கொரோனாவும் நேர்மைக் குசும்பர்களும் - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

கொரோனாவும் நேர்மைக் குசும்பர்களும்"முஸ்லிம்களின் நடத்தை சரியில்லை", "முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பதில்லை", போன்ற குற்றச்சாட்டுக்களை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இத்தகைய குற்றச் சாட்டுகளை முன்வைப்பவர்கள் அதிகமானவர்கள் முஸ்லிம் நேர்மைக் குசும்பர்களாவர். குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மைத் தன்மை இல்லாமலும் இல்லை, இருப்பினும் குறித்த குற்றச்சாட்டில் நேர்மைத் தன்மை குறைவு என்பது எமது வாதமாகும். 

முஸ்லிம்கள் இலங்கையில் மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரிய கலாச்சாரத்திற்குச் சொந்தக்காரர்கள், மிக உயர்ந்த பதவிகளில் நாட்டை அலங்கரித்த தேசப்பற்றாளர்கள். அந்த வம்சாவளியில் வந்த எம்மை ஒன்றும் தெரியாத பத்தாம் பசலைகள் போன்று சித்தரிப்பது அடிப்படையற்ற ஒரு வாதமாகும். 

கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் உலகளாவிய ரீதியில் இன ரீதியான ஒடுக்கங்களை சந்தித்து வருகிறார்கள். இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இத்தகைய ஒடுக்குமுறைக்குச் சிறந்த உதாரணமாகும். ஆகவே, இது முஸ்லிம்களுக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரலின் அரங்கேற்றங்களாகும். 

இதன் அடிப்படையில்தான் முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படிப் பார்த்தால் வடமாகாணத்தில் மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற ஒன்றுகூடல் மற்றுமொரு சகோதர சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகும். அதனை சமயம் சார்ந்து யாரும் பெரிது படுத்தவில்லை. நாகரிகம் அடைந்த சமூகம் அப்படி சமயம் சார்ந்து விமர்சிப்பதும் இல்லை. இத்தகைய அசாதாரண நிகழ்ச்சிகள் எல்லா சமூகத்திலும் விதிவிலக்காக இடம்பெறத்தான் செய்கின்றன. அதற்கு முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கல்ல. 

பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்பட்டு, ஜும்மா பிரசங்கங்கள் கைவிடப்பட்டு, ஊரடங்கு வேளைகளில் வீடுகளுக்குள் முடங்கி முஸ்லிம்கள் கணிசமான ஒத்துழைப்பினை வழங்கித்தான் வருகிறார்கள். தறிகெட்டு விமர்சிக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் நாகரீகம் தெரியாதவர்கள் அல்லர். 

அப்படி இருக்கையில், முஸ்லிம் சமூகத்தின் நேர்மைக் குசும்பர்கள் தம்மை மேதாவிகளாகவும் நடு நிலையாளர்களாகவும் காட்டிக் கொள்ள சொந்த சமூகத்தைக் காவு கொடுக்க முற்படுவது மிக மன வேதனையான விடயமாகும். எனவே, முஸ்லிம்களிடத்தில் இருக்கும் தவறுகளை நமக்குள் அறிவுரை கூறித் திருத்த முற்படுவோம். நமது சமூகத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் இறைவனைப் பிரார்த்திப்போம். இறைவன் நமக்குப் போதுமானவன்.

அன்றியும், முஸ்லிம்களை இன ரீதியாக நசுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு சோரம் போகும் நேர்மைக் குசும்பினைக் கைவிடுவோம். சமூகத்தை உண்மையாக நேசித்து உளப்பூர்வமாகத் திருத்த முற்படுவோம். அதுவே நாம் சமூகத்திற்குச் செய்யும் கைமாறாகும். 

- அபூ ஸைனப்

No comments:

Post a comment