முட்டைப் பையனும் முணுமுணுப்புகளும்! - sonakar.com

Post Top Ad

Friday 22 March 2019

முட்டைப் பையனும் முணுமுணுப்புகளும்!


கடந்த வெள்ளிக்கிழமை 15ம் திகதி, நியுசிலாந்து மாத்திரமன்றி உலகமே அதிர்ந்தது. ஜும்மா நேரத்துக்கு சற்று முன்பாக கிறைஸ்ட்சேர்ச் அந்நூர் பள்ளிவாசலுக்குள் புகுந்த வெள்ளையின மேன்மைவாதப் (White Supremacy) பயங்கரவாதி அங்கு துப்பாக்கிச் சூடு நடாத்தி, தொழுகைக்காகக் காத்திருந்த பலரை கொன்று குவித்து விட்டு, சற்று தொலைவில் இருந்த லின்வுட் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கும் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து தனது பயங்கரவாத சித்தார்ந்தத்துக்கு வடிவம் கொடுத்து மகிழ்ந்தான்.

பொதுவாக நியுசிலாந்தில் ஜும்மா தொழுகை (இக்கால கட்டத்தில்) இரண்டு மணியளவிலேயே இடம்பெறும் என்பதால் பயங்கரவாதி உள் நுழைந்த 1.40 க்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறைவான எண்ணிக்கையிலானோரே அங்கு இருந்துள்ளமை மனதுக்கு ஆறுதல். ஆனாலும், அதற்கு முதல் நாளே தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப் போவதாகவும் அதனைத் தனது பேஸ்புக் ஊடாக நேரடி ஒளிபரப்பு (Live Streaming) செய்யப் போவதாகவும் 8chan எனும் அனாமேதய உலக இணையத்தில் பதிவு செய்து விட்டே இப்பயங்கரவாத தாக்குதலுக்குத் தயாராகியுள்ளான் பிரன்டன் ஹரிசன் டரன்ட் எனும் 28 வயது அவுஸ்திரேலிய பிரஜை.

சொன்னபடியே வெள்ளிக்கிழமை பெருந்தொகை துப்பாக்கிகளுடன் அங்கு சென்ற பயங்கரவாதி பிரன்டன் தாக்குதல்களை நடாத்தியதோடு அந்நூர் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தை நேரடி ஒளிபரப்பும் செய்து உலகறியச் செய்திருந்தான். லின்வுட் பள்ளிவாசலில் உயிரைத் துச்சமாக மதித்த ஓரிருவர் அவனை எதிர்த்துப் போராடி விரட்டியதிலும், பொலிசார் விரைந்ததனாலும் அங்கு உயிரிழப்புகள் குறைந்திருந்தன.


அந்நூர் பள்ளிவாசலிலும் பயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறிக்க முனைந்து, போராடி ஒருவர் உயிர் நீத்திருந்தார். மூன்று வயது குழந்தை முதல் 72 வயது முதியவர் வரை, ஆண்கள் - பெண்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 50 பேர் உயிரிழந்துள்ளமை இதுவரை உறுதி செய்ய்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்றதையடுத்து அவுஸ்திரேலியா, குயின்ஸ்லன்ட் பகுதியின் செனட்டர் பிரேசர் அனிங் உடனடியாகத் தனது வலதுசாரி குடிவரவாளர் எதிர்ப்புக் கொள்கையை வெளிப்படுத்தி, இவ்வாறான தாக்குதல்களுக்கு முஸ்லிம் குடிவரவாளர்களை அனுமதித்ததுதான் காரணம் என நியாயங் கற்பிக்க முனைந்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

ஆஸ்திரேலிசியா (Australasia) என முற்காலத்திலும் ஓசியானியா (Oceania)  என இக்காலத்திலும் அறியப்படும் அவுஸ்திரேலியா – நியுசிலாந்து நாடுகள் அடங்கிய பகுதியில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் வெள்ளையின மேன்மைவாதம் பல காலங்களாக வேரூன்றிய விடயம் மாத்திரமன்றி அங்குள்ள பூர்வீக குடிகள் இனவாதத்தினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டே வருகிறார்கள்.

ஐரோப்பா – அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் மேலோங்கியுள்ள வெள்ளையின மேன்மைவாதம் மேலோட்டமான பார்வையில் ஒட்டுமொத்தமாக அடிப்படையற்றது. இப்பிராந்தியங்களின் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது எல்லைகளைத் தாண்டிச் சென்று, தமது அரசியல் நலனுக்காக உருவாக்கும் சர்வதேச சிக்கல்களே இன்றைய உலக சனப்பரம்பலின் இடப்பெயர்வு (Migration), கலப்பு மற்றும் கலாச்சார மோதல்களையும் (Cultural clashes) உருவாக்கியுள்ளது என்பது ஒரு பக்க உண்மையாகும்.

ஆயினும், தேசியவாதம் எனும் போர்வையில், தமது நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும், அபிவிருத்தியடையாத மற்றும் மத்தியகிழக்கு நாடுகளுக்குள் ஊடுருவிச் செய்யும் அடாவடிகளை இவ்வாறான சக்திகள் வேண்டுமென்றே மறந்து விடுகின்றன. ஆதலால், குடிவரவாளர்கள் (Immigrants)  அவர்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் எதிரிகளாகப் பார்க்கப்டுகிறார்கள். ஆனாலும் இதுவும் அரசியலின் வடிவம் என்பதே ஈற்றில் தெளிவாகும் உண்மை.

அதனை மிகத்தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் நியுசிலாந்து தாக்குதலை குடிவரவாளர்களுக்கு எதிரான அரசியலாக்க முனைந்த அவுஸ்திரேலியாவின் செனட்டர் மீது முட்டையால் அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது இளைஞன் வில் கொனலி.

இணைய உலகில் மிக வேகமாக அறியப்பட்ட ஹீரோவாக உருவெடுத்துள்ள வில் கொனலிக்கு Eggboy என புனைப்பெயரும் வழங்கி அவரைக் கொண்டாடுகிறது உலகம்.

ஒரு பழுத்த அரசியல்வாதியின் (69 வயது) இனவாத அரசியல் 17 வயது வெள்ளையின இளைஞனிடம் எடுபடவில்லை. மாறாக, இந்த அரசியலுக்கும் இனவாதத்துக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்ட வில், முட்டைத்தாக்குதல் நடாத்தி மனிதநேய வீரனாக உருவெடுத்திருக்கின்றமை ஏதோ ஒரு சம்பவமென விட்டுச் செல்லக் கூடிய நிகழ்வாக இல்லையென்பதால் இன்று இந்நிகழ்வுடன் கலந்து கொள்ளும் முணுமுணுப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நியுசிலாந்து தாக்குதல் இடம்பெற்ற சற்று நேரத்தில், சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் தீயாகப் பரவின. குறிப்பாக இலங்கையில் நிலவும் பேரினவாத கொள்கையை ஆதரிப்பவர்கள் சர்வதேச குடிவரவு எதிர்ப்பாளர்களின் அதே நிலைப்பாட்டிலிருந்து 'முஸ்லிம்களே அன்பானவர்களை இழப்பதன் வலி புரிகிறதா?' என கேள்வி கேட்கும் வகையில் பதிவிட்டிருந்தனர். 

இன்னும், முஸ்லிம்களே நீங்கள் எங்கு போனாலும் இது தான் நடக்கிறது என எழுதப்பட்ட கேலிச் சித்திரங்களும் உலா வர ஆரம்பித்தன. இந்த சம்பவம் உங்களுக்கான ஒரு படிப்பினை என தெரிவிக்கும் ட்விட்டர் பதிவுகளும் வேகமாக வரத் தொடங்கின.

ஒரு சிறு கணம், இது பற்றி சிந்தித்த போது, உலகம் முஸ்லிம்களைப் பற்றி இவ்வாறு தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. மறுபுறத்தில் இந்தப் பிரச்சாரம் அவுஸ்திரேலியாவிலேயே வாழும் வில் கொனலி போன்ற 17 வயது இளைஞர்களை பாதிக்கவில்லையென்பதை நினைத்து சந்தோசமாகவும் இருந்தது.

ஆனாலும், எங்கோ நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கையில் உள்ள சிங்கள – தமிழ் இளைஞர்கள் (பெரும்பாலும் அவர்களுக்கும் முஸ்லிம் நண்பர்கள் இருக்கக் கூடும்) இவ்வாறு சந்தர்ப்பவாத தெளிவூட்டல்களை மேற்கொள்ள நினைப்பது வெறுமனே அவர்களுக்குள் ஊறிக் கொண்டுள்ள இனவாதம் மாத்திரம் தானா? அல்லது நம்மை நாமே சுயவிமர்சனம் செய்வின் நம் மீது உலக அளவிலான பிழைகள் இருக்கிறதா? எனும் கேள்விகள் எழுந்தன.

இத்தாக்குதலை ஊடகத்துறையில் உள்ள மாற்று மத நண்பர்கள் கூட பெருமளவு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலாக சித்தரித்துக் கேலி பேச, இல்லை, இது வெள்ளையின மேன்மைவாதம், இன்று பள்ளிவாசல், நாளை கோயில், அதற்கு மறு நாள் நிறமானவர்கள் செல்லும் தேவாலயங்களாகவும் இருக்கலாம் என என் பங்குக்கு நானும் ஒரு பதிவிட்டிருந்தேன், பலர் அதனை ஏற்றுக்கொள்ள, இலங்கையிலிருந்து ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்னைத் தொடர்பு கொண்டு, நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் இது முஸ்லிம்களுக்கு எதிரான உலக அடக்குமுறைதான் என வாதிட்டார். சற்றே ஆச்சரியமாகத் தான் இருந்தது. அதைத்தான் மற்றவர்களும் சொல்கிறார்கள், நான் மாத்திரம் தான் அப்படி சிந்திக்கவில்லையா என கேள்வியெழுந்தது.

இதற்கிடையில், முஸ்லிம் சமூகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத வில் கொனலி எனும் 17 வயது இளைஞன் தனது நாட்டின் செனட்டரின் தலையில் முட்டையால் அடித்து முஸ்லிம் விரோத இனவாதத்துக்கு எதிரான தனது எதிர்ப்பை உலகறியச் செய்கிறார். அவருக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என மனது குமுறியது.

இன்னும் சற்று நேரத்தில், மேற்கத்தேய சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து, மிகத் துணிச்சலாக தாக்குதலை நடாத்திய பிரன்டன் ஒரு பயங்கரவாதியென பகிரங்கமாக அறிவித்த நியுசிலாந்து பிரதமர் ஜசின்டா அர்டன், தமது நாட்டில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்தார். இப்போது இத்தனை மிதவாத சிந்தனை கொண்ட ஒரு தலைவரின் நிலைப்பாட்டுக்கு மதவாத அடிப்படையில் நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்றும் மனம் குமுறியது.

இன்னும் நேரம் போக, பிரன்டன் ஹரிசன் டரன்ட் எனும் குறித்த பயங்கரவாதி, தனது தாக்குதல்களைத் திட்டமிட முன்பதாக 2011ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளான். குறிப்பாக பாகிஸ்தான், துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகளுக்கும் தனது மூதாதையர்களின் வரலாறு தேடி பல்கேரியா மற்றும் ஐரோப்பாவுக்கும் பயணித்துள்ளான் என்கிற செய்தி வெளியானது.

போன இடங்களில் எல்லாம் இவன் பார்த்தவர்கள் தான் முஸ்லிம்கள், அவர்களின் வாழ்வியல் தான் இஸ்லாம் என்று அவன் முடிவெடுத்திருந்தால் அதனை மறுதலிக்கும் சக்தி யாருக்கும் இல்லை. ஏனெனில், நமது சமூகம் சர்வதேச அளவில் இன்னுமே யார் 'உண்மையான' முஸ்லிம்கள் என்று 1500 வருடங்களை நெருங்கியும் முடிவெடுத்து முடியவில்லை.

இலங்கையிலும் தாம் சார்ந்த குழுவைச் சேர்ந்தவர்களே சொர்க்கவாசிகள் என கட்டியெழுப்பப்பட்டுள்ள இயக்கவாத சித்தார்ந்தங்கள் இதைத்தான் போதிக்கின்றன. அவர்கள் சார்ந்த, அவர்களது ஐதீகங்கள் சார்ந்தவர்கள் மாத்திரமே அவர்களால் முஸ்லிம்களாகவும், இஸ்லாமிய அறிவுள்ளவர்களாகவும் அறியப்படுவதனால் ஏனையோர் அந்த வகையறாக்களுக்குள் வருவதே இல்லை. தவிரவும் இன்றைய முஸ்லிம் அறிவாளிகள் 1400 ஆண்டுகள் பின் நோக்கிப் பயணித்து, அப்போது நடந்த சம்பவங்கள் சரியா? பிழையா? என தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு யார் தான் உண்மையான முஸ்லிம்கள் என்ற இந்த பசப்புக் கேள்விக்கு பதிலும் இருக்கப் போவதில்லை.
ஆனால், பிரன்டன் போன்ற பயங்கரவாதிகளுக்கு 'முஹம்மத்', 'அஹமத்' போன்ற முன்னீடு (Prefix) உள்ளவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள் தான். இலங்கை முஸ்லிம்களுக்கும் அது நன்றாகவும் தாராளமாகவும் தெரியும், ஆனாலும் கஞ்சா, ஹெரோயின் கடத்தல் மற்றும் வரி மோசடி, இன்ன-பிற குற்றச்செயல்களில் அகப்படும் இந்த முன்னீட்டுடன் அரபு மற்றும் உருதுப் பெயர் கொண்டவர்களை உடனடியாக 'அவன் முஸ்லிமே இல்லை' என விளக்கமளித்து விடுவார்கள்.

ஆக, ஒருவன் முஸ்லிம் என்று இவர்கள் ஏற்றுக்கொள்வதற்கான வரையறைதான் என்ன? குற்றச்செயல்களில் சிக்கக் கூடாது என்பது மாத்திரம் தானா? என்ற கேள்வியும் எழும். அவ்வாறு அவன் சிக்காத வரை அவன் பள்ளித் தலைவராகவும் இருக்கலாம், இந்த சமூகம் கண்டு கொள்ளாது. இப்பேற்பட்ட கட்டமைப்பில் சமூகம் வாழும் போது பிரன்டன் போன்றவர்கள் இவர்களைக் கண்டு இஸ்லாத்தை அடையாளப்படுத்திக் கொள்வதையும் தவிர்க்க முடியாது.

ஆதலால், இவ்வாறு அவன் கண்டு கொண்ட முஸ்லிம் அடையாளம் அவனுக்கு சார்பாக அமைந்து கொள்வதையும் தவிர்க்கும் சக்தியற்றவர்களாக நாம் மாறிவிட்டோம். 

பாகிஸ்தானிய பஞ்சாயத்து விவகாரங்களில் பிரபலமான ஒரு விவகாரம் முக்தரன் பீபியெனும் பெண் தொடர்புபட்டது. பஞ்சாப்பின் மீர்வாலா பகுதியைச் சேர்ந்த இப்பெண்ணின் 12 வயது இளைய சகோதரன் பிறிதொரு ஊரைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்த நிலையில் ஏற்பட்ட சர்ச்சை, பின்னர் பஞ்சாயத்தானது. அந்தப் பஞ்சாயத்தில், தம்பி மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்குப் பகரமாக முக்தரன் பீபியை ஆறு பேர் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்வதற்கு அனுமதியளித்து தீர்ப்பளித்தது ஊர்ப் பஞ்சாயத்து.

இவ்வூரைச் சேர்ந்தவர்களுக்கும் நாம் எதிர்பார்க்கும் அதே அரபு – உருது பெயர்கள் தான் இன்னும் இருக்கிறது என்பதோடு இவர்களும் தம்மை முஸ்லிம்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். முக்தரன் பீபி மீதான பாலியல் கொடுமையை 2002ல் நியாயப்படுத்திய ஊர்ப் பஞ்சாயத்து, ஷரீயா அடிப்படையிலேயே தாம் செயற்பட்டதாகவும் கூற விளைந்தது. அத்துடன் இவ்வாறு கூட்டு வன்புணர்வுத் தண்டனை பெறும் பெண்கள் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்வதும் வழக்கம். ஆனாலும், விதிவிலக்காக முக்தரன் மாய் அல்லது முக்தரன் பீபி என அறியப்படும் குறித்த பெண் நீதித்துறையை நாடினார். வெளியுலகுக்கு இச்சம்பவத்தைத் தெரியப்படுத்தினார், வழமை போன்று மேற்கு நாடுகளில், வரவேற்பு கிடைத்தது. பிரான்சில் முக்தரன் பீபியின் கதையைக் கொண்டு வெளியான நூல் ஏகத்துக்கும் விற்றுத் தீர்க்கப்பட்டது.

அது போன்ற நிகழ்கால நூல்களை படிப்பவர்களைப் பொறுத்தவரை அதுதான் இஸ்லாம்! இதை மாற்றவேண்டும் என்றால் பல நூற்றாண்டுகள் போராட வேண்டும். அவர்களது அறிவு அவ்வளவுதான் என விட்டு விடுவதாக இருந்தால் நமது முன்மாதிரியின் அளவு எங்கு நிற்கிறது? என்ற கேள்விக்கும் விடையைச் சொல்வது கடமை. ஆனாலும், அதற்கு நாம் தயாரா என்பது கேள்விக்குறியே. 

தவிரவும் முக்தரன் பீபியின் இவ்விவகாரம் அந்த ஊர் மற்றும் பிரதேச கலாச்சாரத்துக்குட்பட்டதே தவிர மார்க்கத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்பதே அக்கால கட்டத்திலும் நான் பணி புரிந்த ஊடகத்தில் எனது வாதமாக இருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் பிற்காலத்தில், 2016ல் கூட இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் இதே போன்ற கூட்டு வன்புணர்வு தீர்ப்புகள் வழங்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனாலும் அவை முக்தரன் பீபியின் கதை அளவுக்குப் பிரபலம் பெறவில்லை. ஏன்? காரணம் முஸ்லிம்கள் மீதான உலகின் பார்வை. 



இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா, மத்திய கிழக்கு மற்றும் பெரும்பாலான, முஸ்லிம்கள் செறிந்து வாழும் நாடுகளில், மார்க்கம் அந்தந்த நாட்டின், பிரதேசத்தின், ஊரின் வழமைகள், பழமைகள் கலந்தே பயிற்றுவிக்கப்படுகின்றன. இன்றும் சவுதி அரேபியாவில், அரேபிய கலாச்சாரம் சார்ந்த பல விடயங்கள் மார்க்கமாகவே கணிக்கப்படுகிறது. இலங்கை உலமா சமூகம் அதைப்பற்றி இலங்கை முஸ்லிம்கள் அறியாமல் இருப்பது நல்லதெனக் கருதுகிறார்கள், சரி அதுவும் அப்படியே போகட்டும். ஆனாலும், இன்றைய தகவல் தொழிநுட்பம் பல விடயங்களை அறியச் செய்து விடுகிறது. தம்மை இஸ்லாமிய குடியரசாகக் கூறிக்கொள்ளும் ஈரானிலாக இருக்கட்டும், விட்ட சாம்ராஜ்யத்தை (Empire) மீள நிறுவும் கனவை ஊட்டி வளர்க்கும் துருக்கியிலாக இருக்கட்டும், இந்தியா ஊடாக நம்மை வந்தடைந்த கலாச்சாரத் தழுவல்களாக இருக்கட்டும், எல்லா இடத்திலும் இந்தக் கலப்பின் ஆதிக்கம் இன்னும் மார்க்கத்தின் வடிவமாக ஆளுமை செலத்துகிறது. 

இன்றும் இந்தியாவின் பண்டைய கால மூட நம்பிக்கைகளைத் தழுவிய மார்க்க சம்பிரதாயங்கள் இலங்கையில் இஸ்லாமிய போர்வையில் பின்பற்றப்படுகிறது. இன்னொரு புறத்தில் இஸ்லாம் தமக்குப் பூரண தெளிவைத் தந்து விட்டதாகவும் எம்மவர்களே வாதிடுவார்கள். ஆனாலும் நிதானித்திச் சிந்திப்பவர்களுக்குக் காலம் தகுந்த பதிலைத் தரும். அன்றும் - இன்றும் சமூகம் எவ்வாறு மாற்றம் பெற்று இயங்குகின்றது என்பதை அளவிடுகையில் இதற்காக பதில்கள் தெளிவாகும். உண்மையைப் பேசி, சுய விமர்சனம் செய்து கொள்வதை எமது சமூகம் பொதுவாக விரும்புவதில்லையென்பதால் மிம்பர் மேடைகளிலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே உதாரணங்கள் தேடப்படுகிறது.

நம்மை நியாயப்படுத்திக் கொள்ள நமக்குள் நாம் என்ன விவாதித்துக் கொண்டாலும், பிறர் பார்வையில் நாம் எவ்வாறு இருக்கிறோம், செயற்படுகிறோம் அல்லது காட்சியளிக்கிறோம் என்பது மிக முக்கியமானது. முஸ்லிம்கள் முன்மாதிரி சமூகமாக வாழ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது, ஆனால் அதை எவ்வாறு கட்டியெழுப்புவது என்று பகிரங்கமாகப் பேசத் தயாரில்லை.

ஆதலால், தமது நாட்டில் நடந்த பயங்கரவாத சம்பவத்தை உடனடியாகக் கண்டித்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தைக் காண முஸ்லிம்களின் கலாச்சாரத்தைத் தழுவி அவர்களோடு துயர் பகிரச் சென்ற நியுசிலாந்து பிரதமரின் மனித நேயம் தென்படவில்லை, ஆனால் அவர் முக்காடு அணிந்தார் என்று ஒரு புறம் புகழ்பாடி, மறுபுறம் முக்காடு எமது கலாச்சாரம் இல்லை ஹிஜாப்தான் என்றும் வாதிடுகிறது இச்சமூகம்.

நியுசிலாந்து நாடாளுமன்றம், சமத்துவத்தை வலியுறுத்த சர்வமத தலைவர்களுக்கு இடமளித்து, பயங்கரவாதியின் பெயரைக் கூட உச்சரிக்க மாட்டோம் எனக் கூறி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முன்மாதிரி நடவடிக்கை புரியவில்லை, மாறாக நியுசிலாந்து நாடாளுமன்றில் தொப்பி தாடியணிந்து ஒருவர் உள்ளே போய் விட்டார் என புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. 

இனவாதம் பேசிய செனட்டரை முட்டையால் தாக்கி ஒரு 17 வயது இளைஞன் வெளிக்காட்டிய 'நேயமும்' இன்னும் இவர்களுக்குப் புரியவில்லை!

2ld3lJX

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com





No comments:

Post a Comment