மாலைதீவும்.. மறு கரையில் தவிக்கும் உரிமைப் போராட்டமும் - sonakar.com

Post Top Ad

Friday 18 December 2020

மாலைதீவும்.. மறு கரையில் தவிக்கும் உரிமைப் போராட்டமும்



உணர்ச்சிப் பிளம்பாக வெடிப்பதும் அடங்குவதும் பின் நொந்து போய் மூலையில் கிடப்பதுமாகத் தொடரும் முஸ்லிம் சமூகத்தின் சம கால சூழ்நிலைக்கு எடுத்தவுடன் ஆட்சியாளர்களைக் குறை சொல்வதும் பின் கடந்த 8 வருடங்களாக இனவாதிகளைக் குறை சொல்வதுமாக காலம்; கடந்து கொண்டிருக்கிறது.


எல்லா சோதனைகளும் கடந்து செல்லும் என்பது திண்ணம். ஆனாலும், பல சோதனைகளை நாமே விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். எமது செயலுக்கே எதிர் வினையாற்றி எமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கிறோம். கடந்த காலங்களில் உள்ள இந்த வரலாறு இப்போதும் தொடர்கிறது.


அழும் குழந்தையை அடக்குவதற்கு ஏன் என் பிள்ளைக்கு அடித்தாய்? என்று அது பாட்டில் இருக்கும் நிலத்துக்கும் - சுவருக்கும் அடித்து ஆசுவாசப்படுத்துவது போன்று நீதிமன்றில் அப்படியொரு வரண்ட நிலமில்லையென சொல்லியவர்களிடம், வரண்ட நிலத்தை தேடிப் பாருங்கள் என்று பிரதமர் சொன்னார். ஒரு படி மேலே போன எமது சமூகத்தின் வர்த்தகப் பெருந்தகைகள் வேண்டுமானால் நாங்கள் மாலைதீவுக்குக் கொண்டு சென்று அடக்கட்டுமா? என்று ஐடியா கொடுக்க, அதனைப் பிடித்துக் கொண்ட அரசு, மாலைதீவு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 


சரி, ஒரு பேச்சுக்காக மாலைதீவும் இணங்கி விட்டதென்றே வைத்துக் கொள்வோமே, ஜனாஸாக்களை அங்கே கொண்டு செல்வதெப்படி என்பது அடிப்படைக் கேள்வி. அதற்கும் விடை வைத்துள்ள எங்கள் சமூகம் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கார்கோ விமானம் வாரத்தில் இரு தடவைகள் மாலை தீவு சென்று வருவதாகவும் அதில் கொண்டு செல்லலாம் என்றும் கூறுகிறார்கள். சரி, அப்படித்தான் ஜனாஸாக்களை கொண்டு சென்று அடக்கி விட்டாலும் பிற்காலத்தில் அடக்கப்பட்டவரின் உறவுக்காரர்கள் கபுரடிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் இந்த கார்கோ விமானத்தில் இடம் கிடைக்குமா? அல்லது இந்த வர்த்தகப் பெருந்தகைகளைத் தான் தொடர்பு கொள்ள முடியுமா?


அவர்களும் தவறான எண்ணத்தில் இவ்வாறான ஒரு யோசனையை முன் வைக்கவில்லை. ஏதாவது ஒரு வகையில் ஜனாஸாக்களை அடக்குவதற்கான வழி கிடைத்தால் போதும் என்ற நல்லெண்ணம் இல்லாமலில்லை. ஆனாலும், நாம் யதார்த்தத்துக்குப் புறம்பாக, பல கட்டங்களில் எமது சக்திக்கு மீறிய, எல்லை கடந்த செயற்பாடுகள் ஊடாக நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கிறோம் என்பதே இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது.


இது வெறுமனே தற்போதுள்ள மாலைதீவு விடயத்தின் மீதான வாசிப்பு மாத்திரம் இல்லை. தொடர்ச்சியாக எமது சமூகத்தின் இயக்க நிலை இவ்வாறே இருக்கிறது. முதலில் பெட்டிக்கு 50,000 ரூபா இல்லாமல் சமூகம் தவித்தது, பின் சாம்பலுக்கு 8000 ரூபா சேர்த்துக் கொடுக்க முடியாமல் தத்தளித்தது. நாடு முடங்கிப் போயுள்ள நிலையில் விமல் வீரவன்ச கூறுவது போன்று 5000 ரூபாவில் மாத வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாமல் தவியாய் தவிக்கிறது. இதையெல்லாம் தாண்டி, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனாஸாக்களை கைவிடும் நூதன போராட்டத்தை ஆரம்பித்தால், ஜனாஸாக்களை மாலைதீவுக்கு கொண்டு செல்வோம் - கட்டாருக்கு கொண்டு செல்வோம் என்று இன்னொரு கூட்டம் கிளம்பியுள்ளது.


கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கொழும்பு, தொட்டலங்க பாலமருகே ஹேனமுல்ல கேம்ப் என அறியப்பட்ட குடியிருப்பிலிருந்தவர்களை கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடங்கியிருந்தது அரசு. அவசர அவசரமாக குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. உணர்வுகள் கொந்தளித்தது. இந்நேரத்தில் சமூக முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்றில்; தெரிவிக்கப்பட்ட கருத்து என்னை ஒரு வகையில் ஆச்சரியப்படுத்தியது, இன்னொரு வகையில் ஆழ சிந்திக்க வைத்தது.


அன்று வெளியேற்றப்பட்ட மக்களில் பெருமளவு முஸ்லிம் குடும்பங்கள் இருந்ததால் உணர்வால் கொந்தளித்த ஒரு சமூக ஆர்வலர், உடனடியாக பொரளை பள்ளிவாசலுக்குரிய காணியொன்றை இதற்கென ஒதுக்கி, அவசர அவசரமாக, ஒரு மாதத்திற்குள் மாடி வீடுகளைக் கட்டி முஸ்லிம்களைக் குடியேற்ற வேண்டும் என்றார். அவரது கருத்தில் இருந்த நியாயமான உணர்வுகள் ஒரு பக்கம் இருக்க, அத்தனை சீக்கிரமாக குடியிருப்பு தொடர் மாடியொன்றைக் கட்டியெழுப்பி விட முடியுமா? என்ற கேள்வியும் - யதார்த்தமும் அது சூழ்ந்த ஏனைய சிக்கல்களும் கூட நிதானித்து சிந்திக்கப்பட வேண்டியது.


இன்னொரு சந்தர்ப்பத்தையும் இங்கு நினைவு கூறலாம். அது அளுத்கம வன்முறையின் பின்னரான நிதி மற்றும் உதவிகள் சேகரிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த உணர்வுபூர்வமான கால கட்டம். லண்;டனில் ஒரு பள்ளிவாசலில் இலங்கை முஸ்லிம்கள் கூடி ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது உணர்ச்சிப் பெருக்கில் எழுந்த ஒருவர் இலங்கை அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் பிரத்யேக விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இங்கிலாந்தில் இருந்து நேரடியாக உணவு – மருந்து, உடைகளை அனுப்ப வேண்டும் என்றார். விமானத்தை நேரடியாக தர்கா நகரில் தரையிறக்க வேண்டும் என்ற தொனியில்.


அது கணப் பொழுதில் உருவான உணர்வுக் கொந்தளிப்பு. அதைத் தாண்டி, அந்த விமானத்தை வாடகைக்கு அமர்த்துவதற்கு செலவாகும் பணத்தை உள்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போன்ற அமைப்புக்கு அனுப்பி வைத்தால் மக்கள் பயனடைவார்கள் என நான் அமைதியாக பதிலளித்த போது அதை ஏற்றுக் கொள்வதற்கு அவர் மிகவும் கஷ்டப்பட்டதையும் அவதானித்தேன். 


மேற்சொன்ன மூன்று சந்தர்ப்பங்களிலும் பேசப்படும் விடயங்களுக்கிடையிலான பொதுப் பண்பினை நிதானித்து சிந்திப்பது அவசியமாகும். நமது சக்தி – வரையறை என்பதற்கப்பால் இலங்கையெனும் இறையான்மையுள்ள நாட்டில் நமது சிந்தனைப் போக்கும் அதன் எதிர்விளைவுகளும் என்ற தலைப்பின் கீழ் இவ்வாறான எமது தற்காலிக பாய்ச்சல்கள் ஆழமாக அலசப்பட வேண்டியவை.


கடந்த ஆறு நூற்றாண்டுகளாக எமது இருப்பு மற்றும் உரிமைகளுக்கான போராட்டம் தொடர்கிறது. சிங்கள மன்னர்களுக்கு விசுவாசமாக எல்லையைக் காப்பாற்றி, போர்த்துக்கீயரோடு சண்டையிட்ட நாம் பிற்காலத்தில் போர்த்துக்கீயரும் அந்த மன்னர்களும் சேர்ந்ததனால் தனிமைப் படுத்தப்பட்டுப் பழி வாங்கப் பட்டோம். அவர்கள் எமது இலக்கியம் மற்றும் சமூகப் பண்புகளை சிதைக்கலானார்கள். 


அங்கிருந்து ஒரு நூற்றாண்டின் பின், பலம் பொருந்திய போர்த்துக்கீயருடன் நல்லுறவுகளை வளர்த்துக் கொண்டிருந்த எமது முன்னோர்கள் அவர்களோடு இணைந்து ஒல்லாந்தருக்கு எதிரிகளானோம். போர்த்துக்கீயரை விட பலசாலிகளான ஒல்லாந்தர் நாட்டைப் பிடித்ததும் அப்போதும் நாம் பழி வாங்கப்பட்டோம். எமது சமூகத்தவருக்கு காணிகளை விற்கத் தடை விதிக்கப்பட்டது. முஸ்லிம் வர்த்தகர்கள் கடல் தாண்டிச் செல்லவும் உள் நாட்டிலும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லவும் கூட தடை விதிக்கப்பட்டது.


அந்தக் காலத்தையும் கடந்து வந்த எமது முன்னோர், 18ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் ஒல்லாந்தரின் இராணுவத்தில் 'சோனக' படையணியெனும் தனிப் பிரிவாக நாட்டுக்கு சேவை செய்தனர். எனினும், ஒல்லாந்தரை விட பலசாலிகளான ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றிய போது மீண்டும் அவர்களை எதிர்த்த காரணத்தினால் ஆங்கிலேயருக்கு அடையாளந் தெரிந்த எம் சமூகத்தவர் சிலர் தேசத் துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டார்கள். 


2015ல் ஆட்சிக்கு வந்த மைத்ரிபால சிறிசேன 19ம்; நூற்றாண்டில் ஆங்கிலேயரால் தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட சிங்கள தலைவர்கள் சிலரை தேசிய வீரர்களாக அறிவித்தார். கடந்த கால வரலாற்றை சரி செய்வதிலும் சிங்கள தலைவர்கள் காட்டிய அக்கறையின் வெளிப்பாடாக அது இருக்க, எமது சமூகத்தில் பெருமபாலானவர்களுக்கு அது என்னவென்றே புரியவில்லை. விபரம் தெரிந்த சில எழுத்தாளர்கள் மாத்திரம் அக்காலத்தில் ஆகக்குறைந்தது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து முஸ்லிம்களும் தேசத்துரோகப் பட்டம் சூட்டப்பட்டவர் பட்டியலில் இருந்தார்கள் என்ற தகவலை சமூக வலைத்தளங்களில் பிரதி செய்து கொண்டார்கள். நவமணியிலும் அது பிரசுரமாகியிருந்தது. ஏதோ, வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் அதை வாசித்ததோடு மறந்திருப்பார்கள்.


ஆங்கிலேயர், ஆரம்பம் தொட்டே சிறுபான்மை சமூகங்களுடன் நல்லுறவை வளர்த்;துக் கொண்டதுடன் தமது பிரித்தாளும் தந்திரத்தை சிறப்பாக அமுல் படுத்தியிருந்தனர். அவர்களது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையில் தமது தனித்துவமான உரிமைகள் மற்றும் சலுகைகளை சட்ட ரீதியாகப் பாதுகாக்கவும் செய்தது. அதனால் உச்ச கட்ட சமூகப் போராட்டங்கள் நடந்தது ஒரு புறமிருக்க, தமது சமூகம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தற்காலத்தில் போன்றே பல உணர்வுக் கொந்தளிப்புகளும் இடம்பெற்றிருந்தன.


அதன் பின் வந்த காலத்தில், தேசிய விடுதலையில் ஆழமாக பங்காற்றிய எமது முன்னோர், அடுத்து வந்த கட்சி அரசியல் பிரிவினையிலும் அதேயளவு பிரிந்து நின்று பங்காற்றினர். பின் அண்மைக்காலத்தில் மஹிந்தவின் பக்கம் - எதிர்ப்பக்கம் என்ற போராட்டத்திலும் சிக்குண்டு யாரை நம்புவதால் அல்லது யாருடன் சேர்ந்திருப்பதால் எந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வைக் காணலாம் என்று அடையாளங் காண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.


நீதியமைச்சராக இருக்கும் அலி சப்ரி, மிக நியாயமான கேள்விகளை 'வெளியில்' முன் வைக்கிறார். மாலைதீவில் அடக்க முடியுமென்றால் ஏன் இலங்கையில் அடக்க முடியாது? என்று ஊடக நேர்காணல்களில் கேட்கிறார். அத்துடன், இன்றைய சூழ்நிலை முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத போக்கை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று எச்சரிக்கிறார். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்கள் போதுமானது அதற்கேற்ப இலங்கை தீர்மானிக்க வேண்டும் என்றும் வெளியில் சொல்கிறார். ஆனால், இவற்றையெல்லாம் சொல்ல வேண்டிவர்களிடம் சொல்கிறாரா? என்ற கேள்வியெழுகிறது.


ஏனெனில், அவர் கூறும் அதே நியாயயத்தை எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் பேசினால், இந்த விடயத்தை இனவாதமாக்காதீர்கள், அரசாங்கம் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியாகத் தான் முடிவெடுத்தார்கள் என்றும் பதிலளிக்கிறார். 


இலங்கை அரசியலில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக சூழ்நிலைக் கைதிகளாக இருக்கிறார்கள். முஸ்லிம் சிந்தனைப் போக்கு பல முனைகளில் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், இதிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்கிறோம், எதிர்காலத்தில் என்ன மாற்றத்தைக் காணப் போகிறோம் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. ஏனெனில், எமது சமூக இயக்க முறைமை ஒரே வடிவத்தைக் கொண்டது என்பதால் அது யூகிக்கக்கூடியது. அதாவது, பிறராலும் யூகிக்கக் கூடியது.


ஹேனமுல்ல பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீளவும் மாடி வீடுகளைக் கட்டி குடியமர்த்தப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனாலும், நமது அன்றைய உணர்ச்சிக் கொந்தளிப்பு வேறு வகையில் இருந்தது. உடனடியாக காணி வேண்டும், மாடி வீடு கட்ட வேண்டும் என்று பேசப்பட்டது. ஆம்! பேசப்பட்டது, அத்தோடு அப்பேச்சு கைவிடப்பட்ட அதேவேளை அரசாங்கம் வீடுகளைக் கட்டிய பின் வெளியேற்றப்பட்டவர்களுள், குறித்த பகுதியில் குடியிருப்பதற்கான பதிவுடன் இருந்தவர்கள் மீளக் குடியேற்றப்பட்டு விட்டார்கள். இப்போது அதைப் பற்றிப் பேச்சு இல்லை. ஆனாலும், நமது அன்றைய உணர்வுக் கொந்தளிப்பைப் பார்த்தவர்களுக்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை இத்தனை துரிதமாக செய்யக் கூடிய பலம் பொருந்திய சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்ற தோற்றப்பாடே இருந்திருக்கும்.


இன்றும், கொழும்பின் பல பகுதிகளில் அன்றாட வாழ்க்கை, அடுத்த வேளை உணவுக்கும் மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கையில் எங்களிடம் விமானம் இருக்கிறது, மாலை தீவுக்குக் கொண்டு செல்கிறோம் என்ற எம் வர்த்தகப் பெருந்தகைகளின் பீடிகை மீண்டும் அதே வட்டத்திற்குள் தான் செல்கிறது. சர்வதேச அபகீர்த்தியென்ற விடயத்தைப் பொருட்படுத்தாத ஒரு அரசு இதனால் வெட்கப்படப் போவதில்லை, மாறாக தொலைந்து போகட்டும் என்று விட்டு விடுவார்கள். ஈற்றில், தூர நோக்கற்ற இவ்வாறான திட்டங்களால் சமூக உரிமைகள் இன்னும் மறுக்கப்பட்டு இந்நிலத்தோடு எமக்கிருக்கும் தொடர்புகளும் அறுந்து போகும். 


முஸ்லிம்கள் என்ற அடையாளம் அல்லது அரபு – உருதுப் பெயர்கள் இருப்பதனால் முஸ்லிம் நாடுகளுக்கு எம் மீது அக்கறையிருந்தாலும் அதற்கான வரையறை உண்டு, அது வெறும் எழுத்து மூலமான கோரிக்கையும் மென்மையான கண்டனமும் மாத்திரமே என்பது உலகறிந்த பரகசியம். ஆக, உள்நாட்டில் தோன்றும் எல்லா பிரச்சினைகளுக்கும் உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும். இன்று ஜனாஸாக்களை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று அடக்க இடம் கிடைக்கலாம், நாளை உயிரோடு இருப்பவர்களை விரட்டியடித்தால் எந்த நாடு பொறுப்பேற்கும்? 


ரிஸ்வி முப்தி அண்மையில் சொன்ன 'தபன்' என்ற வார்த்தையையே பொது மக்கள் அதுதான் முதற்தடவையாக அறிந்து கொண்டார்கள். அதற்கிடையில் தமிழையும் - சிங்களத்தையும் கூடிப் போனால் ஆங்கிலத்தையும் பேசும் முஸ்லிம் சமூகத்தை ஒட்டு மொத்தமாக எந்த நாடு ஏற்றுக் கொள்ளும்? அவ்வளவு ஏன் எம்மில் ஒரு பகுதியினர் சரளமாக உருது மற்றும் ஹிந்தியும் பேசுகிறார்கள். அதற்காக இந்தியாவோ – பாகிஸ்தானோ ஏற்றுக் கொள்ளுமா? அவ்வளவு ஏன் உள்நாட்டில் வடபுலத்திலிருந்து ஏனைய பகுதிகளில் குடியேறிவர்களின் நிலை தான் என்ன? 


நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் எமது பிரச்சினைகளுக்கான தீர்வு அந்த மண்ணில் தான் காணப்பட வேண்டுமேயொழிய அங்கிருந்து அறுந்து செல்வது வசதி படைத்த சிறு தொகையினருக்கு போன்று எல்லோருக்கும் சாத்தியமானதன்று.


சரி, மாலைதீவு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையறிய அங்குள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கருத்தறிவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது, முதலில் அவர்களும் உணர்வு ரீதியாகவே இவ்விடயத்தை அணுகிய போதும், பின்னர் ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்த இரு அரசியல்வாதிகளே இந்த 'டீலை' முன்னெடுக்க தலைப்பட்டதனால் இதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருப்பதை உணர்ந்து, இதற்குப் பகரமாக இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம், அவர்கள் உடலங்களை அங்கேயே அடக்குவதற்கு அழுத்தம் கொடுப்போம் என தீர்மானித்து இயங்குவதாக தெரிவித்தனர். ஊடகங்களும் பாரிய அளவில் ஒத்துழைப்பு வழங்கி வருவதால் அங்கும் இது அரசியல் சிக்கலாக உருவெடுத்துள்ளது.


இப்படியிருக்க, அவ்வப்போது ஒரு தரப்பை நம்பி மறு தரப்பால் அநீதிக்குட்படுத்தப்பட்டாலும் தொடர்ந்தும் போராடி வரும் சமூகத்தை முழுமையாக வேரறுப்பதற்கான முயற்சி வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும், தூர நோக்கற்றதுமாகும்.












- Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment