பயங்கரவாதத்தை கூண்டோடு ஒழிக்க ஒத்துழைப்பது மார்க்கக் கடமை - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 May 2019

பயங்கரவாதத்தை கூண்டோடு ஒழிக்க ஒத்துழைப்பது மார்க்கக் கடமை


நாட்டில் தற்போதுள்ள பயங்கரவாத செயற்பாட்டினை முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து கூண்டோடு ஒழிப்பதற்கு முப்படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மார்க்கக் கடமையாகும் என சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் அதன் கீழுள்ள மஹல்லா பள்ளிவாசல்களான மஸ்ஜிதுல் அர்- சரீப், மஸ்ஜிதுல் ஹாதி, மஸ்ஜிதுல் பாத்திமா ஆகிய பள்ளிவாசல்கள் மற்றும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்மிய்யதுல் உலமா என்பன இணைந்து நேற்று (30) செவ்வாய்க்கிழமை ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடாத்திய ஊடகவியலாhளர் மாநாட்டில் வெளியிட்டு வைத்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஊடக அறிக்கையினை சாய்ந்தமருது மஸ்ஜிதுல் அர்-சரீப் பள்ளிவாசல் தலைவரும், ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான மௌலவி ஏ.கலிலுர் றகுமான் வெளியிட்டு வைத்தார்.

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.இனாமுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்மிய்யதுல் உலமா செயலாளர் எம்.ஏ.எம்.றிஸ்வின், உப தலைவர் அஷ்-ஷெய்க் மௌலவி எஸ்.எம்.நபார், ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் உப தலைவர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம்.சாதிக், பொருளாளர் எம்.ஏ.எம்.பசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை குண்டு வைத்துத் தாக்கி ஈவு இரக்கமின்றி மனித உயிர்களை பழியெடுத்த கொடூர சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சாய்ந்தமருது மக்கள் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதானிகளை பிடிப்பதற்கும் அவர்களை கூண்டோடு அழிப்பதற்கும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கி தகவல்களையும் ஒத்துழைப்பையும் நாம் வரவேற்கின்றோம்.

குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் பயங்கரவாதிகளை முஸ்லிம் சமூகம் தயவு தாட்சனையின்றி காட்டிக்கொடுத்து நாட்டின் நிரந்தர சமாதானம், சகவாழ்வு, இனங்களுக்கிடையிலான சௌஜன்ய வாழ்வு என்பவற்றை மீண்டும் ஏற்படுத்த பாடுபட வேண்டும்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாடுபடும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முப்படைகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-றியாத் ஏ.மஜீத்

No comments:

Post a Comment