முன்கர் - நக்கீர் வந்து கேள்வி கேட்பார்கள்: சபையில் நசீர்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 November 2020

முன்கர் - நக்கீர் வந்து கேள்வி கேட்பார்கள்: சபையில் நசீர்!கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதனால், முஸ்லிம் சமூகம் பெரும் வேதனையில்  வாழ்வதாக, பாராளுமன்ற உறுப்பினர்  ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.


வரவு செயலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில், இன்று (24) செவ்வாய்க்கிழமை  உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:


முஸ்லிம்கள் தற்போது மிகவும் வேதனையான ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது எங்களுக்கு பெரும் வேதனையைத் தருகின்றது. 


பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இறப்பு இருக்கின்றது. இஸ்லாமியர்களாகிய நாம் அடக்கம் செய்வதையே கட்டாயக் கடமையாகக் கொண்டவர்கள். அந்த வகையில், எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது இந்த அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும்.  


முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், வானவர்களாகிய முன்கர், நக்கீர் எனும் இரு  மலக்குகள் அங்கு வந்து கேள்வி கணக்குக் கேட்பர்.  உலகிலே நாம் செய்த நன்மை,  தீமைகள் பற்றி அவர்கள் கேள்விக்குட்படுத்துவர். இந்த விடயத்தை முஸ்லிம்களாகிய  நாங்கள் உறுதியாக நம்புகின்றவர்கள். 


எனவேதான், எமது கோரிக்கையை அரசாங்கம் கருணையுடனும் மனச்சாட்சியுடனும் பரிசீலித்து அடக்கம் செய்வதற்கான அனுமதியை உடனே தர வேண்டும்.  எமக்கான இந்த உரிமையை நீங்கள் பெற்றுத்தர வேண்டுமென தயவாக வேண்டுகின்றேன்.


பலஸ்தீனப் போராட்டத்தில் மிகவும் அதிகம் அதிகமாகக் குரல் கொடுத்தவரும்,  நீண்ட கால அரசியல் பாரம்பரியங்களைக் கொண்டவருமான பிரதமர்,  இந்த விடயத்தில் அதீத அக்கறை காட்ட வேண்டும்.


அது மாத்திரமின்றி, முஸ்லிம்கள் ஜும்ஆத்  தொழுகையின் போது பள்ளிவாசல்களில் ஆகக்குறைந்தது 40 பேர் வரையில் கலந்து கொள்வதற்கான அனுமதியையும் பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகள் பெற்றுத் தர வேண்டும். இந்த உயர் சபையில் கூட 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூட முடியுமென்றால், 40 பேர் வரையில் சுகாதார முறைப்படி ஒன்று கூடித் தொழுவதற்கு அனுமதி தர வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றில்  கோரிக்கை விடுத்தார்.


- ஐ. ஏ. காதிர் கான்

1 comment:

saaar said...

உடலை எரித்தாலும் அல்லாஹ்வால் எழுப்ப முடியும் என்று இந்த மாங்கா மடையனுக்கு சொல்லுங்கள்.... சமூகத்தை விற்பதற்காக நீ தயாராக இரு முன்கர் நகரின் கேள்விக்கு...

Post a Comment