அக்குறணையில் 'கண்ணுக்குத் தெரியும்' அபிவிருத்தி: ஹலீம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 April 2019

அக்குறணையில் 'கண்ணுக்குத் தெரியும்' அபிவிருத்தி: ஹலீம்!


அக்குறணைப் பிரதேச செயலாளர் பிரிவில் கம்பெரலிய வேலைத் திட்டம் 100 க்கு 40 விகிதமான வேலைகள் நிறைவடைந்துள்ளன. ஏனைய 60 விகிதமான வேலைகள் இம்மாதம் இறுதிக்குள் துரித முடிக்க வேண்டும். அத்துடன் எமது ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி இரட்டைத் தொகுதி என்பதால்  கிடைக்கப் பெற்ற ரூபா 20 கோடிக்கும் மேலதிகமாக இன்னும் 20 கோடி பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்த நிதி உதவி கிடைக்கும் பட்சத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல்; தொகுதியில் பாரியளவிலான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதேவேளை அக்குணைப் பிரதேசத்தில் எமது அரசாங்கத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகவே கண்ணுக்குப் புலப்படுமளவுக்கு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.


அக்குறணைப் பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்படும் கம்பெரலிய வேலைத் திட்டம் தொடர்பான விசேட கூட்டம் அக்குறணை தபால் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

நாடு பூராகவும் உள்ள   தேர்தல் தொகுதிகளுக்கு தலா ரூபா  20 கோடி  என்ற வகையில் ரூபா  4800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கம்பெரலிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனினும் கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி  ஒரு இர்ட்டைத் தொகுதியாகும். மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.  கண்டி மாவட்டத்தில் சிறிய தேர்தல் தொகுதிகள் உள்ளன. அந்த தேர்தல் தொகுதிகளுடன் ஒப்பீட்டு ரீதியாகப் பார்க்கின்ற போது ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீதி மிகவும் குறைந்ததாகும். இது தொடர்பாக நான் தொடரேச்சியாக ஜனாதிபதி, பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்த  தேர்தல் தொகுதிக்கு மேலும் ரூபா 20 கோடி கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன. 

தற்போது அக்குறணை பிரதேச செயலாளர் பிரிவில 76 உள்ளுர் பாதைகள் ரூபா 5 கோடிக்கு மேலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றது.  ரூபா 55 இலட்சதுக்கும் மேற்பட்ட நிதிகள் சமய ஸ்தலங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது. மலசல கூடங்கள் நிர்மாணிப்பதற்காக  ரூபா பல இலட்சத்துக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இது போக கல்வி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் சிறந்த பாடசாலை அருகிலுள்ள பாடசலை என்ற வேலைத் திட்டத்தின் மூலம்  பல பாடசலைகளின் கட்டிட பௌதீக வளங்கள் குறைபாடுகள் இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. காபாட் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கூடி கதியில் அக்குறணை சியா மாவட்ட வைத்தியசாலை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படவுள்ளது.  அக்குறணை நகரை  நவீன முறையில் மாற்றியமைப்பதற்காக சந்தைக் கட்டிடத் தொகுதி திருத்தியமைக்கப்படவுள்ளது.  தொடர்ந்து வரும் வெள்ளப் பிரச்சினை நிரந்தரத் தீர்வை எட்டும் வகையில் புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப்படி இந்த அக்குறணைப் பிரதேசத்தில் வெட்டவெளிச்சமாக எத்தனையோ வேலைத் திட்டங்கள் கண்ணுக்குத் தெரியக் கூடிய வகையில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இதில் விசேட அம்சமாக அக்குறணை குருகொட ஆண்கள் பாடசாலைக்கு 22 பேச்சஸ் காணியை பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கையைச் சேர்ந்த மதினாவிலுள்ள ஹசன ரவுப்  ஒரு மில்லியன் ரூபா நிதியை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் ஊடாக பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது  

அக்குறணைப் பிரதேசத்தில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பதற்கு  தடையாகவுள்ள விடயங்களை இனங்கண்டு அவற்றை  சம்மந்தபட்ட அரச உயர் அதிகாரிகளுடன்  கையடக்கத் தொலைபேசில் உடனுக்குடன் தொடர்பு கொண்டு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும்  நடவடிக்கையில் இந்த கூட்டத்தின் போது அமைச்சர் ஹலீம் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். எச். ஏ. பாஹிம் மற்றும் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment