தீவிரவாத செயலை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்: ACJU - sonakar.com

Post Top Ad

Monday 22 April 2019

தீவிரவாத செயலை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வாருங்கள்: ACJU


2019.04.21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் வன்மையாகக் கண்டிக்கின்றது.


ஒர் உயிரைக் கொலை செய்தாலும் அது முழு மனித சமூகத்தையும் கொலைசெய்யும் குற்றமாகும் என்று கூறுகின்ற இஸ்லாம் இத்தகைய மிருகத்தனமான தீவரவாதச் செயலுக்கு ஒரு போதும் துணை போகாது. இத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுவோருக்கும் இஸ்லாத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. தீவரவாதத்துக்கு மதம் இல்லை என்பதையும் ஜம்இய்யா தெளிவாகக் கூறிக்கொள்கின்றது.

நேற்றைய தீவிரவாத தாக்குதலில் உயரிழந்த, பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரர்களின் துயரங்களிலும் பங்கெடுத்து தம்மாலான அனைத்து உதவிகளையும், நிவாரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது சகல மாவட்ட, பிரதேசக் கிளைகளை வேண்டிக் கொள்கின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும்; அனைவரும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.


அவ்வகையில் பின்வரும் நடவடிக்கையில் உடனடியாக களம் இறங்குமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

1. குறித்த தீவரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அனைத்து முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்குதல். 
2. தாக்குதலுக்குட்பட்ட பகுதியில் செல்வாக்குள்ள மதத்தலைவர், மற்றும் முக்கியஸ்தர்களுடன் இணைந்து தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். 
3. உடலாலும் பொருளாலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தல். 
4. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மஸ்ஜிதும் பணம் சேகரித்தல். 
5. பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மனவேதனையால் அல்லலுறும் இச்சந்தர்ப்பத்தில் அவர்களுடன் நிதானமகவும் பொறுமையாகவும் நடந்துகொள்ளல். 
6. நாட்டுச் சட்டங்களைப் பூரணமாகப் பேணி நடத்தல்.


அஷ்ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் - பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment