தமிழ்நாடு 'தௌஹீத்' மற்றும் ஏனைய 'தௌஹீத்' அமைப்புகள் மீது சர்வதேச பார்வை - sonakar.com

Post Top Ad

Tuesday 23 April 2019

தமிழ்நாடு 'தௌஹீத்' மற்றும் ஏனைய 'தௌஹீத்' அமைப்புகள் மீது சர்வதேச பார்வை


ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியில் கிழக்கிலங்கையைத் தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் எனும் அமைப்பே இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இயங்கும் தௌஹீத் மற்றும் இலங்கையில் இவ்வாறே தௌஹீத் பெயரில் இயங்கும் அமைப்புகள் பெரும்பாலான சர்வதேச ஊடகங்களில் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றன.


குறிப்பாக கடந்த காலங்களிலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் எனும் அமைப்பும், அவ்வமைப்பின் முக்கியஸ்தர்களாக இருந்து பிற்காலத்தில் தனித்தியங்குவதற்காக சிலோன் தௌஹீத் ஜமாத் எனும் பெயருடன் புதிய அமைப்பை உருவாக்கி இயங்குபவர்கள் குறித்தும் இந்திய ஊடகங்கள் பெருமளவு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய தௌஹீத் ஜமாத் எனும் அமைப்புக்கும் தமக்கும் ஒருபோதும் தொடர்புகள் இருந்ததில்லையெனவும் குறித்த நபரைப் பற்றி மூன்று வருடங்களுக்கு முன்பாகவே புலனாய்வுத்துறைக்கு எச்சரித்ததாகவும் தற்போதைய சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். 

இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வூட்டிய சம்பவங்களின் பின்னணியில் குறித்த அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டிருந்தமையும் தொடர்புபடுத்தப்படுகின்ற அதேவேளை, முகநூல் ஊடாக கடுந்தொனியில் பதிவேற்றப்படும் கருத்துக்கள் குறித்தும் த ஹிந்து போன்ற பத்திரிகைகள் கவனமெடுத்து தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment