சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை மதித்து நடப்போம்: ACJU - sonakar.com

Post Top Ad

Tuesday 24 March 2020

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை மதித்து நடப்போம்: ACJU


உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். அந்த வகையில் இலங்கை அரசாங்கமும் இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை விடுவித்துக் கொள்ள இன்னோரன்ன வழிகாட்டல்களை வழங்கி வருவதுடன் பல்வேறுபட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான வழிகாட்டல்களை நாம் அனைவரும் பேணி நடப்பது கட்டாயமாகும்.


குறிப்பாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியிருப்பதும் நாட்டு மக்களின் நலன்களுக்காவே என்பதை உணர்ந்து முஸ்லிம்களாகிய நாம் அச்சட்டத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். ஊரடங்கு அமுலில் இருக்கும் போது நாம் வெளியில் நடமாடுவதை முற்றாக தவிர்த்து பாதுகாப்பு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இந்த வைரஸின் பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டல்களை நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம்கள் பேணும் அதே நேரம் ஊரடங்கு சட்டங்கள் தளர்த்தப்படுகின்ற போது நாம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றி முன்மாதிரிமிக்க சமூகமாக திகழ வேண்டும். அத்துடன் பின்வரும் ஒழுங்குகளை கட்டாயமாக பேணிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் அன்பாக வேண்டிக் கொள்கிறது.

  • பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்லல்.
  • சிறுவர்களும், வயோதிபர்களும் செல்வதை தவிர்த்து வாலிபர்களின் மூலம் வெளித் தேவைகளை பூர்த்தி செய்தல்.
  • வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல்.
  • வரிசைகளில் நிற்கும் போது ஒவ்வொருவருக்குமிடையில் 1 மீற்றர் இடைவெளியை பேணி நிற்றல்.
  • அடிக்கடி தமது கைகளை சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்ளல்.

மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை அனைத்து முஸ்லிம்களும் கடைபிடிப்பதுடன் ஏனையவர்களுக்கும் இது விடயமாக விழிப்புணர்வூட்டுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களிடமும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.

குறிப்பாக மஸ்ஜித் நிருவாகிகள் இவ்வறிவித்தலை பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பாவித்து மக்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வூட்டுமாறு அனைத்து பள்ளிவாசல் நிருவாகிகளிடமும் ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கிறது.


அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment