ஹிஜாபைக் காத்த நிகாபுக்கு நன்றிகள்! - sonakar.com

Post Top Ad

Wednesday 1 May 2019

ஹிஜாபைக் காத்த நிகாபுக்கு நன்றிகள்!


நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்புகளிலிருந்து நாடு மெல்ல மெல்ல வழமைக்குத் திரும்புகின்றது.  ஈடு செய்ய முடியாத உயிரிழப்புகளை நாடு சந்தித்து அதனை மீட்க முயற்சிக்கிறது. ஒவ்வொரு பிரஜைக்கும் தேசிய நலனில் அக்கறை இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஒவ்வொருவரும் தேசப் பற்றுடன் இயங்க வேண்டும்.


அந்த அடிப்படையில், அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் ஆள் அடையாளத்தை மறைக்கும் ஆடைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தில் உள்ள பெண்களுள் “நிகாப்” அணிகின்றவர்கள், தேசிய பாதுகாப்பு நிமித்தம் தங்களது திரைகளை நீக்குவதற்கு கடப்பாடு உடையவர்கள். சொந்த நலனிலும் பார்க்க தேசிய நலன் இன்றியமையாததாகும். இதற்கான கூலி இறைவன்பால் உங்களுக்கு நிச்சயம் உண்டு.

முஸ்லிம் சமூகத்தில் “நிகாபி”னை ஆதரிக்கின்ற, ஆதரிக்காத, நடுநிலையான தரப்புக்கள் உண்டு. கருத்துச் சுதந்திரம் அல்லது வெளிப்படுத்தல் சுதந்திரம் எமக்கு அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையாகும். ஆகையால் அது தொடர்பில் தமக்கான கருத்தினை கொண்டிருப்பது அவரவர் சார்ந்தது. 

எது எவ்வாறிருப்பினும், நமது முரண்பாடுகளை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்ல. நிகாப் அணியாத ஹிஜாப் அணிகின்ற பல பெண்கள் கூட உள ரீதியான பாதிப்புக்களை சந்தித்து வருவதை அறிகிறோம். பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது எமது மசமூகப் பொறுப்பாகும்.

நிகாப் தடை செய்யப்பட்ட நிலையில் ஹிஜாபுக்கு இத்தனை பொருள்கோடல்களும் சவால்களும் இருக்கிறதென்றால், நிகாப் இல்லாத ஒரு சமூகத்தில் ஹிஜாபிற்கு எத்தனை சவால்கள் இருந்திருக்கும். நிகாப் அணிந்த பெண்கள் ஒரு வகையில் தியாகிகளே. அவர்களது தியாகமே இன்று ஹிஜாபையாவது காப்பாற்றித் தந்திருக்கிறது. வாஜிப் இல்லாத நிகாப் மூலம் வாஜிபான ஹிஜாப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. நிகாபிற்கு நன்றிகள்.

ஆகவே, முரணான கருத்துக்களை தவிர்த்து பண்பாடுள்ள சமூகமாக மாற முயற்சிப்போம். பகிரங்க அக்கறைக்கு முன்னுரிமை அளிப்போம். நாட்டை நேசிப்போம். தேசியத்தின் பங்காளிகளாவோம். எதிர்கால சந்ததிக்கு நல்ல வளமான நாட்டைப் பரிசளிப்போம்.

-அபூ ஸைனப்

No comments:

Post a Comment