ஐ.நா அதிகாரிகள் - மு.கா தலைவர் சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Monday 10 June 2019

ஐ.நா அதிகாரிகள் - மு.கா தலைவர் சந்திப்புவெறுப்பு பேச்சுக்களின் விளைவாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதோடு, இன வன்செயல்களும் தூண்டிவிடப்படுவதாக தம்மை சந்தித்து கலந்துரையாடிய ஐ.நா சபை பிரதிநிதிகளிடம் கவலை தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சட்ட ஆட்ச்சிக்கு மதிப்பளிக்கப் பட வேண்டும் என்றும், சட்டமும் ஒழுங்கும் உரிய முறையில் பேணப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் நிலைமையை தாமதமின்றி கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத ஒழிப்பு பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான மிஷேல் கோனின்சஸ் தலைமையிலான உயர்மட்ட குழுவினர்,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை சனிக்கிழமை (08) அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த வன்செயல்களை மையப்படுத்தி நாட்டு நிலைமையைப் பற்றி தெளிவு பெரும் நோக்கில் அவர்களது கேள்விகள். அமைந்திருந்தன.

அவர்களிடம் ஆக்கபூர்வமான அணுகுமுறையின் அவசியம் பற்றி ஹக்கீம் கூறியதோடு, இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் கூடிக்கொண்டே போவதால் விரிசல்கள் அதிகரித்துள்ளன என்றார்.

சில இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் வேண்டுமென்றே விஷயங்களை ஊதிப் பெருப்பித்து நிலமையைச் சிக்கலாக்கி விடுகின்றன என்றும், ஊடகங்கள் சுய நெறிப்படுத்தலைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், அவை உரிய முறையில் கண்காணிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை விவகாரத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமையவாக அவர்கள் முகம் தெரியக்கூடியவாறான உடைகளை அணியத்தக்கதாக, பலவந்தமான  கட்டாயப்படுத்தல்கள் கூடாது என்றும், சுயமாக தாமாகவே முன்வந்து அவற்றை கடைப்பிடிப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.

ஐ.நா பயங்கரவாத ஒழிப்புப் பணியகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளான லீலா எஸார்கி, அட்ரியா டீ லண்ட்றீ, இலங்கைக்கான ஐ.நா தூதுவர் ஹனா சிங்கர், இலங்கை ஐ.நா பிரதிநிதி  கீதா சப்ஹர் வால் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

-SLMC

No comments:

Post a Comment