பண்டுவஸ்நுவர பள்ளிவாசல் தடையை நீக்க கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 August 2019

பண்டுவஸ்நுவர பள்ளிவாசல் தடையை நீக்க கோரிக்கை


பண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில்  அமைந்துள்ள "மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்ஆத் தொழுகை உள்ளிட்ட ஐந்து நேர தொழுகைகளை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



கடந்த 2000 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தொழுகை நடாத்தப்பட்டு வந்த இப்பள்ளிவாசல், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கடந்த மே மாதம் 13 ஆம் திகதியன்று இப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது இப்பள்ளி வாசலும் குண்டர்களால்  தாக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இதனையடுத்து, இப்பள்ளி வாசலின் துப்புறவுப் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு, தொழுகை மற்றும் இதர மார்க்கக் கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், குளியாப்பிட்டிய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அபேவர்தனவின் பணிப்புரைக்கமைய, ஜூலை மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இப்பள்ளி வாசல் தற்காலிகமாக  மூடப்பட்டதாக, இப்பள்ளி வாசல் நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

நாட்டின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள் அனைத்தும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, தற்போது  தொழுகைகள் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், இப்பள்ளி வாசலிலும் மீண்டும் உடனடியாக தொழுகை போன்ற ஏனைய வணக்கங்கள் ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனமெடுத்து,  கடப்பாடுடன் செயற்பட முன்வர வேண்டும் என்றும், பள்ளி வாசல் நிர்வாக சபையினர்  உள்ளிட்ட இப்பிரதேச வாழ் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

-ஐ. ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment