ஆப்கன்: புதிய போத்தலில் பழைய பழரசமா? - sonakar.com

Post Top Ad

Monday 23 August 2021

ஆப்கன்: புதிய போத்தலில் பழைய பழரசமா?

 



புதிய போத்தலில் பழைய பழரசமா அல்லது பழைய போத்தலில் புதிய பழரசமா என்பதே ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை தொடர்பாக பொதுவாக எழும் கேள்வி. தலைநகர் காபூல் தலிபான்கள் வசம் 15.08.21ல் வீழ்ந்தது அனேகருக்கு ஆச்சரியமான விடயம் மாத்திரமல்ல, 2001 ல் இருந்து அங்கே நிலை கொண்டிருந்த நேட்டோ ஒப்பந்த (NATO) நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் கூட அது ஒரு அதிர்ச்சியான விடயமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. ஆகவேதான் நேட்டோவின் இராணுவ  அதிகாரி ஒருவர், "பனிக்கட்டிகளை விட வேகமாக உருகிய ஆப்கானிஸ்தான் அரசாங்கம்" என்றார். 


காபூல் கைப்பற்றப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு நடந்த முதல் பத்திரிகையாளர் மாநாட்டில் தலிபான் தலைவர் ஒருவரினால் தெரிவிக்கப்பட்ட விடயம் மொத்த உலகத்தையும் சற்று வியக்கச் செய்தது என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அதாவது, "கடந்த 40 வருடங்களாக ஆப்கான் பெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக காணப்பட்டார்கள். இனி அவர்கள் பாடசாலைக்குச் செல்லலாம், ஆசிரியைகளாக கடமையாற்றலாம், வைத்தியர்களாக கடமை புரியலாம்" என்ற அவரின் கூற்றையும் அதற்கு  பின்னால் ஒரு எச்சரிக்கை கலந்த நிபந்தனை ஒன்றிருந்ததையும் அவதானிக்க யாரும் தவறி இருக்க மாட்டார்கள். 


அதாவது, பெண்களுக்கான இந்த அனுமதி "இஸ்லாமிய ஷரியா சட்ட வரையறை" க்குள் இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. கூடவே சிரியா, துருக்கி போன்றில்லாமல் ஆப்கானிஸ்தானின் காலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த "ஹனபி மத்ஹப்" ( ஹனபி சமய சிந்தனைப் பள்ளி- Hanafi religious school of thought) க்குள் பெரும்பான்மை "புஸ்தூன்" ஆப்கானிஸ்தானியர்கள் உள்ளடக்கப்படுவதால் " இஸ்லாமிய ஷரியா வரையறை" என்பது தலிபான்களின் பிரத்தியேக பொருள் கொள்ளல்(interpretation)க்கு உட்பட்டதாகும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாத்தின் அடிப்படை போதனை என்ன, உலகளாவிய ரீதியில் முஸ்லீம்களின் நிலைப்பாடு என்ன என்பது இங்கு முக்கியம் பெற முடியாது, மாறாக இஸ்லாம் என்ன சொல்கிறது, முஸ்லிம்கள் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று தலிபான்கள் தங்கள் " ஹனபி பிரிவு சிந்தனை பள்ளியூடாக" எதை எப்படி நினைக்கிறாரோளோ அது அப்படியே ஆகவேண்டும் என்று சுருக்கமாகக் கூறிவிடலாம்.   


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க, ஐக்கிய இராச்சிய இருப்பு 2001ல் ஏற்படுத்தப்பட முன் தலிபான்களே அந்நாட்டை ஆட்சி செய்தனர், அதாவது தலிபான்கள் கோடிட்டு காட்டும் இந்த "40 வருடங்கள்", தலிபான் ஆட்சித்தலைவர் "முல்லா ஒமர்" தலைமையிலான ஆட்சி (1994- 2001) காலத்தையும் உள்ளடக்கிறது. ஆகவே நமக்கு இயற்கையாக எழும் கேள்வி, இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கல்வியை கட்டாயமாக்கிய  நிலையில் "தலிபான்களின் முன்னைய ஆட்சி" காலத்தில் பெண்களுக்கான கல்வி உரிமை ஏன் மறுக்கப்பட்டது? பாடசாலைக்கு சென்ற பெண் பிள்ளைகள் ஏன் குண்டடித்துக் கொல்லப்படார்கள்? (இறுதி சம்பவம் கடந்து மே  மாதம் 50 பாடசாலை மாணவிகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட விடயம்) ஏன் பல சந்தர்பங்களில் பெண்கள் மூக்கறுக்கப்பட்டார்கள்? ஆண் பிள்ளைபேற்று மருத்தவரிடம் (Gynogologist) பெண்கள் பிள்ளை பெறுவதற்கு அனுமதிக்கப்படாமல் பெண்கள் பலர் உயிர் துறப்பதற்கு காரணமாகினர்.  ஏன் பெண்கள் மருத்துவ துறைக்கும், பொதுவாக ஆண்களுடன் கலந்து செய்யும் எந்த வேலைக்கும் அனுமதி மறுக்கப்பட்டார்கள்? அப்படியானால் தலிபான்களின் கடந்த கால ஆட்சியில் இஸ்லாமிய ஷரியா சட்ட வரையறை பேணப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா என்ற கேள்வி எழுவதையும் தடுக்க முடியாதுள்ளது. ஆகவே இஸ்லாம் நமக்கு சொல்லித்தரும் "இஸ்லாம்" வேறு, தலிபான்கள் "இஸ்லாம் " என்று தன் மக்களுக்கு சொல்லும் விடயம் வேறு.


இன்று உலகில் எல்லாரும் சரளமாக பாவிக்கு அறபு வார்த்தைகள், ஹலால்(Halal), ஹராம்(Haram), ஜிஹாத்(ihath), ஷரியா(Sharia), கிலாபா(Caliphate),  போன்ற வார்த்தைகள் எல்லாம் முஸ்லீம்களுக்குறியது. ஆனால் இந்த வார்த்தைகளை எந்த இயக்கங்கள் தம் சுயலாபங்களுக்கு பாவிக்கின்றார்களோ அதே நிலைப்பாட்டையே முஸ்லீம் அல்லாதோர்களும் எடுக்கின்றார்கள். உதாரனமாக அல்-கைடா இயக்கமோ அல்லது ISIS இயக்கமோ தாங்கள் கிலாபா ஆட்சியை அமைக்க பாடுபடுகின்றோம் என்றவுடன் அவர்கள் செய்யும் அத்தனை கொலைகளும், கற்பழிப்புகளும் இன்னும் பல மனித நேயமற்ற விடயங்களும் இஸ்லாம் சொல்வதாக சொல்லப்படும் " கிலாபா" ஆட்சியின் ஒரு பகுதி என்ற நிலைப்பாட்டுக்கு வருவதுடன் இந்த மேற்கத்திய சக்திகளும் சராசரி முஸ்லீமும் அதையே நம்பும்படி எதிர்பார்க்கின்றன. அதே போலவே இந்த "ஷரியா" என்ற அம்சம். அதாவது இன்று உலகளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள டச், ரோம, ஆங்கிலேய சட்டங்களின் குடியியல், குற்றவியல் சட்டங்கள் போலவே இந்த ஷரியா என்பது, இதன் சாதாரண விளக்கம் மனித நடவடிக்கைகளில் ஏற்படும் சிக்கல், பிரச்சினைகளை தீப்பதற்கான ஒரு வழிகாட்டல் அவ்வளவே. இந்த ஷரியா சட்டமானது குடியியல், குற்றவியல் என்ற இரண்டு பெரும் பிரிவுக்குள் வருகின்றன. அதில் ஒன்று " ஹுதூத்" என்ற "தண்டனை சட்டம்" (Penal Code). அதுவும் இல்லாமல் இந்த அனைத்து சட்டங்களும் கால சூழ் நிலைக் ஏற்றவாறு மறுசீர்பமைப்புக்கு உட்படலாம் என்றே இஸ்லாமிய சட்டவிஞ்ஞானிகள் முடிவுக்கு வருகின்றனர். ஆகவே தலை கொய்வதும் அது போன்ற தண்டனைகள் இந்த குழுக்களால் நிறை வேற்றப்படும் போது அதுதான் இஸ்லாம் போதிக்கும் "ஷரியா" என்று மேற்கு சக்திகளும் இந்த இயக்கங்களின் நிலைப்பாட்டுக்கு துணை போவது விந்தையான விடயமே. இந்த காரணமற்ற பயமும், அது தொடர்பான பிரச்சாரங்களும் கூட தலிபான்களுக்கு சவாலாகவே இருக்கப் போகின்றன.     


நிற்க, அமெரிக்க, பிரித்தானிய பாதுகாப்பில் ஆட்சி செய்த ஜனாதிபதி அஸ்ரப் கானி( Ashraf Ghani) தன் நாட்டையும், மக்களையும் விட்டு தப்பி ஓடி பாலைவன நாடொன்றில் அடைக்கலமாகிவிட்டார். அவர் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளினால் நாட்டின் புனர்நிர்மானத்திற்கும், அபிவிருத்திக்குமாக கொடுக்கப்பட்ட பணம் கானியின் சொந்த பாவனைக்காக அமெரிக்காவிலும், சில அறபு நாடுகளிலும் மாளிகை போன்ற விசாலமான் வீடுகள் வாங்கவும், வியாபார முதலீடாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது. அவர் சென்ற கிழமை நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முஸ்தீபுகள் நடக்கும் போது அவருடைய SUV ரக வாகனத்தில் சாரைசாரையாக பணம் பதுக்கப்பட்டிருந்தாக தகவல்கள் பொதுவெளிக்கு வந்துள்ளன. ஆப்கானிஸ்தானின் இராணுவ பயிற்சிக்காகவும், அவர்களின் இதர தேவைகளுக்காகவும் வெளிநாடுகளால் கொட்டப்பட்ட பணத்துக்கு கணக்கு வழக்குகள் இல்லை. நாடின் தலைவனே தன் சொந்த நாட்டை சுரண்டிய போது, மக்களைவிட்டுவிட்டு ஓடிய போது, தலிபான்களின் முன்னைய ஆட்சியில் நடந்த அநியாயங்களையும், பல சந்தர்ப்பங்களில் அட்டூழியங்களையும் சந்தித்த மக்கள் பயபீதியில் நாட்டை விட்டு தப்பிச்செல்ல எடுக்கும் ஆபத்தான முயற்சிகள் எல்லாம் ஒன்றையே சுட்டிக்காட்டுகின்றது. அதாவது தலிபான்கள் தங்களை நல்லவர்களாக காட்டுவதும், மீட்பர்களாக தங்களை சித்தரிப்பதும் சர்வதேச சமூகத்தகை குறுகிய காலத்துக்குகேனும் அமைதியடையச் செய்து தமக்கெதிரான பிரச்சாரங்களை கட்டுபடுத்துவதன் மூலம், தம் ஆட்சிக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சி.


இன்றைய ஆப்கானிஸ்தான் சனத்தொகையில் 60% த்தினர் 18 வயதுக்கு குறைந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். இயவர்களின் எதிர்காலம் என்ன? இவர்களில் பெண்களின் நிலை ஆண்களின் நிலைமையை விட மாறுபடுமா? ஆப்கானிஸ்தானின் சனத்தொகையில் 20% த்தினர் சிறுபான்மை "ஹஸாரா" சமூகத்தை சார்ந்தோர். இவர்களில் பெரும்பான்மையினர்  இஸ்லாமிய "ஷியா" கொள்கை பிரிவினர். பொதுவாகவே பெரும்பான்மை "புஸ்தூன்" களால் இந்த சிறுபான்மை "ஹஸாரா" பிரிவினர் புறக்கணிக்கப்பட்டவர்களாக கருதப்படும் போது அவர்களின் "ஷியா" நிலைபாடு மேலதிக புறக்கணிப்புக்கும் இவர்கள் உள்ளாக்கப்படுகின்றனர். இதைவிடவும் ரஸ்யாவின் ஆட்சிக்காலத்தில் ஆப்கானிஸ்தானின் வட எல்லையில் தனியான குழுக்கள் அமைத்து அந்த பிரதேசங்களை தன் கடுப்பாடில் வைத்திருந்த தன்னிச்சையாக இயங்கும் போர்த் தலைவர்கள் (Warloards) மீண்டும் தலை எடுக்கும் நிலை தவிர்க்க முடியாத விடயமாக நோக்கப்படுகின்றது. அமெரிக்க, பிரித்தானிய நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றிக் கொள்ளும் இறுதி நாள் 31.08.21 என்ற முடிவு கடார், தோகாவில் எட்டப்பட்டப் போதிலும் அது சாத்தியப்படாத விடயம். ஆகாகவே அனைத்தும் அமெரிக்க, பிரித்தானிய பிரஜைகளும் வெளியேற்றப்பட இன்னும் ஒரு மாத கலமாவது தேவைப்படுவதான நிலைமை காபூல் விமான நிலையத்தில் மீண்டும் குட்டி போர் ஒன்றை தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆகவே பன்முக பிரச்சினைகளைக் கொண்டுள்ள இந்த இக்கட்டான நிலை எவ்வாறு கையாளப்படும் என்பதே பலரின் கேள்வி.


பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்காவோ, ஐரோப்பாவோ ஆப்கானிஸ்தானில் அக்கறை கொள்ளத்தேவையில்லை என்ற தலிபான்களின் கூற்றில் நியாயம் இருந்தாலும், அதாவது ஈராக் உட்பட்ட சட்டவிரோத யுத்தங்கள் பலதிற்கு காரணமாக இருந்த அமெரிக்க, மேக்கு ஐரோப்பிய கூட்டு படையெடுப்புகள் அவர்களின் சொந்த பொருளாதார, புவிசார் அரசியல் இலாபங்களுக்காக தொடுக்கப்பட்ட போர்களாக இருந்ததினால், ஆப்கானிஸ்தானுக்கு அண்மையில் உள்ள, இன்றை 21ம் நூற்றாண்டில் பொருளாதார ரீதியில் நாடுகளை நேரடியான நில ஆக்கிரமிப்பின்றி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமையுடைய, அதே நேரம் இருபக்க பொருளாதார நலன் என்ற ஒரு வகை புரிந்துணர்வில், வல்லரசு நாடுகளில் ஒன்றான "சீனா" வின் பக்கம் தலிபான்களின்  பார்வை சென்றுள்ளதால் இதுவும் எதிர்கால பூகோல அரசியலிலும், பிராந்திய அரசியலிலும் சில பல புதிய நிலைமைகளை தோற்றுவிக்கும் சந்தர்ப்பங்களும் நிறையவே காணப்படுகின்றன. 

கூடவே "ஹஸாரா" சிறுபான்மையினர் தொடர்பாக ஈரானின் ஈடுபாட்டையும் தலிபான்கள் முகங்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் அமெரிக்காவும் ஈரானும் கூட ஐரோப்பாவின் ஏற்பாடில் ஒரே மேசையில் பேச்சுவார்த்தைக்கு அமரலாம். ஆகவே எதிர்கால தலிபான் ஆட்சி நாட்டைவிட்டு வெளியேறும் அமெரிக்கா, ஐரோப்பா மாத்திரமல்ல, நண்பனா, பகைவனா, இரண்டும் கலந்தவனா என்ற நிலையில் உள்ள பாகிஸ்தான், முன்னைய எதிரி ரஸ்யா, ஈரான், இந்தியா, புதிய நண்பன் சீனா எல்லோரையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய இக்கட்டான் நிலையில் உள்ளது.


ஆப்கானிஸ்தானில் அபரிமிதமாகக் காணப்படும் "லித்தியம் (lithium deposits) திண்மப் படிமங்கள், 5G போன்ற சீன தொழில் நுட்ப பாவனைப் பொருள்கள் உற்பதிக்கான சரியான தேர்விடமாகவும், பாரிய பணப் பாய்ச்சுதலுக்கான சந்தர்ப்பமாகவும் காணப்படுவதால் இந்த சந்தர்ப்பத்தை தலிபான்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதின் மூலம் அவர்களின் ஆட்சியை பணத் தட்டுப்பான்றி, தலிபான்கள் வெறுக்கும் மேற்கத்திய நாடுகளின் உதவி இன்றி கொண்டு செல்ல வாய்ப்புண்டு.


ஆனால் மனித உரிமை, விசேடமாக பெண்களின் உரிமை என்ற அம்சங்கள் வரும் போது ஏறத்தாழ சீன கம்யூனிஸ கட்சியும், தலிபான்களும் நேர்கோட்டில் பயணிப்பதால் அதில் அவர்களுக்கிடையே பிரச்சினைகள் எழ சந்தர்ப்பங்கள் குறைவு. அதற்கான மேலதிக காரணம் தலிபான்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேவைப்பட்ட நாடாகக் காணப்படும் பாகிஸ்தான் உலக முஸ்லீம்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட நாடாக தன்னை காட்ட முயலும் போதிலும், சீனா தன்நாட்டு "வீகார்"(Vigar) முஸ்லீம்களை மீள் கல்வியளித்தல்(re education programme) என்ற கபட திட்டத்தில் பல்லாயிர கணக்காக வதை முகாம்களில் (Concentration Camps) அடைத்துவைத்து மூளை சலவை செய்வதை கண்டு கொள்ள மறுக்கும் போது, இந்த தலிபான்கள் மாத்திரம் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளப் போகிறார்களா?


இறுதியாக, அமெரிக்கா, ஐரோப்பாவை பொறுத்தவரை அல்-கைடா, ISIS போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தங்கள் நாட்டுக்குள் பயங்கரவாதிகளையும், பயங்கரவாத்தையும் ஏற்றுமதி செய்யாதவரைக்கும் மற்றவைகள் எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமே. அதே போல தங்களின் ஆட்சியில் வெளி நாட்டார், குறிப்பாக ரஸ்யா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவர்களின் உள்நாட்டு முகவர்கள் என்று தலிபான்கள் நினைப்பவர்கள் தலையிடாத வரைக்கும் மற்றவை எல்லாம் அவர்களுக்கும் இரண்டாம் பட்சமே.   தலிபான்களின் நிலையான மனித நேயம் கொண்ட ஆட்சியா அல்லது மீண்டும் குழப்பம் நிறைந்த ஆப்கானிஸ்தானா என்பதை தீர்மானிக்கப் போவோர் இனி தலிபான்கள் மாத்திரமல்ல அந்நாட்டின் குடிமக்களுமே. நல்லது நடக்க துணை நிற்போம், பிரார்திப்போம். 













- Mohamed SR. Nisthar

Co-Editor, Sonakar.com

No comments:

Post a Comment