கொரோனாவிற்கு பின்னர் வரும் இடருக்காக தயாராகுவோம் - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

கொரோனாவிற்கு பின்னர் வரும் இடருக்காக தயாராகுவோம்


கண்ணுக்கு தெரியாத நுண்ணங்கி முழு உலகத்தின் இயக்கத்தையும் சீர் குலைத்தது. ஒவ்வொரு மனித அங்கியினதும் ஓட்டத்தை வீட்டுக்குள் முடக்கி விட்டது.  இவ் ஆபத்து எப்போது நீங்கும் ? எப்போது விடிவு வரும்? எப்போது நிலமை சீராகும்? என்ற ஏக்கத்தில் , சிந்தனையில் ,பல உள்ளங்கள் .


மனிதனின் கட்டுக்கடங்காத செயற்பாடுகளின் பிரதி விளைவாக இறைவன் புறத்திலிருந்து கிடைத்திருக்கும் நீதமான தண்டனை என்று ஒரு சாராரும் , சர்வதேச நாடுகளுக்கிடையிலான அதிகார யுத்தத்தின் உயிரியல் யுத்தம் ஒன்றின் புதிய பரிணாமம் ஒன்று என்று மற்றொரு சாராரும் , முன்றாம்  உலக மகாயுத்தமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பிரிதொரு சாராரும் கொரோனாவிற்கான பின்புல காரணிகளை தேடுகின்றனர். எது எவ்வாறு இருந்த போதிலும்  முழு மனித இனமும் முதன் முறையாக ஒன்றினைந்து எதிர் கொள்ளும் பேர் அவலமாக அது மாறிவிட்டது.

‘அல் -ஜஸீரா’ வின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி ‘வழா கன்பர்’ குறிப்பிடுவதைப் போல ‘அரசியல் , பொருளாதாரம் என நடைமுறை உலகில் இருந்த ஒழுங்குகள் அனைத்தையும் தழை கீழாக மாற்றிய புதிய ஒரு உலக ஒழுங்குக்கான ஏற்பாடு இதுவாகும்.

புதிய உலக ஒழுங்கின் புதிய அரசியல் , பொருளாதாரம் , சர்வதேச உறவு , மக்களின் வாழ்க்கை போக்கு , அதிகாரப் பொருள் , பொருள் அளவீடு , பொருளீட்டல் முறைமைகள் , சர்வதேச சந்தை ஒழுங்கு , மத சிந்தனைகள் ஈடுபாடுகள் , என அனைத்தும் புதிய பரிணாமம் எடுக்கும் என ஊகிக்கின்றார் .

 நிலை மாற்றம் அல்லது படி நிலை வளர்ச்சி என்பது ஒரு கட்டத்தின் அழிவை தொடர்ந்து இன்னொரு கட்டத்திற்கு இடம் பெயர்வதாகும் , மனித இன வரலாற்றின் படி முறை மாற்றங்களை ஆய்வு செய்தாலும் பெரிய ஒரு ஆபத்திற்கு , அழிவிற்கு உட்பட்டதன் பிற்பாடே புதிய ஒரு நிலை தோன்றுகிறது. அல் - குர்ஆன் கூட  அனுவானது பாரிய ஒரு வெடிப்பின் , பிளவின்  ஊடாகவே வானம் , பூமி என்ற புதிய பிரபஞ்ச ஒழுங்கு தோன்றியதாக வாதிக்கின்றது  .  
 (அல்- அன்பியா – 30)

 அரசியல் கோட்பாடுகளும் , சிந்தனைகளும்  மோதல்களும் , போராட்டங்களுமே அதிகார தள மாற்றங்களின் அடிப்படை என வாதிக்கின்றன. உதாரணமாக பாட்டாளி வர்கத்தின் எழுச்சியும் , முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான போராட்டமுமே முதலாளித்துவ சிந்தனை போக்கு இன்றிய சோஸலிஸ சமூகத்தின் எழுச்சியின் அடிப்படை என வாதிக்கும் பழைய மாக்ஸிஸ அரசியல் சிந்தனையை குறிப்பிடலாம்.

 எனவே கொரோனா என்ற அனர்த்தம் உலக ஒழுங்குகளின், மாற்றத்தின் நுழைவாயிலாக இருந்தால் உதிக்கப் போகும் புது ஒழுங்கு அனைத்து வகையிலும் மனித இனத்துக்கு விடிவாகவும் , சுபீட்சமாகவும் , அநீதத்திற்கு உட்பட்டு நசுக்கப்பட்ட வர்கத்தின் விடிவுகாலமாகவும் , நீதியும் ,உண்மையும்  கோளோட்சி  நலவுகளும் , நன்மைகளும் வாழ செழித்தோங்கும் விடயலாக அது அமையட்டும் என்ற பிராத்தனையோடு.

படி நிலை மாற்றங்களின் போது ஏற்படும் அழிவுகள் , ஆபத்துக்கள் போன்றவற்றுக்கு முகம் கொடுப்பதும் , ஆபத்திற்கு பின்னர் ஏற்படும் பிரதி ஆபத்துக்களை , நெருக்கடிகளை முகம் கொடுப்பதுமே இனிவரும் காலங்களில் மனிதனின் இருப்பை தீர்மானிக்கும் தளமாக இருக்கின்றது.

அந்த வகையில் இவ் வாக்கமானது கொரோனா என்ற பேராபத்தின் பின்னர் மனித சமூகம் முகம் கொடுக்க போகின்ற கொரோனாவின் பக்க விளைவுகளாக அமையப் போகின்ற இரண்டு இடர்களை அடையாளப்படுத்தி, அவ்விடர்களை எதிர் கொள்வதற்கான தயார்படுத்தலை நோக்கி விழிப்புணர்வொன்றை ஏற்படுத்தல் என்ற இலக்கை மையமாக வைத்து வரையப்படுகிறது.

1. நோய்கள் பட்டியலில் புதிதாக இணையும் கொரோனா 19

covid19 என்ற ஆட் கொள்ளி கிருமி நோய்ப் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து விட்டன, என்றுதான் குறிப்பிட வேண்டும். கிருமியின் பரவலை குறைக்க எடுத்திருக்கும் முயற்சி கிருமியை முற்றாக ஒழித்து விட வேண்டும் என்ற பிராத்தனையோடு

அதிகமான தொற்று நோய்கள் ஒரு தடவை உருவானால் அது தொடர்ந்து நோய்ப் பட்டியலில் இடம் பிடிக்கும் என்பதே வரலாறு.  குறிப்பாக குறித்த நோய் தொற்றை எதிர் கொள்ளும் புதிய ஒரு வாழ்க்கை போக்கை மனிதன் இயல்பாக்கி கொள்கிறான்.

 கொரானாவின் இயல்பையும் , அது பற்றிய செய்திகளையும் பார்க்கும் போது பூமி மேற் பரப்பிலிருந்து சீக்கிரம் அழிந்து செல்லும் ஓர் ஆபத்தாக அது விளங்கவில்லை.  ‘வுஹான் ‘  மாநிலத்தில் ஐந்து நாட்களாக யாரும் நோய் தொற்றுக்கு இலக்காக வில்லை என்ற செய்தி கேள்விப்பட்டு களிப்படைய முன்னர் ஐந்து நாட்களுக்கு பிறகு வைத்தியர் ஒருவர் குறித்த நோயினால் பதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியானது நோய்க் கிருமி பராவாமல் தடுக்கப்பட்டுள்ளதே தவிர முற்றாக இன்னும் அழிந்து விட வில்லை என்பதையே சுட்டுகின்றது.

எனவே கொரோனா என்ற நோய்க்கிருமி எதிர்காலத்திலும் தொடர்ந்து வாழப் போகும் இடர் என்றால் இவ்விடரை எதிர் கொள்ளும் தயார்படுத்தலில் இன்றிலிருந்து ஈடுபட வேண்டும்.

இவ்விடரை எதிர் கொள்வதற்கான ஒரு சில ஆலோசனைகள்.

1. சுகாதாரப் பழக்க வழக்கங்களை இயல்பாக்குதல்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரப் பழக்கங்கள் என்றும் துணை நிற்கின்றன. கொரோனாவுக்கான உடனடி தீர்வாக முன்வைத்ததும் சுகாதாரப் பழக்கங்களாகும்.

  குறிப்பாக கை , முகம்களை அடிக்கடி சவர்காரம் இட்டு களுவிக் கொள்ளுதல் , அடிக்கடி உடல் , ஆடை போன்றவற்றை சுத்தப்படுத்திக் கொள்ளல் , தான் வாழுகின்ற சூழல் வீடு , தோட்டம் , வியாபார தளங்கள் , பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்கள் போன்றவற்றை அடிக்கடி கிருமி நீக்கம் செய்து கொள்ளல். போன்ற சுகாதார அம்சங்களை இயல்பு வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள வேண்டும். சாதாரன வாழ்க்கையில் அன்றாடம் செய்கின்ற செயற்பாடுகளில் இச் சுகாதார அம்சங்களும் இடம் பிடிக்க வேண்டும்.

2. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்

உடம்பில் நோய் எதிர்புச் சக்தியை அதிகரிக்கின்ற விட்டமின்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்கின்ற உணவுப் பழக்கங்களை இயல்பாக்கி கொள்ள வேண்டும்.  அதே நேரம் உடலில் வரட்டுத் தன்மையை போக்கும் வகையில் அதிகம் நீர் மற்றும் நீர் ஆகாரங்களை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

3. துரத்தில் நின்று உறவாடுதல்

வீட்டில் இருத்தல் , தூரத்தில் நின்று உறவாடுதல் என்பன கொரோனா தொற்றை கட்டுப் படுத்த முன் மொழியப்பட்ட தீர்வுகளாகும் , மனிதனைப் பொறுத்தவரையில் அவன் ஒரு சமூகப் பிராணியாவான். சமூகத்தை தவிர்ந்து , சமூக உறவை துண்டித்து வாழ்வது அவனுக்கு மிகப் பெரிய சவாலாகும்.

  Social distancing என்ற விடயம் இனிவரும் காலங்களில் மனிதனின் சமூக நடத்தையில் அடிப்படையாக மாறிவிடும். சமூக உறவாடலில் வரையறையும் , இடைவெளியும் புதிய ஒழுங்குகளாக அமையப் போகின்றன.

 பொது இடங்களில் வரிசையில் காத்திருத்தல் , கடையில் பொருட்களை கொள்வனவு செய்தல் , பொது இடங்களில் கூட்டாக இணைந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல் போன்ற அனைத்திலும் தூரத்தில் நின்று உறவாடுதல் என்ற புதிய முறைமை தாக்கம் செழுத்தும்.

 இதனை மையப்படுத்தி எமது கலாச்சார , பண்பாடு , சமூக வெளிப்பாடுகள் அனைத்திலும் புதிய மாற்றங்கள் , அம்மாற்றங்களை எதிர் கொள்வதற்கான உடல் , உள நிலை தயார்படுத்தலில் ஈடுபட வேண்டும்.

2. பொருளாதாரப் பிரச்சினை

கொரோனாவின் பக்க விளைவுகளில் ஒன்றாக பொருளாதாரப் பிரச்சினையை ஊகிக்கலாம். கொரோனா தொற்று  உற்பத்தியாளர்களையும் , முயற்சியாளர்களையும் வீட்டுக்குள் முடக்கி விட்டது , பெரும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் , பிரமாண்டமான தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன , பெரும் சர்வதேச சந்தைகள் முடக்கப்பட்டு விட்டன , வல்லரசு நாடுகளின் பணப் பெருமானத்தில் ஏற்பட்டிருக்கம் வீழ்ச்சி அனைத்தும் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடியின் அடையாளங்களாகும்.

 இன்றைய நாட்களின் நுகர்வுப் பொருட்கள் நேற்றைய நாட்களின் உற்பத்திகளாகும் . நாளைய நாட்களின் நுகர்வுக்கு இன்றைய நாட்களின் முடுக்கப்பட்டுள்ள உற்பத்திகள் பெரும் சவாலாக அமையப் போகின்றன.

எனவே ஏற்படப் போகும் பொருளாதார இடரை முகம் கொடுப்பதற்கு இன்றிலிருந்து தயார்படுத்தலில் ஈடுபட வேண்டும்.

எதிர் நோக்கப் போகும் பஞ்ச காலத்தை , பொருளாதார நெருக்கடி நிலையை ஊகித்த யூசுப் (அலை) அவர்கள் ‘கஜானா’ திரை சேரியின் சாவியை தன்னிடம் ஒப்படைக்கும் படி வேண்டி பொருளாதாரப் பிரச்சினையை தன்னால் முகாமைத்துவம் செய்யலாம் என்ற திட்டத்தோடு முன் வந்தார் குறிப்பாக அல் -குர்ஆன் குறித்த விவகாரத்தை ஞாபகப் படுத்தும் போது  யூசுப் (அலை) எப்படி பொருளாதாரப் பிரச்சினையை முகாமைத்துவப்படுத்தினார் என்பதனை கூறாமல் பொருளாதாரப் பிரச்சினையை எதிர் கொள்வதற்கு அவரிடம் இருந்த இரண்டு முக்கியமான நுட்பங்களை , பண்புகளையே பேசுகின்றது.
 (சூறது யூசுப் -55)

1. ‘حفيظ’ ஹபீல்’

கையிலிருப்பதை பாதுகாக்கும் பண்பு நெருக்கடி நிலைக்கு முற்பட்ட காலப்பகுதியில் கையில் சேமிப்பாக இருக்கின்றவற்றை நெருக்கடி காலத்திலும் பயன்படும் வகையில் அழிவு , மிகை கொள்வனவு, வீண்விரயம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் பண்பு ,

நெருக்கடி நிலையின் போது ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்தையும் பாதுகாக்க வேண்டுமே என்ற உணர்வில் நெருக்கடி நிலமைக்கு முற்பட் காலத்தை கழித்தல் , கையில் இருக்கின்ற அல்லது நுகர்கின்ற பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனைப் புலத்தோடு தோன்றும் மனப்பாங்கையும் , நடத்தை மாற்றத்தையும் குறித்த பண்பு வேண்டிநிற்கிறது.

2."عليم" அலீம்

அறிவு ஞானம் பொருளாதார நெருக்கடியை முகம் கொடுப்பதற்கு தேவையான அறிவு ஞானம் , பொருளாதார நெருக்கடிக்கான பொருள் உற்பத்தி , பங்கீடு , சேமிப்பு , நெருக்கடி கால நுகர்வு போன்ற அனைத்தயும் முகாமைத்துவம் செய்யும் அறிவு. இன்றைய நவீன மொழியில் குறிப்பிட்டால் பொருளியல் துறைசார் அறிவு , இந்தப் பண்பும் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள யூசுப் (அலை) இருந்ததாக அடையாளப்படுத்துகிறது.

அரச மட்டத்தில் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முனைந்தாலும் பொது சிவிலியன் என்ற வகையில் எதிர் நோக்க இருக்கும் பொருளாதார நெருக்கடியை முகம் கொடுக்க சில தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.  மேலே சூறதுல் யூசுப் அடையாளப்படுத்திய இரண்டு பண்புகளையும் அடியொட்டி பின்வரக் கூடிய ஆலோசனைகளை முன் மொழியலாம்.

1. சதாரண இயல்பு வாழ்க்கை அல்ல நெருக்கடி நிலமையின் போதான வாழ்க்கை

நெருக்கடி காலங்களில் சதாரண கால இயல்பு வாழ்கையை வாழ முற்படக் கூடாது , நெருக்கடி காலங்கலிலும் சதாரண காலங்களைப் போன்று ஆடம்பரமாக நுகர்ந்து மேலதிகமான தேவைகளையும் நிறை வேற்றிக் கொண்டு வாழ வேண்டும் என்ற மனப் பதிவிலிருந்து வெளியேற வேண்டும்.

 குறிப்பாக நெருக்கடி காலங்களில் எமது நுகர்வும் , பயன்பாடும் நெருக்கடியானதாகவே இருக்க வேண்டும். உதாரணமாக இயல்பு வாழ்க்கையில் , சாதாரண காலத்தில் நான்கு வகையான கறிகளுடன் உணவு உட்கொண்டிருந்தால் நெருக்கடி காலத்தில் இரண்டு கறிகளுடன் உட் கொள்ளும் பழக்கம் ஏற்பட வேண்டும் , மூன்று நேரம் சாப்பிடும் நாம் நெருக்கடி நிலையை பொறுத்து இரண்டு நேரம் ஒரு நாளைக்கு சாப்பிடும் பழக்கம் ஏற்பட வெண்டும் , இயல்பு வாழ்க்கையில் சாதாரண நிலமையில் மேலதிக தேவைகளையும் நிறைவேற்றி வாழ்ந்தால் நெருக்கடி காலங்களில் ஆடம்பர மேலதிக தேவைகளை தவிர்ந்து அத்தியவசிய தேவைகளை மாத்திரம் நிறைவேற்றி வாழும் வாழ்க்கையை வழக்கப்படுத்த வேண்டும்.

2. நெருக்கடி காலத்திற்கான பொருள் சேமிப்பு

நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன்னரான  காலப்பகுதியை நெருக்கடி நிலை காலப் பகுதிக்கான பொருள் சேமிப்புக்காக பயன்படுத்த வேண்டும். அதிகமான தனவந்தர்கள் இல்லாதவர்களுக்கு பொருட்களை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ள வேண்டும். ஆனால்  வரப் போகும் பொருளாதார நெருக்கடி காலப்பகுதிக்கு தேவையான பொருட்களை சேமித்து களஞ்சியப்படுத்தும் முயற்சியிலும் ஒரு சாரார் ஈடுபட வேண்டும் . இன்றைய நாட்களில் உயிர்வாழ்வதற்கு தேவையான பொருட்களை மாத்திரம் நுகர்ந்து ஏனையவற்றை பொருட்தட்டுப் பாடு நிலவும் பொருளாதார நெருக்கடி காலத்தில் நுகர்வதற்கு களஞ்சியப்படுத்தும் முயற்சியில் வீட்டுத் தலைவர்கள் ஈடுபட வேண்டும்.

3. வீண் விரயம் தவிர்ப்போம்

பொருள் இழப்பின் அல்லது வளப்பற்றாக்குறையின் , அல்லது பொருளாதார நெருக்கடியின் பிரதான காரணியாக வீண் விரயத்துடன் கூடிய நுகர்வுக் கலாச்சாரத்தை பொருளியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் . குறிப்பாக தேவைக்கு மேலதிகமாக நுகர்வது பொருளை சேமிக்கும் விகிதத்தை விட அதிகமான ஒரு போக்கே மனிதர்களின் சாதாரண இயல்பு வாழ்க்கையில் பொதிந்திருக்கும் அம்சமாக காணப்படுகிறது.

பொருள் நுகர்வை இஸ்லாம் ஆகுமாக்கி குறிப்பிட்ட நுகர்வில் வீண்விரயத்தை தவிர்ந்து கொள்ளும் பெருமானமொன்றை அல் குர்ஆன் ஊக்குவித்து  வீண் விரயம் அல்லாஹ்வுக்கு வெறுப்பானது என்று ஆன்மீகக் காரணியொன்றுடனும் இணைத்தே பேசுகின்றது. (அல்- அஃராப்-31)

எனவே ஒவ்வொரு நாளும் பொருட்களை உண்பதற்காக சமைக்கும் போது குடும்பத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு உயிர்வாழ்ந்து கொள்வதற்கு போதுமான உணவை சமைப்பதும் போதுமான உணவை உட்கொள்வதையும் நெருக்கடி காலங்களில் வழக்கப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் குறித்த ஒரு நேரத்துக்கு சமைக்கும் உணவு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு வீசி விடும் அளவுக்கு பாத்திரத்தில் உணவு எஞ்சினால் பொருளாதார நெருக்கடி காலத்தில் வீசியவற்றை தேடும் ஓர் பேர் அவலத்தை சந்திக்க நேரிடும் என்பதை மனதில் நிறுத்தியதாகவே எமது நுகர்வுகள் இத்தகைய காலப் பிரிவில் அமைய வேண்டும்.             

4. சிறு கைத்தொழில் மற்றும் சுய உற்பத்திகளில் கூடிய அக்கறை எடுத்தல்

பொருளாதார நெருக்கடி நேரங்களில் என்றும் எம்மோடு கை கோர்க்கப் போவது எமது சுய உற்பத்திகளாகும் , நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாக இருக்கும் இன்றைய நாட்களில் சுய உற்பத்தியிலும் கவனம் செழுத்துவதற்கான ஒரு சந்தர்பம் எம்மை எட்டியுள்ளது.

 நெருக்கடி நிலமையானது ஆறு அல்லது ஏழு மாதங்கள் வரை நீண்டு செல்லும் என நிபுணர்கள் சுட்டுகின்றனர். குறித்த வைரசின் பரவலின் வீச்சுக்கு ஏற்ப இன்னும் நிலமை மோசமடையவே வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அடிக்கடி அறிவுறுத்தவதை காண்கிறோம்.

  எனவே நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து விவசாய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான அவகாசத்தையும் கருத்திற் கொண்டு தனது வீட்டுச்  சூழலில் தனது கைக்கு எட்டுகின்ற தூரத்தில் பயிற்செய்கைகளை மேற்கொள்ளலாம் , கத்தரிக்காய் , போஞ்சி , தக்காளி , மரவெள்ளி , கீரைகள் போன்ற பயனுள்ள பயிர்களை வளர்த்து பராமரித்து , அதன் நல்ல விளைவுகளை நெருக்கடியான பொழுதுகளில் அனுபவிக்கின்ற பயனுள்ள மனிதர்களாக மாறலாம்.

வெகு சீக்கிரம் இந்த பேராபத்துக்கள் இடர்களிலிருந்து விடைபெற அனைவரும் ஒன்றினைந்து கைகோர்போம்.

‘இறைவா உன்னிடம் நாங்கள் குஷ்ட நோய்கள் , தொழு நோய்கள் , பைத்தியம் , பயங்கரமான தொற்று நோய்களிடமிருந்து பாதுகாப்பு தேடுகிறோம்’.

Ash -Shikeh Husni haniffa (Naleemi) (Dip.in. Counselling)
Visiting lecturer of Jamiah Ayesha Sideeqa

No comments:

Post a comment