சாயம் வெளுத்த நரிகள்! - sonakar.com

Post Top Ad

Friday 26 February 2021

சாயம் வெளுத்த நரிகள்!

 


சட்டப் பரப்பில் “Vicarious Liability” என்ற ஒரு பகுதி உண்டு. தமிழில் அதனை “பகரப் பொறுப்பு” என்று கூறுவார்கள். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது கடமைப் பரப்பில் விடும் தவறுகளுக்கு அவரது மேலதிகாரியும் பொறுப்புக் கூற வேண்டும். இதுவே “பகரப் பொறுப்பு” எனப்படும்.


ஜனாஸா அடக்கும் உரிமையைப் பெறுவதற்காகத்தான் நாங்கள் 20 ஆம் திருத்தத்திற்குக் கை உயர்த்தினோம் என முஸ்லிம் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறி ஈற்றில் அவர்களின் சாயம் வெளுத்த கதை நாம் அறிந்ததே.


ஜனாசா விவகாரத்தில் சாயம் வெளுத்த நரிகள் பலர் உள்ளனர். முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப்படுத்தும் முஸ்லிம் காங்கிரசின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் (80%) கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வாக்களித்தனர். மக்கள் காங்கிரசின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் முழுமையாகவும் இன்னொருவர் பகுதியளவிலும் வாக்களித்து மகிழ்ந்தனர். இது தவிரவும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹுமானும் அநியாயமாக ஆதரவளித்தார்.


இவர்கள் அத்தனை பேரும் தேர்தல் காலங்களில் அரசினை வலுவாக எதிர்த்தவர்கள். அரச எதிர்ப்புக் கொள்கைகளால் வென்றவர்கள். இறுதியில் மக்களின் தலைகளில் ஏறி அம்மி அரைத்திருக்கிறார்கள். இவர்களின் தலைவர்களான ஹக்கீம், றிஷாட் ஆகியோர் இது தொடர்பில் தப்பிக்கவே முடியாது. ஏனெனில், அவர்களுக்குப் பகரப் பொறுப்பு உண்டு.


மனோ கணேசன் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கையைத்தானும் இவர்கள் எடுக்கவில்லை. அப்படியென்றால் தங்களின் உறுப்பினர்கள் ஆதரவளித்தமை தொடர்பில் நாடகம் நடிக்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது. ஹக்கீம் ஒரு படி மேலே சென்று மன்னிப்பு வழங்கி இருக்கிறார். இங்குதான் எல்லோரினது சாயமும் முழுமையாக வெளுத்திருக்கின்றது.


20 ஆம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்ததோடு ஜனாஸா விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் தமது குரலை பாராளுமன்றில் அலற விட்ட சுமந்திரன், சாணக்கியன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றிக்குரியவர்கள். யுத்தத்தில் ஏராளமான மக்களை இழந்த அவர்களின் வலியில் விளைந்த உணர்வுதான் இன்னொரு சமூக வலியை உணர ஏதுவாக இருந்தது. இப்போது முஸ்லிம் மக்களுக்கும் உரிமை நசுக்கப்படும் வலி தெரியும். ஆகவே, வர்த்தமானி அறிவிப்பில் ஏற்பட்ட களிப்பில் தமிழ் சகோதரர்களோடு தோள் நிற்க மறந்து விடாதீர்கள்.


முஸ்லிம் சமூகம் சார்பில் பாராளுமன்றில் ஜனாஸா விடயம் தொடர்பில் அதிக தடவைகள்  ஆக்ரோஷமாகப் பேசியவர் முஜீபுர் ரஹ்மான் என்றால் மிகையில்லை.


எது எப்படியிருப்பினும், இந்த விவகாரம் முஸ்லிம்களுக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்ததோடு மட்டுமல்லாமல் பல சாயம் வெளுத்துப் போன நரிகளையும் காண்பித்துள்ளது.


இதுவரை எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாசாக்களின் மறுமை வாழ்க்கைக்காகப் பிரார்த்திப்போம். தமிழ் சகோதரர்களுடன் தொடர்ந்தும் உரிமைகளுக்காய்த் தோள் நிற்போம். எல்லா இன சகோதரர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிப்போம். முக்கியமாக, எதிர்காலங்களில், புத்திசாலித்தனமாய் வாக்களிப்போம். 


- அபூ ஸைனப்


No comments:

Post a Comment