ஒலுவில்: ஒரு வரலாற்றுப் பார்வை - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

ஒலுவில்: ஒரு வரலாற்றுப் பார்வை


அறிமுகம்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 9.4 சதவீதமான முஸ்லிம்கள் சிறுபான்மையினராக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரந்து வாழ்கின்றனர். குறிப்பாக அம்பாறை, திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களாகும். இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களுக்குள் அம்பாறை மாவட்டமும் ஒன்றாகும். இது இலங்கை முஸ்லிம்களின் இதயம் என வர்ணிக்கப்படுகின்றது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இம்மாவட்டம் முஸ்லிம் அரசியலில் பிரதான இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகின்றது. 

இம்மாவட்ட தேர்தல் தொகுதிகளையும் 2 மாநகரசபைகளையும் ஒரு நகர சபையையும் 16 பிரதேச சபைகளையும் 19 பிரதேச செயலக பிரிவுகளையும் கொண்டுள்ளது.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவரும் 19 பிரதேச செயலகப்பிரிவுகளுள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவும் ஒன்றாகும். 

இப்பிரதேச செயலகப்பிரிவின் தெற்கெல்லையாக அமைந்துள்ள எழில் மிகு கிராமமே ஒலுவில் ஆகும்.2012 ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் அட்டாளைச்சேனை  பிரதேச செயலகம் கொண்டுள்ள 42,165 மொத்த சனத் தொகையில் 38948 பேர் முஸ்லிம்கள் 2218 பேர் பெரும்பான்மை சிங்கள மக்களும் 924 பேர் தமிழர்களும் 57 பேர் ஏனையோர்களுமாவர். 

முஸ்லிம்களின் பூர்வீக குடியேற்ற வரலாற்றையும் நீர் வளம் நிலம் வளம்,கடல்வளம், கல்வி வளம் ஆகிய அம்சங்களை தன்னகத்தே ஒலுவில் கொண்டுள்ளது.

தென்கிழக்குப்பல்கலைக்கழகம் துறைமுகம் போன்ற தேசிய சொத்துக்களையும் தென்னந்தோப்புக்கள், வயல்வெளிகள், தொன்மையான களியோடை ஆறு மற்றும் பல அரச நிறுவனங்கள் என்பவற்றை இக்கிராமம் கொண்டுள்ளமை மாவட்டத்துக்கே சிறப்புச்சேர்க்கின்றது.

அமைவிடம் 

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கல்முனையிலிருந்து சுமார் 14 கிலோ மீற்றர் தூரத்தில் நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவின் தெற்கு எல்லையில் ஆரம்பமாகும். கிராமமே ஒலுவில் கிராமமாகும். 

ஒலுவில் கிராமத்தின் வடக்கு களியோடை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தையும் வயல்வெளிகளையும் ஆங்காங்கே சில வர்த்தக நிலையங்களையும் கொண்டுள்ள பிரதான வீதியிலிருந்து கிழக்கு நோக்கி சுமார் ஒரு கி.மீ. தொலைவில் செறிவான மக்கள் பரம்பலைக் கொண்டு ஒலுவில் தன்னை அடையாளப்படுத்துகின்றது.

எல்லைகள்

இது கிராமத்தின் வடக்கே. களியோடை ஆற்றையும் தென்னந்தோப்புகள் அட்டப்பள்ளம் கிராமத்தையும் கிழக்கே வங்கக்கடலையும் தெற்கே மரக்கறித்தோட்டங்களையும் பாலமுனை கிராமத்தையும் மேற்கே வயல்நிலங்களையும் சேனைப்பயிர்செய்கைகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

அறிமுக_வரலாறு

நீர் தேக்கத்தையும் குளத்தையும் குறிக்கும் சொல் வில் அல்லது வில எனப்படுகின்றது.புராதன இலங்கையில் இவ்வாறான குளங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்புக்களை மக்கள் அமைத்து வாழ ஆரம்பித்தனர். இவ்வாறான குடியிருப்பு பிரதேசங்கள் பிற்காலத்தில் கிராமங்களாக மாறின. இக்கிராமங்களை அம்மக்கள் வில் என முடிவுறும் பெயர்களை சூடி அடையாளப்படுத்தினர்.

உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில், குடுவில், தம்பலுவில், கோனவில், திருக்கோவில், பொத்துவில், போன்ற கிராமங்களைக் கொள்ளலாம். ஆரம்பக்காலங்களில் ஒலுவில் பிரதேச பள்ளக்காட்டுக்குளம், சாளம்பைக்குளம், ஆலிம்மடு குளம், மறுகுளம், போன்ற குளங்கள் காணப்பட்டன.

இக்குளங்களுள் ஒன்றான ஒல்லிக்குளத்தை அண்மித்து குடியேறிய கிராமமே ஒலுவில் கிராமமாகும். ஒல்லி என்பது ஒரு வகை நீர்த்தாவரமாகும். இத்தாவரத்தின் காயை உடைத்து அதனுள் காணப்படும் அரிசிபோன்ற தானியத்தை உரலில் துவைத்து அதனை உணவுக்காக பயன்படுத்துவர். இதனை ஒல்லிச்சோறு என அழைப்பர்.இப்பிரதேசத்தில் பல குளங்கள் காணப்பட்ட போதிலும் ஒல்லிக்குளத்தை அண்டிய பிரதேசம் மாத்திரமே மக்கள் குடியிருப்புக்கு ஏற்றதாக காணப்பட்டது. 

மந்தை வளர்ப்பை தமது பிரதான ஜீவனோபாய தொழிலாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு இப்பிரதேசம் குடும்பமாகத் தங்கி வாழ்வதற்கு ஏற்ற வகையில் நீர்வளம், கடல்வளம், நிலம் வளம் என்பன தாராளமாகக் கிடைத்தன.

இதுபோன்ற பல காரணங்களே ஒல்லித்தாரவம் நிறைந்திருந்த குளத்தின் அருகில் இவர்கள் தமது குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டனர். மக்கள் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்ட பின்னர் இப்பிரதேசம் ஒல்லிக்குளம் என அழைக்கப்பட்டது.

‘ஒல்லிக்குளம்’ என்பது காலப்போக்கில் ஒலுவில் என சிங்கள மொழியில் அழைக்கப்பட்டது. இதற்கு பிரதான காரணமாக அமைவது உள்நாட்டிலிருந்து குடியேரிய முஸ்லிம்கள் சிங்கள மொழியில் கொண்டிருந்த பரீட்சயமெ எனலாம்.

சிங்கள மொழியில் குறிப்பிடப்படும் ‘ஒலு’ என்பது ஒல்லித்தாவரத்தையும் ‘வில்’ என்பது குளத்தையும் தமிழில் குறிக்கின்றது. எனவே, ஒலுவில் என்பது தமிழில் ஒல்லிக்குளம் என பொருள் ஏற்கின்றது.

மந்தை வளர்ப்பை பிரதானமாகக் கொண்டு ஒல்லிக்குளத்தையும் அதனைச் சூழவுள்ள வளங்களையும் தெரிவு செய்த மக்கள் இக்குளத்திலும், கடலிலும் கிடைத்த மீன்களைப் பிடித்து தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தனர்.
ஆரம்ப காலங்களில் வெல்லஸ்ஸ, கொட்டப்போவ, பங்கரகம்மன போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் காட்டு மாடுகளைப் பிடித்து அவற்றை தவணைமாடுகளை பழக்கி அம்மாடுகள் தேவைப்படும் வியாபாரிகளுக்கு விற்று வந்தனர். 

இத்தவணை மாடுகள் தவணை முறையில் போக்குவரத்து மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு பேருதவியாக இருந்தன. தவணை மாடுகளுடன் கிழக்கு பிரதேசத்திற்கு வருகை தந்த வெல்லஸ்ஸ, கொட்டப்போவ, பங்கரகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரே ஒலுவில் கிராமத்தின் பூர்வீகக் குடிகளாவர்.

இப்பிரதேசத்தின் இயற்கை வனப்பு, நீர்வளம் என்பன இவர்களை கவர்ந்தன. அத்தோடு குறித்த பிரதேசம் தொழிலுக்காக மட்டுமல்லாது குடும்பமாக வாழ்வதற்கும் ஏதுவாக அமைந்தமையினால் அவர்கள் நிரந்தரமாக தங்கினர்.

1505 இல் இலங்கையினுள் நுழைந்த போர்த்துக்கேயர்கள் கொழும்பில் செல்வாக்கு மிக்கவர்களைக் காணப்பட்ட முஸ்லிம்களை அங்கிருந்து துரத்தினர்.

கொழும்பிலிருந்து போர்த்துக்கேயரால் துரத்தப்பட்ட இந்திய வம்சாவளி, ஏனைய முஸ்லிம்களையும் கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த செனரத் மன்னன் (1604 - 1635) வரைவேற்று மாவனெல்லை மடவளை, அக்குரணை, கம்பளை, உக்குவெல, பங்கரகம்மன, குருநாகல், கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடியமர்த்தி பாதுகாப்பளித்தான். 

அந்த வகையில் கிழக்குப் பிரதேசத்தில் சுமார் 4000 முஸ்லிம்கள் ஏற்கனவே அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுடன் சேர்ந்து பாதுகாப்பாக வாழ ஆரம்பித்தனர்.

இவ்வாறாக குடியேறிய முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் ஒலுவில் கிராமத்தில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளுடன் சேர்ந்து கொண்டனர். 
இதற்கு மேலதிகமாக வியாபார நோக்கம் கருதி கேரளா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்களும் ஒலுவில் கிராமத்தில் நிரந்தரமாக தங்கி வாழ்ந்தனர்.

வெளிநாடுகளிலிருந்து இங்கு குடியேறியவர்களின் பரம்பரையினராக மலையாளத்தார் குடும்பம், மௌலானா குடும்பம் போன்றோர் இன்றுவரை இங்கு வாழ்ந்து வருகின்றமையை குறிப்பிடலாம். 

அண்மைக் காலங்களில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, இறக்காமம், பாலமுனை உள்ளிட்ட பிரதேசத்து மக்களும் ஒலுவில் கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறாக குடியேறிய மக்கள், 1891ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் ஒலுவில் கிராமத்தில் சுமார் 194 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்துள்ளனர்.

இன்று ஒலுவில் கிராமத்தில் சுமார் 9000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒலுவில் 01 - 07 வரையான கிராம சேவர் பிரிவுகளாக நிருவகிக்கப்பட்டு வருகினற்னர்.

ஆலிம்_சேனை

ஒலுவில் முதலாம் கிராம சேவர் பிரிவானது ஆலிம் சேனை எனும் பிரதேசமாகும். இது ஒலுவில் கிராமத்தின் மேற்கே அமைந்துள்ளது.

இங்கு 1940 க்கு முன்னர் மக்கள் குடியேறி சேனைப்பயிர்செய்கையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒலுவில் துறைமுக நிர்மாண கால சூழலில் இங்கு்மார் 55 வீடுகள் மக்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஆலிம் சேனை, ஆலிம் நகர் என அழைக்கப்பட்டு வந்த இப்பிரதேசம் 1994 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அஷ்ரப் நகர் என அழைக்கப்படுகிறது.

அஷ்ரப் நகரில் வாழும் சுமார் 100 முஸ்லிம் குடும்பங்களின் ஆன்மீகக்கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இங்கு அல்அக்ஷா ஜும்ஆப்பள்ளிவாசலும் ஒரு தைக்கப்பள்ளியும் காணப்படுகின்றது. அதேபோல அஷ்ரப் நகர் அல்அக்ஷா வித்தியாலயம் இங்குள்ள மாணவர்களின் ஆரம்பக்கல்வித்தேவையைப்பூர்த்தி செய்து வருகின்றது.

பள்ளிவாசல்கள்

ஒல்லிக்குளத்தின் கிழக்குக்கரையோரத்தில் குடியேறிய மக்கள் அங்கு ஒரு பள்ளிவாசலை அமைத்து அதில் ஆன்மீகக்கடமைகளை நிறைவேற்றி வந்தனர். இப்பள்ளிவால் ஒலுவில் ஜூம் ஆப்பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது. 

இது ஒலுவில் மக்களது பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கும் இடமாகவும் ஊரின் தாய்ப்பள்ளியாகவும் திகழ்ந்து வருகின்றது. இது காலத்துக்குகாலம் விஸ்தரிக்கப்பட்டு பல புனருத்தாரணங்களும் மேற்கொள்ளப்பட்டது.

இப்பள்ளிவாசல் இறுதியாகப் புனரமைக்கப்பட்டு பல நூறு வருடங்கள் தொன்மையான பள்ளிவாசல் உடைக்கப்படாமல் புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை பாராட்டுக்குரியவை. இது இக்கிராமத்தின் எதிர்கால இருப்பை உறுதி செய்யும் ஒருவிடயமாகும்.

இப்பளிவாசலுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு ஜும்ஆப்பள்ளிவாசல்களும் தைக்காப்பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன. அவை அந்நூர் ஜும்ஆப்பள்ளிவாசல் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அரபா, சப்பாணி, சலாம், அப்ரார், பாத்திமா, தக்வா, ஆயிஷா ஹுதா, உம்முல் முஹ்மினுல் ஆயிஷா ஆகிய தைக்காப்பள்ளிவாசல்களுமாகும்.

சியாரங்கள்

ஒலுவில் வாழ் முஸ்லிம்களின் வரலாற்றுடன் தொடர்புடைய3 அடக்கஸ்தலங்கள் இங்கு காணப்பட்டன. அவை கடையரப்பா கபுரடி புதுப்பள்ளி அவ்லியா குழந்தையும்மா சியாரம் போன்றனவாகும்.
இவ்வடக்கஸ்தலங்களில் ஒன்றான குழந்தையும் சியாரம் ஒலுவில் ஜூம்ஆப்பள்ளிவாசலின் முன்பகுதியின் மேற்குத்திசையில் காணப்பட்டது. புதுப்பள்ளி அவ்லியா என அழைக்கப்பட்ட பெரியாரது அடக்கஸ்தலம் தற்போது நூலகம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்திலும் கடையரப்பா கபுரடி ஒலுவில் ஜூம்ஆப்பள்ளிவாசலுக்கு எதிரே அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸா பிரதேசத்தில் காணப்பட்டன.

இச்சியாரங்களை மையமாகக் கொண்டு பல ஆண்டு காலமாக மௌலூத் கந்தூரி நிகழ்வுகள் மிகவும் பிரபல்யமாக நடைபெற்று வந்துள்ளன.  கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தில் புகுத்தப்பட்ட பிரிவினை வாதங்கள் வணக்கவழிபாட்டிற்கும் வரலாற்றிக்கும் இடையிலான  வேறுபாடுகள் தெளிவில்லாமல் பல நூற்றாண்டு காலம் தொன்மைமிக்க இம்மூன்று சியாரங்களும் உடைக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

பாரதூரம்

தீகவாபி புனிதபூமியின் எல்லைகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளதாகவும் அதில் முஸ்லிம்களின் காணிகள் பல உள்ளடங்குகின்றன. இப்புனித பிரதேச எல்லைக்குள் எவரும் உட்புகாமல் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறான ஒரு சூழலில் முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பான தொல்லியல் சான்றுகளாக இருந்துவரும் இதுபோன்ற சியாரங்களை அழிப்பதானது இந்நாட்டின் மரபுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளதோடு, எதிர்கால முஸ்லிம்களின் இருப்புக்கும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது.

தொழில்கள்

இங்கு குடியேறிய மக்கள் ஒல்லிக் குளத்தில் கிடைத்த மீன்களை உணவுக்காக பயன்படுத்தியதோடு, காடுகளை வெட்டி சேனைப் பயிர்ச்செகையிலும் விவசாயமும் செது வந்தனர்.

கிராமத்தின் கிழக்கே காணப்படும் வங்கக் கடலில் மீன்களைப் பிடித்ததோடு, கருவாடு, உப்பு போன்றவற்றை ஏனைய பிரதேசங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செது வருமானத்தை ஈட்டிக் கொண்டனர்.

இப்பிரதேசத்தில் பெருமளவில் காணப்படும் தென்னந்தோப்புகளில் கிடைக்கும் தேங்கா, கிடுகு, கயிறு, தும்புத்தடி போன்ற தும்புத் தொழில்களும் இப்பிரதேசத்தின் தனித்துவமாகக் காணப்பட்டன.

இன்றைய காலத்தில் வியாபாரம், அரச தொழில்கள், வெளிநாட்டு வேலை வாப்புகள், தனியார் துறைகளில் தொழில் புரிவோர், குடிசைத் தொழில்கள் எனப் பல வழிகளில் இங்கு வாழும் மக்கள் வருமானங்களை ஈட்டி வருகின்றனர்.

கல்வி

ஒலுவில் கிராமத்தின் கல்விக்கு வித்திட்ட பாடசாலையாக அல் - ஹம்றா மகாவித்தியாலயம் திகழ்கின்றது. இப்பாடசாலை 1920 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாடசாலையாகும்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஒலுவில் மாணவர்களின் கல்விக்கு உரமாகத் திகழ்ந்த அல் - ஹம்றா மகா வித்தியாலயத்துக்கு மேலதிகமாக ஜாயிஷா பெண்கள் பாடசாலை, தெற்கு பாத்திமா, மினரா, அஸ்ஹர் ஆகிய பாடசாலைகளும் கல்வி புகட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுச்_சேவைகள்

இங்குவாழும் மக்களது பொதுத் தேவைகளை பூர்த்தி செயும் வகையில் வைத்தியசாலை, சுகாதாரப் பரிசோதனை நிலையம், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, நூலகம், தபால் நிலையம், இலங்கை டெலிகொம், இலங்கைத் துறைமுகம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பொது நிறுவனங்கள் காணப்படுகின்றன. இதேபோல் ஊரின் நலன் குறித்து அக்கறை கொள்ளும் வகையில் சகாத் நிதியம், பள்ளிவாசல் சம்மேளனம், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொது நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரச்சினைகள்

ஒலுவில் கிராமத்தைப் பொறுத்த வரையில், சூழலியல் பொருளாதார சமூகத் தாக்கங்களுக்கு உள்ளாகி உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் துறைமுகத்தைத் தொடர்ந்து இப்பிரதேசம் அகோரமான கடலரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு சிட்டி உள்ளிட்ட செயற்கையாக உள்ளிட்ட செயற்கையாக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்றிட்டங்களைப் போன்று ஒலுவில் துறைமுகம் பாதுகாப்பாக அமையவில்லை என்பது குறித்து இங்குள்ள மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இத்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கரையோரப் பிரதேசம் கடலரிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளையும் தென்னந்தோட்டங்களையும் கடல் காவு கொண்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், துறைமுகவாயிலில் பெரிய படகுகள், கப்பல்கள் நுழைய முடியாத வகையில் மணல் நிரம்பிக் காணப்படுகின்றது.

கரையோரப் பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பெரிய படகுகள் துறைமுகத்தினுள் நுழைய முடியாத வகையில் நிரம்பிக் காணப்படும் மணலை அகற்றுமாறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் நடத்தினர்.

அதேவேளை, கடலரிப்பினால் தமது வாழ்விடம் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் ஒலுவில் மக்கள் தமது ஊரைக் காப்பாற்றுமாறு அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.

எது எப்படியோ! ஒலுவில் கிராமம் இன்று கடலரிப்பினால் கரைந்து செல்லும் ஒரு கிராமமாகக் காணப்படுகின்றது. இக்கிராமம் கொண்டிருந்த மீன்பிடி, தும்புத் தொழில்கள் உள்ளிட்ட பாரிய தொழில்களை கடலரிப்பு காவு கொண்டுள்ளது.

இதேநேரம் இத்துறைமுகத்தினை மையமாகக் கொண்டு மீன்பிடியை தொழிலாகக் கொண்ட மீனவர்களின் பிரச்சினையையும் துறைமுகத்தினால் ஊர் அழிந்துவிடும் என்ற ஊர் மக்களின் பிரச்சினையையும் ஒரே சமாந்தரமாககத் தீர்க்கப்பட வேண்டியது இன்றிமையாததாகும்.
ஒலுவில் கிராமத்தின் கிழக்கில் கடலரிப்பு ஒருபுறம் இருக்க, கிராமத்தின் மேற்கே காணிப்பிரச்சினைகள் மேலும் ஒரு பிரச்சினையாக தொடர்ந்து செல்கின்றது. 

பொன்னம்வெளி, சாளம்பைவெளி, குளத்துப் பூமி, விகாரை, ஆத்துட்டான் வட்டை, பாற்கேணி போன்ற காணிகள் முஸ்லிம்கள் காலாகாலமாக விவசாயம் செது வருபவையாகும்.

இக்காணிகளில் இன்று முஸ்லிம்கள் தமது விவசாயத்தைச் செய முடியாத வகையில் பேரினவாத சிங்கள அதிகாரிகளின் தரப்பிலிருந்து பல்வேறு தடைகளும் அழுத்தங்களும் திணிக்கப்பட்டு வருகின்றன. எனவே ஒலுவில் கிராமத்தைப் பொறுத்தவரையில் கிழக்கு - மேற்கு திசைகளிலிருந்து பல்வேறு அழிவுகளை எதிர்கொண்டு வருகின்றது.

இவ்வழிவுகளிலிருந்து ஒலுவில் கிராமத்தைப் பாதுகாத்து, அதனை முன்னேற்றிச் செல்வதற்கான வழிகளைத் திறந்து விடுவது கட்டாயக் கடமையாகக் காணப்படுகின்றது. இதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்னின்று செது முடிக்க விளைய வேண்டும் என்பது அனைவரதும் வேண்டுகோளாகும்.

-ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்
கல்முனை

No comments:

Post a Comment