அசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்! - sonakar.com

Post Top Ad

Thursday 18 March 2021

அசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்!

 


தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்காக விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுனர் அசாத் சாலியின் கைது தொடர்பில் பிரதமரை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 


இதேவேளை, நாட்டில் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருப்பதாகவும் அசாத் சாலி அரசாங்கத்தை விமர்சிப்பதில் தவறேதும் இல்லையெனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அசாத் சாலிக்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்பதில் பொலிசாரிடமும் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.


ஆயினும், அண்மையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதை அனுமதிக்க முடியாது என்கிற அடிப்படையில் அவர் தெரிவித்திருந்த கருத்துக்களோடு, மாவனல்லை புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், தலைமறைவாக இருந்த நபர்களை சரணடையச் செய்வதற்கு அசாத் சாலி மேற்கொண்ட முயற்சி தொடர்பிலும் அவரை விசாரிக்கவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பில் ஏலவே ரணில் - மைத்ரி அரசின் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாகவும் அது போன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகவும் தோன்றி அசாத் சாலி ஏலவே சாட்சியமளித்திருந்ததோடு இரு தரப்பும் அவர் மீது தவறேதும் காணவில்லையென்பது குறிப்பிடத்தக்கது(சோனகர்.கொம்).

No comments:

Post a Comment