முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி மிக மோசமானது எனவும் குடும்ப ஆதிக்கமே அரச துறையிலும் நிருவாக துறையிலும் நிலவுவதாகக் கூறிக்கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ,தே.க வின் ஊடாக பதவிக்கு வந்தார். தற்போது மீண்டும் அவரது தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மொட்டுக் கட்சியுடன் சங்கமிக்கச் செய்தால், அவருக்கு எஞ்சியிருக்கும் கெளரவமும் மதிப்பும் அடியோடு இல்லாமல் போய்விடும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
இன்று (04) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, ”கடற்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட யோசித ராஜபக்ஷவுக்கு மீண்டு பதவி வழங்கப்பட்டு அவருக்கு பதவி உயர்வையும் வழங்கி கடற்படை மரியாதையுடன் திருமணமும் செய்து வைக்கும் கண்கெட்ட காட்சியை இந்த அரசாங்கத்திலேயே நாம் காண்கின்றோம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த போதும் கடந்த காலங்களில் சரியான எதிர்க்கட்சியாக பொதுஜன பெரமுன செயல்படவில்லை. பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் மீறி முறைகேடாகவும் ஒழுக்கக் கேடாகவும் கூச்சலிட்டும் மிளகாய் தூள் வீசியும் தமது காலத்தை கடத்தியதே இவர்கள் மக்களுக்கு வழங்கிய சேவை. ”
அமெரிக்க பிரஜை ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து விட்டு இன்று திண்டாடி வருகின்றனர். கோத்தா போட்டியிடாவிட்டால் அடுத்த வேட்பாளர் தெரிவு அவர்களது அடுப்படியிலேயே நடைபெறும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரையில் வேட்பாளர் தெரிவில் வெளிப்படை தன்மையையும் கட்சி நடைமுறைகளையும் பேணி ஜனாநாயகத்திற்கு மதிப்பளித்து நாட்டுக்கு பொருத்தமான மக்கள் பணி ஆற்றக்கூடிய வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் நடந்து, தலைமைத்துவ பண்பை நாட்டு மக்களுக்கு வெளிக்காட்டி இருக்கின்றார். சஜித் பிரேமதாஸவின் தாயார் ஹேமா பிரேமதாஸவை மேடைக்கு அழைத்துச் சென்று கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையிலேயே அவரது பெயரை அறிவித்தமை மக்கள் மனதை நெகிழச் செய்தது. ரணில் தொடர்பில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இருந்த போதும் இந்த விடயத்தில் அவரை பாராட்டுகின்றேன்.
கோத்தாவை பொறுத்த வரையில் யுத்த காலத்தில் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடியவர். அதிகாரம் கிடைத்த பின்னர் இங்கு வந்து ஹிட்லர் போன்று செயற்பட்டவர். எனவே மீண்டும் இவ்வாறான பீதியான யுகத்தை மக்கள் விரும்பவில்லை. என்றும் தெரிவித்தார்.
-AM
No comments:
Post a Comment