பேருவளை ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர் அனுமதி - sonakar.com

Post Top Ad

Saturday 13 April 2019

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர் அனுமதி


பேருவைளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு 2019ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் 16, 17, 18ஆம் திகதிகளில் காலை எட்டு மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.


நேர்முக, எழுத்துப் பரீட்சைகள் தெற்கு, மேல், சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 16.04.2019ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 17.04.2019ஆம் திகதி புதன் கிழமையும் வடக்கு,வட மேல், வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18.04.2019வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது.

சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களது சம்மேளனத்தில் (Federation of the Universities of the Islamic World- FUIW) அங்கத்துவம் பெற்றுள்ள ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச் சான்றிதழ்,சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் இலங்கையிலும் பட்டச் சான்றிதழ் வழங்கும் நிறுவனமாக அங்கீகாரம் பெறுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜாமிஆ நளீமிய்யாவில் நுழையும் மாணவர்கள், ஏக காலத்தில் இஸ்லாமிய கற்கை நெறியில் சிறப்புத் தேர்ச்சி, பல்கலைக்கழக வெளிவாரி பட்டப் படிப்பு (B.A), தகவல் தொழிநுட்ப டிப்ளோமா பாடநெறி ஆகிய கற்கைநெறிகளை தொடர முடியும்.

விண்ணப்பப் படிவங்களை குறிப்பிட்ட தினத்தில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் நேர்முகப் பரீட்சைக்கு வருவோருக்கான தங்குமிட வசதி நளீமிய்யா வளாகத்தினுள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 0342276338, 0776504765, 0773573815 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தெரிவித்துள்ளார்.

-ஜெம்ஸித் அஸீஸ்

No comments:

Post a Comment