பாடசாலை கலாச்சாரத்துக்கு எதிரானதென போர்க்கொடி தூக்கியதன் பின்னணியில், தனது ஆடைச் சுதந்திரத்துக்கான உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து முஸ்லிம் ஆசிரியை போராட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருந்தது.


2018ம் ஆண்டு ஆரம்பித்த குறித்த சர்ச்சையில் மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்வியமைச்சின் தலையீட்டுக்கு மேலாக நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே பாதிக்கப்பட்ட ஆசிரியை நேற்றைய தினம் மீண்டும் தனது கடமைகளைப் பொறுப்பேற்க ஸ்ரீ சண்முகாவுக்குச் சென்றிருந்தார்.


இதற்கடுத்து, தாம் தோற்றுப் போனதாகக் கருதியவர்களின் மன உளைச்சல் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சர்ச்சையொன்று வெடித்து, அந்த சர்ச்சையை இனப் பிரிவினைக்கான விதையாக்கி 'தமிழ்' மாணவியர் மற்றும் பெற்றோர் ஒரு முஸ்லிம் ஆசிரியையின் ஆடைக்கலாச்சாரத்துக்கு எதிராகப் போராடியதாக அறுவறுக்கத்தக்க வரலாறு நேற்று பதிவாகியுள்ளது.


மீண்டும் ஸ்ரீ சண்முகாவுக்கு தனது கடமையைப் பொறுப்பேற்கச் செல்லும் போது, ஏதோ ஒரு அளவான எதிர்ப்பையும் அதிருப்தியையும் எதிர்பார்க்காமல் குறித்த ஆசிரியை சென்றிருக்க முடியாது. ஆயினும், இவ்வாறான சூழ்நிலையை பக்குவமாகக் கையாள வேண்டிய பொறுப்பு அவருக்கும் அதே போன்று பாடசாலையின் பொறுப்புதாரியான அதிபருக்கும் உண்டு.


அந்தக் கடமையை அதிபர் சரியாகச் செய்தாரா? இல்லையா? என்பதற்குத் தாமே சான்று பகின்றுள்ள வீரகேசரி, அங்கு மீண்டும்  குறித்த ஆசிரியையின் 'ஆடை' தொடர்பில் வாதப் பிரதிவாதம் நடந்ததாக குறிப்பிடுகிறது. நிச்சயமாக அது அதிபர் தரப்பினால் ஆரம்பிக்கப்பட்டதாகவே இருக்க வேண்டும். ஏனெனில், அதனை அவர்களே எதிர்த்தார்கள். அதற்கு எதிராகவே நீதிமன்ற தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.


இதற்கடுத்து, வாதப் பிரதிவாதம் முற்றுவதற்குக் காரணம் குறித்த ஆசிரியை சர்ச்சையை நேரடி ஒளிபரப்புச் செய்தமை என்றும் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான ஆதாரத்தை, பதிவாக்கிக் கொள்ள இன்று சமூக வலைத்தள நேரலை வசதி உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால், குறித்த ஆசிரியை அதனைத் தனது 'தற்பாதுகாப்பு'க்கான (self defence) விடயமாக முன் வைக்கலாம்.


அதன் பின் அங்கு அதிபர் தள்ளப்பட்டார் - ஆசிரியையின் கழுத்து நெரிக்கப்பட்டது என்ற சாட்சியமற்ற பரஸ்பர குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், தள்ளப்பட்டார் என்றால் அவர் தற்பாதுகாப்புக்காக, தன்னைத் தாக்க வந்தவரையும் தள்ளியிருக்கலாம் என்ற நிரூபிக்கப்படாத சூழலும் உள்ளது.


இவ்வாறிருக்க, தள்ளப்பட்டார் என்பதைத் தாக்கினார் என்று தலைப்பிடுவதும், மீண்டும் நியமனம் பெற்று கடமையைப் பொறுப்பேற்க வந்த ஆசிரியையை, பிறிதொரு பாடசாலைக்கு இணைப்புப் பெற்றுச் சென்ற என்று வர்ணிப்பதன் ஊடாக அவர் சண்டைக்காகவே திரும்பவும் இந்த பாடசாலைக்கு வந்தார் என விபரிப்பதும் வீரகேசரி என்கிற ஊடகத்தின் வங்குரோத்து நிலையை எடுத்தியம்புகிறது.


உணர்வூட்டல் தலைப்புகளால் வாசகர்களைக் கவரும் உத்திக்கு மேலாக இனப்பிளவுகளை மேலும் ஆழமாக்கும் வகையில் திரிபானதும் ஒன்றுக்கொன்று முரணானதுமான தகவலை வெளியிடுவதா? அல்லது இவ்வாறான சூழ்நிலையில் நீதியான செய்தியை வெளியிடுவதா ஒரு ஊடகத்தின் கடமையென்பதை வீரகேசரி ஆசிரிய பீடத்தில் 'உழைக்க' வந்திருக்கும் உப்புச் சப்பில்லாத சேற்றுக் குமிழ்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


பாகிஸ்தான், சியல்கோட்டில் சம்பவத்தின் சிறு திரிபு உயிரிழப்பு வரை சென்றது. தகவல் திரிபின் பாதிப்புக்கு இதை விட ஆதாரம் அவசியமில்லை.


தமது இணையச் செய்தியில் வேறு வகையிலும் பத்திரிகைச் செய்தியில் இன்னொரு வகையிலும் பித்தலாட்டம் செய்யும் வீரகேசரியின் ஊடக தரங்கெட்ட ஊடக தர்மத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.


நீதிமன்றம் நீதியை நிலை நாட்டட்டும்!

-Sonakar.com

No comments:

Post a Comment