ஒற்றுமைக்குள் ஒன்று பட முடியாதா? - sonakar.com

Post Top Ad

Tuesday 29 December 2015

ஒற்றுமைக்குள் ஒன்று பட முடியாதா?


இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் சூடு பிடித்திருக்கிற முஸ்லிம்-பெளத்த அரசியல் கள விவாத விவகாரத்தின் மையப்பொருள் என்ன என்பதை மறந்து, சாணக்கியம் சார்ந்து நகையாடிய போராளிகளும் , தேசியத்தலமையாக ஆக்கியே தீருவோம் என்ற கங்கணம் கட்டிய புதிய அரசியல் திருப்பு முனை வேண்டிகளும் எந்தளவிற்கு சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதில் உழைக்கிறார்கள் என்பதை அவரவர்க்குள்ளேயே கேட்டுக்கொள்ளுங்கள்.
சமூக ஊடகங்களை இன்றைய அரசியல் ஆதரவாளர்கள் உபயோகிக்கிற முறையானது தொடர்ந்தும் நம் சமூகத்தின் பிரிவினையை தக்கவைக்க எடுத்துக்கொள்ளப்படுகிற ஒரு பகீரதபிரயத்தனமாகவே நம் மற்றும் பிற சமூகங்களுக்கு இடையில் அடையாளம் காட்டி நிற்கிறது. இது சில சமயங்களில் தனிப்பட்ட சுயநல எதிர்கால அரசியல் அடிவருடலாகவும் இருக்கலாம் என்பதும் என்னுடைய கணிப்பாகும்.

நேற்றைய விவாதத்தினை முன்னிட்டு பலருடைய எழுத்துக்களையும் அவதானிக்க முடிந்ததிலிருந்து ஒரே ஒரு முடிவை மிகத்தெளிவாக வரையறுக்க முடிந்தது. அதாவது நம் சமூகத்தின் முன்னேற்றம், விடியல்,புரட்சி என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடைக்க நம்முடைய சமூகம் இன்னும் நெடுந்தொலைதூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.

அது தனிப்பட்ட அரசியல் காய் நகர்த்தல் என்றும் கூட வைத்துக்கொள்வோம். ஆனால் அதனுடைய முக்கியத்துவம் அறிந்ததினால் தான் எதிர்ப்பாளர்களின் வஞ்சனை சமூகத்தை அடகு வைத்து விட்டார் ரிஷாத், சமூகத்தை காட்டிக் கொடுத்து விட்டார் ரிஷாத் என்று பெரும் புலம்பலுக்கு உட்படுத்தியது. இந்த வேளையில் எதிர்ப்பாளர்கள் குறிப்பாக சாணக்கிய வாசிகள் அவர்களுடைய தலைவரின் ஊடாக ரிஷாத்திற்கு உதவ முடியுமான வழிகளை அலசி ஆய்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை உதவியாக செய்து அதனூடாக மக்களின் பார்வையை தம் மீது விழச்செய்திருக்க முடியும். இதனால் ஒரு பக்கம் சமூகத்திற்கு உதவியதாகவும் இருக்கும், சாணக்கியத்தினை வலுச்செய்திருக்க முடியும், ஒற்றுமைக்கான அடிக்கல்லை நட்டு இருக்க முடியும். இந்த மூன்று மாங்காய்களை அடித்திருக்கவும் முடிந்திருக்கும்.

இதுவெதுமே அல்லாமல் வரலாற்றுச்சாதனை புரிந்து விட்டோம் சாணக்கியத்தை விஞ்சி விட்டோம் என்று அடுத்த தரப்பை நகையாடியும், சத்திய சோதனையில் ரிஷாத் தோற்றார் என்று எரிச்சல் புகையாடியும் நம் சமூகத்தை நாமே வதைத்துக்கொள்வது எந்த வகையில் நியாயப்படும்.

முதலில் தலைவர்! தலைவர்! என்று புகை போடுபவர்கள் சமூகத்தின் இருப்பை , கட்சி சாராமல் ஒற்றுமையை சார்ந்து முயற்சிக்கட்டும்.

"பிரித்து வைத்து அணை கட்டி நம்முடையது என்று சொந்தம் கொண்டாடுவதனால் தான் அரசியல் சாக்கடை , அதுவல்லாமல் அணைகள் இல்லாமலாக்கி சிந்தனை மற்றும் செயல்பாடூடாக திறந்த ஒரு அரசியல் ஓட்டத்துக்கு வழியமைப்பதன் மூலம் தான் அந்த சாக்கடையை சுத்தம் செய்யலாம். வெறும் வாயாலும், வெற்று எழுத்துக்களாலும் அல்ல. "

-எம்.எம்.மத்தீன்

No comments:

Post a Comment