துணை தேடும் வழிப்போக்கர்களும் ஒற்றையடிப் பாதையும்! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 February 2020

துணை தேடும் வழிப்போக்கர்களும் ஒற்றையடிப் பாதையும்!1815ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி, பிரித்தானியரிடம் தனது வீழ்ச்சியை ஏற்றுக்கொண்டு கண்டிய இராச்சிய மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டான். தலதா மாளிகையின் புனிதத்துவம் மற்றும் பௌத்த மத மரபுரிமைகளைப் பேணுவது போக தனது பதவி உட்பட அனைத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு ஒதுங்கலானான்.அதற்கு முன் போர்த்துக்கீயர் – ஒல்லாந்தரின் காலணித்துவத்துக்குட்பட்டிருந்த போதிலும் கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சி பௌத்த மக்களை பெரிதும் பாதித்தது. கையளவு பௌத்த சிந்தனையாளர்கள் அதனை மேலோங்கச் செய்ய அங்கிருந்து போராட ஆரம்பித்தார்கள். 19ம் நூற்றாண்டின் காலிறுதியில் அது பௌத்த பேரினவாத சிந்தனையாக வடிவம் பெற்று அங்கிருந்து தவண்டெழுந்து 2019 வரை பல வழிகளில் எழுச்சி பெற்றது.

மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை சமூகங்கள் குறி வைக்கப்பட்டன. அடக்கியொடுக்கப் பட்டன. ஆக்கிரமிக்கப்பட்டன என்ற வரலாற்று உண்மைகளை 'வெள்ளையடித்து' மறைக்க முடியாது.

அரசியல் போராட்ட தோல்வியின் பின் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ் சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டதற்கும் இந்த எழுச்சி காரணியாக இருந்தது. இன்றும் கூட தொங்கும் உணர்வுகளுடனும் நம்பிக்கையின்மையுடனுமேயே வடபுலத்து தமிழ் சமூகம் தமது காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

20ம் நூற்றாண்டில் உணர்வோடோங்கிய சுதந்திர வேட்கைக்கு சிங்கள – முஸ்லிம் என்ற பாகுபாடு இருக்கவில்லை. அன்றைய தலைவர்கள் தாமும் தேசத்தின் புதல்வர்கள் என்ற அடிப்படையில் தேச விடுதலைக்காக முழு மூச்சுடன் போராடினார்கள். 1915 முஸ்லிம் விரோத இன வன்முறையின் சூத்திரதாரிகள் பிரித்தானியர்கள் வீட்டுக்காவலில் வைத்த போது அவர்களை விடுவிக்கக் கோரி ஆஜரான பொன் இராமநாதனை அக்கால கடும்போக்குவாத சிங்கள தலைமைகள் தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கொண்டாடினார்கள்.

அங்கிருந்து அடுத்த அரை நூற்றாண்டுக்குள் அவர் சார்ந்த தமிழ் சமூகம் இன விடுதலைப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருந்தது இலங்கையின் சுதந்திர அரசியல். சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாடு, சமவுரிமை நிராகரிக்கப்பட்டதன் விளைவாகவே அதனை பார்க்க முடிகிறது. ஆயினும், அப்போராட்டம் நாளடைவில் அரசியலுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகி சொந்த மக்களையே கொன்றொழித்து ஈற்றில் தானும் அடங்கிக் கொண்டது. இவையெல்லாம் சுதந்திரத்துக் பின்னான இலங்கையில் அரங்கேறிய வரலாற்று நிகழ்வுகளும் பாடங்களும்.

அடக்குமுறை மேலோங்கும் கால கட்டங்களில் அடுத்தது யார்? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அந்த அச்சம் இருந்த போதிலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல் தோழர்களாகப் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் 2012 முதல் கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டது. அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் ஏலவே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டவை என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள மறுத்த முஸ்லிம் சமூகத்தி;ன் அரசியல் மற்றும் மார்க்கத் தலைமைகள் தமது கையேறு நிலையை மறைக்க முற்பட்டனவே தவிர சூழ்நிலை விடுதலையை முன் கூட்டியே திட்டமிடவில்லை.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கேயேறு நிலையை மிகத் தெளிவாக விளக்கக்கூடிய வரலாறு தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் அதனை தெளிவாக விளக்குவதற்கு மிகச் சிறந்த நபர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவாகும். அவரது பதவிக் காலத்தில் கொழும்பிலும் லண்டனிலுமாக மூன்று தடவைகள் சமூக விவகாரங்கள் பற்றி அவரிடம் நேரடியாக அளவளாவியிருக்கிறேன். அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு இருக்கும் தலையாய பிரச்சினை 'பதவி' ஒன்றேயென்பதே அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.

தனது தேர்தல் வெற்றிக்குப் பங்களித்த முஸ்லிம் சமூகத்துக்கு பதவிகளை வழங்கித் தன் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டதாக இறுதியாக 2018 ஒக்டோபரில் அவரை சந்தித்த போதும் பெருமையாகக் கூறிக் கொண்டார். ஆட்சிக் கவிழ்ப்பு களேபரத்தின் மத்தியிலும் அன்றிரவு கொல்லுப்பிட்டியில் முஸ்லிம் நபர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலையொன்றை திறந்து வைத்து விட்டே இந்தப் பெருமையையும் அவர் மீள எனக்கு நினைவு படுத்தியிருந்தார்.

தான் ஒரு போதும் முஸ்லிம் சமூகத்தை மறக்கவில்லையென்பதே அவர் திரும்பத் திரும்பச் சொன்ன விடயம். சமூகத்துக்கு நன்றிக் கடனை செலுத்துவதாக எண்ணிக் கொண்டு அரசியல் வியாபாரிகளுக்கு பதவிகளை வழங்கி அழகு பார்த்த அவர் மனத் திருப்தியுடனேயே இன்றும் இருக்கிறார். சமூகத்தின் பெயரால் அந்த பதவிகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரிகள் மக்களுக்கு எதைச் செய்தார்கள் என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பு இன்னும் இரு மாதங்களுக்குள் கிடைக்கும் என்பதால் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆயினும், நேர்மையாக நின்று நிதானித்துப் பார்த்தால் திரும்பிச் செல்ல முடியாத ஒற்றையடிப் பாதையில் துணை தேடும் வழிப்போக்கர்களாகவே இன்றைய சமூகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பற்றிப் பிடித்துப் பயணித்த அரசியல் பயணத்தில் எங்கு செல்வதென்ற தத்தளிப்போடு முஸ்லிம் சமூக அரசியல் தடுமாறிக் கொண்டிருக்க, எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்தக் கூடிய புதிய பிரதிநிதிகளைத் தேடிக் கொண்டிருக்கிறது பொதுஜன பெரமுன.

இலங்கையில் பொதுவாகவே வாழ்வியல் இரு விடயங்களுக்குள் முடங்கிக் கொள்கிறது. ஒன்று சார்ந்திருத்தல் மற்றது சாராதிருத்தல். நடுநிலைமை என்ற பக்கம் கடந்த தேர்தலோடு முற்றாகத் தொலைந்து விட்டது. எனவே, சார்ந்திருத்தல் ஊடான அடைவுகளுக்கும் சாராமலிருப்பதனால் வரக்கூடிய இழப்புகளுமே வாழ்வியலில் தாக்கம் செலுத்துகிறது.

கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் பியகம, குறிப்பாக மல்வானை பகுதியில் கழிவுகளை அகற்றாமல் அம் மக்கள் தண்டிக்கப்பட்டார்கள். மாபோலயிலும் இந்நிலை தொடர்ந்தது. ஆனாலும் அதைப் பற்றி வாய் திறக்கச் சென்றால் தமது ஊரும் நாறிப் போய்விடும் என்ற அச்சத்தால் அதைப்பற்றி யாரும் பேசத் துணியவில்லை. எனவே, சார்ந்திருந்தே சாதிக்கலாம் என்ற நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். நடுநிலைவாதிகள் காணாமல் போனதும் இதற்குக் காரணம்.

கடந்த புதன்கிழமை 12ம் திகதி நீர்கொழும்பு, கொடல்கெலே வனப்பகுதியை சுத்திகரித்து அங்கு சிறுவர் பூங்கா ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தொடர்பிலான விவகாரம் பேசுபொருளானது. காரணம் அமைச்சரும் அவரைச் சுற்றியிருந்த அடாவடி குரல்களுக்கும் மத்தியில் மிகவும் துணிச்சலாக எழுந்து நின்று காடழிப்பை அனுமதிக்க முடியாது என குரல் கொடுத்து அந்த திட்டத்தைத் தடுத்த தெவானி ஜயதிலக்க என்ற பெண் அதிகாரி.

தான் சட்டத்தை ஒரு போதும் மீறப் போவதில்லையென பேசிய அவர், இருப்பதே கொஞ்சம் வனப்பகுதி, அதையும் அழிக்க விட முடியாது, இப்படியே போனால் நாளடைவில் மூச்செடுப்பதற்கு ஒக்சிஜனுக்கு எங்கு போவது? என ஆணித்தரமாக கேள்வியெழுப்பியிருந்தார். சிறுவர் பூங்கா அமைத்தால் கோடிகளை அள்ளக் கூடிய வர்த்தக நினைப்பில் அங்கிருந்த ஒரு நபர், ஒக்சிஜன் இருந்து என்ன செய்வது? என்றும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

தன் மூச்சுக்கு எது தேவை? என்றே தெரியாமல் கருத்துரைக்கும் அந்த நபருக்கும் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அத்தனை வித்தியாசம் இல்லையென்பதை ஏற்றுக் கொள்ளலாம். தாமிருக்கும் பக்கத்திலிருந்து கல்லொன்றை வீசி விட்டு எங்கு விழுந்தாலும் இலாபம் பார்க்கவே அவர்கள் காத்திருக்கிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தேடும் புதிய முஸ்லிம் தலைவர்களுள் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் ஆளுனர் முசம்மிலும் முன் வரிசையில் சீரும் சிறப்புமாக அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த வரிசையிலும் ஒரு சில பிரமுகர்கள் இருந்தாலும் இவ்விருவதும் இன்று பளிச்சென தெரிந்து கொண்டிரு;கிறார்கள். கூட்டங்களுக்கு செல்லும் அலி சப்ரி மிகத் தெளிவாக ' யா அல்லாஹ் எங்களுக்கு சிறந்த தலைவரைத் தாருங்கள் என்று நோன்பு பிடித்து துஆ கேட்டோம், இறைவன் தந்திருக்கிறான். இப்போது அவரை ஏற்றுக் கொண்டு அவரோடு பயணிக்க வேண்டும்' என்று கூறுகிறார்.

இன்னொரு புறத்தில் முசம்மிலை காப்பாற்றுவது குருநாகல் முஸ்லிம்களின் தலையாய கடமையென அவரை ஆசீர்வதிக்கும் சிங்கள அரசியல் தலைமைகள் கூறுகின்றன. அநகாரிக தர்மபாலவை காப்பாற்ற இங்கிலாந்து சென்று வாதாடிய பொன் இராமநாதன் அவ்வப் போது ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லையென்கின்ற அதேவேளை சமூக அரசியல் சென்று கொண்டிருக்கும் ஒற்றையடிப் பாதையை ஞாபகப்படுத்தாமலும் இருக்க முடியவில்லை.

ஹக்கீம் - ரிசாத் சென்ற பாதையை விட்டு அவர்களால் வெளியேற முடியவில்லை, அதே போன்றே புதியவர்களும் தாம் பயணிக்கும் பாதைகளை விட்டுத் திரும்பி வரப் போவதில்லை. இரு தரப்புக்கும் இருக்கும் பொதுக் குணம் 'சந்தர்ப்பவாத' கட்சித்தாவலாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கான பிரத்யேக பதவிப் பேர வியாபாரம் தற்போது மவுசிழந்திருக்கிறது என்பதால் இப்போது செல்லும் பாதையில் திரும்பி வர இடமில்லை.

சமூகத் தளத்திலிருந்து திசை மாறிய இலங்கை அரசியல் 'விசுவாசக்' கோட்டுக்குள் அடங்கியிருப்பதையே தெரிவாக்கிக் கொண்டது. அதற்கு மிகச் சிறந்த உதாரணபுருசர்களாக இருந்த காலஞ்சென்ற அரசியல்வாதிகள் காட்டிய வழிமுறைகளையே இப்போதுள்ளவர்களும் பின் பற்றுகிறார்கள். இதில் யாரிடம் தமது அரசியல் பயணத்தை சமூகத்தளம் நோக்கியதாக திருப்பக் கூடிய வலுவும், சிந்தனையும் இருக்கிறது? என்ற கேள்விக்கே நாம் விடை தேடிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 20 வருடங்களாக முஸ்லிம் சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டு வந்த இணக்கப்பாட்டு அரசியல் என்பது அரசியல் வாதிகளின் 'இருப்பு' (survival) சார்ந்தது என்பதை மக்கள் நன்கறிந்து விட்டார்கள். ஆனாலும் ஒரு அரசியல்வாதியின் இருப்பில் தனது வளர்ச்சியையும் இருப்பையும் தீர்மானிக்கக் காத்திருக்கும் வகையறாக்கள் இன்னும் சமூகத்தில் இருப்பதனால் இணங்கிச் செல்பவர்களுக்கான வாய்ப்பு இருந்து கொண்டேயிருக்கும்.

எனவே இணங்கிச் செல்வோருக்கும் கூட்டம் சேர்வது இயல்பாக எதிர்பார்க்க வேண்டியதொன்று. இப்படியே தம் பிரதிநிதிகளை ஒரு பக்கம் இழுத்துச் செல்லும் சமூகம் அவர்களோடு சேர்ந்து ஒற்றையடிப் பாதையில் பயணிக்கும் வழிப்போக்கர்களாகவே இருப்பதை உணர்கிறது. ஆனால் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது.

பத்துப் பேர் செல்லக் கூடிய படகில் பதிதொரு பேர் பயணிக்கலாம். ஆனால், மூழ்கும் அபாயம் வரும் போது யாராவது ஒருவர் நீரில் குதித்து நீந்தத் தயாராக வேண்டும். அந்த ஒருவராக இருப்பதற்கு யாரும் இல்லாவிட்டாலும் அருகில் உள்ள ஒருவரை தள்ளி விடக்கூடியவர்கள் நிறையவே இருப்பார்கள். இது பொதுவான மனித இயல்பு. இந்த இயல்பிலிருந்து முஸ்லிமாக இருப்பதனால் நாம் எவ்வாறு வேறுபடுகிறோம்? என ஒவ்வொருவரும் சிந்திக்கும் கோணம் கொண்டே அவரவர்க்கு சமூகத் தளம் பற்றிய தெளிவு பிறக்கும். அதன் பின்னர் அலிசப்ரி சொல்லும் அங்கீகரிக்கப்பட்ட துஆ தொடர்பில் ஆராயும் பக்குவமும் பிறக்கும்.

மறுபுறத்தில் சிங்கள சமூகம் தமது நூற்றைம்பது வருட கால எழுச்சியின் வெற்றிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் தாமே பெரும்பான்மை சக்தியென்பதை நாடாளுமன்ற தேர்தலிலும் நிரூபித்தாக வேண்டும் என்ற வேட்கை பொங்கிக் கொண்டிருக்கிறது. நிலை ஒப்பீட்டின் அடிப்படையில் ரணில் - மைத்ரி கூட்டாட்சியின் முதல் 100 நாட்களுக்கும் புதிய அரசின் 100 நாட்களுக்குமிடையில் பாரிய வித்தியாசம் எதுவுமில்லை. ஆனாலும் பெரமுனவின் வெற்றி மேகம் தொடர்ந்தும் இன எழுச்சியெனும் அடிப்படையில் தங்கியிருக்கிறது.

இந்த இன எழுச்சியும் 2010 முதலே பேசப்பட்டு, உணர்வுகளோடு முட்டி மோதி, வன்முறையாக வெடித்து, ஆக்ரோசமாகப் பாய்ந்து, அடக்குமுறையாக விரிந்தே வளர்ந்திருக்கிறது. ஆனாலும், காலம் வரலாற்றை மாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆதலால், யார் யாரெல்லாம் திகன வன்முறைகளுக்கு சூத்திரதாரிகள் என இதுவரை அறியப்பட்டார்களோ அவர்களே இப்போது கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் விடிவெள்ளிகளாக பள்ளிவாசல்கள், முஸ்லிம் பொது அமைப்புகளின் நிகழ்வுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது அங்கு இடம்பெறும் அனாச்சாரங்கள் காரணம் என சதாம் ஹுசைன் தெரிவித்தார். வளைகுடா யுத்தம் ஆரம்பித்தது. உலகமெல்லாம் வாழும் இஸ்லாமியர்கள் 'யா அல்லாஹ், முஸ்லிம்களுக்கு வெற்றியைக் கொடு' என பிரார்த்தித்தார்கள். சதாம் ஹுசைனின் மரணத்தோடு அமெரிக்கா தனது வெற்றியை அறிவித்தது. அப்போது துவண்டு போயிருந்த நிலை பற்றி நண்பர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம்களுக்கு வெற்றியைக் கொடு என்று தானே துஆ கேட்டோம், எந்த நாட்டு முஸ்லிம்களுக்கு என்று கேட்கவில்லை ஆதலால் குவைத் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்து விட்டது என்றார். அது போலவே இன்று அலி சப்ரியும் தமது வாக்கு வங்கியைப் பலவீனப்படுத்திக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை நோக்கி இறைவனின் அருள் பற்றி விளக்கமளிக்கிறார். 

இப்போது அவரும் துணை தேடுகிறார், ஒற்றையடிப் பாதையில் பயணித்துக் கை தேர்ந்த மற்ற வித்தகர்களும் துணை தேடுகிறார்கள். இவர்களால் இழுத்துச் செல்லப்படும் வழிப்போக்கர்களாக மாறிக் கொண்டுள்ள மக்களும் தமக்குப் பின்னால் யாராவது வர மாட்டார்களா? என துணை தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 'இலக்கு' எது? என்பது பற்றி ஒருமித்து அமர்ந்து சிந்திக்க யாரும் தயாராக இல்லை.

அதனை சிந்திப்பதன் ஊடாகத் தமக்குக் கிடைப்பவற்றை இழக்க.. தலைவர்களும் விரும்புவதில்லை மக்களும் விரும்புவதில்லை என்ற நிலையில் பயணம் தொடர்கிறது. 

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment