நியுசிலாந்து விவகாரம்: ACJU கண்டனம் - sonakar.com

Post Top Ad

Saturday 4 September 2021

நியுசிலாந்து விவகாரம்: ACJU கண்டனம்

 


நியூசிலாந்தின் ஓக்லாந்தில் நேற்று (03.09.2021) இடம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்; இலங்கையைச் சேர்ந்தவர் என்பதையும், அவரது மனிதாபிமானமற்ற செயலானது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கொள்கையினால் உந்தப்பட்டது என்பதையும் ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்து எமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கையிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகள் இணைந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கொள்கையை கண்டித்தும் நிராகரித்தும் 2015 இல் 'கூட்டு பிரகடனம்' ஒன்றை வெளியிட்டன. இந்த ஐஎஸ்ஐஎஸ் கொள்கையானது சமாதானம், அன்பு, இரக்கம், நீதி, மிதமான போக்கு, அனைவரையும் மதித்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் அழகிய இஸ்லாமிய மார்க்கத்தை திசை திருப்புவதாக அமைந்துள்ளது.


உலகெங்கிலும் உள்ள பல இளைஞர்கள் மாறுபட்ட தீவிரவாத கொள்கைகளின் பல வடிவங்களுக்கு இரையாகியுள்ளனர் என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். எமது இளம் தலைமுறையினரைப் பாதுகாக்கவும் வழிகாட்டவும் அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.


'இத்தாக்குதல், ஒரு மதம், இனம் அல்லது கலாச்சாரத்தினால் அன்றி ஒரு தனிநபரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பாகிறார்' என நியூசிலாந்தின் பிரதமர் ஜெ. ஆர்டர்ன் வெளியிட்ட அறிக்கையை நாம் மிகவும் பாராட்டுகிறோம். இவை அன்பு, நீதி மற்றும் பாரபட்சமின்மையை ஊக்குவிக்கும் அற்புதமான தலைமைத்துவ பண்புகளாகும்.


புனித அல் குர்ஆனின், அத்தியாயம் 41 வசனம் 34 இல் கூறப்பட்டுள்ளபடி, சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து நாட்டின் பொது மக்களையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.


'நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! (அதாவது நம்பிக்கையுள்ள விசுவாசிகளை கோபத்தின் போது பொறுமையாக இருக்குமாறும், அவர்களை மோசமாக நடத்துபவர்களை மன்னிக்குமாறும்; அல்லாஹ் உத்தரவிடுகிறான்) அப்பொழுது, எவருக்கும் உமக்கும் இடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போல் ஆகிவிடுவார்.'


இன்றைய உலகில் அமைதி, அன்பு, இரக்கம், நீதி, மிதமான போக்கு மற்றும் அனைவரையும் மதித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் அனைத்து வகையான தீவிரவாதத்தையும் ஒழிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது நம் அனைவரதும் பொறுப்பாகும்.


இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்புக்காக நாம் பிரார்த்திக்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்துவிதமான தீவிரவாத செயற்பாடுகளிலிருந்தும் மனிதர்களைப் பாதுகாத்து உலகில் அமைதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவானாக.


 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment