இம்ரான் வீசிய சுழற்பந்து! - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 February 2021

இம்ரான் வீசிய சுழற்பந்து!

 


தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஒரு காலத்தில் உலகப்புகழ் பெற்ற வேகப் பந்து வீச்சாளர். வயதாகி விட்டதால் அன்றி, அரசியல்வாதியாகி விட்டதால் அவரால் இப்போது வேகமாக பந்து வீச முடியவில்லை.


இதை நாம் சார்ந்தும் சாராமலும் எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் நிச்சயமாக கருத்து முரண்பாடு உள்ளது. 2014 வன்முறை நடந்து முடிந்த சூட்டோடு சூடாக ஆட்சியாளர்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென்று சொன்னது போல, திகன வன்முறை நடந்து முடிந்த கையோடு எதிர்க்கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென்று சொன்னது போல எம்மவரின் கருத்துக் களம் விரிவானது.


துரதிஷ்டம், ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் அப்படியான கருத்து வித்தியாசத்துக்கு இடமில்லாமல் போய் விட்டது. இருந்தாலும், நம் கடமையைச் செய்தாக வேண்டுமே? அதற்காகவாவது அவர்கள் முஸ்லிம்களா - இல்லையா என்ற வாதம் சில நாட்கள் நீடித்தது. இப்போது, தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படாததனால் மீண்டும் நாலாபுறத்திலிருந்தும் சந்தேகங்கள், வாதப் பிரதிவாதங்கள்.


இதற்கிடையில் ஒரு மாதம் தள்ளிப்போட்டாலும் இலங்கை வந்து சேர்ந்துள்ளார் இம்ரான் கான். அதைப் பற்றி அவரே கூறிய விளக்கத்தின் அடிப்படையில் இதற்கு முன் இருதடவைகள் கிரிக்கட் விளையாடுவதற்காக வந்தவர் இம்முறை தமது நாட்டின் பிரதமராக வந்திருக்கிறார். இம்ரான் கான், 70 களில் இலங்கை வந்தது எனக்குத் தெரியாது, ஆனால் 80களில் அவர் வந்திருந்தது பல விடயங்களுக்காக ஞாபகம் இருக்கிறது.


குறிப்பாக அவரின் சக விளையாட்டு வீரர், கோபக்கார மியன்டாடின் ரசிகர் மீதான அதிரடி நடவடிக்கை, கம்பீரமாக காட்சியளித்த அக்கால இம்ரான், இவர் மீது அதீத அக்கறை கொண்டிருந்த அன்றைய பாக். ஜனாதிபதி ஸியா உல் ஹக், அக்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மீது அவர் வைத்திருந்த பிரத்யேக அக்கறை என பல விடயங்கள் அதில் அடக்கம்.


இப்போது, இம்ரான் கான் ஒரு அரசியல்வாதி. அதிலும், பாகிஸ்தானின் பிரதமர். ஒரு முஸ்லிம் நாட்டுத் தலைவர். இந்த பீடிகையுடன் தற்சமயம், அவரது வருகையின் பின்னணியில் நிலவும் சில கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறிப்பாக, இம்ரானின் வருகையால் தமக்கிழைக்கப்படும் அநீதிகளுக்கு ஏதோவொரு வகையில் விடிவு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எம் சமூகத்தின் ஒரு தொகுதியிடம் இருந்தது. அதில் தவறில்லை!


காரணம், இம்ரான் கான் ஒரு முஸ்லிம் நாட்டின் தலைவர் மாத்திரமன்றி மேற்குலகில் நிலவும் இஸ்லாமோபோபியாவுக்கு எதிராகவும் கருத்துரைத்த அனைத்துலக முஸ்லிம் சமூகம் மீதும் அக்கறையிருப்பதாக காட்டிக் கொண்ட ஒரு தலைவராவார். இருந்தாலும், அவர் சீனாவின் கைப்பிள்ளையாகத் தான் இலங்கை வந்திருக்கிறார் என்பதில் விடயம் தெரிந்த இலங்கை முஸ்லிம்களுக்கு; தெளிவு இருக்கிறது. 


அரசியலைப் பொறுத்தவரையில் எல்லாமே கொடு;க்கல் - வாங்கல் தான் என்கிற அடிப்படையில் சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து உருவாக்கியுள்ள  CPEC (China – Pakistan Economic Corridor) பொருளாதார திட்டத்தில் இலங்கையை உள்வாங்கிக் கொள்வதாகக் கூறி, இந்தியாவோடு அண்ட விடாமல் தடுப்பது இவ்விஜயத்தின் முக்கிய நோக்கம். சரி, அந்த பக்க வாட்டில் 'மஹிந்த பிரதர், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக எரிப்பதை நிறுத்தினால் தான் சேர்த்துக் கொள்வோம்' என்று அவர் சொல்லி விட மாட்டாரா எக்கிற ஆதங்கம், சாதாரண ஆதங்கம்!


அதைத் தவறு காண முடியாது. இருப்பினும், அவர் அதற்காக வரவில்லை. மாறாகவும் உலகில் எந்த மூலையில் முஸ்லிம்களுக்க பிரச்சினை வந்தாலும் முந்திக் கொண்டு உணர்வுகளை வெளிக்காட்டக் கூடிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆகக்குறைந்த எதிர்பார்ப்பு, கட்டாய ஜனாஸா எரிப்பு விடயத்தைப் பற்றி அவர் ஏதாவது பேச வேண்டும் என்பதாகும். அதனால் ஏதும் நடக்கும் - நடக்காது என்பது இரண்டாம் பட்சமான விடயம். குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் நாட்டின் தலைவர் என்கிற அடிப்படையில் அவர் எதையாவது பேச வேண்டும் என்பதே அந்த எதிர்பார்ப்பு.


இன்னொரு புறத்தில், அவர் இராஜதந்திரமாக எதையோ செய்கிறார் அதனால் அவரை இரு கரம் கூப்பிக் கும்பிட வேண்டும் என்ற தொனியிலும் அரசியல் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அதிலும் தவறு காண்பதால் ஒன்றும் நடக்காது. காரணம், அண்டிப் பிழைப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அகம் புறம் தெரிவதில்லை.


இந்த எல்லைகளைத் தாண்டி, முதலில் புரிந்து கொள்ள வேண்டியது... இலங்கை ஒரு இறையான்மையுள்ள நாடென்பது. இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில், இது குறித்து மற்றவர்கள் பேசினார்களோ இல்லையோ இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் செயலாளர் மிகத் தெளிவாக தனது கருத்தை முன் வைத்திருந்தார்.


இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பானது, சமய உரிமை மறுப்பு என அவர் ஆணித்தரமாக கருத்தினை முன் வைத்திருந்தார். ஆம்! அதையும் பாராட்டி, ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் உள்ள உறவுகள் இதைத்தான் செய்ய முடியும்.


இதற்கிடையில், இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கிறோம், ஒரு முஸ்லிம் நாட்டின் தலைவர் என்கிற அடிப்படையில் அவர் எங்களை சந்தித்தாக வேண்டும் என்று வீறு கொண்டெழுந்த எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் இயங்கும் பாகிஸ்தான் தூதரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். காலி முகத்திடலில் 23ம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அதை மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் வெளிப்படையாகவும் சொன்னார்.


24ம் திகதி, வாங்க சந்திக்கலாம் என்று தூதரகம் அழைத்து விட்டதாகவும் அவரே சொல்லியிருக்கிறார். ஆதலால், ஆம்! சந்தித்தோம் - சந்திப்பு நன்றாக இருந்தது – பேசியிருக்கிறோம், அவர் தன்னால் முடிந்ததை செய்வார் என்று எமது அரசியல்வாதிகளின் அடங்கிப் போன குரல்களைக் கேட்கக் காத்திருந்தேன். அதுவும் இனிதே நிறைவேறியது. இத்துடன், இம்ரான் கானின் வருகை அதன் பின்னணியிலான எதிர்பார்ப்பு மற்றும் ஆதங்கம் முடிவுக்கு வந்துள்ளது.


இருந்தாலும் நாங்கள் ரொம்ப நல்லவர்கள். எப்பேற்பட்ட நல்லவர்கள் என்றால், நாட்டின் பிரதமரின் கூற்றுக்கு மதிப்பளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடாத்துகிறோம். நமது கோசங்களுள் அது பிரதானமானது. ஏனெனில், அவரைத் தவிர மற்றவர்கள் தான் கட்டாய ஜனாஸா எரிப்பை நடாத்திக் கொணடிருக்கிறார்கள் என்பது நாம் சொல்லிச் சந்தோசப்பட முனையும் செய்தி.


அதனால் தான், இம்ரான் கான் வர முன்பாகவே ஜனாதிபதி செயலகத்துக்கு முன் நாங்கள் சென்று வந்து விட்டோம். 2015ல் லண்டன் வந்த மைத்ரி, எலிசபத் மகாராணியாரை சந்திக்கச் சென்ற போது தான் அங்கு கூடி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் தமது உணர்வுகளை எதிர்ப்பலையாக வெளியிட்டது. அதற்கு மைத்ரி 'கை'யசைத்து அதை வரவேற்பாக நினைத்துச் சென்றது தனிக் கதை.


ஆனாலும், நாம் மிகத் தெளிவாக முதல் நாளே எதிர்ப்பைப் பதிவு செய்ததன் ஊடாக அடுத்த நாள் இம்ரான் கானை எமது அரசியல்வாதிகள் சந்திக்கிறார்கள் என்றால் அதை மெச்சிப் புகழ வேண்டும் என்று அரசியல் வியூகிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, கோர்ட் - சூட் போட்டு கூடி மகிழ்பவர்களைக் குறை கூறவும் முடியாது.


ஆனால், ராஜபக்சக்கள் சர்வதேசத்துக்கு வேறு ஒரு செய்தியைச் சொல்கிறார்கள். இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பு என்ற ஒன்றில்லை, அது எதிர்க்கட்சிகளின் அரசியல் கோசமே தவிர, அரசாங்கம் நாட்டுக்கும் மக்களுக்கு எது நல்லதோ அதையே செய்கிறது என்று தெட்டத் தெளிவாகச் சொல்கிறார்கள்.


இம்ரானோடு போட்டோ எடுத்து தம் சமூகக் கடமையை நிறைவேற்றிக் கொள்ளும் வித்தகர்களும் அதற்குத் தான் துணை போகிறார்கள். தவிரவும், பாகிஸ்தானியர்கள் போன்று ஜுப்பாவும் தஸ்பீஹுமாக, உருது மொழி கலந்த தமிழ் பேசுபவர்கள் இன்னும் இதையெல்லாம் பற்றி சிந்திக்கவில்லையென்பதால் அவர்களையும் வைய முடியாது.


இப்பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பில் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் 'தூள் காரன்' என்று வசைபாடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே சண்டையிட்டுக் கொள்ளும் அவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை, மாறாக தூள் காரர்களைத் திரும்பத் திரும்பத் தெரிவு செய்து அங்கே அனுப்பும் அப்பாவி மக்களை நொந்து கொண்டேன்.


அது போலவே நமக்கு நாம் போர்த்திக் கொள்ளும் கணவான் நிலைப்பாடுகளும் அமைந்துள்ளன. ஆதலால், தெளிவான விடயத்துக்கு பல நூறு கோணங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். உள்நாட்டில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்துக்கு சர்வதேச அழுத்தத்தை நாடுவது ஒரு வகை நுட்பமேயன்றி அது தீர்வில்லை.


அவ்வாறு சர்வதேசம் தலையிட்டு இலங்கையின் அரசியலை ஓரிரவில் அடக்கியாளும் வரை சீனாவும் ரஷ்யாவும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதுமில்லை. நடுவில் காத்திருக்கும் இந்தியா, இலங்கையின் அரசியலைப் பிரித்துப் பார்க்கப் போவதுமில்லை. ஒன்றில், இலங்கை தமது மாநிலங்களுள் ஒன்றாக இயங்க வேண்டும் இல்லாவிடின் அந்த நாட்டைத் துண்டாட வேண்டும் என்பதில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.


அந்த மனப்பாங்கை வெளிப்படுத்தியே பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் அமித் ஷா, இலங்கையிலும் நேபாளிலும் தாம் விரும்பும் ஆட்சியமைய வேண்டும் என்று சூளுரைத்துள்ளார். தமிழ்நாடு என்ற மாநிலம் அதுவும் தெற்கில் இல்லையென்றால் இந்நேரம் இலங்கை மிக வேகமாகத் துண்டாடப்பட்டிருக்கும். அதற்கு இந்தியா பூரண அனுசரணை வழங்கியிருக்கும்.


ஆயினும், தமிழ்நாட்டில் உருவாகக் கூடிய எதிர் விளைவுகள் நிமித்தம் இலங்கையில் நீண்ட கால பிரச்சினைகளை விதைப்பதும், அதற்கு நீஷரூற்றி வளர்ப்பதுமே இந்தியாவின் 'தேசிய' வியூகம்;. ஆதலால், மெதுவான நஞ்சு பரவிக் கொண்டிருக்கிறது என்கிற அவதானத்தையும் முன் வைக்கலாம்.


இதையெல்லாம் தாண்டி, கடந்த தடவை போன்று கோட்டை விட்டு விடாமல் நீண்ட காலத்துக்கு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதே ராஜபக்சக்களின் வம்சப் போராட்டமாக மாறியுள்ளது. ஆதலால், அங்கு நல்லவர்களும் கெட்டவர்களும் காட்சியளிக்கிறார்கள். அவர்களுக்கு சப்ரிக்களும் சலாஹுதீன்களும் தேவைப்படுகிறார்கள். தவிரவும், இனாமாக ஹரீஸ்கள், முஷரபுகள், நசீர்கள், தௌபீக்குகள், ரஹ்மான்கள் எல்லாம் கிடைக்கிறார்கள். பிறகென்ன? யாவும் ஜெயமே.


மை தடவப்பட்ட விரல்களை எந்தக் குளத்தில் போட்டுக் கழுவிக் கொள்வது என்பது மக்கள் முன்னுள்ள போராட்டம். அதை இப்போது பேசிப் பயனில்லை. ஏனெனில் அதைப் பற்றி சிந்திக்க இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றன. அதற்குள் இன்றைய கெட்டவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள். அவ்வளவு ஏன?, போக வேண்டியது சென்றடைந்தால் இன்றைய வில்லன்களான மெத்திக்கா மற்றும் சன்ன பெரேராவுக்குக் கூட முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராட்டு விழா நடாத்துவார்கள். அந்த நிகழ்வில் தேசமான்ய பட்டம் வழங்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


சரி, இம்ரான் கான் வந்தார் – போனார். ஒன்றும் நடக்கவில்லை, ஆதலால் திரும்பவும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடாத்துவோமா என்று நாளை மறுநாள் கேட்டுப் பார்த்தால் மக்கள் களைத்திருப்பார்கள். அதற்குள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் ஏதோ ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கும். அந்தத் தீர்மானத்தினூடாக டொலர்கள் முடக்கப் பட்டாலும் சீன கரன்சிக்குப் பஞ்சம் இருக்காது.


இந்தியா 400 மில்லியனைத் திரும்பிக் கேட்டால் சீனா 1500 மில்லியனை வழங்கும் காலம் என்பதால் இலங்கையின் பாடு வெகு கொண்டாட்டம். அடகு வைக்கப்படும் தலைகள் நமதில்லையென்று மக்கள் நினைப்பதால் யாருக்கும் கவலையில்லை. அடுத்த நான்கு வருடங்களில் ஆட்சி மாறினால், முடிந்த ஆட்சியின் ஒப்பந்தங்களுக்கும் மவுசில்லை. 


உணர்வுகள் உறங்கி விட்டால் என்றைக்குமே விடிவில்லை!
Irfan Iqbal
Chief Editor, Sonakar.com


No comments:

Post a Comment