மட்டு மாவட்ட வியாபாரிகளுக்கு CAA எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday 28 March 2020

மட்டு மாவட்ட வியாபாரிகளுக்கு CAA எச்சரிக்கை



நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் வியாபாரிகள் பல்வேறு விதமான பொருட்களை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சாதாத் தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களிலிருந்து மிகவும் அதிகமான முறைப்பாடுகள் நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்துள்ளது.

அந்தவகையில் வியாபாரிகள் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த (26) வியாழக்கிழமை கல்குடா, ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் மரக்கறிகள் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முறைப்பாடுகள் அதிகமாக மாவட்ட செயலக நுகர்வோர் அலுவலக அதிகார சபைக்கு கிடைத்துள்ளது.

எனவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மரக்கறிகளின் விலைகளை அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க என்னுடைய தலைமையில் வியாபாரிகளிடம் கலந்தாலோசனை செய்து மட்டக்களப்பு மாவட்டுத்துக்கான மரக்கறிகளின் விலை தீர்மானிக்கப்பட்டவுள்ளது.

நிர்ணயிக்கப்படவுள்ள விலைகளை மீறி மரக்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் அளவை நிறுவைகளில் மோசடி செய்கின்ற வியாபாரிகள், காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்கின்ற வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்தி அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசினால் தீர்மானிக்கப்பட்ட விலைகளுக்கு அமைவாக நுகர்வோர்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு சட்டவிரோத வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள் தொடர்பில் பொதுமக்கள் எங்களுக்கு தகவல்களை 0770110096, 0652228810 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.  

குறித்த விடயம் தொடர்பில் அனைத்து வியாபாரிகளும், வியாபாரத்தின் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடித்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதனை தவறும் வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை கடும் சட்டநடவடிக்கை எடுக்கும் என்றும் நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சாதாத் மேலும் தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment