பள்ளிவாயல்கள் சொத்துக்கள் பறிபோகுமா? - sonakar.com

Post Top Ad

Sunday, 19 May 2019

பள்ளிவாயல்கள் சொத்துக்கள் பறிபோகுமா?


கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து கொண்டே வருகின்றனர். தாக்குதலின் பின்னர் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகள் என்ற சந்தேகக் கண்ணோடு நோக்கும் பேரினத்துடன் மற்றொரு சிறுபான்மை இனமான தமிழ் தரப்பும் இணைந்து இருப்பது மேலும் சிந்தனைக்குரிய விடயம்.வீடுகள் ,வீதிகள்,கடைகள், பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள் என்று எதையும் விட்டு வைக்காத தேடுதல்கள் நாடெங்கும். கைது செய்யாமல் இருக்க காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் கைது செய்ய ஒரு தடயத்தை  அல்லது  சந்தேகத்தை உருவாக்கி கைதுகள் நடந்தேறுகின்றன.

தாக்குதலுடன்  சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால் அப்பாவிகள் சந்தேக நபர்களாக கைது ஆகி இருப்பது தான் கவலைக்குரியது.

அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருப்பதால் நீதி தேவதையும் மௌனமாகிவிட்டாள். போலீசார் கைது செய்யப்பட்டவர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA)கீழ் அல்லது சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளளுக்கான சாசனத்தின் கீழ்(ICCPR) நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தும் போது அவர்களுக்கு பிணை வழங்கும் நாள் வெகு தூரத்தில் இருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விடயம். மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் இச்சட்டத்தின் கீழ் இல்லை. விசேட சந்தர்ப்பங்களில் மேல் நீதிமன்றம் தான்  பிணை வழங்கும்.அதுவும் பல சந்தர்ப்பங்களில் பிணை என்பது கானல் நீர்தான்.

எழுத வந்த விடயம் அது அல்ல,

தாக்குதலின் பின்னரான இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமைகள் படிப்படியாக நசுக்கப்படுகிறதா என்பதுதான் தற்போதைய கேள்வி. முதலில் முகத்திரைக் காண தடை அமுல்படுத்தப்பட்டது. ஏற்கனவே விவாதத்துக்குரிய விடயமாக இருந்த நிகாபும் புர்காவும் தடை செய்யப் பட்டதில் முஸ்லிம்கள் பெரிதாக கவலைப்படவில்லை. 

ஆனால் அபாயாவும் தடை செய்யப்பட்டது போல் நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும்  அதிகாரிகள் செயல்படுவது ஒரு பாரதூரமான விடயம்.பல பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் கூட பலவந்தமாக அபாயாவை நீக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அல்லது மறைமுகமாக பொதுமக்களை எதிர்த்துப் போராட தூண்டுதல் செய்கின்றனர். 

இவ்வுரிமைகளுக்காக போராடுவது யார்? சாதாரண பொதுமகன் இன்றைய சூழலில் எதிர்த்துப் போராட விரும்பாத நிலையே பரவலாக காணப்படுகின்றது. பல பாடசாலைகளில் அபாயாவுடன் வந்த ஆசிரியைகள் அதைத் தவிர்த்து  சாரிக்கு மாறியுள்ளனர்.சாரியை விரும்பாவிடினும் எதிர்க்கும் சக்தி அவர்களுக்கு இல்லை. குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள ஒரு சில சமூகக் குழுக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் வேறு உயரதிகாரிகளிடமும் இது சம்பந்தமாக முறையிட்டு ஓரளவு தீர்வுகளை பெற்றுக் கொடுத்தாலும்  மழை ஓய்ந்தாலும்  தூறல் நிற்காத கதைதான் இன்னும்.

இனங்களுக்கு இடையே முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் இந் நடவடிக்கைகளுக்கு எதிராக ICCPR இன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் .ஆனால் அதை செய்ய வேண்டியது பொலிசார் ஆகும். வேடிக்கை என்னவென்றால் அபாயா அணிந்து வரும் ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கின்றது. குறைந்தபட்சம் அவ்வாறான கூட்டங்கள். போராட்டங்கள் நடைபெறாமல் தடைசெய்யும் நடவடிக்கையாவது அவர்கள் மேற்கொள்ளலாம்.

இவற்றுக்கெல்லாம் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் நமது பாராளுமன்ற பிரதிநிதிகள் தான் .மேல்மட்டத்தில் இருந்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமேயொழிய சாதாரண பொதுமகனல்ல. அமைச்சர் பதவிகளையும் அரசையும் காப்பாற்றிக் கொண்டு அடுத்த தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு எப்படி போவது என்பதில்தான் அவர்களின் பெரும்பான்மையோரின் நோக்கம்.

அரசை எதிர்த்தால் அரசின் நடவடிக்கை எதிர்தத்தால் கூட்டணி கிடையாது அல்லது டிக்கெட் கிடையாது என்று தான் அவர்களின் ஆதங்கம். ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் சமூகத்தை காப்பாற்ற அரசுக்கு எதிராக குரல் கொடுக்கப் போவதில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. வெறுமனே ஊடகங்களில் ஒரு சில வார்த்தைகளை பேசிவிட்டு அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் பலர்.

இதற்கு மேலாக அடுத்து வரப்போகும் மற்றுமொரு ஆபத்து அல்லது நசுக்குதல் அரபுக்கல்லூரிகளினதும் மதரஸாக்களிளதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்டம் ஆகும். இன்று இருக்கும் அனேகமான அரபுக் கல்லூரிகள் பள்ளிவாயல்களின் நிர்வாகத்தின் கீழ் தான் இயங்குகின்றன.தனியான அரபுக் கல்லூரிகள் ஒரு சில இருந்தாலும் அவையும் வக்பு செய்யப்பட்ட சொத்துக்களிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன பள்ளிவாயல்களின் நிர்வாகம் வக்பு சட்டத்தின் கீழ் வரும் போது அவற்றின் கீழ் இயங்கும் மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் கட்டாயம் வக்பு சட்டத்திற்கு கட்டுப்படுத்த பட்டவையாகவே இருக்கும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

 அதெ போல் ஏனைய வக்பு செய்யப்பட்ட சொத்துக்களில் இயங்கும் அரபுக் கல்லூரிகளும் மலைகளிலும் வக்பு சட்டத்தின் கீழ் தான் இயங்க வேண்டும். ஆக ஒரு சில அரபு கல்லூரிகளும் மத்ரஸாக்களும் மட்டுமே வக்பு சட்டத்தினால் கட்டுப்படுத்த முடியாதவையாக இருக்கும். வக்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அவற்றையும் அதன் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் அவற்றின் பராமரிப்பு கட்டுப்பாடு சம்பந்தமான திருத்தங்களையும் உள்ளடக்கலாம்.

 ஆனால் அதனை செய்யாமல் பிரதமரினதும் ஏனைய பெரும்பான்மை உறுப்பினர்களினதும் பிரேரணையாக முன்வைக்கும் தனியான சட்டத்திற்கு நமது  பிரதிநிதிகள் வாய்மூடி களாக உள்ளனர் .இது பள்ளிவாயல் சொத்துக்களில் பல பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம். புத்திஜீவிகளையும் அறிவாளிகளையும் எமது பிரதிநிதிகளாக அனுப்பாததன் விளைவாக அங்கு இருக்கும் ஒரு சில புத்திஜீவிகளும் முட்டாள் ஆகி விட்டனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

பல தசாப்தங்களாக மூலைமுடுக்குகளில் எல்லாம் நான்கு சுவர்களுக்கு உள்ளே மேலெழுந்து இருக்கும் சர்வதேச பாடசாலைகள் என்ற போர்வையில் நடக்கும் பாடசாலைகளை கட்டுப்படுத்த ஒரு சட்டத்தை கொண்டுவர முடியாமல் இருக்கும் அரசுகளுக்கு இந்த முஸ்லிம் மார்க்க கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த மட்டும் குறுகிய காலத்தில் சட்டமொன்றை கொண்டு வர முனையும் காரணம் தான் என்ன ? 

ஏற்கனவே அரசுடமையாக தான் வக்பு சட்டத்தின் கீழ் வரும் சொத்துக்கள் இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக மற்றுமொரு சட்டத்தை கொண்டு வந்து மதரசாக்களையும் அரபுக் கல்லூரிகளையும் தனியான சட்டத்தின் கீழ் கொண்டுவர முயலும் இந்த நடவடிக்கையினால் தற்போது பள்ளிவாயல்கள் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பல சொத்துக்களை பறி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பே அதிகம். 

இதுவரை காலமும் இந்நிறுவனங்களின் பராமரிப்புக்காக வந்த உதவிகளுக்கு கூட பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இந்த மதரஸா நிர்வாகிகளும் பள்ளிவாயல்கள் நம்பிக்கை பொறுப்பாளர்களும்பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படலாம்.  இதனால் தேவையற்ற பல பிரச்சினைகளுக்கு நிர்வாகிகள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படலாம். 

மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுபவர்களிடம் இவ்விடயங்களை சற்று தெளிவுபடுத்த வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்திற்கு உண்டு அவர்களின் பாராளுமன்ற கதிரைகளை காப்பாற்றும் கைங்கரியத்தை விட்டுவிட்டு சமூகத்தை காப்பாற்றும் முனைப்பில் ஈடுபடாது போனால் அடுத்த தேர்தலில் சமூகம் விழித்துக் கொள்ளும் என்ற நப்பாசை ஒருபுறமிருக்க  இச்சந்தர்ப்பத்தில் கொழும்பு தலைமைகள் இவற்றை எல்லாம் மறந்து கலாச்சார மாற்றத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன. 

ஆன்மீக தலைமைகளும் அரசியல் தலைமைகளும் ஏனைய சமய சார்ந்த மற்றும் சாராத குழுக்களும் மத நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதில் முனைப்பாக இருக்கும் அதேவேளை சமூகத்துக்கு வரப்போகின்ற ஆபத்துக்களைப் பற்றி சிந்திக்காது இருப்பது வேதனைக்குரியது.

- சட்டத்தரணி எம் ஃபஸ்லின் வாஹிட் - கண்டி

No comments:

Post a Comment