
நாடாளுமன்ற செயற்பாட்டின் பதிவேடான ஹன்சார்ட், வெளியிடப்பட்டு இரு வாரங்களுக்குள் திருத்தப்படக்கூடிய ஆவணம் என்பதால் அதனடிப்படையில் நீதிமன்றம் முடிவொன்றுக்கு வரக்கூடாது என இன்றைய தினம் மஹிந்த தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் வாதிட்டிருந்தனர்.
நாளை கூட குறித்த ஆவணம் திருத்தப்படலாம் எனும் அடிப்படையில் பதிவேட்டின் இறுதி வெளியீடு வரும் வரை அதனை ஆதாரமாகக் கொண்டு மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ள முடியாது என வாதிட்ட மஹிந்த தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணிகள் அலி சப்ரி மற்றும், காமினி மாரப்பன மற்றும் குசான் டி அல்விஸ், நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான இடைக்காலத் தடையும் இறுதித் தீர்ப்பில்லையென்பதால் அவற்றினை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என வாதத்தை முன் வைத்திருந்தனர்.
எனினும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் குற்றங்காண்பது நீதிமன்றின் பணியில்லையென பதிலுக்கு வாதிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கணகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் மனுத்தாக்கல் செய்திருக்கும் போது நாடாளுமன்ற பெரும்பான்மை பற்றிய கேள்விக்கு இடமில்லையென வாதிட்டதுடன் இங்கு மஹிந்த பிரதமர் பதவியை வகிப்பதற்கான சட்ட அடிப்படை என்ன? என்பதே இங்கு கேள்வியாகியுள்ளது எனவும் வாதிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, பிரதமராக பதவி வகிப்பதற்கான அடிப்படையை தெளிவு படுத்த மஹிந்த ராஜபக்சவுக்கு 12ம் திகதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment