அநுராதபுரம் முதல் மஹர வரை...! - sonakar.com

Post Top Ad

Friday 28 February 2020

அநுராதபுரம் முதல் மஹர வரை...!


அண்டை நாடான இந்தியாவின் தலைநகர் டெல்லி பற்றியெறிந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் இலக்கு வைக்கப்பட்டு படு பயங்கரமான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உயிரிழப்புகள், காயப்பட்டோர், வாழ்விழந்தோர் என்ற பட்டியலும் நீண்டு கொண்டு செல்கிறது.



ஒரு கணம் தரித்து சிந்திக்கையில், அளுத்கம ஞாபகம் வருகிறது, கிந்தொட்ட, திகன, குருநாகல், மினுவங்கொட என பல ஊர்களின் பெயர்கள் ஞாபகம் வருகிறது. ஆனால், அவற்றை ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு எம் உலமாப் பெருந்தகைகள், அரசியல் விற்பன்னர்கள், பேஸ்புக் ஆலிம்கள் எல்லாம் அனுமதி தருவார்களா? அப்படி அனுமதி தந்தால் அது அவர்களின் சுயநலன்களைப் பாதிக்காதா? என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. எனினும், அதையும் தாண்டிய சாதாரண மனித – சமூக நேயத்துடன் சிந்திக்காமலும் இருக்க முடியாது, சிந்தனைச் சுதந்திரமும் இல்லாத அடிமை வாழ்வில் பயனும் இல்லையென்பதால் சிந்திக்க வேண்டியுள்ளது.

2011 செப்டம்பரில் அநுராதபுரத்தில், சுமார் 400 – 500 வருடங்கள் பழமை வாய்ந்த சியாரம் ஒன்றோடிணைந்திருந்த கட்டிடம் தகர்க்கப்பட்டது. அப்போது பொலிசார் புடை சூழ்ந்திருக்க தம்ம தேரரும் அவரது சகாக்களும் தம் வேட்கை தீர இடித்துத் தள்ளினார்கள். கிறீஸ் யக்கா யுகத்தில் இது பற்றிய சிந்தனை எம் மக்களை அண்டவில்லை. பலர் சியாரம் உடைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் அல்ஹம்துலில்லாஹ் சொன்னார்கள். இன்னும் பலர் நமக்கேன் இந்த வம்பென ஒதுங்கியிருக்க விரும்பினார்கள். இன்று தொட்டது பிடித்ததற்கெல்லாம் 'முஸ்லிம் சமூகம்' என்று உணர்வூட்டிக் கொண்டிருக்கும் அக்கால அமைச்சர் ஒருவர், அப்படியா? எனக்கு யாரும் இது பற்றி சொல்லவே இல்லையே என்றும் பதிலளித்தார். 

அங்கே, பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சியாரம் ஒன்றிருந்தது சமூகத்தவர் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளம் என்கிற வாதம் கொள்கை இயக்கங்களினால் பல கூறுகளாக பிரிந்து போயிருந்த சமூகத்தவர் மத்தியி;ல் பலவீனமான வாதமாகவே அக்காலப் பகுதியில் இருந்தது. இச்சம்பவத்திற்கு சில வருடங்கள் முன்பிருந்தே புகைந்து கொண்டிருந்த முஸ்லிம் விரோத உணர்வைப் புரிந்து கொண்டு, அது தொடர்பிலான சமூக விழிப்புணர்வு பற்றி பேச முன் வந்திருந்த ஆர்வலர்கள் கூட அநுராதபுர சம்பவத்தை ஒரு துவக்கப் புள்ளியாகப் பார்க்கத் தயங்கினார்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்ற அக்கால அமைச்சர் ஒருவர், வேறு எந்த நாட்டிலும் இல்லாதவாறு இலங்கை வானொலியில் அதான் ஒலிக்கிறது, ஒவ்வொரு ஊரிலும் பல பள்ளிவாசல்கள் இருக்கிறது, முஸ்லிம் வர்த்தகங்கள் ஓஹோ என நடந்து கொண்டிருக்கிறது. அரபு நாட்டவரே வந்து இது பௌத்த நாடா இல்லை முஸ்லிம் நாடா? என கேட்கிறார்கள். இப்போது ஏன் நாம் சந்தேகப்பட வேண்டும் என விளக்கமும் சொன்னார்.

கருத்து வேறுபாடுகளால் பின்னிப் பிணைந்ததுதான் சமூகம். ஆதலால், ஒருவரின் எண்ணப்பாடே இன்னொருவருக்கு இருக்க வேண்டும் என்ற எந்தத் தேவையும் இல்லை. ஆயினும், பொது நோக்கு என்பதன் அடிப்படை தெளிவானது. எதை முற்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அந்த சிந்தனை திசை மாறக்கூடும்.

இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம் விரோத சக்திகள் தமது அடிப்படையில் மிகத் தெளிவாக இருக்கின்றன. ஆதலால், ஆட்சி – அதிகார மாற்றங்களின் போது முகங்கள் மாறுகின்றனவே தவிர அடிப்படை மாறவில்லை. இங்கு 'அடிப்படை' என்று சொல்லப்படுவது எது? என்பதை மறைவானவற்றை அறியாமல் இருந்தால் மஹ்ஷரில் கேள்வி கணக்கிலிருந்து தப்பலாம் என்ற எண்ணம் கொண்டோர் எப்போதும் அறிய விரும்;பப் போவதில்லை. ஆயினும், பெரும்பாலானவர்கள் சொல்லவும் - சொல்ல முடியாமலும் தவிக்கும் உணர்வாளர்கள் என்ற புரிதல் இருப்பதனால் அதைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை.

30 வருடங்கள் நீடித்த உள்நாட்டு யுத்தமும் அதன் விளைவுகளும் ஒரு பக்கம் இருக்க, உலகிலேயே சிங்கள பௌத்தர்களுக்கான ஒரே நாடான இலங்கை துண்டாகிவிடுமோ என்ற அச்சம் பௌத்த மகா சங்கத்திடம் இருந்து வந்ததை இப்போதாவது உணர்ந்தாக வேண்டும். பிரித்தானியர் காலணித்துவத்தின் போது மேலேழுந்த இவ்வுணர்வுக்கு சரியான தீனியிட்ட பொற்காலம் என்றால் அது 2005 – 2010 காலப்பகுதியாகும். 

தமிழ் சமூகம் தமது அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ஆயத போராட்டமாக மாற்றிக் கொண்டதன் விளைவால் உள்நாட்டில் யுத்தமும் அந்த யுத்தத்தில் மேலோங்கியிருந்த அவர்களது உணர்வு தனித் தமிழீழம் என்ற சிந்தனைக்கும் வித்திட்டது. எனினும், காலப்போக்கில் அந்த சிந்தனையை ஆட்கொண்ட தேசிய அரசியல் உள்நாட்டு யுத்தத்தை முதலீடாக வைத்து காய் நகர்த்திக் கொண்டிருந்தது.

2005 ஆட்சி மாற்றம் வரைக்கும் இதுவே இலங்கையின் அரசியலின் நிலையாக இருந்த போதிலும், 1990 முதல் அதுவரையான தென்பகுதி அரசியலின் போக்கு மாறுவதையுணர்ந்த புலிகள் அமைப்பினர் மஹிந்த ராஜபக்ச தரப்புடனான தேனிலவை முடிவுக்குக் கொண்டு அவரது சகோதரரும் அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபே ராஜபக்ச மீது தற்கொலைத் தாக்குதல் ஒன்றை 2006ல் நடாத்தியிருந்தனர்.

அங்கிருந்து விரிசல் கண்ட உள்நாட்டு யுத்தத்தின் போக்கு ஈற்றில் மஹிந்த அரசின் உறுதியான நிலைப்பாட்டினாலும் மாற்றுத் தேர்வுகளினாலும் 2009ல் முடிவுக்கு வந்தது. அது அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதி செய்தது மாத்;திரமன்றி பௌத்தர்களின் மேலாதிக்கத்தை மீள நிறுவுவதற்காக நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் சக்திகளுக்கும் நம்பிக்கையான அதிகார தளத்தை உருவாக்கியது.

ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்ச - சங்க சபைகளுக்கிடையில் நிறையவே முரண்பாடுகள் நிலவி வந்த போதிலும் கிறிஸ்தவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மத மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர் சக்தியொன்று கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்ற திட்டம் இணக்கப்பாட்டையெட்டியிருந்தது. 

யுத்த காலத்தில் இலங்கை அரசியல் வெகுவாக இன-மைய வட்டத்துக்குள் தள்ளப்பட்டிருந்தது. வடக்கையும் - கிழக்கையும் பிரித்துக் கேட்ட விடுதலைப் புலிகளுக்கு அரசியல் ரீதியிலான சவாலை ஏற்படுத்த முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கில் தனித்துவ அரசியல் வேட்கை உருவாவதையும் அது நிலைப்படுவதையும் தெற்கு அரசியல் களம் அக்காலத்தில் அனுமதித்திருந்தது. ஆயினும், அதே அரசியல் களம் 2009க்குப் பி;ற்காலத்தில் உறுதியான தனிச் சிங்கள அரசொன்றை உருவாக்குவதற்கு இது பெரும் தலையிடியாக அமைந்து விட்டதாகக் கருத ஆரம்பித்தது.

ஆயினும், முஸ்லிம்கள் நாட்டில் பரந்து வாழ்வதாலும் 30 வருட காலத்திற்குள் தேசிய அரசியலுக்குள் வெகுவாகக் காலூன்றியிருந்ததாலும் நேரடியாகவே அரசியல் காளத்தில் எதிர்ச் செயற்பாடுகளை உருவாக்குவது விபரீத விளைவுகளை உருவாக்கும் என்பதை கொள்கை வகுப்பாளர்கள் நன்குணர்ந்திருந்தனர். எனவே, கிறிஸ்தவர்களுக்கு எதிரான பௌத்த சக்தியை முஸ்லிம்களுக்கு எதிராகவும் விரிவடையச் செய்வதே பொருத்தமான வழிமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1950க் முற்பட்ட தேசிய அரசியல் களத்தில் பங்கேற்ற முஸ்லிம் சமூகப் பிரமுகர்கள் பெரும்பாலும் அரசியலை தமது தொழிலுக்கு அப்பாலான ஒரு சேவையாகவே கருதிச் செயற்பட்டார்கள். அக்காலப் பகுதியில் தேசிய அரசியலில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் கல்வித் தகைமைகயுள்ளவர்களாக, தொழில்சார் நிபுணர்களாக, பிரதிபலன் எதிர்பாராத சமூக சேவகர்களாகவும் இருந்ததோடு தம்மால் தம் சமூகத்துக்கு எவ்வித கெடுதியும் வந்து விடக் கூடாது என்பதிலும் தமது செயற்பாடுகள் சமூகத்தை முன்நிறுத்தியதாகவே இருக்க வேண்டும் என்பதிலும் கூடக் கவனமாக இருந்தார்கள்.

ஆயினும், யுத்த காலத்தின் போதான இலங்கை அரசியலின் களமாற்றம், முஸ்லிம் அரசியல் மற்றும் மார்க்கத் தலைமைகளின் போக்கும் சுயநலத்தின் உச்சத்தை அண்மித்திருந்ததனால் மக்கள் நலன்  'பொது அடிப்படை' என்ற பாதையிலிருந்து விலகியிருந்தது. இந்த பலவீனத்தை 2010 முதல் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இன மேலெழுச்சிக் கொள்கையாளர்கள், நன்கு திட்டமிட்டு இன்றைய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நிலவி வரும் கருத்துப் பிணக்குகளை தமது ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆதலால், சலுகைகளுக்கும் - உரிமைகளுக்குமிடையிலான வித்தியாசத்தை உணராத தலைமுறையாகவும் மார்க்கக் கொள்கை ரீதியிலான பிளவுகளுக்கு மத்தியிலும் தத்தளிக்கும் இன்றைய சமூகத்தில் பொது அடிப்படை மற்றும் இணக்கப்பாடு எட்டாக்கனியாக இருக்கிறது.

ஹலால் சான்றிதழ் விவகாரம் இதற்கு மிகப்பெரும் வரலாற்று உதாரணமாகும். வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தலையைக் கொடுத்து மாட்டிக் கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நிலைப்பாடு சமூகத்துக்குள்ளேயே முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. ஆக, ஒரு சாரார் பௌத்த மேலாதிக்கவாதிகளினால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்கள். எந்தத் தவறு செய்தாலும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற பற்றுக் கொண்டவர்கள் மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் மறுத்தார்கள். மேலும் சிலர் நமக்கேன் வம்பு என அமைதி காத்தார்கள்.

முஸ்லி;ம் அரசியலின் உச்சகட்ட அடைவம் அதிகாரமும் கிழக்கை மையப்படுத்தியது என மார்தட்டிக் கொண்டிருந்த அரசியல் சக்திகளோ மறுபுறத்தில் மாயக்கல்லியில் புத்தர் சிலை முளைத்த போது துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி ஒளிந்தார்கள். பின் சுதாரித்து வெளியில் வந்து, சிலை வைத்தால் நம் நம்பிக்கை கெட்டு விடுமா? என்று வீர விளக்கமும் அளித்தார்கள். அதையும் கூட சார்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

மஹியங்கனையி;ல் அதுவும் பிரதேசத்தின் சிங்கள அரசியல்வாதியின் தயவிலேயே பதிவு செய்யப்படாமல் உருவாகி இயங்கிய பள்ளிவாசலை இழுத்து மூடும் நிலை வரும் வரைக்கும் அது பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் இருந்தவர்கள் இழுத்து மூடியதும் வேறு எங்காவது தொழுது கொள்ளலாம் என மனம் மாறிக்கொண்டார்கள்.

தம்புல்ல பள்ளிவாசலை யார் தாக்கியது? அதெல்லாம் பொய் என ஓடிச் சென்று பேரினவாதத்தைப் பாதுகாத்த முஸ்லிம் அரசியல்வாதிகள், பின்னர் அங்கு நாடறியப் பிரச்சினை நடந்த போது காணாமலே போய் விட்டார்கள்.
அளுத்கமயில், கிந்தொட்டயில், திகன, அம்பாறை, குளியாபிட்டிய, மினுவங்கொட என பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்ற போதிலும் அவ்வப்போது மேலெழும் உணர்வுக்கு தற்காலிக அடக்கத்தைத் தேடிக் கொண்டு மறு நாளே எதுவுமே நடக்காதது போன்று சமூகத்தின் பெரும்பகுதி வாழப் பழகிக் கொண்டுள்ளது.

எந்தப் பக்கம் திரும்பி விடை காண்பது? எந்த அடிப்படையில் நியாயத்தைத் தேடுவது? எங்கே – எந்த வழியில் போராடுவது என்ற விளக்கம் பொது மக்களுக்கு மாத்திரமன்றி அவர்களை அரசியல் ரீதியாக வழி நடாத்துவதாகவும் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் கூறிக்கொண்டு திரியும் அரசியல்வாதிகளுக்கும் இல்லை.

பெப்ரவரி 5ம் திகதி மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருந்த ஜும்மா பள்ளிவாசல் கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திறக்கப்பட்டது. ஆயினும், இம்முறை அது பள்ளிவாசலாக இல்லாமல் அதிகாரிகளின் பாவனைக்கான ஒரு கட்டிடமாக பௌத்த சமய வழிபாடுகளுடன் அடையாளப்படுத்தப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தோன்றிய பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில் குறித்த பள்ளிவாசல் மூடப்பட்டிருந்தது. ஆனால், அது திறக்கப்படும் போது பல நாட்கள் 'கைவிடப்பட்டிருந்த' கட்டிடம் திருத்தியமைக்கப்பட்டது என்ற விளக்கத்தோடு சிறைச்சாலை நிர்வாகம் அதன் பயன்பாட்டை மாற்றியமைத்திருந்தது. இது குறித்து மஹர சிறைச்சாலை நிர்வாகத்தினால் இயக்கப்படும் சமூக வலைத்தள பக்கத்தில் இடம்பெற்ற கருத்தொன்றில், பிறிதொரு நபர் 'நாங்கள் நீண்ட நாட்கள் முயற்சி செய்து கை கூடாத விடயத்தை முடித்துவிட்டீர்கள்' என்று பாராட்ட, அந்த பக்கத்தை நிர்வகிப்பவர், 'ஆம்! செய்து முடித்து விட்டோம், நீண்ட நாள் இலக்கு நிறைவேறி விட்டது' என்று பதிலளித்திருந்தார்.

இந்த உரையில் நான் சுட்டிக்காட்ட விரும்புவதும் இந்த நீண்ட நாள் இலக்கு என்பதையும் அதன் அடிப்படையையுமே. கருத்து மோதலினால் பல கூறுகளாகப் பிரிந்துள்ள இன்றைய சமூகம் சிறைச்சாலைக்குள் பள்ளிவாசல் எதற்கென்றோரு கேள்வியையும் கேட்கத் தவறவில்லை. ஆனாலும், அந்த பள்ளிவாசல் 100 வருடங்களாக இயங்கி வருகிறது, அதற்கொரு வரலாறு இருக்கிறது, அந்த இடத்தில் ஜும்மா பள்ளிவாசல் ஒன்றின் தேவை இதுவரை இருந்தே வந்தது என்ற எந்த நியாயத்தையும் அவர்கள் ஆராயத் தயாரில்லை.
அவர்களது ஆட்சியில் தானே மூடப்பட்டது என்ற கட்சி விவாதங்களையும் அவதானிக்கத் தவறவில்லை. மஹியங்கனவுக்கும் நெலுந்தெனியவுக்கும் மஹரவுக்குமிடையிலான இணைப்புக் கோடு பற்றி சிந்திக்கும் பொது அடிப்படை எம்மவரிடத்தில் இல்லையென்பதால் பெரும்பாலும் ஒவ்வொரு சம்பவங்களும் இவ்வாறு தனித்தனி நிகழ்வுகளாக ஓரங்கட்டப்படுகிறது. அரசியல்வாதிகளும் இவ்வாறான சம்பவங்கள் நடந்தால் கண்டன அறிக்கை விடுவது மாத்திரமே தமது கடமையென எண்ணிக் கொண்டிருக்க, முஸ்லிம் 'அடையாள' வாழ்வியல் மிக ஆழமாகக் குறி வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் வாழ்வியல் கலாச்சார மற்றும் பண்பாட்டு விடயங்கள் பேரினவாதிகளின் கண்களைக் குத்தும் வகையில் நடந்து கொள்வதில் எம்மவர் பங்கும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லையாயினும் கூட மனித வாழ்வியலின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தரும் அரசியல் யாப்பைக் கொண்ட ஒரு தேசத்தில் பொதுச் சிந்தனையின் வரட்சியால் இன்றைய முஸ்லிம் சமூகம் தம்மைத் தாமே இரையாக்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் மொத்த வரைபையும் அதன் இயக்கத்தையும் முழுமையாக அறிந்த எந்தவொரு முஸ்லிம் அமைப்போ, மார்க்கத் தலைவரோ, அரசியல்வாதியோ கூட இல்லையென சொல்லலாம். ஆனால், பேரினவாத சக்திகளிடம் மிகத் தெளிவான பட்டியல் இருக்கிறது. புர்காவுக்கு எதிரான தடை அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம் வாழ்வியல் அடையாளத்துக்கு எதிரான போராட்டம். எம்மவருக்கோ கொள்கை இயக்கங்களுக்கிடையிலான அபிப்பிராய பேதத்தின் பேசு பொருள்.

உடன்பாட்டுக்கே முரண்பாடு காணும் இந்த சமூகத்தில் இந்த மாதம் மஹர... அடுத்த மாதம் எது நடந்தாலும் அதுவும் வரலாறு!

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment