அநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

அநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்!


கடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செய்ய விடாது தடுத்து ரகளையில் ஈடுபட்ட பேரினவாத குழுவை அரசாங்கம் கண்டு கொள்ளாது விட்டிருந்தது. இன்று அதன் தொடர்ச்சியில் கிறிஸ்தவ மக்களின் முக்கிய வழிபாட்டு தினமொன்றில் கொழும்பின் பிரதான தேவாலயங்களுள் ஒன்றான கொச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் நன்கு திட்டமிடப்பட்டு - ஒழுங்குபடுத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 138 பேர் (ஆகக் குறைந்தது) உயிரிழந்துள்ளனர்.சிறிதாக துளிர்விட்ட பிரச்சினையின் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இருந்த நிலையில் அநுராதபுர விவகாரம் அரசியலானது. தேவாலயத்துக்குள் அன்றைய தினம் முடக்கப்பட்ட பாதிரியார்கள் மற்றும் மக்களின் கூற்றுப்படி பொலிஸ் அவசர உதவி கோரப்பட்டிருந்த போதிலும் அது அலட்சியப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் அநுராதபுர தேவாலயத்துக்கு நேரடியாக விஜயம் செய்த மெதடிஸ்த ஆயர் ஆசிரி பெரேராவும் தனது அனுபவத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் இரு தினங்களுக்கு முன்பாக சர்வ மதங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து அமைதிப் பேரணியொன்றை நடாத்தி தமது மத உரிமையைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன் வன்முறையை எதிர்த்தும் சுலோகங்களைத் தாங்கியிருந்தனர். இதில் முஸ்லிம் மற்றும் ஏனைய மத பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


இச்சூழ்நிலை தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மூன்று முக்கிய தேவாலயங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் பாரிய உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 2009 யுத்த நிறைவின் பின் இடம்பெற்ற மத வன்முறைகள் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்குவைத்திருந்த போதிலும் பெரும்பாலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களே பேசப்பட்டது. ஆயினும், கிறிஸ்தவ சமூகம் மீதான அடக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

2019 ம் ஆண்டில் மாத்திரம் (இதுவரை) கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள் 40 அடக்குமுறை மற்றும் வன்முறைச் சம்பவங்களை சந்தித்துள்ளதாக இவற்றைப் பதிவிட்டு வரும் கிறிஸ்தவ மக்களின் தளமான minormatters.org தெரிவிக்கிறது.

இச்சூழ்நிலையின் பின்னணியில், ஞானசாரவை சிறையில் அடைத்ததும் இலங்கையில் பேரினவாதம் ஓய்ந்து விட்டதாகவும் நம்ப வைப்பதற்கான முயற்சிகளில் அரச மற்றும் சிவில் அமைப்புகள் கடினமாக உழைத்ததையும் அசை போட்டு இன்றைய குண்டுவெடிப்புகளின் அலட்சியத்தை அளவிடமுடியும்.

இவ்வாறே 2012ம் ஆண்டு அநுராதபுரத்தில் முஸ்லிம் சமூகப் பெரியார் ஒருவர் அடக்கப்பட்டிருப்பதாகக் கருதப்பட்ட இடமொன்று தகர்க்கப்பட்டு அங்கிருந்து பேரினவாதம் தூபமிடப்பட்டு வளர்க்கப்பட்டது. அதனை அப்போது கருத்திற்கொள்ள மறுத்த சமூகம் பின்னர் அளுத்கம - கிந்தொட்ட  - திகன என தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து உயிர் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்தது, இன்னும் கூட காயம் ஆறாத நிலையில் வாழப் பழகிக் கொண்டுள்ளது.

கிறிஸ்தவ மக்களுக்கு மாத்திரமன்றி சிறுபான்மை மக்களுக்கு இவ்வாறான கடந்த காலத்திலிருந்து படிப்பினை உண்டு. அதேபோன்று, அரசியல் தேவைகளுக்காக இரத்தம் காணத் தயங்காத சூழலை உருவாக்கி, அவசர கால சட்டம் ஊடாக தேர்தல்களை தாமதப்படுத்தி நாட்டைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி வைத்திருப்பதில் யாருக்கு இலாபம்? யாருக்கு நஷ்டம்? இது மக்கள் சிந்திக்க வேண்டிய விடயம்.

ஆதலால், அவசரம் - இனவாதம் - வெறுப்புணர்வு இவ்வாறான சூழலுக்கு தீர்வாகாது, தீவிரவாதம் மருந்தாகாது!

-சோனகர். கொம்

No comments:

Post a Comment