நமக்காகவும் பிறருக்காகவும் சேர்த்தே ' சோஷல் டிஸ்டன்ஸ்' - sonakar.com

Post Top Ad

Monday, 23 March 2020

நமக்காகவும் பிறருக்காகவும் சேர்த்தே ' சோஷல் டிஸ்டன்ஸ்'


உலகம் இதுவரை கண்டிராத புதிய சூழலில் இன்றைய தலைமுறை வாழ்ந்து கொண்டிருக்கிறது. சீனாக் காரனுக்கு மட்டும் இறைவன் அனுப்பிய தண்டனையென்கிற கிண்டல்கள் எல்லாம் ஓய்ந்து தற்போது கொரோனா நம்மையும் அண்டி நிற்கிறது என்கிற அச்சம் உலகில் வாழும் அனைத்து மனிதர்களிடமும் வந்து விட்டது.ஆனாலும், சமூகப் பழக்க வழக்கங்கள் ஓரிரவில் மாற்றம் பெறக் கூடியவையன்று. சில பழக்கவழக்கங்களுக்கு பாரம்பரியமும் உண்டென்பதால் பல விடயங்கள் இரத்தத்தோடு ஊறியதாகவே காணப்படுகிறது.

கொரோனா சூழ்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'சோஷல் டிஸ்டன்ஸ்' என விளக்கப்படும் இடைவெளி பேணுதலும் புதிய உலகம் கற்றுக் கொண்டுள்ள ஒரு நன் நடத்தையே (manner). ஆனாலும், அதனை அத்தனை இலகுவாக எம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாது என்பது ஊரடங்கின் சிறு இடைவெளியில் அலட்சியமாக நடந்து கொள்ளும் சமூகக் கூறுகளைக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.

கொரோனா யாரை வந்து அடைந்துள்ளது என்று தெரியாத நிலையில், நமக்காக மாத்திரமன்றி நம்மால் பிறர் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் சேர்த்தே இந்த இடைவெளி பேணப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. காரணம், கொரோனா ஒரு தொற்று நோய் மாத்திரமன்றி அது படும் இடங்களில் நீண்ட நேரம் உயிர் வாழக் கூடியது. அதனைத் தொட்டுப் பின் தம் முகத்தைத் தொடுபவர் நேரடியாகவே பாதிப்புக்குள்ளாகிறார்.


இன்றளவில் உலகில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன் பதினான்காயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ள சூழ்நிலையில் நமக்கும் மற்றவருக்குமான இடைவெளி பேணும் காலத் தேவை தொடர்பில், குறிப்பாக எமது சமூகத்தவர் மத்தியிலான விழிப்புணர்வு ஏற்படுத்தல் காலத்தின் கட்டாயமாகிறது.

சீனாவின் நிலை ஓய்ந்திருப்பது போன்று காட்சியளித்தாலும், இன்னும் உலகின் பல நாடுகள் உச்ச நிலையை அடையவில்லை. அரசாங்கங்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன, அறிவுறுத்துகின்றன. ஆனாலும், அவற்றைப் பொது மக்கள் பின்பற்றாது போனால் அதன் விளைவு பாரதூரமாகவே இருக்கும். சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒரு மத போதகர் யாழில் தம்மோடு வழிபாட்டுக்கு வந்தவர்களுக்கு கொரோனாவைக் கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருந்திருக்கப் போவதில்லை.

அது போலவே நமக்குள் இருக்கும் கொரோனாவை அடுத்தவருக்குக் கொடுக்காமலிருப்பதற்காகவாவது தன்நலம் தாண்டிய சிந்தனை அவசியப்படுகிறது.

நம்மிலிருந்து ஆரம்பித்து, நமது உறவினர்கள், நண்பர்கள் ஊரார் என அனைவரோடும் இது பற்றிப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு தனி நபருக்கும் கடமையாகிறது.

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment