சஹ்ரானின் 'தமிழ்நாட்டு' தொடர்புகள் உறுதி: தங்கியிருந்ததாகவும் தகவல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 April 2019

சஹ்ரானின் 'தமிழ்நாட்டு' தொடர்புகள் உறுதி: தங்கியிருந்ததாகவும் தகவல்!


ஐ.எஸ். அமைப்பின் உள்நாட்டு பிரதிநிதிகளாக இயங்கியுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பினை உருவாக்கி இயக்கிய சஹ்ரான் ஹாஷிம் தமிழ்நாட்டில் 'குறிப்பிட்டளவு' காலம் தங்கியிருந்தமை பற்றி உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆயினும், மாலைதீவைப் போன்றே சஹ்ரான் இந்தியாவுக்கு வந்தமைக்கான ஆதாரங்கள் இல்லையென இந்தியா நிராகரித்துள்ளது.


எனினும், சஹ்ரானுக்கும் - தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஐ.எஸ். ஆதரவாளர்களுக்குமிடையில் உறுதியான தொடர்புகள் இருப்பதாக இரு நாட்டு பாதுகாப்பு துறையும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதுடன் கடந்த வருடம் செப்டம்பரில் கோயம்புத்தூரில் வைத்து கைது செய்யப்பட்ட குழுவில் ஆகக்குறைந்தது ஒருவர் சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணி வந்திருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அரசியல்வரிகள் மற்றும் சமயதளங்களை குறிவைத்து தாக்குதல் நடாத்த திட்டமிட்டதன் பின்னணியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது சஹ்ரானின் பின்னணி பற்றி இரு நாடுகளும் ஆராய்வதுடன் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பு தாக்குதல்கள் பற்றி தகவல் கிடைத்ததாகவும் அத்தகவல் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும் இந்திய உளவு நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.

எனினும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உட்பட பெரும்பாலான 'தவ்ஹீத்' எனும் பெயரில் இயங்கும் அமைப்புகள் சஹ்ரான் குழுவின் செயற்பாட்டை நிராகரித்துள்ளதுடன் அவை இஸ்லாத்திற்குப் புறம்பானவையென தற்போது தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment