அவிழ்ந்து விழும் போர்வைகளும் அவதானமும்! - sonakar.com

Post Top Ad

Sunday 15 September 2019

அவிழ்ந்து விழும் போர்வைகளும் அவதானமும்!ஜனாதிபதி; தேர்தல் பரபரப்பு மெல்லெனப் பரவிக்கொண்டு வருகிறது. தமது வாக்கு வங்கியின் பலம் பலவீனத்தை அறிந்த கட்சிகள் தமது கட்சியின் வேட்பாளரை அறிவித்தும் - தாமதித்தும் இதற்கு வலுச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவும் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி சார்பாக அநுர குமார திசாநாயக்கவும் பெயரிடப்பட்டு விட்டார்கள். தவிரவும் முன்னிலை சோசலிஷ கட்சியின் சார்பில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு 9,941 வாக்குகள் பெற்றுக் கொண்ட துமிந்த நாகமுவவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் போக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தாம் ஒரு வேட்பாளரைக் களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது, இன்னும் சில சிறு கட்சிகளும் இவ்வாறே தமது எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது 'பொது வேட்பாளர்' அலை மேலோங்கியிருந்த போதிலும் மைத்ரிபால சிறிசேன போன்ற உருவம் கொண்ட நடிகர் ரத்நாயக்க ஆராச்சிகே சிறிசேன உட்பட 19 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இவர் 18,174 வாக்குகளைப் பெற்றுக் கொள்ள, மிப்லால் இப்ராஹிம் 14,379 வாக்குகளையும் ஐதுருஸ் இலியாஸ் சுயேட்சையாகப் போட்டியிட்டு அவர் பங்குக்கு 10,618 வாக்குகளையும் பெற்றுக் கொண்டார். 

மைத்ரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச தவிர்த்த ஏனைய 17 பேரும் இணைந்து பெற்றுக்கொண்ட வாக்குகள் 138,200 ஆகும். இதேவேளை, 12,264,377 மொத்த வாக்குகளிலிருந்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் தொகை (140,000) இந்த 17 பேரும் இணைந்து பெற்றதை விட சற்று அதிகமானதாகவும் பதிவாகியுள்ளது. இந்நிலையிலேயே மைத்ரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ச 47.58 வீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். இது பொது வேட்பாளர் என்ற பேரலையினால் மக்கள் கவரப்பட்டு, வாக்களிப்பில் ஏற்பட்ட ஆர்வம் மற்றும் மஹிந்த ராஜபக்ச அரசின் மீதான வெறுப்பும் உள்ளடங்கிய வாக்குப்பதிவு என்றால் மிகையில்லை.

2010 ஜனாதிபதி தேர்தலில் யுத்த வெற்றியின் முதலீட்டில் 74.50 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருந்தது. இது 2015 தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆறு வீதம்; குறைவாயினும் 2005 தேர்தலோடு ஒப்பிடுகையில் 1 வீதம் அதிகமாகும். இப்பின்னணியில் 2005 தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட 50.29 வீத வாக்குகள் 2010 தேர்தலில் 57.88 வீதமாக உயர்ந்திருந்தமையும் இங்கு அவதானிக்கத்தக்கது. இது அந்தந்த கால கட்டத்தில் மக்களின் விருப்பு – வெறுப்பை அளவிட உதவும்.

1982 – 2019 வரையான காலப்பகுதியில் பெருந்தேசியக் கட்சிகள் இரண்டினதும் வாக்கு வாங்கி, அந்தந்த காலப்பகுதியின் மக்கள் உணர்வுகளுக்கேற்ப 40 – 50 வீதத்துக்கிடைப்பட்ட பங்கினைத் தக்க வைத்துக்கொண்டே வந்துள்ள பின்னணியில் அதிகபட்சமான வேட்பாளர் வரவும் வாக்குப் பகிர்வும் அதற்கு சேதம் விளைவிக்கவில்லையென்பதே இதுவரையான வரலாறு. இம்முறை ஜே.வி.பியின் வேட்பாளர் மூலமாக உருவாகக் கூடிய உணர்வலை ஒரு பங்கினைப் பெற்றுக்கொண்டாலும் கூட அதனூடாக முக்கிய போட்டியாளர்களைப் பின் தள்ளக்கூடிய களநிலை சாத்தியமில்லையென்பது அனுமானம்.

1994ல் சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட பொதுசன ஐக்கிய முன்னணி 2005ல் மஹிந்த ராஜபக்சவினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக உருவாகி 2019ல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக உருப்பெற்றுள்ளது. இறுதியாக 1988ல் சிறிமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டதோடு தமது தனியடையாளத்தைத் தொலைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இன்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மஹிந்த அணியுடன் எட்டு சுற்று பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கிறது.

இதேவேளை, 1982 – 1994 வரை நிலவிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பாணியைப் பின்பற்றி கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களிலும் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட கூட்டணி முயற்சி தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்தை இழப்பதற்கு உடன்பாடற்ற நிலையே காணப்படுகிறது. லலித் அத்துலத் முதலி – காமினி திசாநாயக்க இணைந்து உருவாக்கிய ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி பாரிய தாக்கங்கள் எதையும் உருவாக்க முடியாமல் போனமையானது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியின் அத்திவாரத்தைப் பறைசாற்றுகிறது. இதனோடு ஒப்பிடுகையில் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வளர்ச்சியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெளிப்படையான தோல்வியாகும். 

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவி வரும் இழுபறியும் அது தொடர்பிலான வெளியார் பார்வையும் அனுகூலங்களும் பல்வேறு வகைப்படுகின்றன. இதில் இடைக்கிடை தாங்களும் போட்டியிடப் போவதாக முஸ்லிம் சமூகத்திலிருந்து எழும் குரல்களையும் ஒப்பிட்டு அவதானிப்பதில் தவறில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை இம்முறை தமது கட்சியிலிருந்தே வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது கட்டாயம் என அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கருதுகின்றனர்.

அதற்குத் தடையாக இருப்பது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே எனும் குற்றச்சாட்டும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு சிலர் பகிரங்கமாகவே ரணிலுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறே அக்கட்சிக்குள் பிளவுகள் உருவானதோடு பாலித தெவரப்பெரும வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வுகளும், கரு ஜயசூரிய தலைமையில் சிலர் கட்சியை விட்டு அகன்று சென்ற நிகழ்வுகளும் கூட இடம்பெற்றிருக்கின்றன. எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கக் கூடிய ரணில் வழக்கமாகவே இவ்வாறே செயற்பட்டு வந்துள்ளமையை முன்னைய நிகழ்வுகள் எடுத்துக்கூறும் உதாரணங்கள்.

இதைப் புரிந்து கொண்டவர்களும் புரியாதவர்களும் கலந்தே இன்றைய பரபரப்பை உருவாக்கி வரும் நிலையில், இரு தடவைகள் போட்டியிட்டும் தனக்குக் கை கூடாமல் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் ரணிலின் திட்டத்துக்கு என்னவாகும்? என்ற கேள்வியும் இங்கு வினவப்பட்டாக வேண்டும். ரணிலைப் பொறுத்தவரை நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமையே அவரது தெரிவும் இலக்கும். ஆதலால், கடந்த தடவை மைத்ரிபால சிறிசேனவைப் பொது வேட்பாளராக்கி அதனூடாக 19ம் திருத்தச் சட்டத்தை லாவகமாக நிறைவேற்றிக் கொண்ட ரணிலுக்கு சஜித் பிரேமதாச ஊடாக ஜனாதிபதியின் ஏனைய அதிகாரங்களையும் நீக்கிக் கொள்ள வழி கிடைக்குமா? .இல்லையா? என்பது கட்டாயம் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். அத்துடன் இது நாடாளுமன்றின் பெரும்பான்மைப் பலம் சார்ந்த விடயம் என்பதால் அதனை ஐக்கிய தேசியக் கட்சியால் தனித்துச் சாதிக்கும் சூழ்நிலை உள்ளதா? என்பதும் விடை காணப்பட வேண்டிய கேள்வி.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலையும் - பொதுத் தேர்தலையும் முடிச்சுப் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கும் ரணிலுக்கும் வேட்பாளரை அறிந்து கொள்ள அவசரப்படும் எதிர்க்கட்சிகள், பொது மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்குமிடையில் பரபரப்பு உருவாகியுள்ளது. ஆயினும், தானே வேட்பாளர் என அதீத நம்பிக்கையில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சஜித்தைப் பொறுத்தவரையில் பொறுமையின் அவசியத்தை இன்னும் இன்னும் கற்றுக்கொள்கிறார் என்பது தெளிவாகி வருகிறது. செப்டம்பர் 10ம் திகதி இடம்பெற்ற ரணில் - சஜித் சந்திப்பு பரவலான எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த போதிலும் அன்றைய தினமும் தீர்க்கமான முடிவொன்று எட்டப்படவில்லை.

எனினும், தனது வெறுப்பைப் பகிரங்கமாக உமிழ மறுத்த சஜித் பிரேமதாச, ஒரே தடவையில் அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான், சித்தப்பா என கூடி முடிவெடுக்க இது குடும்பம் இல்லை, ஒரு கட்சியென தனது பக்குவ நிலையை எடுத்துக் கூற விளைந்ததை அவதானித்தேன். நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பாக இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பண்புகளையடைய நீண்ட போராட்டம் அவசியப்படுவதை உணர்ந்தது போன்று சஜித் நடந்து வருவதை அவதானிக்க முடிகிறது. கடந்த வருடம் ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியல் பிரளயத்தின் போது பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும் படி தன்னிடம் 61 தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தான் அவ்வாறு பின் கதவால் பதவியைப் பெற விரும்பவில்லையென சஜித் ஆணித்தரமாக தெரிவிப்பதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி அவருக்கு எத்தனை முக்கியம் என்பதும் வெளிப்படுத்தப்படுகிறது.

ரணசிங்க பிரேமதாசவை எதிர்த்துக்கொண்டு லலித் அத்துலத் முதலி – காமினி திசாநாயக்க கிளம்பிச் சென்றது போன்று சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சிக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் சிந்திக்கப்படுகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான ஒருவர் கடந்த வார இறுதியில் உரையாடிக்கொண்டிருக்கையில் தெரிவித்திருந்தார். உண்மை பொய்க்கு அப்பால், ஒரு பேச்சுக்காக, மத்திய கொழும்பில் சிறு வயதில் நான் கேள்விப்பட்ட கதையொன்றுள்ளது. 1977 பொதுத் தேர்தலில் வென்றதன் பின்னர் ஜே.ஆர். ஜயர்வதன தனக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு செயற்குழுவை நியமித்துக் கொண்டிருந்தாராம். அப்போது இடையறுத்த பிரேமதாச, இதுதான் நாம் முதற்தடவை தேர்தலில் வென்றிருக்கிறோம், அடிப்படையில் நாம் கத்தரகம சென்று தெய்வ வழிபாட்டை முடித்து விட்டு வந்துதான் இதை செய்ய வேண்டும் என்று சொன்னாராம். இதை உடனடியாக மறுக்காத ஜே.ஆர், அதுவும் சரிதான் நல்ல யோசனை, இருந்தாலும் கதிர்காம கடவுள் நமது செயற்குழுவில் இல்லாததால் முதலில் செயற்குழுவை நியமித்து விட்டு அங்கு செல்வோம் என்றாராம் என்பது அந்தக் கதை.

இது உண்மைச் சம்பவமா? இல்லையா என்பதை விட இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எப்போதுமே இவ்வாறு இரு வகையான எண்ணவோட்டம் கொண்டோர் இருந்து கொண்டேயிருக்கின்றனர் என்பதாகும். இவ்விரு நிலைப்பாடுகளுக்கிடையிலான போராட்டமே ஒரு காலத்தில் பிரேமதாசவுக்கு எதிராக உருவானதும் பிற்காலத்தில் ரணிலுக்கு எதிராக உருவாகி அடங்கியதும் கூட. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் மைய-வலக் கொள்கை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்னுமொரு தடவை சிதற இடமளிக்காது இருப்பதும் கட்சித் தலைவரின் கடமையெனும் அடிப்படையும் மேற்கு நாடுகளின் ஆதரவு மற்றும் பக்கபலத்தைக் கைவிட முடியாத சூழ்நிலையும் கூட அக்கட்சிக்கு இருக்கிறதெனும் நிலையில் தற்போதைய இழுபறி தொடர்கிறது.

நல்லாட்சியொன்று மலரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் திரண்டெழுந்த சூழ்நிலையில் 2015ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி மொத்தமாக 45.66 வீத வாக்குகளையே பெற்றுக்கொண்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இதர கட்சிகளின் ஆதரவே அரசமைக்க உதவியதெனும் நிலையில் அங்கிருந்து இன்று வரையான காலத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக எதையும் சாதிக்காத ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறாயினும் கூட்டணியூடாகவே பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும். மீண்டும் மஹிந்த எதிர்ப்புவாதமே முதலீடாக முடியும் எனும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் கூட்டணிக் கட்சிகளைப் புறந்தள்ளி இயங்கும் சூழ்நிலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லையென்பது தெளிவு.

இந்நிலையிலேயே, ஓசையின்றிப் பேசப்படும் பேரங்கள் போக சில தனி நபர்களும் சிறு கட்சிகளும் உரத்துப் பேசி தமது சந்தைப் பெறுமதியை அதிகரித்துக் கொள்கின்றன. மலைநாட்டின் ஆதரவின்றி யாரும் ஜனாதிபதியாக வர முடியாது என நவின் திசாநாயக்க தெரிவிப்பது மாத்திரமன்றி முஸ்லிம்களின் வாக்குகளின்றி; யாரும் வர முடியாது எனக் கூறித் தானும் போட்டியிடப் போவதாக மாயையை உருவாக்கிய ஹிஸ்புல்லாஹ்வின் நகர்வும் இந்த வகையறாக்குள்ளானதே. ஒரு வகையில் தற்சமயம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அதனால் நல்ல பயன் கிடைத்திருக்கிறது என்றும் கூறலாம். ஈஸ்டர் தாக்குதலின் பின் பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த அவரின் கல்வி நிறுவன விவகாரம் தற்போது அடங்கிப் போயிருப்பதன் சூட்சுமம் இவ்வாறே அரசியலில் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆதலால், சிறு கட்சிகளும் சிறுபான்மை அரசியல்வாதிகளும் இச்சந்தர்ப்பத்தில் தமக்கான தேவையை நிறைவேற்றிக் கொள்ளத் தவறப் போவதில்லை. அந்த வகையிலேயே திடீரென விழித்தெழுந்து முஸ்லிம் ஆசிரியர் நியமனங்கள் பற்றிப் பேசும், கோட்டாபே தான் சமூகத்துக்கு விமோட்சனம் என்று அறிக்கை விடும் அரசியல்வாதிகளும் அடங்குவர். அவர்களது அரசியல் வியாபாரத்தைப் பொறுத்தவரை இது இன்னுமொரு விளைச்சல் நிலம். எனவே, இக்கூற்றுகளால் சுண்டியிழுக்கப்பட்டுத் தடுமாறுவதிலிருந்து பொது மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தங்கி வாழ்தலே மிகவும் இலகுவான வழியெனும் அடிப்படையில் கூக்குரலிடும் தலைவர்களுக்கு அதீத மரியாதை கிடைக்கிறது. அவாகளைச் சுற்றி வியாபாரத்துக்காக பல ஆதரவாளர்கள் கூடுகின்றனர். தொடர்ச்சியாக அரசியலை அவதானிக்காதவர்களுக்கு இவை புதுமைகள். அவதானித்து வருபவர்களுக்கு சலித்துப் போன பழைய பல்லவிகள். இதனை எடுத்தியம்பும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க இந்த வாரம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது, தனது சட்டைப் பையில் இருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை வெளியில் எடுத்து மீண்டும் தனக்கு ஐநூறு ரூபாய் கிடைத்திருப்பதாக பைக்குள் போட்டுக் கொள்வதை நம்புவதும் நம்பாததும் அவரவர் பொறுப்பென்பதே அது.

இன மையக் கொள்கையைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டுள்ள இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை இனவாதம் எப்போதுமே முதலீடாகவே இருக்கும். வேறு போர்வையூடாகத் தமது இனவாதத்தைத் தற்காலிகமாக மறைத்துக் கொண்டாலும் தேவை வரும் போது அதனைக் கட்டவிழ்த்து விடுவதை அவமானமாகவோ அசிங்கமாகவோ கருதக் கூடிய எந்த அரசியல்வாதியும் களத்தில் இல்லையென்பதால் இரு பக்கங்களிலும் உள்ள பசுத் தோல் போர்த்திய புலிகள் தொடர்பில் அவதானம் தேவைப்படுகிறது.

உணர்ச்சியூட்டல்களால் உந்தப்பட்டுப் பழகிய சமூகமாதலால் மிகவும் இலகுவாக இரையாகக் கூடியவர்கள் எம்மவர்கள். தொடர்ச்சியாக காலத்துக்குக் காலம் தோன்றும் தற்காலிக நல்லவர்களை நம்புவதும் பின் கவலைப்படுவதும் வழக்கமாகி விட்டதால் அரசியல் உணர்ச்சியூட்டலை நிதானமாகக் கணித்து இயங்குவது அவசியமாகிறது.

எல்லா பரபரப்பும் ஏதோ ஒரு கட்டத்தில் அடங்கும், எல்லாத் துன்பங்களும் கடந்து போகும் என்ற அடிப்படையில் சமூகம் சுயமாக சிந்தித்து, விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். நாம் கடந்த காலங்களில் போர்த்திக் கொண்ட போர்வைகள் ஈஸ்டரின் பின் தானாக அவிழ்ந்து வீழ்ந்திருக்கிறது. ஆதலால், தேசியத்தின் இயக்கம் மற்றும் தேசிய அரசியலிலும் நாம் அனைவரும் பங்காளிகள் என்ற அடிப்படையைப் புரிந்து இலங்கைக் குடிகளாக எம் கடமைகளை உணர்ந்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதும் கடமையாகிறது.


-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment