தூபி உடைப்பு: முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடும் கவலை! - sonakar.com

Post Top Ad

Sunday 10 January 2021

தூபி உடைப்பு: முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடும் கவலை!

 


யாழ்ப்பாண பல்கலை வளாகத்தில் , முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோர் நினைவாகக் கட்டியெழுப்பப் பட்டிருந்த தூபியை உடைத்தமை தமிழ் சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள மட்டமான செயல் என முஸ்லிம் அரசியல் தலைமைகள் குரல் எழுப்பியுள்ளன.


இது குறித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டு இதனை படு பாதகச் செயல் என தெரிவித்துள்ள அதேவேளை முன்னாள் ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி, இது சிறுபான்மை சமூகங்களை அடக்கியொடுக்குவதற்கான திட்டம் எனவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயல் எனவும் சோனகர்.கொம் இது தொடர்பில் வினவிய போது தெரிவித்திருந்தார்.


இதேவேளை, இது குறித்து கருத்து வெளியிட்ட கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இவ்வாறான செயல்களை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தமிழ் சமூகத்தின்  மீதான திணிப்புகளை சகோதர சமூகமாக நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தார். அத்துடன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இது பற்றி கருத்து வெளியிடுகையில், குறித்த தூபியானது சிவில் யுத்தத்தில் உயிரிழந்தோரின் நினைவாகக் கட்டியெழுப்பப் பட்ட மனிதாபிமான சின்னம் எனவும் அதனை அழிப்பது கொடூரமான செயல் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தற்போது தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், கட்சி உயர் பீடம் இது தொடர்பில் தமிழ் சமூகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக இது குறித்து வினவியபோது தெரிவித்தது. அது போன்று வட - கிழக்கில் இயங்கும் சிவில் அமைப்புகளும் ஒருமித்த குரலில் இவ்விவகாரத்தில் நியாயத்தின் பால் நிற்க வேண்டியது தமது கடமையென தெரிவித்துள்ளமையும், புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கும் மனிதாபிமான அமைப்புகளும் அரசின் தூண்டுதலில் இடம்பெற்ற நினைவுத்தூபி இடிப்புக்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றன.


இந்நிலையில், வட - கிழக்கில் நாளை திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முஸ்லிம் சமூகமும் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. இது குறித்து சோனகர்.கொம்மிடம் கருத்து வெளியிட்ட அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ், நிச்சயமாக இது கண்டிக்கப்பட வேண்டியதும் அதேவேளை தமிழ் சமூகத்தின் இதற்கெதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பு வழங்குவதும் இரு தரப்பு உறவுகளில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கான ஆரம்பமாகவும் அமையும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment