பட்ஜட்டும்... தீர்க்கப்படாத கணக்குகளும்! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 March 2019

பட்ஜட்டும்... தீர்க்கப்படாத கணக்குகளும்!


கடந்து செல்ல விடுவதும் மறந்து விடுவதுமே தெரிவான நிலையில் இன்றைய இலங்கை சமூகம் தமது அன்றாட வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீதிமன்றில் போராடி மீண்டும் ஆட்சி பீடமேறிய தேசிய ஐக்கிய முன்னணி அரசு தமது 'கன்னி' வரவு-செலவுத் திட்டத்தை முன் வைத்து சலுகைகளை அள்ளிவீசியுள்ளது.

எதிர்க்க முடியாத நாமல் ராஜபக்ச, எல்லாம் நல்லாத்தான் இருக்கிறது, ஏன் இதை முன்னரே செய்யவில்லையென தன் பங்குக்கு ஒரு கேள்வியைக் கேட்க, கடந்த காலத்தை மறக்காத ஒரு நெட்டுலக வாசி, உங்கள் தந்தை பட்ட கடனை அடைக்க காலம் தேவைப்பட்டது என்று பளார் என ஒரு பதிலையும் எழுதியிருந்தார்.

ஆக, மக்கள் தாம் தாண்டிச் செல்வதற்காக எத்தனையோ விடயங்களை கடந்து செல்ல அனுமதித்து வாழ்கின்றனர். ஒருவகையில் அதுவன்றிய மாற்று வழியொன்று இல்லையெனும் நிலையும் கூட உணரப்படுகிறது.
சீனர்களைக் கொண்டு மாட மாளிகைகளைக் கட்டினீர்கள், அதி நவீன நெடுஞ்சாலைகளை அமைத்தீர்கள் ஆனால் ஹம்பாந்தோட்டையில் ஒரு லட்சம் கழிவறைகளின் தேவை (அடிப்படை) இருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லையென மஹிந்த ராஜபக்ச தரப்பைப் பார்த்து மங்கள சமரவீர கர்ஜித்ததிலும் உண்மையில்லாமலில்லை. இன்னோர் வகையில் இலங்கையின் அரசியல் தளத்தின் வியூகங்கள் இவ்வாறே காணப்படுகின்றன. இதே அடிப்படையில் மங்களவிடமும் நாம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் உண்டு.


அந்தக் கேள்விகளை முஸ்லிமாக அன்றி, சாதாரண இலங்கைக் குடிமகனாகக் கேட்கலாம். இன ஐக்கியத்தையும் - சிறுபான்மை சமூகங்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் போவதாக தெரிவித்து ஆட்சிபீடமேறிய ஐக்கிய தேசியக் கட்சி, அதனை உறுதி செய்யவும் இல்லை. இன வன்முறைகளால் ஏற்பட்ட அழிவுகளுக்கான இழப்பீடுகளை வழங்கி முடிக்கவுமில்லை.

அதற்கும் அந்த நெட்டிசன் போன்று, மஹிந்தவின் கடன் அடைத்துக் கொண்டிருக்கிறோம் என மங்கள சமரவீர சொல்லலாம். ஆனால், காலம் அதனை இனியும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆதலால் தான் பரவசப் பாதீடு ஒன்றை முன் வைத்து எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்திருக்கிறது அரசு.

அறிவிப்பின் சாரம்சத்தை நோக்குகையில் இத்தனை அபிவிருத்தியடையாத நிலையில், இத்தனை பாரிய கடன் சுமையுடன் இலங்கை அரசால் இந்த அளவு சலுகைகளை வழங்க முடியுமாக இருந்தால், நாடு அபிவிருத்தி கண்டால் அது நாட்டு மக்களுக்கு எத்தனை பயனளிக்கும்? என்ற கேள்வி எழாமலில்லை. ஆனால், இலங்கையில் அபிவிருத்தியென்பது அத்தனை இலகுவான விடயமா? என்ற கேள்வியும் எழாமலில்லை.

எங்கோ, எதிலோ ஒரு ஆரம்பப்புள்ளியை அமைத்தாக வேண்டும். ஆனால், அந்த ஆரம்பப்புள்ளிக்கு இனம் - மதம் - பிரதேசம் - மாவட்டம் - மாகாணம் தடையாக இருந்துகொண்டே இருக்கும் நிலையில் அதனை முன்னெடுப்பதும் அத்தனை இலகுவான விடயமில்லை.

2004 சுனாமிப் பேரழிவு இத்தீவில் உருவாக்கிய அதிர்வு அவ்வப்போது நினைவுகூறப்படுகிறது. ஆனால், பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவுதி அரேபிய அரச நிதியுதவியில் உருவாக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டம் யாருக்கும் பயனில்லாமல் காடாகி, வீணாகிப் போயிருக்கிறது. இது கூட சிறந்த உதாரணம்.

மறுபுறத்தில் அரசினால் முன் வைக்கப்படும் சிந்தனை வடிவங்கள் தொடர்பிலான ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்தாமலும் இருக்க முடியாது. பட்ஜட் அறிவிப்பில், குறிப்பாக கல்வித்துறையை முன்னேற்றுவதற்கான முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் நிச்சயமாக கவர்ச்சிகரமானவை.

முதலில், அரச பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத பிள்ளைகள் தனியார் பல்கலைக் கழகங்களிலாவது உயர் கல்வியைத் தொடர வாய்ப்பளித்து, அதற்கு 12 வருட வட்டியில்லாக் கடனை அறிவித்திருப்பது முக்கிய அம்சமாகவே படுகிறது. பட்டப்படிப்பை முடித்த பின் இரு வருட அவகாசம், அதிலிருந்து 12 வருடங்கள் என கணக்கிடும்போது ஆகக்குறைந்தது 15 – 17 வருடங்கள் 11 லட்ச ரூபா வட்டியில்லாக் கடன் நிச்சயமாக கல்வியபிவிருத்திக்குப் பங்களிக்கும்.

இங்கிலாந்தில் கூட பல்கலைக்கழகக் கல்வி இலவசமில்லை. வருடாந்தம் 9,250 பவுண்கள் கட்டணமும் அதற்கு மேலதிகமாக ஏறத்தாழ அதே தொகை தங்குமிட செலவும் இருக்கும். வீட்டிலிருந்து பயணிக்கக் கூடிய தொலைவிலுள்ள பல்கலையில் அனுமதி கிடைத்தாலும் கூட ஆகக்குறைந்தது 3 வருடங்களுக்கு 27,750 பவுண்கள் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவுக்கு மிகக்குறைந்த அளவில் 3,000 பவுண்கள் என கணக்கிட்டாலும் கூட 30,000 பவுண்கள் அதாவது இலங்கை நாணய மதிப்பீட்டின் படி 7,110,000 ரூபா செலவாகும். இதனோடு ஒப்பிடுகையில் நாட்டின் தற்போதைய நிலைமையில் இத்திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அது போல அவற்றைக் கொண்டு பயனடைய வேண்டியதும் மக்கள் கடமையாகிறது.

இதற்கு மேலதிகமாக உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹார்வட் போனற கல்வி நிலையங்களில் அரச செலவிலேயே கல்வி கற்கும் வாய்பினை இவ்வருடம் 14 மாணவர்களுக்கு வழங்குவதற்கும் எதிர்காலத்தில் அதனை அதிகரிப்பதற்கும் அறிவிக்கப்பட்டுள்ள யோசனையும் வரவேற்கப்பட வேண்டியது.

அரசு வழங்கும் இவ்வுதவிக்குப் பகரமாக அதன் பயனாளி, தன் கல்வியை நிறைவு செய்து நாடு திரும்பி பத்து வருடங்கள் தாய்நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனக்கென்னவோ குறைந்தபட்ச நிபந்தனையாகவே படுகிறது.

ஏனெனில் குறித்த பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்கள் கல்வி கற்பதற்கான செலவு ஏலவே நான் சுட்டிக்காட்டியுள்ள உள்நாட்டு மாணவர்களின் செலவீனத்தை விட மூன்று மடங்கு  அதிகமாகும். அவ்வாறான உதவியைப் பெறுபவர்கள் தாய்நாடு திரும்பி 10 வருடம் தமது நிபுணத்துவத்தை நாட்டு முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்பது குறைந்த பட்ச எதிர்பார்ப்பே.

இதில் நமக்கு எழும் கேள்வியெல்லாம், இவ்வாறான திட்டங்களில் எத்தனை முஸ்லிம் மாணவர்கள் பயனடைவார்கள் என்பதே. இச்சமூகத்தின் கல்வியபிவிருத்தி பற்றி உரத்துப் பேச வேண்டிய கட்டாயம் நமக்குத்தான் இருக்கிறது. அது நமக்கு இனவாதிகள் எனும் அடையாளத்தைப் பெற்றுத்தந்தாலும் கூடவே.

கடந்த ஒக்டோபரில் ஒரு ஆய்வு மாநாட்டிற்காக கொழும்பு வந்திருந்தேன். அங்கு எம் சமூகத்தின் இருப்பும் அதன் ஏற்பும் குறித்து சர்வதேச ஆய்வாளர்கள் மத்தியில் வலியுறுத்திப் பேசியும், அதற்கேதுவான ஆய்வறிக்கையும் சமர்ப்பித்திருந்தேன். ஈற்றில் கடந்த வாரம் ஆய்வு மாநாட்டின் இறுதியறிக்கையை வெளியிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள் நான் புலம்பெயர்ந்து வாழும் மக்களை சமய ரீதியில் அடையாளப்படுத்தி இணைத்துக் கொள்ள வேண்டும் எனப் பேசியதாக எழுதியிருக்கிறார்கள்.

இதைக் கொண்டு என்னால் கோபப்பட முடியாது. காரணம், முஸ்லிம்கள் என்றழைப்பதை நாம் இன அடையாளமாக முன் வைக்கின்ற போதிலும் அது மற்றவர் பார்வைக்கு மத அடையாளமாகவே தென் படும். எனவே, இன்னும் இன்னும் நாம் முயற்சி செய்ய வேண்டுமே தவிர மனம் தளர முடியாது.
ஆக, எமது சமூக அபிவிருத்திக்கான விடயங்களை முன் வைத்துப் பேசுவதற்கு நாம் தயங்க முடியாது.

மங்கள சமரவீரவின் வரவு-செலவுத் திட்டத்தில் அவர் வெளிநாட்டுப் புலமைப்பரிசிலுக்காக முன் வைத்த 10 வருட சேவைக்கால நிபந்தனையை ஒரு புறம் வைத்து மதிப்பிடுகையில் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே பிரித்தானியா வந்து துறைசார் நிபுணத்துவம் மற்றும் பாண்டித்தியத்தைப் பெற்று தாமாகவே நாடு திரும்பிப் பணியாற்றிய பல முன்னோர்களையும் நினைவு கூற கடமைப்படுகிறேன்.

டொக்டர் எம்.சி.எம். கலீலிருந்து ஆரம்பித்து, முன்னாள் நிதியமைச்சர் நைனா மரிக்கார் காலம் வரை (1915-1978) இவ்வாறு பல முஸ்லிம் கல்விமான்களை இவ்வகையறாவில் பட்டியலிடலாம். அதில் சிலர் அரசியலுக்கு அப்பால் இருந்ததனால் அவர்களது பெயர்கள் அத்தனை இலகுவாக மக்கள் மனதில் பதியவுமில்லை. ஆனாலும், எங்கு சென்றாலும், எப்பேற்பட்ட கல்வியைப் பெற்றாலும் நாடு திரும்பி சேவையாற்றிய சமூக முன்னோர்கள் பலர் உள்ளனர்.

ஆதலால், மங்கள சமரவீர அறிவித்திருக்கும் 14ல் ஒன்றையோ இரண்டையோ இல்லை பேராசையில் கூறுவதாக இருந்தால் 14ஐயும் கூட பெற்றுக்கொண்டாலும் அதனூடாக நாடும் சமூகமும் எதிர்கால சந்ததியும் வளம் பெறும். அதற்கு கல்விச்சமூகம் எம் மாணவர்களை தயார் படுத்துவார்கள் என்று நம்புவோம். அதன் மூலம் நம் பக்கமிருந்து தீர்க்கப்படாத கணக்குகள் பலவற்றை நாமே தீர்த்து வைக்கலாம், அதில் சமூகக் கணக்கும் உள்ளடக்கம்.

இது தவிர, வெறுமனே அபிவிருத்திக் கோசங்கள் மாத்திரம் இந்நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்று விடுமா? என்ற கேள்விக்கு ரணில் தலைமையிலான அரசு நான்காவது வருடமாகும் நிலையில் இன்னும் விடை காணவில்லை.

இனக்குரோத மற்றும் இன வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் 'வேலையற்றவர்கள்' எனும் ரீதியில் நாட்டில் பாரிய அளவில் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவது இச்சூழ்நிலையை ஓரளவு தவிர்க்கும் என ரணில் விக்கரமசிங்க திடமாக நம்பி வந்தார். ஆனாலும், அவர் நம்பிய அளவில் தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படவோ, பொருளாதாரம் முன்னேறவோ இல்லை. தருவதாகச் சொன்ன இலவச Wi-Fi ஐத் தரவுமில்லையென்பதால் இளைய சமூகம் தாம் நின்ற இடத்திலேயே தரித்து நிற்கிறது. இதிலிருந்து இளைய சமூகம் விடுபடுமோ இல்லையோ இனியம் அம்பாறை – திகன கணக்குகள் புதிதாகத் துவங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அதன் பின்னணியில், தீர்க்கப்படாத அந்தக் கணக்குகள் தொடர்பில் பலவீனமான அரசாங்கம் எதையும் அறிவிக்காததும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயங்குவதும் கூட அவதானத்தைப் பெறுகிறது. தேர்தல் கால அரசியலுக்கு இவை எவ்வகையில் உரமூட்டும் என்ற சந்தேகம் இழையோடிக் கொண்டிருக்கையில் ஆரோக்கியமான கல்வியபிவிருத்தி அடுத்த தலைமுறையினர் மத்தியிலாவது மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையும் துளிர்விடாமலும் இல்லை.

ஆனாலும், அதுவரை நாட்டின் அமைதிக்கும் - முன்னேற்றத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய அரசும் அதன் கவர்ச்சிகரமான பேச்சுக்களும் நிலையான உருப்பெறுமா? என்பது கேள்விக்குறியே. நாமல் ராஜபக்சவின் கூற்றுப்படி இவ்வரசின் ஆயட்காலம் இன்னும் ஆறு மாதமே, அதற்குள் எதைச் சாதிக்க முடியும் என்ற கேள்வியும் வலுப் பெறுகிறது.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தலே இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சி அடம் பிடித்துக் கொண்டிருக்க, அதற்கு முன்னர் தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பொதுத் தேர்தலுக்கு (நாடாளுமறைக் கலைத்து) ஆவன செய்வேன் என மைத்ரி தெரிவித்திருப்பதும் தட்டிக்கழிக்க முடியாத விடயங்களே.

இப்பேற்பட்ட சூழ்நிலைப் பின்னணிக்குள் வரவு-செலவுத் திட்ட சூத்திரங்கள் வெறும் அரசியல் மாயையாகவே காணப்பட்டாலும் கூட, நடைமுறைச் சாத்தியமான சில விடயங்கள் ஊடாக நாடும் மக்களும் நன்மையடைய முயற்சிப்பது தகும். கல்வி முன்னேற்ற திட்டங்கள் அதிலடங்கும் என்பதே என் எதிர்பார்ப்பு.


முஸ்லிம் சமூகம் இதில் எந்த அளவுக்குள் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது என்பது சமூக மட்டத்தில் ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது. 2014ஐ மறக்க முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு ராஜபக்ச யுகம் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனாலும் 2014லிலேயே பேருவளையில் கோட்டாபே ராஜபக்சவுக்கு வரவேற்பளிக்கப்பட்டிருந்ததைக் கருத்திற் கொள்கையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வந்தாலும் வருவார் என எதிர்பார்க்கப்படும் அவருக்கு தென் மாகாணத்தில் ஆங்காங்கு வரவேற்பளிக்கப்படுவதைக் கொண்டும் குறைபடுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வாறே, அக்கரைப்பற்றிலும் மஹிந்த தான் தலைவர் என்று கூறி நிற்கும் அரசியல் தலைமையையும், காத்தான்குடியில் நான் அந்தப் பக்கம் தான் என்று நின்று பிடிக்கும் அரசியல் பிரதிநிதிகளையும் நாம் காணத்தான் செய்கிறோம்.

எனவே தனிநபர் அரசியல் விருப்பு-வெறுப்பும் அபிலாசைகளும் பிராந்தியம், பிரதேசம், தொகுதியென மாறுபடுகிறது. சில இடங்களில் தவிர்க்க முடியாத சூழலில் அடங்கியும் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்நாட்டு நிர்வாக முறைமை ஒரு பகிரங்க செயற்திட்டமாகவே பெரும்பாலும் காணப்படுகிறது. எனவே, மக்களும் அதில் தெளிவாக இருந்து, தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கிறார்கள்.

நம் நாடும் அந்த நிலைக்கு வரவேண்டும் என்பதே அவாவாக இருந்தாலும், நல்லாட்சியெனக் கூறி ஏமாற்றப்பட்ட சூழ்நிலையில் இனி எப்போது? என்ற கேள்விதான் முன்நிற்கிறது. எதைச் செய்ய வேண்டுமானாலும் அதற்கு அரசியல் செல்வாக்கு அவசியப்படுவதும் சிறு சிறு விடயங்களுக்குக் கூட முறையற்ற அல்லது தேவைக்கு அதிகமான நிபந்தனை வடிவங்கள் இருப்பதாலும், நேரம் - பொருள் மற்றும் மனித வலுவைக் காப்பாற்ற லஞ்சத்தைக் கொடுத்தாவது காரியத்தை சாதிக்க விரும்பும் கலாச்சாராமே மேலோங்கி நிற்கிறது.

ஒருவரைத் தெரியம் என்பதற்காக அரசியல்வாதிகள் இயங்குவதுமில்லையென்பதால் பணமாக – பொருளாக இல்லாவிடினின் ஏதோ ஒரு வடிவத்தில் பிரதியுபகாரத்தை செய்தே தம் பணிகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள் மக்கள். இச்சூழ்நிலையில், அரசியல்வாதிகளுக்கே பலமும் அதிகமாகிறது, ஆதலால் மக்களும் தங்கி வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இவை ஓரிரவில் இடம்பெறக் கூடிய மாற்றங்கள் இல்லை.

அப்படியாக இருந்தால் வடபுலத்தில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் கால் நூற்றாண்டு தாண்டியும் இன்னும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை. நுரைச்சோலைகள் காடாக வேண்டிய அவசியமில்லை, அளுத்கம – கிந்தொட்ட – திகனயில் சமூக ஒடுக்குமுறைகளைக் கடந்து அப்துல் பாசித், சதகத்துல்லாஹ் மௌலவி போன்றோரின் உயிரிழப்பை இந்த சமூகம் மறந்து வாழவும் அவசியமில்லை.
ஆக மொத்தத்தில் பல சந்தர்ப்பங்களில் போலி மௌனமும் - இன்னும் பல சந்தர்ப்பங்களில் போலியாகவேனும் வட்ஸ்அப்புகளில் உணர்வுகளைப் பொங்கவிடுவதுமாக காலம் கடந்து செல்கிறது. மாற்றத்துக்காக உழைக்கும் மக்களாக நாம் இல்லையென்பதால் தானாகத் தேடி வரக்கூடிய மாற்றத்துக்காகக் காத்திருக்கிறோம். அது வராத வரை இன்றளவில் நமது சமூகத்தைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்ள இம்ரான் கானுக்கும் பாகிஸ்தானுக்கும் ஜிந்தாபாத் சொல்லி சற்றே அமைதி காண்கிறோம்.
திருக்குர்ஆனில் (13:11) குறிப்பிடுவது போன்று, எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

பெருஞ்சமூகத்தில் இழையோடிக்கொண்டிருக்கும் சிறு நதியாகவே நாமிருந்தாலும் கூட தெளிவான நீரோட்டம் இருந்தால் நாளை பெரு நதியாக ஊற்றெடுக்கலாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் முயற்சித்து வெற்றி பெறுவோமாக!

2ld3lJX

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com


No comments:

Post a Comment