கடந்த கால தவறுகளின் நேரடி விளைவு NTJ - JMI: மௌனம் கலைய வேண்டும்! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

கடந்த கால தவறுகளின் நேரடி விளைவு NTJ - JMI: மௌனம் கலைய வேண்டும்!


கடந்த ஞாயிறு இலங்கையை உலுக்கிய தாக்குதல்களும் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் கைதுகளும் சமாதானத்துடன் கௌரவமான இலங்கைக்குடிகளாக வாழ விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பில் தேவாலயங்களிலும் தலைநகரின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISISன் கட்டளைக்கமைவான தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தி கடந்த பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட உள்நாட்டுக் கடும்போக்கு அல்லது தீவிரவாதத்தின் நேரடி விளைவுகளை இன்று அரங்கேற்றியுள்ளது.

தாக்குதல்களை நடாத்தியவர்களை இணைத்த ஒரே புள்ளி ISIS என்பதாக இருக்க, இந்த தாக்குதல்களை இரு வேறு அமைப்புகள் நடாத்தியுள்ளமை தெளிவாகிறது. தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத் இப்ராஹீம் ஆகிய இரு அமைப்புகள் இங்கு தொடர்புபட்டிருப்பதுடன் கூட்டிணைந்து செயற்பட்டிருக்கின்றன. தற்போதிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இரு அணிகளின் பிரதானிகளாக காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான் காசிமும் தெமட்டகொடயைச் சேர்ந்த இல்ஹாம் இப்ராஹிமும் இயங்கியிருக்கின்றமையை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது.

சூபித்துவ கொள்கையாளர்களினால் புகட்டப்பட்ட மார்க்க வழிமுறைகளையே பல நூற்றாண்டு காலம் பின்பற்றி வந்த இலங்கை முஸ்லிம் சமூகம் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிநாட்டுத் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முற்பட்ட பின்னணியில் தம்மையும் சர்வதேச சமூகத்துடன் இணைத்துக் கொள்ள விரும்பியது. அத்துடன், உதுமானிய பேரரசுக்குத் தமது ஆதரவையும் வெளியிட விரும்பிய அப்போதைய சில தலைவர்கள் அக்கால கட்டத்திலேயே கிலாபத் சிந்தனையை தமது ஆதரவாளர்கள் மத்தியில் பரவவிட்டிருந்தனர்.

எனினும், உயர் மட்ட குடும்பங்களில், குறிப்பாக படித்தவர்கள் மத்தியில் நிலவிய அவ்வாதரவு நிலைப்பாடு ஏனைய மக்களைச் சென்று எட்டுவதற்கு இன்னும் பல தசாப்தங்கள் எடுத்திருந்தது. குறிப்பாக 1980களின் ஆரம்பமே இதற்கான காலசூழ்நிலையாக அமைந்ததுடன் 1980 - 1990க்கு இடைப்பட்ட காலம் மாவனல்லை, மாத்தளை, கண்டி, சிலாபம், பேருவளை உட்பட பல்வேறு நகரங்களில் வளர்ச்சி பெற்றிருந்தது.

90களின் நடுப்பகுதியில் சற்றே வேகமாக வளர்ந்த இந்திய பின்னணியிலான தவ்ஹீத் சித்தார்ந்தம்,  2002 - 2012 இடையிலான காலப்பகுதியில் அபரித வளர்ச்சியைக் கண்டதுடன் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குடைய வகையில் உரு மாறிக்கொண்டது. பழமைவாதத்தைக் கைவிட முடியாமல் தவித்த முஸ்லிம் சமூகமே இதற்கான அடிப்படையையும் உருவாக்கியதன் விளைவில் நவீன சிந்தனையெனும் அடிப்படையில் ஆரம்பித்து பிற்காலத்தில் அது உணர்வுபூர்வமான விடயமாக மாறிக்கொண்டது.

குறிப்பாக 2012ற்குப் பிற்பட்ட காலத்தில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பலவீனம், இயலாமை மற்றும் அளவுக்கதிகமான சிக்கல்களை அள்ளிப் போட்டுக்கொண்ட தூர நோக்குப் பார்வையில்லாத நடவடிக்கைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர்கள் தமது கருத்துக்களை கடும்போக்கு தொனியில் இலங்கை முஸ்லிம்களிடம் திணித்து, உணர்வு ரீதியான வெற்றியையும் வெறுப்பையும் கூடப் பெற்றுக்கொண்டார்கள்.

இதேவேளை, 80 முதல் வளர்க்கப்பட்ட மென்மையான ஆக்கிரமிப்பு சிந்தனையில் வெறுப்புற்ற இரண்டாவது தலைமுறையினர் தம் தந்தையர்களை விஞ்சிச் செயற்பட தலையெடுத்தனர். சர்வதேச ரீதியில் இதன் தாக்கத்தை உணர முடிந்தது. எனவே, எகிப்து - துருக்கி மற்றும் ஈரானிய அரசியல் மற்றும் மேற்குலக முரண்பாடுகளின் அடிப்படையிலான சித்தார்ந்தம் தீவிரவாதம் எனும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து புதிய அமைப்புகளையும் - தீவிர சிந்தனைகளையும் உருவாக்கியது.

சம காலத்தில், சம்பிரதாயங்களை உடைத்து, நவீனத்துவம் பெறுவதாகக் கூறிக்கொண்ட தவ்ஹீத் வாதம் எல்லை கடந்து தீவிரவாதமாகவும் தாம் அல்லாத ஏனையோர் அனைவரையும் நிராகரிக்கும் மனப்பாங்கையும் வளர்த்துக்கொண்டது. இதன் முக்கிய விளைவாகவே சஹ்ரான் மற்றும் அவனது சகோதரன் சைனி காணப்படுகிறார்கள்.

இலங்கையின் புகழ்பெற்ற, பழமைவாய்ந்த அரபுக்கல்லூரிகளுள் ஒன்றான காத்தான்குடி மத்ரசதுல் பலாஹ்விலிருந்து இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் ஒருவராக விலக்கப்பட்ட அதேவேளை சைனி, தனது மௌலவி கற்கையை குருநாகலில் நிறைவு செய்துகொண்டுள்ளதாக தகவல் உள்ளது. 1980 - 2000 வரையான இக்காலப் பகுதியில் பாடசாலைக் கல்வியில் நாட்டமில்லாதவர்களை மதரசாவில் சேர்த்து விடுவது நிம்மதியான மாற்றுவழியென பெற்றோரால் கருதப்பட்டு வந்தது.

ஆயினும், சஹ்ரானின் மனப் போக்கு சற்று மாற்றமாகவும், மதரசா வாழ்க்கையின் ஐந்தாவது வருடத்திலேயே அதீத ஆர்வத்தினால் தனது தீவிர மனப்பான்மைக்கு ஏதுவான விளக்கங்களை தேடிக் கொண்டதுடன் அதனையே நிரூபித்து மதரசாவிலும் வெளியில் நண்பர்கள் வட்டத்திலும் கூட சர்ச்சைகளை உருவாக்கியதாகக் காணப்படுகிறது. தாருல் அதாரிலிருந்து ஒதுக்கப்பட்ட சஹ்ரானே பிற்காலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் ஒரு அமைப்பைத் தோற்றுவித்து இயங்க ஆரம்பித்ததைக் காணலாம்.

இவ்வமைப்பைத் தோற்றுவித்த காலத்தில் இந்நாட்டின் சட்டதிட்டங்களை மதித்தே வாழ்ந்த சஹ்ரான் காத்தான்குடியில் 9 வயது சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது தொடர்பில் குற்றவாளிக்குத் தண்டனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது மாத்திரமன்றி சமகாலத்தில் ஊரில் சமூக விடயங்களிலும் தலையிட்டு தன் மதிப்பை உயர்த்திக் கொள்ள, அரசியல் செல்வாக்கும் கிடைக்கிறது.

இன்னும் குறிப்பாக, காத்தான்குடி ரௌப் மௌலவியின் கருத்துக்களை பகிரங்கமாக விமர்சித்து இயங்கியதன் மூலம் ஏனைய சமூகக் கூறுகளின் ஆதரவையும் பெற்று வளரமுடிந்தது. எனினும் 2017ல் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் பாரிய பின்னடைவைத் தோற்றுவித்ததோடு சஹ்ரான் ஊரைவிட்டு ஓடித் தலைமறைவாக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது.

இதற்கு நேர் எதிரான சூழ்நிலையில் வாழ்ந்த இன்சாப் இப்ராஹிமும் குடும்பமும் முஸ்லிம் சமூகத்தில் மாத்திரமன்றி வர்த்தக சமூகம் மற்றும் அரசியல் மட்டத்திலும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு வசதிபடைத்த குடும்பமாகவே வாழ்ந்து வந்தது. ஆயினும் ஒரு புறத்தில் ஜமாத்தே இஸ்லாமி பின்புலத்தில் மேலும் நவீன அல்லது தீவிரமயப்படுத்தலை விரும்பிய நபர்களும் தவ்ஹீத் வழியில் கடும்போக்குவாதத்தை விரும்பிய இவ்விரு பிரிவும் ஒரே புள்ளியில் ஒன்றாக இணைந்து கொண்டுள்ளது.

கடந்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இன்சாப், இல்ஹாம் மற்றும் இன்று கைதான சாதிக் மற்றும் சாஹித் இப்ராஹிம், கொச்சிக்கடை சென். அந்தனிஸ் தேவாலய தாக்குதலை நடாத்திய முஆத் அலாவுதீன் ஆகிய நபர்கள் மற்றும் அவர்களது மனைவிமார் ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் எனும் அமைப்புகளை சார்ந்தவர்கள் என இராணுவம் பிரித்தறிகிறது. அதேவேளை, சஹ்ரான், சைனி, ரிழ்வான் மற்றும் கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதலை நடாத்திய அசாம் முபாரக் ஆகியோர் தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஆயினும், இவ்விரு அமைப்புகளும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றாக இணைந்து கொண்டுள்ளதுடன் கூட்டுத் தாக்குதலை நடாத்தியுள்ளது. ஷங்ரிலா தாக்குதலை சஹ்ரானும் இல்ஹாமும் இணைந்தே நடாத்தியுள்ளதோடு தாக்குதல் இலக்குகளைத் தமக்குள் பகிர்ந்து கொண்டுள்ளமை இங்கு தெளிவாகிறது. இப்பின்னணியில். கடந்த பல தசாப்தங்களாக தமக்குள் கடும்போக்கு தீவிரவாத அமைப்புகள் உருவாகி வளர்ந்து கொண்டு வருவதை அவதானித்து, முறையாகச் செயற்படத் தவறிய சமூகம் தமது தவறை உணர வேண்டிய காலமாக இது இருக்கிறது.

2012 முதல் பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு ஆளான முஸ்லிம் சமூகம், கடந்த ஞாயிறு தாக்குதலை ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளதுடன் இதுவரையில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தர மறுத்து பாதுகாப்பு படையினரிடம் பிடித்துக் கொடுப்பதிலும் பங்களித்து வருவதிலிருந்து எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய கால கட்டமிது என்பதை சமூகம் உணர்ந்திருப்பது தெளிவாகிறது. ஆயினும், அது அரசியல்வாதிகளினால் திசை திருப்பப்பட முன்னராக சரியான வழியில் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு சரி - பிழை என்ற வாத விவாதங்களுக்கு அப்பால் மார்க்கத் தலைமைத்துவத்தை முன்னெடுத்து வரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடமே உள்ளது.

கடந்த ஞாயிறு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்காவிட்டால், இந்நேரம் கஞ்சிபானை இம்ரானும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டிருக்கலாம். அந்த அளவு அதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. முஸ்லிம் என்ற அடையாள உணர்வினால் நாட்டின் சட்ட திட்டங்களைச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொள்ளும் பொறுப்பை அரசியல்வாதிகளும் கைவிட வேண்டும்.

தமக்கு முந்தைய தலைமுறையினர் மென்மைப் போக்கினை தீவிரப்படுத்திக் கொண்டு அவசரப்பட்ட விளைவுகளே இவ்விரு அமைப்புகளும் அதில் சேர்ந்தவர்களின் சித்தார்ந்தங்களும் என்று வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதில் மாற்றுக் கருத்து இருப்போர் பற்றிக் கவலையில்லை. ஆனால், அந்த உண்மையை விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள் சுய விமர்சனம் செய்து கொண்டு, சுய அறிவை மேம்படுத்த தேடலில் ஈடுபட வேண்டும். ஏனெனில், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உரியது. அதனை முன்னெடுக்கும் பணியில் அனைவரும் பங்களிக்க வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தம் பங்கினை செய்யத் தயாராவோம்!

-இ. ஷான்

1 comment:

Unknown said...

பத்தியாளரின் கருத்துகள் காலத்தால் அலசப்பட வேண்டியவை, இனங்களுக்கிடையே குறிப்பாக தமிழ்பேசும் மக்களிடையே புரிந்துணர்வுகள் ஏற்பட இக்கருத்துகளை ஆரம்ப புள்ளியாக வைத்து மேற்கொள்ளப்படல் சிறப்பாகும்.

Post a comment