யார் சிறந்தவர்? - sonakar.com

Post Top Ad

Friday, 4 October 2019

யார் சிறந்தவர்?


2020 முதல் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கான இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நெருங்கி வருகிறது. நவம்பர் 16ம் திகதி இடம்பெறப் போகும் இத்தேர்தலில் மக்கள் அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் வெற்றி பெறும் நோக்கில் கட்சிகள் ஊடாகவும், சுயாதீனமாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.



2009 யுத்த நிறைவையடுத்து 2010ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தேர்தல் இடம்பெற்றிருந்த போதிலும். அத்தேர்தலில் மூன்று முஸ்லிம்கள், தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். எதிர்பார்த்தபடி 57 வீத வாக்குகளைப் பெற்று மஹிந்த ராஜபக்ச முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி வாக்கு வங்கியின் ஊடாக 40 வீத வாக்குகளை அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த சரத் பொன்சேகா பெற்றிருந்தார். அதற்கடுத்ததாக லலித் அத்துலத் முதலி – காமினி திசாநாயக்க உருவாக்கிய ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருந்த முஹம்மத் காசிம் முஹம்மத் இஸ்மாயில் 39,226 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார். அத் தேர்தலில் 2,007 வாக்குகளைப் பெற்றிருந்த அனைவரும் பிரஜைகள், அனைவரும் மன்னர்கள் என்ற அமைப்பின் முத்துபண்டார தெமினிமுல்ல என்பவர் இறுதியிடத்தைப் பெற்றிருந்தார்.

ஆக, எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஏதோ சில ஆயிரம் வாக்குகள் அவர்களை வந்தடையப் போகிறது என்பது எதிர்பார்க்கப்படும் ஒரு விடயம். எனினும், இம்முறை போட்டி சற்று உக்கிரமாக இருக்கும் என்று கணிக்கும் அளவுக்கு மக்களுக்கு அறிமுகமான சில பெயர்கள் களமிறங்கியுள்ளன. சஜித் பிரேமதாச – கோட்டாபே ராஜபக்ச தவிர, அநுர குமார திசாநாயக்க மற்றும் மஹேஷ் சேனாநாயக்க போன்றவர்கள் மொத்த வாக்கின் சில பங்குகளை அள்ளிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் தம் அபிப்பிராயங்களை தீர்மானிக்கும் விடயங்களாக வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம், அவர்களது மேடைப் பேச்சுக்கள், நடவடிக்கைகள் மற்றும் தாம் விரும்பும் கட்சிகளின் தெரிவு என பல்வேறு காரணிகள் காணப்படும். ஈற்றில், சில வேளைகளில் தாம் விரும்பிய – விரும்பாத ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுவதைக் காணும் - ஏற்றுக்கொள்ளும நிர்ப்பந்தமும் ஏற்படுவதுண்டு.

இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982ம் ஆண்டு இடம்பெற்ற போது 81 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருந்தது. இதன் போது மொத்த வாக்காளர் தொகை 8.14 மில்லியனாக இருந்தது. அதில் 6.522 மில்லியன் வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டதுடன் 80,470 வாக்குகள் நிராகரிக்கப்பட்டனவையாகவும் பதிவாகியுள்ளது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவான ஜே.ஆர். ஜயவர்தன 52 வீத வாக்குகளை (3.45 மில்லியன்) பெற்றிருந்த அதேவேளை இரண்டாவது இடத்தைப் பிடித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேகடுவ 39 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். மூன்றாமிடத்தைப் பெற்ற ஜே.வி.பி தலைவர் ரோஹன விஜேவீர பெற்றிருந்த மொத்த வாக்குகள் 273,428 ஆகும். 

1977 நாடாளுமன்ற தேர்தலில் 18 ஆசனங்களை வென்று இரண்டாவது பாரிய சக்தியாக தமிழர் விடுதலைக் கூட்டணி பரிணாமித்திருந்த போதிலும் (6.75 வீதம்), 1982 ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் குமார் பொன்னம்பலம் பெற்ற மொத்த வாக்குகள் 173,934 ஆகும். அதில் அரைப் பங்கு யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பதிவாகியிருந்தது (87,263). தேசிய வாக்குப் பதிவு என்று வரும் போது மக்களின் மனவோட்டம் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை இங்கிருந்து கணிப்பிட ஆரம்பிக்கலாம்.

1982க்குப் பின்னர் இறுதியாக 2015ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலேயே 81.52 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கிறது. எனினும் இதன் போது பதிவு செய்யப்பட்டிருந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கை 15,044,490 ஆகும். அதில் 140,925 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட அதேவேளை 12,264,377 மொத்த வாக்குகள் பதிவாகியிருந்தது. சமகாலத்தில் நிலவிய மக்கள் மனவோட்டம், ராஜபக்ச குடும்பத்தின் மீதான அதிருப்தி போன்ற காரணிகள் முந்தைய தேர்தல்களைவ விட 5 முதல் 6 வீத வாக்குப் பதிவினை உருவாக்கியிருந்தது என்றால் மிகையில்லை.

எனினும், இம்முறை அது போன்ற ஒரு உணர்வோட்டம் இருப்பதற்கான நியாயம் எதுவும் இல்லை. ஆயினும் தமது தரப்பின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கக் கூடிய மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருப்பதனால் அதன் உந்துதலில் குறைந்தது 75 வீத வாக்குப் பதிவினை எதிர்பார்க்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணியின் கடின உழைப்பிலேயே மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவார்கள் என்பதே கள யதார்த்தம். கடந்த தடவை போன்று இயல்பான ஆர்வம் இல்லாததால் கட்சிகளும் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

கட்சிப் பற்றின் அடிப்படையில் வாக்களிப்போரைப் பொறுத்தவரை மூன்று பிரதான கட்சிகளின் தொண்டர்களையும் திருப்திப் படுத்தும் வகையிலான வேட்பாளர்களே களமிறக்கப்பட்டுள்ளனர். தேசிய வாக்கு வங்கியின் ஆகக்குறைந்தது 40 வீதத்தைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தாமதமாகவேனும் சரியான தெரிவையே மேற்கொண்டிருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் திருப்தியுடன் உள்ளார்கள். அது போன்றே பெரமுனவைப் பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது என்ற பின்னணியில் அடுத்த தெரிவாக ஆகக்குறைந்தது அவரது பங்காளிகளால் எதிர்பார்க்கப்பட்ட கோட்டாபே ராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பதால் ஓரளவுக்கு அக்கட்சியின் தொண்டர்களும் திருப்தியாகவே உள்ளார்கள்.

ஜனநாயக முற்போக்கு சக்திகள் மற்றும் பொதுவுடைமை சார் வாக்காளர்களைப் பொறுத்தவரை தனது பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்துள்ள ஜே.வி.பியின் அனுர குமார திசாநாயக்க மிகச் சிறந்த தெரிவு. இதனடிப்படையிலேயே புத்திஜீவிகள் மற்றும் பல சிவில் சமூகங்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தியெனும் அமைப்பூடாக அவரை வேட்பாளராக்கியுள்ளது. எனினும், ஈஸ்டர் தாக்குதலையடுத்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் ஜமாத்தே இஸ்லாமி எனும் கொள்கை இயக்கம் நேரடியாகவே இவ்வமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளமை சமூகம் என்ற அடிப்படையில் சாணக்கியமற்ற செயற்பாடு என்பது எனது கணிப்பு. ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமிய கொள்கை இயக்கம் ஒன்று இவ்வாறு இணைந்து கொண்டமை ஜே.வி.பியின் தோளில் ஏற்றப்பட்டுள்ள மேலதிக சுமையாகவே இருக்கும். அதைவிட, சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு வெளியிலிருந்தே ஆதரித்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

ஜனாதிபதி தேர்தல் உணர்வோங்கலுக்கு மேலாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில விடயங்கள் உண்டு. 1982ல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன, அதே வருடம் நடாத்தியிருக்க வேண்டிய நாடாளுமன்ற தேர்தலை தேசிய வாக்கெடுப்பாக மாற்றி 1977ம் வருடம் தெரிவான நாடாளுமன்றின் ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொண்டார். இதனூடாக நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையையும் மூன்றிலிரண்டு பலத்தையும் பாதுகாத்துக் கொண்டே தமது அரசியலை முன்னெடுத்திருந்தார். 

1988ல் தேசப்பற்று உணர்வைத் தூண்டியதன் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய போதிலும் அதற்கடுத்து வந்த 1989 நாடாளுமன்ற தேர்தலில் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களை இழந்திருந்தது. சம காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சிறுபான்மை சமூக கட்சிகள் வளர்ச்சி பெற ஆரம்பித்திருந்தன. இச்சூழ்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்த போதிலும் கூட்டணி அரசியல் ஊடாகவே ஆட்சியை முன்னெடுத்துச் செல்லும் நிர்ப்பந்தம் பிரேமதாசவுக்கு உருவானது.

அதற்கடுத்;து வந்த 1994 நாடாளுமன்ற தேர்தலில் சந்திரிக்காவின் தலைமையில் பல கட்சிகளின் கூட்டில் உருவான மக்கள் கூட்டணி 105 ஆசனங்களையே வென்றிருந்த நிலையில் கூட்டாட்சியின் அவசியம் மீள நிறுவப்பட்ட அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி மேலும் பலவீனமடைந்ததை அவதானிக்கலாம். 2000ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதற்கு முந்தைய தேர்தலில் ஏழு ஆசனங்களைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் இணைத்து, கூட்டணியையும் பெருக்கிக் கொண்ட சந்திரிக்காவினால் 107 ஆசனங்களையே வெல்ல முடிந்தது. இதன் போது ஐக்கிய தேசியக் கட்சி இழந்த ஆசனங்கள் மறு பக்கம் வலுச் சேர்த்திருந்த போதிலும் மீண்டும் ஜனாதிபதி பதவி மேலும் பலவீனப்பட்டது என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும். 

இத்தனைக்கும் தனி நபராக மக்கள் அபிப்பிராயத்தைப் பெற்ற சந்திரிக்கா 1999 ஜனாதிபதி தேர்தலிலும் 51 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்திருந்தார். ஆயினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிக் கொண்டதையடுத்து அரசு ஆட்டம் கண்டதுடன் 2001ல் மீண்டும் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருந்தது. இதன் போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி 107 ஆசனங்களை வென்று கொண்டது. இதேவேளை 2004 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியாக மீண்டும் தோழமைக் கட்சிகள் துணையுடன் சந்திரிக்கா வெற்றி பெற்றார். அதற்கடுத்து 2010ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ச கூட்டணியமைத்தே வெற்றி பெற்றார். 2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கும் கூட்டணியே காரணமாக இருந்ததுடன் 2018ல் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்தும் ஆதரவளித்த காரணத்தினாலேயே ஆட்சியைத் தக்க வைக்கவும் முடிந்தது. 

இவ்வாறு கடந்த கால வரலாற்றை ஆராயும் போது 1982 – 1989 வரை அதிகாரத்திலிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் நிலையும் அதன் பின் வந்தவர்களது கைகள் கட்டப்பட்ட நிலைகளும் நன்கு உணர்ந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். ஆயினும் கூட, மக்களை வழி நடாத்தும் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் இத்தேசத்துக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே அவசியம் என நியாயப்படுத்தி வருகின்றன. கூட்டணி வலிமையின் ஊடாக சுயநல பேரங்களுக்கு அரசியல் ரீதியாக ஜனாதிபதி தேர்தல் பங்களித்து வருகின்றது என்கிற உண்மையும் இங்கு புலப்படும்.

ஆயினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மீது தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ள அப்பாவி மக்கள், அப்பதவியிலுள்ளவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற உணர்வோங்கலில் மாற்றீடாகக் கொண்டு வந்த மைத்ரிபால சிறிசேன, கையாலாகத நிலையில் முடங்கிப் போயிருக்கும் ஊன நிலையிலிருந்தும் மக்கள் படிப்பினை பெறவில்லை. என்னைப் பொறுத்தவரை மைத்ரிபால சிறிசேனவுடனான நேரடி தொடர்பு, கருத்துப் பரிமாறல் ஊடாக எனது கணிப்பிPடு என்னவெனில், நாடாளுமன்ற இயக்கத்தை மீறி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினால் எல்லாவற்றையும் 'சரி' செய்து விட முடியும் என்ற வாய்ப்பும் வசதியும் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் அதை செய்யக் கூடியவராகவும் இன வன்முறைகளை நொடிப் பொழுதில் அடக்கி சமத்துவமான இலங்கையைக் கட்டியெழுப்பிய, நவீன இலங்கையின் 'தந்தையாகவும்' உருவெடுத்திருப்பார். ஆயினும், கள யதார்த்தம் அதுவல்ல என்பதை கடந்த நான்கரை வருட அனுபவத்தைக் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும். 

எனவே, ஜனாதிபதியொருவரைத் தேர்வு செய்வதும் அதனூடாக சமூக ஒழுங்கைக் கட்டியெழுப்புதல் என்பதும் நாடாளுமன்ற தேர்தலின் அடிப்படையிலான அரசியல் இயக்கத்தையும் இணைத்தே தீர்மானிக்க வேண்டிய விடயமாகவே இருக்கிறது. ஆதலாலேயே ஜே.வி.பி என்ற கட்சியின் 'கொள்கை' முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டு அக்கட்சியை நாடாளுமன்றில் பலப்படுத்த முன்பதாக ஜே.வி.பியிலிருந்து ஒரு ஜனாதிபதி என்பது அர்த்தமற்றதாகி விடும் என்ற அபிப்பிராயத்தை இதற்கு முன்னரும் பதிவிட்டிpருந்தேன். ஜே.வி.பி உறுப்பினர்களின் பேச்சுத் திறமையை முக்கிய தேசிய பிரச்சினைகளின் போது ரசிக்கும் எம் மக்கள், அவர்கள் முஸ்லிம்களுக்காக – தமிழர்களுக்காக – சிங்களவர்களுக்காக என தனித்தனியாக பேச்சு அரசியல் செய்ய முடியாத கொள்கைத் தளத்திலிருந்து இயங்குபவர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தொப்பி அணிந்து முஸ்லிம்களாக்க முனைவது பொதுவுடைமை சித்தார்ந்தத்துக்கு முரணானது என்பதால் ஏதோ ஒரு இடத்தில் ஒவ்வாமை மேலெழும். எனவே, ஜே.வி.பியை இன்னும் முழுமையாக உணர்ந்து கொண்டு அவர்களை நாடாளுமன்றில் பலப்படுத்தலாம்.

கோட்டாபே ராஜபக்சவைப் பொறுத்தவரை அவர் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் பொதுத்தளத்தில் மலிந்து காணப்படுபவை. எனினும், மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் மீதான அன்பையும் அக்கறையையும் கொட்டுவதில் முஸ்லிம் சமூகத்திலும் குறைவிலாப் பங்குண்டு. பேருவளை, அக்கரைப்பற்று மற்றும் கண்டியிலும் இந்நிலைப்பாடு காணப்படுகிறது. இதேவேளை, சத்தமாகப் பேசி கள அரசியல் செய்த அனுபவமில்லாத அவருக்காக அடுத்த ஒன்றரை மாதத்தில் தொடர்ந்து ஒலிக்கப் போவது மீண்டும் மஹிந்த ராஜபக்ச – விமல் வீரவன்ச – உதய கம்மன்பில – வாசுதேவ நானாயக்கார போன்றோரின் குரல்களே எனும் அடிப்படையில் தனி மனிதராக பொது மக்களின் அபிப்பிராயத்தை அவர் எவ்வாறு வெல்லப் போகிறார் என்பது சவாலான விடயமாகும். மஹிந்த ராஜபக்ச கை நீட்டும் யாராக இருந்தாலும் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடிய மன நிலை எல்லா தொண்டர்களுக்கும் பங்காளிகளுக்கும் இல்லையென்பதற்கு வெளிப்படையான உதாரணம் குமார வெல்கம. பகிரங்கமாகவே அவர் தெரிவித்து வரும் கருத்துக்களை தமது வாக்குப் பலத்தின் மூலம் காட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாததும் இல்லை.

அதையும் மீறி, இராணுவ ஒழுக்கமுள்ள நிர்வாகியொருவரே தெரிவென்போருக்காகவே அண்மையிலேயே ஓய்வு பெற்ற, ஈஸ்டர் தாக்குதல்களின் போது ஊடகங்களின் தன்னிச்சையான செயற்பாடுகளை மீறிக் குரல் கொடுத்து மக்கள் அபிமானத்தை வென்ற மஹேஷ் சேனாநாயக்க இருக்கவே இருக்கிறார். கோட்டாபே ராஜபக்சவின் வாக்கு வங்கியைப் பலவீனப்படுத்த மஹேஷ் கருவியாக இருப்பார் என்ற வாசிப்போடு, நடைமுறை அரசியல் சூழ்நிலையில் சஜித் பிரேமதாச அளவிடப்பட வேண்டும்.

2018 ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் பின்னணியில் பிரதமராகக் கிடைத்த வாய்ப்பினை சஜித் பிரேமதாச உதறித் தள்ளியதன் பின்னணியை ஆழமாக ஆராயும் போது ஜனாதிபதி – பிரதமர் – நாடாளுமன்றம் என்ற முக்கோணப் பிணைப்பினை அவர் உணர்ந்து கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகும். கட்சித் தலைமை தன்னைத் தேர்வு செய்வதற்கான கைங்கரியத்தில் ஈடுபட்ட போதிலும் கட்சியை விட்டு நீங்கிப் போட்டியிட அவர் தயாராக இருக்கவில்லை. இதேவேளை, ஆபத்தில்லாத தளத்தில் அவர் ஜனாதிபதயாகப் போவதுமில்லை.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தனக்குக் கிடைக்கும் வாக்குப் பலத்தை ஆழமாக ஆராய்ந்து பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதே வாக்காளனின் சிறப்பு!

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment