தேர்தலில் சிக்கியுள்ள இராம - இராவணன்..! - sonakar.com

Post Top Ad

Friday, 17 July 2020

தேர்தலில் சிக்கியுள்ள இராம - இராவணன்..!


தேர்தல் வந்தாலே பல நகைச்சுவைகள் அரங்கேறும். தேர்தல் பிரச்சாரக் களம் சூடு பிடிக்கும் போது பல்வேறு வீராப்புகள், பொய் வாக்குறுதிகள், கடந்த கால பொய்கள் மீதான மழுப்பல்கள், சத்தியங்கள் என அவை பல வகை.

அது தவிரவும் சில கிறுக்குத் தனமான, குதர்க்கமான பேச்சுக்களும் கூட அவ்வப்போது பேசு பொருளாகும். மிக மோசமான தனி மனித தாக்குதல்கள் இடம்பெற்றால் கூட அவை தேர்தலோடு மறைந்து போகும். ஆனால், சில குதர்க்கப் பேச்சுக்கள் நிரந்தரமான வடுக்களை உருவாக்கும்.

விஜித் விஜேமுனி சொய்சா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற தற்கால பேச்சாளர்கள் போக கடந்த காலங்களில் எலிக் அலுவிஹார – ஜனக பண்டார தென்னகோன் தேர்தல் பிரச்சார மோதல்கள் தனி ரகம். முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படியான பேச்சுப் போட்டி பாரிய அளவில் இல்லையென்றாலும் கடந்த கால தேர்தல் மேடைகளில் அந்த இடத்தை நிரப்புவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கடும் பிரயத்தனம் எடுத்து வந்திருந்தார்.

இம்முறை தேர்தலில் ஹக்கீம் - ரிசாத் கட்சிகளிடையே பரஸ்பரம் நல்லுறவு நிலவுவதால் அதற்கான வாய்ப்புமில்லை. முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை கிழக்கிலேயே கடுமையான சங்கீதக் கதிரைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்குள் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது இன்னும் மூன்று வாரங்களில் தெரிந்து விடப் போகிறது.

ஆளப் போகிற கட்சியென நம்பப்படுகின்ற பெரமுனவுக்கு எதிராக நிற்பவர்களுக்கு மக்களிடம் பேசுவதற்கும், சிந்திக்க வைப்பதற்கும் நிறையவே இருக்கிறது. அதையே அண்மைக்கால பிரச்சாரங்களில் அவர்கள் செய்தும் வருகிறார்கள். பெரமுனவுக்கு ஆதரவாக நிற்பது மண்ணுக்குள் தலையை அழுத்தி உலகம் இருண்டிருப்பதாகக் கூறுவது போன்றது என்பதால் அந்தக் களம் மிகவும் கடுமையாக இருக்கிறது.

மஹிந்த ராஜபக்சவின் பெரமுனவைப் பொறுத்தவரையில் தனிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைத்தே தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுகிறது. ஆயினும், அது மாத்திரம் ஆட்சியமைக்கும் அளவுக்கான பெரும்பான்மையைப் பெற உதவப் போவதில்லை. ஏதோ ஒரு வகையில் வட – கிழக்கிலிருந்து கணிசமான ஆதரவைப் பெற்றாக வேண்டிய கட்டாயமிருக்கிறது. அல்லது, இப்பிரதேசங்களில் கடுமையாக வாக்குச் சிதைவை உருவாக்கி, முடிந்தால் வாக்களிப்பைக் குறைப்பதிலும் நன்மையுண்டு.

நவம்பரில் கோட்டாபே ராஜபக்ச என்ற தனி நபர் பெற்ற வெற்றியின் பின்னணி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் ஆளுமை என்றாலும் கூட அந்த ஆளுமை வட – கிழக்கில் ஆதிக்கமற்றது. எனவே, மாற்று வழியில் அங்கு வாக்குச் சிதைவை உருவாக்குவது அரசியல் ரீதியாக தேவைப்படுகிறது. இம்முறை தேர்தலைப் பொறுத்தவரை அது இரண்டு முனைகளில் அவசியப்படுகிறது. ஒன்று, தமிழ் சமூகத்தின் வாக்கு வங்கியை சிதைப்பது, அடுத்தது முஸ்லிம் வாக்கு வங்கியை சிதைப்பது.

இரண்டு சமூகங்களுக்கும் இருக்கப் போகும் பொதுவான பிரச்சினை மஹிந்தவோடு உடன்படாத (தற்சமயம்) ஆனாலும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை ஆதரிப்பதா? அல்லது கை விடுவதா? என்பதாகும். இதனை இன்னும் சுருங்கக் கூறின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கை கொடுப்பதா? இல்லையா? என்பதே இரு சமூகங்களும் எதிர் நோக்கும் பாரிய சவால்.

எதிர்ப்பதற்கு எத்தனை நியாயங்கள் இருக்கிறதோ அதே போன்று ஆதரிப்பதற்கும் நியாயங்கள் இருக்கின்றன. நாட்டு நடப்பை நன்றாக அவதானித்து மக்கள் முடிவெடுக்கக் கடமைப்படுகிறார்கள். ஆயினும், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் மக்களுக்குத் தெளிவு தேவைப்படுகிறது.

தம் ஆதரவாளர்கள் மத்தியில், அந்த காக்கா திடீரென்று இராவணன் முஸ்லிம் என்கிறான், அவர்களை விரட்டியடிக்க கல்முனையில் எனக்கு அதிகாரம் வேண்டும் என்று கருணா அம்மான் சொல்லும் போதும், அதற்கு ஏதுவாக ஒரேயணியில் இருக்கும் முபாறக் மஜீத் இராவணன் முஸ்லிம் ராமன் ஒரு நபியாகவும் இருக்கலாம் என்று நூல் பிடித்துக் கொடுப்பதும் ஏதோ தற்செயல் இல்லை.

சுயநலத்துக்காக நமது சமூகத்தவர் எந்த அளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள் என்பது தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வரும் விடயம். ஜனாதிபதி வரப் போகிறார் என்று  ஆரவாரம் செய்து ஆள் கூட்டி தெருவோரம் நிற்பதும் பின் ஜனாதிபதி இறங்காமலே சென்றதும் அதற்கு ஆயிரம் காரணம் சொல்வதும் நம்மவர்க்குப் பழகிப் போய் விட்டது. இந்நிலையில், எதைச் செய்தாவது தாம் சார்ந்த பக்கத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் அரசியலில் இடம் தேடுபவர்கள்.

நம் சமூகம் தெளிவானதாயினும் கூட விரைவாக உணர்ச்சியூட்டப்படக் கூடியது. சதா சந்தேகக் கோட்டின் விளிம்பிலேயே பயணித்துக் கொண்டிருப்பதால் எந்த விடயத்திலும் சந்தேகத்தின் பலனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு உணர்ச்சிவசப்படுவதிலும் கெட்டிக்காரர்கள்.

உலக வரலாற்றில் தம்மை முஸ்லிம்கள் என ஒரு சமூகம் அடையாளப்படுத்திக் கொள்ளும் வழக்கம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே பொதுவாக அறியப்படுகிறது. அங்கிருந்து, இஸ்;லாமிய வாழ்வியலில் இணைந்து கொண்டவர்கள் பெரும்பாலும் நபிகளாரது காலத்து சமூகத்தின் மீதான தமது அன்பை வெளிப்படுத்த பெரும்பாலும் அரபு மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்ளும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறக்க முன்பதாகவே வபாத்தான அன்னாரின் தந்தையின் பெயர் தற்காலத்திலும் முஸ்லிம்கள் மத்தியி;ல் பிரபலமான பெயரான அப்துல்லாஹ் என்பதாகவே இருந்தது. தன் புதல்வரே இறைவனின் இறுதித் தூதர் என்று அவர் அறிந்திருக்கவுமில்லை. அது போல, தனது நாற்பதாவது வயதிலேயே நபித்துவம் பெற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது பெயரையோ அல்லது தன் தோழர்கள் யாருடைய பெயர்களையுமோ மாற்றவும் இல்லை. அரேபிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கேற்ப அவரவர்க்கு சூட்டப்பட்ட பெயர்களுடனேயே நபித் தோழர்களும் வாழ்ந்தார்கள்.

உலகளவில் இஸ்லாம் பரவிய போது பெரும்பாலான இடங்களில் அரபுப் பெயர்களும் சேர்ந்தே பரவின. ஆயினும் கூட, எல்லா இடங்களிலும் உடனடி மாற்றங்கள் ஏற்படவில்லை. உதுமானிய பேரரசு பற்றி அவ்வப் போது நம் சமூகம் பெருமை பேசிக் கொள்ளும். அப் பேரரசின் ஸ்தாபகர் ஒஸ்மானின் தந்தையின் பெயர் எர்துருல் என்பதாகும். இன்று எர்துருல் என்ற பெயரை ஒரு முஸ்லிம் பெயராக எம்மில் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள்? ஒஸ்மானின் சகோதரர்கள் குண்டுஸ் மற்றும் சவ்ஜி என்ற பெயர்களிலேயே அறியப்பட்டார்கள். இந்தப் பெயர்களைக் கூட முஸ்லிம் பெயர்களாக ஏற்றுக் கொள்வோமா என்று நமக்கு நாமே ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கான விடை இல்லையென்பதாகும்.

8ம் நூற்றாண்டுக்குப் பின் உலகளாவிய ரீதியில் இஸ்லாம் பரவிய போது அரபுப் பெயர்கள் மீதான அன்பும் பற்றும் கூடவே பரவியது. அது போல அரேபியர் தூர கிழக்கு நாடுகளுக்குச் சென்று குடியேறியதும் இதில் பங்களிக்கிறது. எனவே, தற்காலத்தில் பொதுவாக முஸ்லிம் என்ற அடையாளத்தை நிரூபிக்க இவ்வாறு அரபுப் பெயர் அல்லது உப கண்டப் பிராந்தியத்தில் முஸ்லிம்களால் பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் உருதுப் பெயர்கள் அவசியமாகப் பார்க்கப்படுகிறது. ஆயினும், அது கட்டாயமானதொன்றில்லை.

உலக வரலாற்றில் இந்த சிந்தனைப் போக்கு உருவாகி 1400 வருடங்களே ஆகின்ற நிலையில், கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திற்குரிய இந்திய புனைக் கதையில் சித்தரிக்கப்பட்ட கதா பாத்திரங்களுக்கு ரஹ்மான் - ராமனானான், செய்யிதா – சீதையானாள் என்று கிறுக்குத் தனமான விளக்கங்கள், அதுவும் தேர்தல் காலத்தில் முன் வைக்கப்படுவது ஏதோ தற்செயலாகப் படவில்லை. எனவே, மக்கள் இது போன்ற உணர்ச்சியூட்டல்களை நிதானமாக கையாள வேண்டும். அக்கால கட்டத்தில் இந்தியாவில் அரபுப் பெயர்கள், அதுவும் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் இருப்பது எந்த வகையில் சாத்தியம் என்றும் சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம்கள் தமிழர்களை ஆட்கொள்ளப் பார்;க்கிறார்குள், ஆள்கிறார்கள், அடக்குகிறார்கள் என்று கருணா அம்மான் போன்றவர்கள் கொக்கரிப்பதற்கு நாமாக பொல்லை எடுத்துக் கொடுப்பதில் மக்களுக்கு இலாபமில்லாவிட்டாலும், எடுத்துக் கொடுப்பவர்களுக்கு இலாபமுண்டு. பரபரப்பான செய்திகளை வெளியிடுவது பத்திரிகைகளுக்கு இலாபமாக இருக்கலாம். ஆனால், ஏலவே நசுங்கிப் போயுள்ள ஒரு சமூகத்துக்கு திரும்பத் திரும்ப தீங்கிழைக்க அதுவும் முஸ்லிம்களே அதற்குக் காரணமாவது வருத்தத்துக்குரியது.

தவிரவும், உலகில் மதங்களுக்கிடையிலான வாத – விவாதங்கள் ஒரு நாளோடு முடிந்த அல்லது முடியப் போகும் விடயங்களும் இல்லை. முன்னர் குறிப்பிட்டது போன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளை மதீனா – மக்காவில் அமுலுக்குக் கொண்டு வருவதற்கு முன்னரும் பிற்காலத்தில் அறியப்பட்ட அரபுப் பெயர்கள் பாவனையில் இருந்தன. எனவே, நமது இறை நம்பிக்கை பெயர்கள் சார்ந்ததாக வரையறுக்கப்பட வேண்டியதன்று. மாறாக, ஓர் இறை நம்பிக்கையுடனான ஈமானே பலப்படுத்தப்பட வேண்டும்.

உலகில் இன்று அறியப்படும் அனைத்து சமயங்களும் 'குறியீட்டு;' நடைமுறையாகி விட்டது. ஆதலால், கட்சிகளுக்கு கொடியும் சின்னமும் இருப்பது போன்று மதங்கள் சார்ந்த வெளித்தோற்ற அடையாளங்களுக்கு பாரிய முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. மாறாக, ஓர் இறைக் கொள்கையின் அடிப்படையில், அனைத்து செயல்களையும் இறைவனுக்கே சமர்ப்பிக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த தூய்மையான வாழ்க்கை வழி முறைக்குத் திரும்புவதே காலத்தின் கட்டாயமாகும்.
அதை விடுத்து, முடிவிலியான அற்ப விவாத விவாதங்களை அதுவும் தேர்தல் காலத்தில் ஆரம்பிப்போர் குறித்து மக்கள் கவனமாக இருக்கும் அவசியம் இருக்கிறது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் கொலைக் கலாச்சாரத்தில் அனுபவம் வாய்ந்தவர்களால் தூண்டப்படும் இனவாதம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்கக் கடமைப்படுகிறார்கள்.

2015ல் நம்பி ஏமாந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து மக்களிடம் ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது. வட – கிழக்கில் இவ்வாறான நிலை நீடிப்பது ஆரோக்கியமானதில்லை. அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தமது பிரதிநிதியாக நாடாளுமன்றில் இருக்க வேண்டியவர் யார் என்பதைத் தீர்மானிப்பது மாத்திரமன்றி ஐந்து வருட காலத்திற்குள் நாடாளுமன்றில் கொண்டுவரப்படக் கூடிய சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்கக் கூடிய சட்ட – திட்டங்கள் குறித்தும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

அம்பிட்டியே சுமனரத்னவாக இருக்கட்டும், விநாயகமூர்த்தி முரளிதரனாக இருக்கட்டும் அல்லது முபாரக் அப்துல் மஜீதாக இருக்கட்டும், இவர்களை ஆட்டுவிக்கும் பொதுத்தளம் குறித்த சிந்தனைத் தெளிவு அவசியப்படுகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு இலங்கையின் அரசியலை இனவாத அடிப்படையில் கொண்டு செல்ல மக்கள் அனுமதிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கும் இந்தத் தேர்தல் விடையளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
2015ல் காண விரும்பிய மாற்றத்தை, அதிகாரத்தில் அமர்ந்தவர்கள் முழுமையாகத் தரவில்லையாயினும், காலங்கடந்தாவது அடைந்த சில நன்மைகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஆகக்குறைந்தது சகல மக்களும் சமவுரிமையோடு வாழ வழி செய்ய வேண்டும் என்ற தளத்தில், அதுவும் இனவாதம் இந்த அளவுக்கு ஊறிப்போயுள்ள சமூகத்தில் அவை சாதனையாக கணிக்கப்படலாம்.

இந்நிலையில், அவரைத் தெரியும் அதனால் அனைத்தும் முடியும் என்ற போலி மாயைக்குள் சிக்கிக் கொள்ளாது, சலுகை அரசியலின் பின் செல்லாது, கௌரவத்துடன் தலை நிமிர்ந்து வாழக் கூடிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உழைத்தாக வேண்டும். அந்த இலக்குக்குத் துணையிருக்கக் கூடிய அரசியல் சக்திகள், பிரதிநிதிகளை அடையாளங் கண்டு புதியதொரு பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்.

2005 – 2010 வரையான மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலம் எதிர்க்கட்சிக்குப் பெரும் சூனியமாகவும் எங்கிருந்து எதை ஆரம்பிப்பது என்று தெரியாத குழப்பத்தையும் உருவாக்கியிருந்தது. அது வரை மேலை நாடுகள் பக்கம் சாய்ந்திருந்த இத்தீவின் அரசியல் தூர கிழக்குப் பக்கம் சாய்ந்த வேகத்திலிருந்து விடுபட நாள் எடுத்தது. 2015ல் ஓரளவு வெற்றி கண்ட போதிலும், கூட்டாட்சியால் நிலையான மாற்றத்தைக் கொண்டு வர முடியாமலேயே போய் விட்டது.

ஆயினும், நேற்றைய நாள் கடந்து விட்டது, நாளைய எதிர்காலத்துக்கு முகங்கொடுத்தாக வேண்டும் என்ற அடிப்படையில், இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சவாலான கால கட்டத்தை சலுகைகளுக்காக அடகு வைத்து விடாமல் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவை ஒவ்வொரு வாக்காளனுக்கும் இருக்கிறது.
சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை கோமாளிகளிடம் கையளிக்காமல் இருப்பதும் காலத்தின் கட்டாயம்!

jTScYcS
-Irfan Iqbal
Chief editor, Sonakar.com

No comments:

Post a Comment