கால மாற்றமும் கடந்து வந்த பாதையும்..! - sonakar.com

Post Top Ad

Friday 21 August 2020

கால மாற்றமும் கடந்து வந்த பாதையும்..!

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மாற்றி யோசிக்கப் பழக வேண்டும் என்று சமூகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல தரப்புகள் முயற்சி செய்து விட்டன. அதன் தொடர்ச்சியில் தற்போது 21ம் நூற்றாண்டில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் ராஜபக்ச சகோதரர்கள்.


ஒரு வகையில் முஸ்லிம் தனித்துவ அரசியலின் விளைச்சலை ராஜபக்ச சகோதரர்கள் சரியாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்றாலும் மிகையில்லை. காலத்துக்குக் காலம் மனித சமூகம் மாற்று சிந்தனைகளை வரவேற்று உள்வாங்குவது உலக இயல்பாகவே இருந்து வருகிறது. எனினும், அபிவிருத்தியடைந்து வரும் தெற்காசிய நாடுகளில் அதன் வேகம் சற்றுக் குறைவானதே.


இலங்கையைப் பொறுத்தவரை தேசத்தின் அரசியலை பிராந்தியங்களுக்குள் முடக்கி, அதனூடாக சமூக மற்றும் இனப்பிளவுகளை உருவாக்கி அதன் பயனை அனுபவிக்கும் வழக்கத்தையே தென்பகுதி ஆட்சியாளர்கள் கொண்டிருந்தனர். அதனையே தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட பிராந்திய அரசியல் தலைமைகள் தாம் சார்ந்த சமூகத்தை உணர்வூட்டித் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொண்டனர்.


2010 மஹிந்த ராஜபக்ச அரசு, 2015 ரணில் - மைத்ரி கூட்டரசும் இதற்கு விதிவிலக்கில்லை. எனவே, சிறுபான்மை சமூக அரசியல் அதுவரையிலும் கூட கொளுத்த இலாபம் பார்த்து வயிறு வளர்த்துக் கொண்டது. இழக்கப்பட்ட சமவுரிமை மற்றும் சுய கௌரவத்தைக் காப்பாற்றிய ஒற்றைச் சந்தர்ப்பத்தைக் கூட முன் வைக்க முடியாத கசப்பான கடந்த காலம் என்பதால் இதனை முற்று முழுதாக ஆமோதித்தாக வேண்டும்.


2012ல் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விடப்பட்ட இன வன்முறை, வன் கருத்துக்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தும் வகையிலான அம்பலப்படுத்தல்கள் யாவும் ஒரு இலக்கைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. அதற்கு முஸ்லிம் சமூகத்தின் பிறிதொரு பிரிவும் கட்டாயம் துணை போனது. அது மாத்திரமன்றி, உட்சமூகப் பின்னல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பியோ விரும்பாமலோ உளவாளிகளாகவும் மாறிச் செயற்பட்டார்கள்.


அதன் பாரதூரம் பற்றி மிகச் சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் சில வருடங்களுக்கு முன் லண்டனில் தனக்கு ஏற்பட்ட சமூக அநீதியொன்றுக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நீதி கிடைக்கவில்லையென்ற ஆத்திரத்தில் கொழும்பு சென்று, ஞானசாரவைத் தேடிச் சென்று அதனை ஒரு இளைஞன் முறையிட்ட சம்பவம் இடம்பெற்றது.


முறையிட்ட பின்னர் மனம் கேளாத நிலையில், தன் நிலை விளக்கமளிப்பதற்காக அதனை என்னிடம் அவர் கூறிய போது, முன்னரே தெரிவித்திருக்கலாமே என்று கேட்டேன். அதற்கும் தமது ஊர் சார்ந்த விடயம் என்பதாகவும் மேலதிகமாக சமூக கட்டமைப்பு, பள்ளிவாசல் நிர்வாகம் நடந்து கொண்ட விதத்தினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்திருந்தார்.


இது போன்று உள்நாட்டிலும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த அளவு தூரம் சமூகத்தின் உட்கட்டமைப்பு மிகவும் பலவீனமானது. முஸ்லிம்கள் என்ற அடையாளத்தின் அடிப்படை எது என்பதிலும் முரண்பாடுகள் தோன்றி, நவீன காலத்தில் மார்க்கம் எவ்வாறு பின்பற்றப்பட வேண்டும்? யாரைப் பின்பற்ற வேண்டும்? எப்படித் தொழ வேண்டும்? யாருடைய போதனைகளை கேட்க வேண்டும்? எந்தப் பள்ளிவாசலில் தொழ வேண்டும்? என பல நூறு முரண்பாடுகள்.


காலம் நவீனப்பட்டுள்ளது, முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் பல அடிப்படை மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சிந்தனையை 2005 மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே 'எத்தி' வைத்த பெருந்தகைகளை மறந்து விட்டு 2020ல் அதனை அலசவும் முடியாது.


முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தில் திருத்தம் வந்தாக வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக்காலத்திலேயே முடிவாகியிருந்தது. இதற்கேற்ப, முஸ்லிம் சமூகத்தைப் புண்படுத்தாது, அதற்கென 19 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து செயற்படவும் வழியமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அந்தக் குழுவிலிருந்து மூவர் இயற்கையெய்தியும் கூட இறுதி வரை அக்குழுவினால் தீர்க்கமான, ஒற்றுமையான முடிவொன்றை மேற்கொள்ளவோ அல்லது இணக்கப்பாட்டுக்கு வரவோ முடியாது போனது.


குழுவில் பங்கேற்ற நபர்களிடமிருந்த மார்க்கம் தொடர்பான பார்வை மற்றும் தெளிவில் இருந்த மாற்றுப் பார்வைகள் அந்த இழுபறிக்குப் பங்களித்திருந்தது. நவீனமயப்படல் மற்றும் பாரம்பரியத்தைப் பேணல் என்ற இரு விடயங்களுக்குள் சிறுபான்மையினராக நாடொன்றில் வாழும் சமூகத்திற்கு, யதார்த்தமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க அக்குழு தவறியது.


இன்று அதே விடயத்தை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு, நீதியமைச்சர் என்ற பதவியும் வழங்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலி – சப்ரி பேசும் போது அது கவனிக்கப்படுகிறது. அது மாத்திரமன்றி, அதிகாரத்தில் இருக்கும் அவர் பேசியதன் பின்னணியில் சில காலங்கள் வரை குறித்த குழுவின் முன்னாள் தலைவராக இருந்த நீதிபதி சலீம் மர்சுப் முன் வைத்த சம கருத்துக்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சமூக வலைத்தள இளைஞர்கள் இன்று அலிசப்ரியின் கருத்துக்களை நியாயம் என்று ஆமோதிப்பதையும் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது.


இது, அதிகாரத்தில் இருந்து பேசுவதற்கும் ஒருவர் அதிகாரமின்றி பேசுவதற்கும் அது மக்கள் மத்தியில் எடுபடும் விதத்தினையும் எடுத்துக் காட்டுகிறது. அந்த அளவு அதிகாரத்துக்கு மதிப்பு வழங்கம் சமூகமாக இலங்கை முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட்டமைக்கு யாரைக் குறை சொல்லப் போகிறோம்? எல்லோரும் நிச்சயமாக அரசியல்வாதிகளை கை நீட்டுவதையே விரும்புவார்கள். ஆனாலும், சமூகம் அதன் உண்மை நிலையை எடை போடுவதை விட்டு தொடர்ந்து ஓடி ஒளிய முடியாது.


சுய விமர்சனம் செய்து கொள்ள எப்போதும் தயங்கி வந்த முஸ்லிம் சமூகம் இனி நாட்டில் எவ்வாறு வாழ வேண்டும்? அவர்கள் எவ்வாறு சிந்திக்கப் பழக வேண்டும்? என்பதை இந்த வழியில் திணிப்பதுதான் முடிவென்று ராஜபக்சக்கள் தீர்மானித்ததற்கும் நாமே காரணமாகிறோம். இல்லையென்றால் 11 வருடங்களாக ஏலவே பல தடவைகள் சீர்திருத்தத்துக்குள்ளான முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டம் தொடர்பில் நமக்குள் ஒரு இணக்கப்பாடு வந்திருக்கும்.


1886ன் இலங்கையின் விவாகப் பதிவுச் சட்டம் பிரிவு 8 மற்றும் 1888ன் பிரிவு 2 களில் தேவையான மாற்றத்தைக் கொண்டு வருவதன் ஊடாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் திருமணங்களை பதிவு செய்வதற்கான தேவையை வலியுறுத்தி அதற்கான ஆவன செய்தவர் இலங்கை சட்டசபையில் அங்கம் வகித்த முதலாவது முஸ்லிம் பிரதிநிதியான எம்.சி அப்துல் ரஹ்மானாவார். அதுவரை முஸ்லிம் விவாகங்களுக்கு பள்ளிவாசல்களில் கதீபினால் வழங்கப்படும் கடிதம் ஒன்றே அத்தாட்சியாக இருந்தது. அதனூடாக அக்காலத்தில் சமூகத்தில் நேர்ந்த பாரிய சிக்கல்களுக்குப் பகரமாக முஸ்லிம் விவாகங்களையும் பதிந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது.


அப்போதிருந்த சமூகத்தின் ஒரு பகுதியினர் அது அரேபியாவில் 1400 வருடங்களுக்கு முன்னர் இருக்காத வழக்கம் என வாதிடத்தவறவில்லை. எனினும், இன்றளவில் நிரம்பி வழியும் காதி நீதிமன்றங்களையும் அங்கு பேசப்படும் பிரச்சினைகளையும் காது கொடுத்துக் கேட்பவர்கள் எம்.சி அப்துல் ரஹ்மான் அன்று மேற்கொண்ட பணியின் மகத்துவத்தை உணர்கிறார்கள், பாராட்டவும் செய்கிறார்கள்.


ஆனாலும், வித்தியாசம் என்னவென்றால் அக்காலத்தில் சமூக முக்கியஸ்தர்கள் தமது சமூகத்துக்குத் தேவையான மாற்றங்கள், முன்னேற்றங்களைத் தாமாகத் திட்டமிட்டு முன் நின்று செயற்படுத்தினார்கள். முஸ்லிம்கள் 'உலக' கல்வியைக் கற்கக் கூடாது என பாரிய எதிர்ப்பிருந்த அந்த 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே கொழும்பில் முஸ்லிம் பெண்களுக்கான பாடசாலையொன்றை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துக்கு ஆட்சியாளர்களின் பங்களிப்பையும் பெற்றிருந்தார் எம்.சி அப்துல் ரஹ்மான். அந்த அளவுக்கு தூர நோக்குடன் அவர்கள் செயற்பட்டார்கள்.


தன்நலம் பாராது, வாப்பச்சி மரிக்கார் மற்றும் பேரறிஞர் சித்திலெப்பை போன்றவர்கள் தமது கால – நேரத்தையும் உழைப்பையும் அதற்காக முதலிட்டார்கள். அங்கிருந்து நூற்றாண்டு கடந்து வந்து விட்ட இன்றைய சமூகத்துக்கு அவ்வாறான அடிப்படை பிரச்சினைகள் இல்லவே இல்லை. ஆனால், ஆபத்தான பல பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகிறது.


அடிப்படையில் முஸ்லிம் என்ற அடையாளமே இன்று முஸ்லிம்களால் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. யார் உண்மையான முஸ்லிம்? சூப்பர் முஸ்லிம்? சூபி முஸ்லிம்? ஏகத்துவ முஸ்லிம்? கலீபத்தை ஆதரிக்கும் முஸ்லிம்? தப்லீக்கை பின்பற்றும் முஸ்லிம்? பாரம்பரிய முஸ்லிம் என ஒவ்வொரு தனி நபரும் அடுத்தவருக்கு எதிராகக் கருத்தைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


உலகுக்கே பொது மறையான அல்-குர்ஆனில் கூட தமக்கு சாதக – பாதகமான வசனங்கள் இருப்பதாக இதன் போது தெரிவித்துக் கொள்கின்றனர். அல்-குர்ஆனில்  பிறிதொரு தரப்புக்கு  பாதகமான வசனம் இருக்குமானால் அவர்கள் பின்பற்றும் வழி இஸ்லாத்துக்கு முரணான  வழியென்பது அடிப்படை நம்பிக்கை. ஆயினும், அதுவும் இன்று வாதப்பொருளாகியுள்ளது.


ஹதீஸ் முரண்பாடுகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஒவ்வொரு ஹதீசுக்கும் இன்று பரவலாக மாற்று ஹதீஸ் முன் வைக்கப்பட்டு பேசப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க, நாட்டின் 10 வீதத்துக்கும் குறைவான சனத்தொகை கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை இலங்கை தேசத்தின் சட்டத்துக்குட்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு பௌத்த உயர் பீடங்கள் போட்ட திட்டத்தை குறை காணும் தகுதியை; நாம் இழந்திருக்கிறோம்.


இந்நிலையில், அதனை அமுல்படுத்துவதற்காகவே மாற்று சிந்தனை கொண்டவர்கள் அதுவும் ஜனரஞ்சக அரசியலோடு எதுவித தொடர்புமில்லாதவர்களை பதவியில் அமர்த்தி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற ராஜபக்சக்கள் போட்டிருக்கும் அரசியல் திட்டத்தை ஆராயக் கூட இந்த சமூகம் முன் வருமா என்பது கேள்விக்குறியே.


நீதியமைச்சர் என்ற பதவியை விட நீதியமைச்சரை முஸ்லிம்களின் தேசிய தலைமையாக்க வேண்டும் என்பதில் ஆட்சியாளர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். வழக்கம் போலவே அவருக்கு பொன்னாடை போர்த்துவதும் அவரை வைத்து துஆ கேட்பதுமாக தமது வாடிக்கையான அரசியலை சமூகம் செய்து கொண்டிருந்தாலும் நீதியமைச்சர் அலி சப்ரி அதனைத் தாண்டி சிந்திக்கக் கூடியவர் என்பதை உறுதிபட தெரிவிக்க முடியும். அதிலும் அவர் தனி நபர் இல்லை, அவர் போன்று சிந்திக்கும் பெரும் பகுதியினர் இதுவரை பழிச்சொற்களுக்குப் பயந்து அமைதியாக இருந்து வந்துள்ளனர்.


ரவுப் ஹக்கீம் நீதியமைச்சராக இருக்கும் போதே முன்னர் இங்கு குறிப்பிடப்பட்ட சீர் திருத்தக் குழு இயங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும், அது குறித்து ஹக்கீம் எந்த அக்கறையும் காட்டவில்லை. ஆயினும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதியமைச்சர் எடுத்த எடுப்பிலேயே மாற்றம் வந்தே தீரும் என தீர்க்கமாக கருத்து வெளியிட்டுள்ளார். இது இருவருக்குமிடையிலான அரசியல் தர – தள வேறுபாடுகளை எடுத்தியம்புகிறது. எனவே, இனிமேல் மக்களும் மாற்றி யோசிக்கப் பழகியாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனத் தெளிவாகக் கூறலாம்.


இதுவரை தாம் போற்றி வந்த தலைவர்கள் இப்போது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற ஏக்கம் மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் இணக்கப்பாட்டு அரசியல், சரணாகதி அரசியல் என்ற நிலைகளுக்கப்பால் இம்முறை மக்கள் துணிந்தே வாக்களித்துள்ளார்கள். எனவே, அவர்கள் தேசிய அரசியலுக்குத் தயாராகி விட்டார்கள். தாம் வாக்களிக்கும் தலைவர்களை தேவையில்லையென்று பிரகடனப்படுத்தியே பெரமுன தேர்தல் பிரச்சாரம் செய்தது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.


ஆயினும் கூட பாய்ச்சலுக்குப் பூனைகள் இடம் தேடிக்கொண்டிருக்கின்றன. அது மக்களுக்குச் சேவை செய்வதற்கன்று, தமது முதலீட்டைத் திருப்பிப் பெற என்பதும் ஒன்றும் இரகசியமில்லை. எனவே, இப்போது தெளிவாக சிந்திப்பதும் செயலாற்றுவதும் மக்களுக்கே கடமையாகிறது. இப்போதைய ஆட்சியாளர்கள் வெற்றியாளர்களாக இருப்பதால் அவர்கள் கை காட்டுபவர்களை முஸ்லி;ம்கள் தம் தேசியத் தலைமையாக ஏற்றுக் கொள்ள வேண்;டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால், சொல் - செயலுக்கப்பாலான சிந்தனை மாற்றத்துக்கு சமூகம் தயாராகியாக வேண்டும்.


சுய கௌரவம், சமவுரிமையுடன் தேசத்தின் வளர்ச்சியில் பங்காற்றும் சிறப்பான சமூகமாக நாம் மீண்டும் நம்மை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய கால கட்டம் மலர்ந்திருக்கிறது எனும் அடிப்படையில் கடந்த காலத்தில் பழகிய அரசியல் கலாச்சாரத்தைக் கை விட்டு புதிய வழிமுறைகளை சிந்திப்பதில் தவறில்லை.


பௌத்த பேரினவாதம் என்ற அடிப்படையை நாட்டின் அபிவிருத்தியின் பாலான முன்மாதிரி அரசியலாக ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்ளும் போது நாம் தாமதித்து இணைந்து கொள்ளாது சம காலத்தில் சம வேகத்தில் பயணித்தாகவும் வேண்டும். அது போலவே சமூக உரிமைகளை, பண்டைய காலந்தொட்டு நாம் அனுபவித்து வந்த சலுகைகளில் அவசியமானவற்றைத் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்வதில் நமக்குள் தெளிவும் - அது தொடர்பிலான செயற்பாட்டு வேகமும் திறனும் கூட கட்டாயம் அவசியப்படுகிறது.


அதன் வழியில் சமூகத்தை சிந்திக்க வைத்து செயலாற்ற வைக்கக் கூடிய தலைமைகளை இருக்கும் சமூகத்தில் இருந்து கண்டு பிடித்தாலும் சரி, இனிமேல் உருவாக்கினாலும் சரி, காலத்தின் கட்டாயத்தையும் மாற்றங்களையும் உணர்ந்து எதிர்காலத்தைத் திட்டமிட்டுச் செயலாற்றும் தேசப்பற்றுள்ள சமூகமாக நாமும் நம்மை நிலைப்படுத்தியாக வேண்டும்.

jTScYcS

-Irfan Iqbal

Chief Editor, Sonakar.com

1 comment:

Unknown said...

Why not try your best to summon all these leaders to a common platform and discuss a Common Strategy to face the challenges facing the Muslims ?

Post a Comment